தலித் அதிகாரிகள், தமிழக அரசு

தலித்கள் என்பதற்காக நான்கு இ.ஆ.ப அதிகாரிகளை தமிழக அரசு நியாயமின்றி தண்டிக்கிறதா என்ற சர்ச்சை குறித்து இரண்டு வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது.
http://urpudathathu.blogspot.com/2005/04/blog-post_111476354988922919.html
http://thoughtsintamil.blogspot.com/2005/04/blog-post_29.html
என் கருத்துக்கள் இங்கேயும், ஒரு பதிவில் உள்ள பின்னூட்டத்திலும்

இந்த அதிகாரிகளின் சில நடவடிக்கைகள், போக்குகள் அரசுக்கு பிடிக்காத காரணத்தினால் இவ்வாறு கட்டாய காத்திருப்பில் அவர்கள் வைக்கப்பட்டிருக்கலாம்.2001 ல் ஜெயலலிதா அரசு முந்தைய ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட இ.ஆ.ப அதிகாரிகளை இவ்வாறு கட்டாய காத்திருப்பில் வைத்தது.சிலருக்கு அதிகாரமற்ற டம்மி பதிவிகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துதாஸ் காந்திக்கும் விநாயகமூர்த்திக்கும் ஏற்பட்ட முரண் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது. இதை அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இ.ஆ.ப அதிகாரிகள் சாதிச் சங்கங்கள், சாதி மாநாடுகளில் பங்கேற்பது சரியல்ல.இது அமைச்சர்களுக்கும் பொருந்தும். காந்தி, இ.ஆ.ப 20 இடங்களையாவது பிடிக்கவேண்டும் என்று எங்கு எப்போது எந்தப் பிண்ணனியில் சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. சட்டசபையில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது எனவே 20 இடங்கள் என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
மேலும் தலைமைச் செயலாளர் தன்னிச்சையாக விளக்கம் கோரி அவருக்கு கடிதம் அனுப்பியிருக்க மாட்டார்.அதற்கு மேலிடம் அனுமதி இருந்திருக்கும் என்றே கருத வாய்ப்புள்ளது. தலித்களுக்காக தலித் அதிகாரிகள் அக்கறை காட்டுவதென்பது தவறல்ல, ஆனால் அவர்கள் தலித் அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடமுள்ளது என்றே கருதுகிறேன்.ஏனெனில் ஒரு தலித் அரசியல்வாதிக்கு ஆதரவாக ஒரு இ.ஆ.ப அதிகாரி பொதுக்கூட்டங்களில் பேசுவதென்பதை தலித்களுக்காக காட்டும் அக்கறை என்று மட்டும் கருத முடியாது.

மேலும் மத்திய தேர்வாணைக் குழு மூலம் அகில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் இ.ஆ.ப அதிகாரிகள் குறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் இல்லை. இவர்கள் மாநில அரசில் செயல்பட்டாலும் விதிகள் அனைத்திந்திய அளவில் உள்ளவை. எனவே தகுந்த காரணமின்றி மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. சில தலித் அதிகாரிகளின் உத்வேகமும், அரசு மீது அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வைக்கும் விமர்சனங்கள் தந்த எரிச்சல் காரணமாக மாநில அரசு இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கக் கூடும்.இன்றைய ஹிந்துவில் உள்ள செய்தி காந்தி இ.ஆ.ப மீது மத்திய அரசு நடவடிக்கை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்று கூறுகிறது. http://www.hindu.com/2005/04/30/stories/2005043005520400.htm

இது பிராமணர் vs தலித் பிரச்சினையல்ல.இன்று பிரதான முரண்பாடு தலித்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் பட்டியலில் இருக்கும் ஜாதிகளுக்குமிடையேதான் என்று தலித் சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.இங்கு பிரமாண இ.ஆ.ப அதிகாரிகள் தலித் இ.ஆ.ப அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று யாரும் கூறவில்லை. ஆனால் தெஹல்காவில் முக்கிய 50 இ.ஆ.ப அதிகாரிகளில் 45 பேர் பிராமணர்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது. இவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்த அதிகாரிகள் எண்ணிக்கை மிகக் கணிசம்.மேலும் இ.ஆ.ப வில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. எனவே குறைந்தபட்சம் 18% இ.ஆ.ப அதிகாரிகள், அனைத்து மட்டத்திலும் தலித்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். மேலும் பதவி உயர்விலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு என்பதையும் கருத்தில் கொள்க.
கிழேயுள்ள பட்டியலின் படி அதிகாரிகள் மட்டத்தில்,Group A ல் பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மூன்றில் இரண்டு பங்கு இருக்கிறார்கள்.தலித்,பழங்குடி இனத்தவர்,பிற்பட்டோர் அல்லாதோர் 27%தான். எனவேதான் சொல்கிறேன் உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் 50 பேரில் 45 பேர் பிராமணர்களாக இருக்க சாத்தியமேயில்லை. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பதவி உயர்விலும் உள்ளது. கீழே உள்ள புள்ளிவிபரத்தில் இ.ஆ.ப அதிகாரிகள் எத்தனை பேர் என்ற விபரம் இல்லை.
State Government Employees as on January 1, 1999Group of Post SCs STs MBCs/DNCs BCs Others Total SCs STs MBCs/DNCs BCs Others TotalA 591 20 665 4744 2228 8248 7.2 0.2 8.1 57.5 27.0 100.0
http://www.epw.org.in/showArticles.php?root=2002&leaf=02&filename=4118&filetype=pdf

தமிழ் நாட்டில் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிறப்பப்படவில்லை என்ற புகார் சில ஆண்டுகள் முன்பு எழுந்தது.தலித் அரசியல் தலைவர்களும் இதை முன்னிறுத்தினர். காந்தி இ.ஆ.ப இது குறித்து சில முன்முயற்சிகள் எடுத்தாரெனவும், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த போது சிறப்பாக செயல்பட்டார் எனவும் அறிகிறேன்.கண்ணகி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும் பின் தேசிய தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் குறித்த கமிஷனில் அதிகாரியாகவும் பதவி வகித்தவர். இவர்கள் குறித்து நானறிந்த வரையில் ஊடகங்களில் ஊழல்,லஞ்சப் புகார் வெளியானதில்லை. காந்தி மிகவும் நேர்மையானவர், தலித்கள் குறித்து மிகவும் அக்கறை கொண்டவர் என்றும் அறிகிறேன். அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த போது காரணமின்றி தலித்களை காவல்துறையினர் கைது செய்வதை தவிர்க்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தவர். எனவே இந்த நால்வர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமளவிற்கு எத்தகைய புகார்கள் எங்கிருந்து வந்திருக்கும். தலித் அதிகாரிகள் பாலம் என்ற அமைப்பின் மூலம் ஒன்றுபட்டால் அது யாருக்கு உறுத்தலாக இருக்கும். மூன்றில் இரண்டு பங்கு உள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இது ஒரு சவாலாக இருந்திருக்கும். எனவே இங்கு தலித் எதிரான சக்திகள் யாராக இருக்கக் கூடும் என்பதை ஊகிப்பது எளிது.
தலித்களுக்கான சலுகைகளை, உரிமைகளைப் பறிக்கும் சக்தி இன்று பிராமணர்களுக்கு கிடையாது. அரசியல்ரீதியாகவும் அவர்களுக்கு செல்வாக்கில்லை. இப்படியிருக்கும் போது தலித்களுக்கான இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற மறுப்பது என்பது ஒரு சில அதிகாரிகள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவாக இருக்க முடியாது.திராவிட கட்சிகள் ஆட்சியில் 1967 முதல் தொடர்ந்து இருக்கும் மாநிலத்தில் தலித்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்டவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு.

மாயாவதி முதன்முறையாக முதல்வரான போது வரலாறு காணாத வகையில் இ.ஆ.ப மற்றும் இ.கா.ப அதிகாரிகளை இடமாற்றம்,பணி மாற்றம் செய்தார்.http://www.indianexpress.com/archive_full_story.php?content_id=3310 அவர் பொதுக்கூட்டங்களில் அரசு அதிகாரிகளை வெளிப்படையாகத் திட்டியிருக்கிறார். துறைச் செயலாளர்கள் நியமனத்தில் பார்பனர் அல்லாதோருக்கு முன்னுரிமை தரவேண்டுமென்பதற்காக பெரியார் முயற்சி செய்திருக்கிறார். இவை எந்தவிதத்தில் நியாயமானவை.

நான் இதை ஒரு நான்கு பேர் தொடர்புடைய பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. வேறொன்றின் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன். இந்தப் பிரச்சினை இன்று முளைத்ததல்ல, இத்துடன் தீரப் போவதுமில்லை.
ராஜாஜி

டோண்டு தன் பதிவில் ராஜாஜியைப் பற்றி ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்ற்த்தினைத் தருகிறார்.என் கருத்துக்கள், சுருக்கமாக.

அவ்ர் ம்துவிலக்கில் உறுதியாக நின்றார், வருவாயைப் பெருக்க விற்பனை வரியை அமுல் செய்தார்.லைசென்ஸ், பெர்மிட் முறையின் பாதக அம்சங்களை சுட்டிக் காட்டினார்.காங்கிரஸ் குறித்து அவரது விமர்சனத்தினை ஒதுக்கி விட முடியாது. தமிழில் அபேதவாதம் என்ற நூல் மூலம் சோசலிசத்தினை அறிமுகம் செய்தார். அவர் தாராளவாதி ஆனால் அவர வலதுசாரியாகவே பெரும்பாலும் செயல்பட்டார். காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1967 ல் பதவி இழந்தது, அகில இந்திய அளவில் ஒரு சரிவினைச் சந்தித்து. இதில் ராஜாஜிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அவரது சுதந்திரா கட்சி இதனால் பெரிய அளவில் பலன் பெறவில்லை. இந்திரா காந்தியின் சோசலிச கொள்கைகளும், வறுமையை ஒழிப்போம் என்ற கோஷமும் மக்களை கவர்ந்தன. காமராஜும், ராஜாஜியும் சேர்ந்தும் கூட இந்திரா காங்கிரஸ் திமுகக் கூட்ட்ணியின் வெற்றியினை தடுக்க முடியவில்லை. சுதந்திராக் கட்சி தொழிலதிபர்கள், ஜமீன் தார்கள் கட்சி என்றே கருதப்பட்டது. அமைப்பு ரீதியாக பலவீனமான அக்கட்சியால் மக்க்ளை எட்ட முடியவில்லை.
ஒரு விதத்தில் காங்கிர்ஸின் வீழ்ச்சி அவரது கனவினை பூர்த்தி செய்தது என்றாலும் திமுகவின் எழுச்சியும், திமுக பிரிந்தும் கூட காங்கிரஸால் மீண்டும் தமிழ் நாட்டில் ஆட்சியினைப் பிடிக்க முடியாமல் போனதும் அவர் எதிர்பார்த்திராதவையே. இது ஒரு முரண். அதே சமயம் அவர் முன் வைத்த பொருளாதாரக் கண்ணோட்டம் அவர் மரணமடைந்து பத்தாண்டுகள் கழித்து புதிய கவனம் பெற்றது. இந்திரா அமைத்த எல்.கே.ஜா கமிஷன் பரிந்துரைகள் ராஜிவ் காலத்தில் அரசின் கொள்கைகளை வகுப்பதில் உதவின. நேருவிய சோசலிசம் 1990களில் பெருமளவு கைவிடப்பட்டது. அரசியலில் தோற்ற ராஜாஜி காலம் தாழ்த்தியாவது வென்றது இதில்தான்.

.தனிப்பட்ட வாழ்வில் அவரது நேர்மை, பொது வாழ்வில் அவர் தனக்கென பொருள் சேர்க்க அதை பயன்படுத்தாது இவை பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் காங்கிரஸ் அரசு அமைக்க கையாள்ப்பட்ட தந்திரோபாயங்கள்,தேர்தலை சந்திக்காமல் நியமன உறுப்பினராகியது இவை அவர் பிற அரசியல்வாதிகளைப் போன்றவர் என்பதை நீருபித்தன. இது ஒரு வீழ்ச்சி. அவர் அறியாத அறமா. அதை அவரே காற்றில்பற்ற்க்க விட்டார். எந்த காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதைச் செய்தாரோ அதன் எதிரியாக அவர் மாறினார். காங்கிர்சின் பலத்தினை குறைத்தார், ஆனால் அவரால அதனால் பலன் பெற முடியவில்லை.

எனவே ராஜாஜியை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியாது. என்னைப் பொருத்த அளவில் அவர் ராஜரிஷியும் அல்ல குல்லுக பட்டரும் அல்ல.
போகாத ஊருக்கு ஆயிரம் வழிகள்: எழுத்தாளர்களின் சில யோசனைகள்


தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஒன்று கூடி முன் வைத்துள்ள யோசனைகள் சிலவற்றை எஸ்.ராமகிருஷ்ணன் தன் வலைப்பதிவில் இட்டுள்ளார். அவை குறித்து என் கருத்துகள்

"
சாகித்ய அகாதமி பரிசு ஆண்டு தோறும் சர்ச்சைக்கு உட்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஆண்டின் துவக்கத்திலே மூன்று எழுத்தாளர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்து எல்லா இணையதளங்களிலும் பத்திரிக்கைகளிலும் வாக்கு அளிக்குமாறு செய்தல் வேண்டும். இந்த மூன்று பேரை எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழு முன்மொழியும் . அவர்களைத் தவிர நான்காவது ஒரு நபரை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினாலும் அவர் பெயரை தனியே குறிப்பிட்டு வாக்கு அளிக்கலாம். இப்படி ஐனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதங்கள் எல்லா இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் இந்த வாக்கெடுப்பு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இப்படி பகிரங்க வாக்கு எடுப்பு நடத்தி யார்யார் எவ்வளவு வாக்கு பெறுகிறார்கள் என்பதை அறிந்து அந்தப் பட்டியலை அப்படியே சாகித்ய அகாதமி ஆலோசனை குழுவிற்கு பரிசீலனைக்கு அனுப்புவோம்.மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது அகாதமிக்கு தெரியவருமில்லையா. பத்தாயிரம் பேர் ஒருவருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று ஆசைபடும் போது அந்த எழுத்தாளரை அகாதமி புறக்கணிக்குமா என்ன? அப்படியே ஒரு வேளை மக்கள் சிபாரிசு செய்த படைப்பாளிக்கு விருது கொடுக்க சாகித்ய அகாதமி தவறினால். அதே நபருக்கு 50001 ஆயிரம் பணமும் விருதும் கொண்ட தமிழ் சாகித்ய அகாதமி என்ற விருதை மக்களிடமிருந்து நிதி திரட்டி தரலாம் என்று நினைக்கிறோம்.
இது தேர்தல் சமயங்களில் நடத்தபடும் கருத்து கணிப்பு போல ஆண்டு தோறும் நடத்தப்படலாம் என்று இந்த சந்திப்பு முடிவு செய்திருக்கிறது

"

சாகித்ய அகாதமி தெரிவில் மூன்று படைப்புகள் பரீசலனைக்காக உள்ளன என்று வைத்துக் கொள்ளுவோம். ஒன்று 2000 பிரதிகள் அச்சிடப்பட்ட நாவல்.இரண்டாவது ஒரு வார இதழில் தொடர்கதையாக வெளியாகி பின் புத்தக வடிவம் பெற்ற நாவல். மூன்றாவது 1000 பிரதிகள் அச்சாகி விமர்சகர்களின் கவனத்தினைப் பெற்ற 800 பிரதிகளே விற்ற நாவல்.
முதல் நாவல் முதல் பதிப்பில் 2000 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்தும் ஒரே ஆண்டில் விற்றுவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதை அதிக பட்சம் 10,000 பேர் படித்திருப்பார்கள்.அதே சமயம் ஒரு தொடர்கதையாக விகடனில் வெளியாகும் நாவலை குறைந்த பட்சம் 4 லட்சம் பேர் படித்திருக்க, தொடராகவும், நூல் வடிவிலும் சேர்த்து வாய்ப்பிருக்கிறது. இவர்களில் எத்தனை பேர் 2000 பிரதிகள் விற்ற நாவலைப் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது.இவர்களில் எத்தனை 800 பிரதிகள் விற்ற நாவலை படித்திருப்பார்கள். இம்மூன்றையும் எத்தனை பேர் படித்திருப்பார்கள். மூன்றையும் படித்தவர்களில் எத்தனை பேர் வாக்களிப்பார்கள். இதையெல்லாம் யோசித்தால் வாக்கெடுப்பு என்பது ஏன் சரியான வழியல்ல என்பது தெளிவாகும். மேலும் வாக்கெடுப்பில் எண்ணிக்கையைக் கூட்ட பல தந்திரங்களை கையாள முடியும்.

இங்கு ஒரு நாவலுக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதே கேள்விக் குறி. மூன்று நாவல்களையும் படிக்காமல் தெரிவு செய்வது என்பது அபத்தம்.அப்படி இருக்கும் போது பத்தாயிரம் பேர் தெரிவு செய்வர் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்பர் என்பது அதீத எதிர்பார்ப்பு. 800 பிரதிகள் விற்ற நாவலை அதிகபட்சம் 4000 பேர் படித்திருக்கக் கூடும். மூன்று நாவல்களையும் படித்திருப்பவர்கள் சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள் என்ற நிலையில் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலை அல்லது கணிப்பினை நடத்த முடியும்.

வாலி, எஸ்.ராமகிருஷ்ணன், குட்டி ரேவதி ஆகிய மூவரின் நூல்கள் பரிசுக்கு பரீசலனை செய்யப்பட்டால் வெகு ஜெனத் தெரிவு வாலிக்கு இருந்தால் அதை சிறு பத்திரிகைகள் சார்ந்த எழுத்தாளர்கள் ஏற்பார்களா. ஒரு வேளை பரிசு குட்டி ரேவதிக்கு தரப்பட்டால் மக்களின் சிபாரிசின் அடிப்படையில் வாலிக்கு பரிசும்,பணமும் தருவீர்களா. வெகுஜனத் தெரிவும், அகாதமியின் தெரிவும் ஒன்றாக இருந்தால் அதை ஏற்பார்களா. இவர்கள் சொல்வதை அமுல் செய்திருந்தால் வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்தினையே பெரும்பாலோர் தெரிவு செய்திருப்பார்கள். சுந்தர ராமசாமிக்கு இரண்டாம் இடமும், யூமா வாசுகிக்கு மூன்றாம் இடமும் கிடைத்திருக்கும். இது போன்ற தீர்ப்பினை ஏற்று சர்ச்சையினைக் கிளப்பமாட்டோம் என்று சொல்லும் தைரியம் எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு உண்டு. எதையுமே யோசிக்காமல் அபத்தமான யோசனையினை சொல்லும் அற்புதத் திறன் நம் எழுத்தாளர்களுக்கு இருப்பதற்கு இது ஒரு உதாரணம்.

"இதுவரை எழுத்தாளர்களை பற்றிய சுயவிபரங்கள் அடங்கிய தகவல்களோ, யார் எந்த இதழில் என்ன எழுதினார் என்ற வகைப்படுத்துதலோ தமிழில் நடைபெறவேயில்லை. ஆகவே இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவரது வெளியான படைப்புகள் குறித்த முழுமையான தகவல்களும் தொடர்பு முகவரி. அத்தோடு சில மாதிரி படைப்புகள் கொண்ட ஒரு ஆவணகாப்பகம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும்."

உங்கள் பட்டியலில் ராஜேஷ் குமார்,தேவி பாலா, இந்திரா செளந்தர்ராஜன், விமலா ரமணி, குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் போன்றவர்களுக்கு இடம் உண்டா.

"எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி பயணம் செய்வதற்காக பெல்லோஷிப் 6000 ரூபாய் வழங்குகிறது. இது ஆண்டுக்கு ஒருவருக்கு வழங்கபடுகிறது. அதிலும் எண்ணிக்கையற்ற அரசியல் தலையீடு உள்ளது. அதற்கு மாற்றாக தமிழ் எழுத்தாளர்களில் நான்கு பெயருக்கு இது போன்று பயணஉதவி தொகை வழங்குவற்கு ஏற்பாடு செய்வது."

இதை தீர்மானிப்பது யார். எந்த அடிப்படையில்.

"தமிழின் முக்கிய படைப்பளார்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இணையதளத்தில் யாவரும் பயன்படுத்திக் கொள்வது போன்று பதிப்பு செய்வது."

இது ஒரு வகையில் நல்லதுதான். ஆனால் முக்கிய படைப்பாளர்கள் யார் யார் என்று யார் முடிவு செய்வது. சில தமிழ் எழுத்தாளர்கள் தமிழில் எழுதுவது புரிவதில்லை என்ற புகார் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் இல்லாமல் போகும் என்று நம்புவோமாக.ஆங்கில மொழிபெயர்ப்பும் புரியவில்லை என்றால் படிப்பவருக்கு ஆங்கில அறிவு போதாது அல்லது ஆங்கிலம் தெரியவில்லை என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

"தமிழில் நல்லதொரு ஆங்கில தமிழ் அகராதியை உருவாக்குவது. சென்னைபல்கலைகழகம் வெளியிட்ட ஆங்கில தமிழ் அகராதி புதிய சொற்களுடன் நவீனப்படுத்தபடாமலே உள்ளதால் புதிய அகராதிக்கான தேவையிருக்கிறது."

தமிழ் அகாரதியினை குறித்து சென்னைப் பல்கலைகழகம் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் எந்த அளவு எழுத்தாளர்கள் உதவ முடியும்.தமிழில் இலக்கியம், இலக்கணம் உட்பட பல துறைகளில் புதிய சொற்கள், கலைச்சொற்கள் உருவாக்கத்திற்கு தேவை இருக்கிறது. இதில் அத்துறை நிபுணர்கள்,ஆர்வமுடைய பிறர் உதவலாம். பிரச்சினை என்னவெனில் தமிழில் விமர்சனக் கோட்பாடு, அழகியல், திறனாய்வு போன்றவற்றில் உலகில் உள்ள புதிய போக்குகள், சிந்தனைகள் குறித்து விவாதம், அறிமுகம் மிகக் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இதில் எழுத்தாளர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. வாசகர்கள்தான் இதில் பெருமளவு உதவ முடியும். உலகமயமாக்கலும் இலக்கியமும் என்பது குறித்துக் கூட இங்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு புரிதலும், அக்கறையும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவுஒன்று உலகமயம் குறித்துப் பேசுகிறது.இது ஒன்றே போதும் நம் எழுத்தாளர்களின் புரிதல் எந்த அளவில் இருக்கிறது என்று காட்ட. எனவே எழுத்தாளர்களின் பங்களிப்பு இது போன்ற முயற்சிகள் குறைவாகவே இருக்க முடியும். மாறாக பல் துறை நிபுணர்கள்,வாசகர்கள் அவர்களை விட அதிகமாக இதில் பங்களிக்க முடியும்.


"முற்றிலும் இன்று அழிந்து போட்ட விட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெரிய எழுத்து கதைகள், மற்றும் கொலை சிந்து, போன்ற ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய மக்கள் இலக்கியங்களை பாதுகாக்கவும், அதை முறையாக வகைப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்வது."

இவை இலக்கிய பிரதிகள் மட்டுமல்ல, சமூக வரலாறு, தொன்மங்கள், வெகுஜனப் புரிதல் அல்லது கண்ணோட்டம் குறித்த ஆவணங்களும் கூட. எனவே இதில் பிறருக்கும் பங்கிருக்கிறது என்பதை எழுத்தாளர்கள் உணர வேண்டும்.

"எழுத்தாளர்களின் நேர்முகங்கள் இதுவரை பத்திரிக்கைகளில் மட்டுமே வெளியாகி வருவதை தவிர்த்து அதை ஒலி ஒளியை பயன்படுத்தி காட்சி ஊடகங்களில் பதிவு செய்து பாதுகாப்பது. தேவைப்படுகின்றவர்களுக்கு அனுப்பி உதவி செய்வது."

இப்படி எத்தனை எழுத்தாளர்களுக்கு செய்வதாக உத்தேசம். இந்த நேர்முகங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. யார் இதன் நுகர்வோர் அல்லது பயனாளிகள். ஒருவேளை காலைக் கதிர் அல்லது காலை வணக்கம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இவை பயன்படலாம் :).

"பொதுவாக தமிழில் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்படும் பழக்கமேயில்லை. அதை மாற்றி மெளனி, தி. ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஜி. நாகராஜன், ஆதவன் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு எழுதப்பட முயற்சிகள் எடுப்பது".

.தமிழில் வாழ்க்கை வரலாறு எப்படி எழுத வேண்டும் என்பது குறித்த பிரக்ஞை மிகக்குறைவு. எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுதும் முன் எதற்காக இத்தகைய முயற்சிகள் என்பது குறித்த தெளிவான கண்ணோட்டம், அதற்கான ஆய்வு முறை குறித்த புரிதல் இருக்க வேண்டும். இவை இல்லாமல் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதப்படுமானால் அவற்றால் அதிகப் பயனில்லை. இருக்கின்ற வாழ்க்கை வரலாற்று நூல்களின் போதாமைகள், விடுதல்கள் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எழுத்தாளர்கள் தங்கள் நலனில் மிக அதீத அக்கறைக் காட்டுவது புலனாகிறது. அதையாவது செவ்வன நிறைவேற்றும் முனைப்பும், திறனும் அவர்களிடம் உண்டா என்பதே என் கேள்வி. போகாத ஊருக்கு சொல்லப்படும் ஆயிரம் வழிகள் போல்தான் இந்த யோசனைகள் உள்ளன.
சந்திரமுகியும், பதிப்புரிமையும்


சந்திரமுகி படத்தினை விட அது குறித்த பதிப்புரிமை குறித்த சர்ச்சை சுவாரசியமாகவுள்ளது. சந்திரமுகி கதை குறித்து பி.வாசு குமுதத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:குமுதம் 28 மார்ச் 2005

‘சந்திரமுகி’ படத்தின் கதை பற்றி இன்னும் சர்ச்சை இருந்து கொண்டேயிருக்கிறது. மீண்டும் நான் சொல்கிறேன். இது ‘மணி சித்ர தாழ்’ கதையில்லை. ரஜினிக்காக இந்தக் கதையை எழுதும்போது ஒரு சந்தோஷமான, ஜாலியான ஆடிப்பாடும் ஒரு கூட்டுக் குடும்பம் எனக்குத் தேவைப்பட்டது. ‘மணி சித்ரதாழி’ல் ஏற்கெனவே இப்படி ஒரு காட்சி வந்திருந்தது. அந்தக் காட்சியின் சூழ்நிலை அதில் நன்றாக அமைந்திருந்ததால் டைரக்டர் பாசிலிடமும், அப்பச்சனிடமும் முறைப்படி பேசி, பணம் கொடுத்து உரிமை வாங்கினோம். மற்றபடி இது முழுக்க முழுக்க ரஜினிக்காக நான் எழுதி டைரக்ட் செய்த கதை. நிலைமை இப்படியிருக்க... மீண்டும் இந்தப் படத்தை முடக்க, பாசில் வழக்குப் போடப் போவதாகக் கேள்விப்பட்டு நான், ரஜினி, பிரபு உள்பட எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போனோம்.‘பாசிலா இப்படிச் செய்வது?’ ஒரு நல்ல இயக்குநர் என்று தமிழ் ரசிகர்களிடம் பெயர் வாங்கியவரா ‘சந்திரமுகி’யை முடக்க நினைக்கிறார்? ஒரு சில காட்சிக்காக பணம் கொடுத்து உரிமை வாங்கிய பிறகு ஏன் இப்படிச் செய்கிறார்? எதுவும் புரியாமல் பாசிலை நாங்கள் தொடர்பு கொண்டபோது, அவர் சொன்ன விஷயம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘நீங்கள் ரஜினியை வைத்து தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்படி தெலுங்கில் எடுக்கலாம்? எனவே தெலுங்கு ரைட்ஸை எனக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் என்னால் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு இருக்காது’ என்றார்.அவர் இப்படிக் கேட்பார் என்று கனவிலும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பலவித பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மிகப்பெரிய்ய்ய்ய ஒரு தொகையைக் கொடுத்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பு எடுத்த ஒரு படத்தின் கதையை தூசி தட்டி பணம் சம்பாதிக்க முடியும் என்பது நாங்கள் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம்! சந்திரமுகியில் இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த பாடம்.’’ _ படபடவெனப் பொரிந்து முடித்தார் வாசு.

இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் நான் பொறுப்பில்லை.இப்போது நாகவல்லி என்ற தெலுங்குப் படத்தினை வெளியிடத் தடை அமுலில் உள்ளது. தமிழில் எடுக்கப்பட்ட சந்திரமுகி ,தெலுங்கில் டப் செய்யப்பட்டப் பின் மூலக்கதையின் அடிப்படையில் தெலுங்கில் தெலுங்குப் படமாகவே வேறு எடுக்க ஒரு திட்டம் இருப்பது இவ்வழக்கு குறித்த விபரங்களிலிருந்து தெரிகிறது.

இப்படி ஒரே கதையை சிறு மாறுதல்களுடன் எத்தனை மொழிகளில் எத்தனை பேர் எடுப்பார்கள் ?தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இப்படி ஒரே கதையை மூலமாகக் கொண்டு திரைப்படங்கள் இத்தனை சர்ச்சைகளுடன் தயாரிக்கப்பட்டு வெளியாவது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எது எப்படியோ இந்தியப் பதிப்புரிமை குறித்த நூல்களில் இப்படம் குறித்த வழக்கு(கள்) குறிப்பிடப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.
சந்திரமுகி


இன்று காலை இப்படத்தினை ஒரு திரையரங்கில் பார்த்தேன். படத்தில் பிரமாதமாக நடித்திருப்பவர் ஜோதிகா.கங்கா என்ற பாத்திரத்திற்கு ஒரு வேளை சிம்ரன் இன்னும் பொருத்தமாயிருந்திருப்பாரோ. ஒரு மனோதத்துவ நிபுணர் இப்படித்தான் இது போன்ற உளவியல் பிரச்சினைகளை கையாள்வாரா என்ற கேள்வி எழுகிறது.மணிச்சித்திரதாழிலும் தீர்வு இப்படித்தான் உள்ளதா?.வித்யாசாகரை விட இளையராஜா இன்னும் பிரமாதமாக இசை அமைத்திருப்பார், குறிப்பாக பிண்ணனி இசை என்று தோன்றுகிறது. ரஜனியின் இமேஜ் வட்டத்தினை முற்றிலுமாக நிராகரிக்காமல் அதே சமயம் அரசியல் வாடை துளிக்கூட த் தோன்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஒரு சூப்பர் ஸ்டார் இல்லாமல் ஒரு திறமையான நடிகர் சரவணன் பாத்திரத்தில் நடித்திருந்தால் கதைக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.ரஜனியை இளமையாகக் காட்ட முயற்சித்திருப்பதில் தோற்றுவிடவில்லை, ஒப்பனைக் கலைஞர் (சுந்தரமூர்த்தி?) மிகத் திறம்பட தன் பணியினைச் செய்திருக்கிறார்.
கதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மிக எளிதாக ஊகித்துவிடும் வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது ஒரு பலவீனமே. இது போன்ற கதைகளில் யார் இதையெல்லாம் செய்வது என்பதை இவராக இருக்குமோ இல்லை இவராக இருக்குமோ என்று நாம் யோசிக்கும் விதத்தில் கொண்டு செல்வது விறுவிறுப்பினைக் கூட்டியிருக்கும். இந்தப் படத்தில் மூளைக்கு வேலை தேவையில்லை, ரசிகர்கள் ரஜனி மூன்றாண்டுகளுக்குப் பின் நடிக்கும் படத்தினை பார்த்த உணர்வினைப் பெற்றால் போதும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.
தமிழ்த் திரைப்படங்களில் இன்னொன்று, ரஜனி மூன்றாண்டுகளுக்குப் பின் நடித்தது என்பதைத் தவிர இப்படம் குறித்து குறிப்பிட்டுச் சொல்ல வேறொன்றுமில்லை.

இதில் காட்டபட்டிருக்கும் தொழில் நுட்பசாத்தியப்பாடுகள் புதிதல்ல என்றாலும் அவைதான் திரைக்கதை, இயக்கத்தில் உள்ள குறைகளை ஒரளவிற்கேனும் மறைக்கின்றன.1960களில், 1970களில் திருலோகச்சந்தர், S.பாலச்சந்தர் இயக்கிய திகில்,மர்மப் படங்களுடன் இதை ஒப்பிட்டால் தொழில்நுட்ப வளர்ச்சி இப்படத்தில் தெரிகிறது, கதை சொல்லும் திறனில் முன்னேற்றம் இல்லை. இது வாசு என்ற இயக்குனரின் பிரச்சினை என்று சொல்ல முடியும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இன்று ஒரு அசலான திகில் அல்லது மர்ம திரைப்படம் என்று கூறத்தக்கவகையில் ஒரு படத்தினை தரக்கூடிய எத்தனை இயக்குனர்கள் நம்மிடம் உள்ளார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
தசாவதாரமும், பரிணாமவாதமும்


தேசிகன் தன் வலைப்பதிவில் மேற்கூறிய தலைப்பில் எழுதியிருக்கிறார். இது குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. சுருக்கமாக அவை இங்கு

1, பரிணாமவாதத்தினை அவர் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. பரிணாம வாதத்தினை ஏற்போர் கூட பரிணாம மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்பட்டன என்பது குறித்து பல கருதுகோள்களை, கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர். எனவே பரிணாமவாதம் அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் விடையளித்துவிடவில்லை. பரிணாமவாதத்தில் இன்று கூறப்படுபவை அல்லது நிரூபிக்கப்பட்டதாக கருதப்படுபவை நாளை மறுக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். பரிணாமவாதத்தினை பிற கருத்துகள் அல்லது தொன்மங்களுடன் ஒப்பிடும் போது அல்லது இணையான அம்சங்கள் இவை என்று கூறும் போது மேற்கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2, அவர் சிங்கை கிருஷ்ணனின் கட்டுரைகளை மேற்கோள் காட்டியுள்ளார். அவை இப்படி முடிச்சுப் போடும் கட்டுரைகள். ஒருவிதமான நகைச்சுவையாக அவற்றைப் படிக்கலாம். அதற்கு மேல் அதில் அறிவியலினைத் தேடுவது வீண்.

3,தமிழில் இது போல் முடிச்சுப் போடும் அல்லது ஒப்புமைக் காணும் முயற்சிகள் நடந்துள்ளன். P.அனந்த கிருஷ்ணன், புலி நகக் கொன்றை நாவல் எழுதியவர் இது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது உயிர்மையில் வெளியானது என்று ஞாபகம். முன்பொருமுறை நான் ரா.கா.கி யில் இது குறித்து எழுதியிருக்கிறேன். அவற்றை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்பவில்லை.

4, அறிவியல் ரீதியாக இத்தகைய ஒப்புமை இருப்பதாக கூறப்படுவதில் உள்ள பிரச்சினைகள் ஒருபுறமிருக்கட்டும். தத்துவரீதியாக அல்லது மதக்கருத்து ரீதியாகப் பார்த்தால் கூட இதை ஏற்க இயலாது. ஏனெனில் அவதாரம் என்பதன் பொருள் இதற்கு பொருந்திவராது. கடவுள் அவதாரம் எடுக்கும் போது மீனாக அல்லது ஆமையாக வடிவெடுத்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்தினை நிறைவேற்றுகிறார். அது மீன் இனத்தின் தோற்றத்தினையோ அல்லது ஆமை இனத்தின் தோற்றத்தினையோ நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டதல்ல. அவதாரம் என்பது எம் பெருமானின் லீலை , அவதாரம் பல வழிகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தக்கூடும் என்பதற்கு ஒரு உதாரணம். மற்றப்படி கடவுளுக்கு பரிணாம வளர்ச்சி என்பதெல்லாம் பொருந்தாது. தேசிகன் பாரம்பரிய சிந்தனையையும், அவதாரம் என்ற கருத்தினையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

5,ராமர், பலராமர், கிருஷ்ணர், பரசுராமர் மூவரும் ஒரே ஆளுமையின் தோற்றங்கள்.ராமர் காலத்திலேயே விவசாயம், அரசு, ஆட்சி முறை இருந்திருப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமாவதாரம் என்பது பொருந்தாது

6,இந்த அவதாரங்கள் குறித்தே சர்ச்சை இருக்கிறது. சிலர் புத்தரை அவதாரமாகக் கொள்கிறார்கள். அவதாரங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. தர்மத்தினைக் காப்பது, தீய சக்திகளை அழிப்பது போன்றவை அவை. பரிணாம வாதத்தில் மாற்றங்களுக்கு இப்படி நோக்கங்கள் கற்பிக்கப்படவில்லை. பரிணாம வளர்ச்சி என்பது தர்மத்தினை காப்பது, அரக்கர்களை அழிப்பது போன்றவற்றுடன் தொடர்புடையதே அல்ல .

7, மனித உடலமைப்பு,மிருக உடலமைப்பின் கலவையாக எந்த உயிரினமும் தோன்றியதில்லை. நரசிம்ம அவதாரத்தினைப் போன்ற ஒரு உருவத்தினை இயற்கை இது வரை உருவாக்கவில்லை. மேலும் ஏன் எந்த அவதாரமும் பறவை வடிவில் அல்லது டைனோசார் வடிவில் அல்லது நுண்ணுயிரி அல்லது பூச்சி வடிவில் இல்லை. பெளராணிகர்களுக்கு டைனாசோர் இருந்ததும், அழிவுற்றதும் தெரியாமல் இருந்திருக்கலாம். அதுவன்றி வேறு காரணமிருப்பதாக தெரியவில்லை.

நம்மால் ஏன் தசாதவதாரத்தினை ஒரு சுவாரஸ்யமான கற்பனையாக ஏற்க முடியாது. எதற்காக அதற்கு ஒப்புமைகளை, இணைகளை அறிவியலில் தேடவேண்டும். அறிவியல் ரீதியாக என்று எதை நிரூபிக்க விரும்புகிறோம். பல்வேறு பழங்குடி இனங்கள் பூமி, மனித இன உற்பத்தி குறித்து பல நம்பிக்கைகளை, தொன்மங்களை, ஐதீகங்களை கொண்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் அறிவியல் ரீதியானவை என்று நிருபீக்கத்தான் வேண்டுமா. இல்லாவிட்டால் அவை அர்ததமற்றவை ஆகிவிடுமா.

தேவையற்று அறிவியலையும், மதத் தத்துவங்கள், தொன்மங்களையும் போட்டுக் குழப்புவதன் விளைவு இது போன்ற முயற்சிகள். சுஜாதா முன்பு ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்றே நூலில் இதைத்தான் செய்தார். அது விமர்சிக்கப்பட்டது. ஆனால் நூல் பிரபலமானளவிற்கு விமர்சனங்கள் பிரபலமாகவில்லை.

காப்ரா போன்றோர் எழுதிய நூல்களை விஞ்ஞானிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தற்போது காப்ராவின் டாஒ ஓப் பிசிக்ஸ் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே குழப்பங்கள், குழப்பும் முயற்சிகள் தொடரும் என்றே தோன்றுகிறது.

இவை குறித்த ஒரு விரிவார்ந்த, அறிவார்ந்த விவாதம் தேவை. அதற்கான ஒரு துவக்கப் புள்ளியாக இப்பதிவினைக் கொள்க.
கோகோ கோலாவும் பிளாச்சிமாடாவும்

கோகோ கோலாவின் தொழிற்சாலையால் நிலத்தடி நீர்வளம் குன்றியுள்ளதால் அதை எதிர்த்து கேராளாவில் உள்ள பிளாச்சிமாடா பஞ்சாயத்து யூனியன் பகுதியில் ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது.அண்மையில் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கோகோ கோலாவிற்கு சாதகமாக இருந்தாலும் போராட்டம் தொடரும் என்றும், இத்தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. நிலத்தடி நீர் பொதுச் சொத்து, அனைவரது பயன்பாட்டிற்கும் உரியது என்றால் வணிக நோக்கத்துடன் நிறுவப்படும் தொழிற்சாலைகள் அதை அளவின்றி, அந்தப் பகுதி பஞ்சாயத்தின் அனுமதி இன்றி பயன்படுத்த முடியுமா. விவசாயமே பிரதான தொழிலாக உள்ள பகுதிகள் யாருடைய தேவைகள் முன்னுரிமை பெற வேண்டும். இது குறித்து இரண்டு சுட்டிகள் இங்கே.


காக்பர்ன் தன் கட்டுரையில் மாத்ருபூமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கோக், கோகோ கோலா விளம்பரங்களை வருமான இழப்பு நேரிட்டாலும் வெளியிடவில்லை என்ற தகவலைத் தருகிறார்.இந்தப் பிரச்சினையில் விரேந்த குமாரின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. காக்பரன் கவுண்டர்பஞ்ச் இதழின் இணையாசிரியர். அவருடன் இன்றை ஹிந்துவில் ஒரு பேட்டி

கோகோ கோலாவிற்கு எதிரான இப்போராட்டத்தினை உலகெங்கும் மக்கள் வாழ்வாதார மூலவளங்கள் மீதான தங்கள் உரிமைகளை காப்பதற்கான நடத்தும் ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். இதை ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தொழில் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் என்று ஒதுக்கிவிட முடியாது.
ஐ.ஐ.டி களில் இட ஒதுக்கீடு

சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கில் ஐ.ஐ.டி களில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்று யாரும் கோர முடியாது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மட்டுமே உண்டு என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒப்புதலின்றி இந்த நிலைப்பாட்டினை நிர்வாகம் தெரிவித்திருக்க முடியாது. இவ்வழக்கு குறித்த முழு விபரங்கள் எனக்குத் தெரியாது. மண்டல் கமிஷன் பரின்/துரையின் பேரில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டினை அமுல் செய்வதை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு என்பது எல்லா இடங்களுக்கும், துறைகளிலும் பொருந்தாது என்று கூறியுள்ளது என்பதே என் புரிதல்.இது பிழை என்றால் சுட்டிக்காட்டுங்கள்.

தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தில் மாணவர்களைச் சேர்க்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். களில் இட ஒதுக்கீடு தேவைதானா என்ற கேள்வி எழுவது நியாயம். ஏனெனில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநிலங்களில் மாணவர்கள் சேர்க்கப்படும் போது அதை தேசிய அளவிலும் நீட்டிக்கத் தேவையில்லை. மேலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என்று இரு வகைப் பிரிவுகளை மாநிலங்கள் பின்பற்றும் போது தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்றால் அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை எழும். இந்த சாதிரீதியான பட்டியல் தயாரிக்கப்படும் விதம் எந்த அளவு அறிவியல் பூர்வமானது, எந்த புள்ளி விபரங்கள், ஆய்வுகள் அடிப்படையில் சாதிகள் இப்படி பிரிக்கப்படுகின்றன என்பதையும் விவாதிக்க வேண்டும்.
சில சாதிகள் தாங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோருவது, சுதந்திரம் அடைந்த பின் இவர்கள் எந்த பலனையும் பெறவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. எந்த அடிப்படையில் இதை நிர்யணம் செய்வது, இது குறித்து சரியான தகவல்கள், புள்ளிவிபரங்கள் உள்ளனவா என்றால் , நானறிந்த வரையில் இல்லை. மேலும் உச்ச நீதி மன்றம் கூறிய பிற்படுத்தப்பட்டோரில் முன்னேரியோர் அதாவது creamy layer என்பதை தமிழ் நாடு உட்பட பல மாநிலங்கள் ஏற்கவில்லை. ஏற்கும் மத்திய அரசுக் கூட அதை நகைப்புக்குமிடமளிக்கும் வகையில் அதை அமுல் செய்கிறது. இட ஒதுக்கீடின் அதிக பட்ச அளவு 50% என்று உச்ச நீதி மன்றம் தீர்பளித்துள்ள போதிலும் அதை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏற்கவில்லை. இது குறித்த வழக்கு உச்ச நீதி மன்ற விசாரணையில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் 'முற்பட்ட', 'பிற்பட்ட' வகுப்பு மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் சமமாகவே உள்ளன என்றே கொள்ள முடியும். அப்படியிருக்கும் போது இனியும் இட ஒதுக்கீட்டின் தேவை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவினை அமைத்துள்ளது. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு தரப்பட்டால் அதையும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீடு 50% க்கு மிகாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக அது அமையும்.

இட ஒதுக்கீடினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று கோருவோரும், அதை தனியார் துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று கோருவோரும் உளர். இதில் என் நிலைப்பாடு இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை, அதனால் ஏற்பட்ட விளைவுகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சாதிகளின் பொருளாதார, கல்வி நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போதுள்ள முறையின் குறைபாடுகள், நிறைகள் ஆராயப்பட வேண்டும். இத்தகைய ஆய்வுகள், விவாதங்களுக்குப் பின் ஒரு கொள்கை முன்வரவினை அரசு முன் வைத்து அது குறித்த கருத்துக்களை அறிய வேண்டும். பின் ஒரு கொள்கை வகுக்கப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு பின் அது மறுபரீசிலனைக்கு உட்படுததப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான சாதிகளின் பட்டியல் 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் இட ஒதுக்கீட்டினை தனியார் துறைகளுக்கு நீட்டிப்பது சரியல்ல. தனியார் துறையில் தாழ்ததப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டுமா, இல்லை மிகவும் பிரபடுத்தப்பட்டோருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதும் விவாதிக்கப்பட வேண்டும். தலித் சிந்தனையாளர்கள் சிலர் தலித்களுக்கு மட்டும் இது தேவை என்று கருதுகின்றனர்.

இன்று இட ஒதுக்கீடு ஒரு புனிதப் பசுவாக மாற்றப்பட்டுள்ளது.அனைத்துக் கட்சிகளும் அதை ஒட்டு வங்கி அரசியலின் ஒரு பகுதியாக பார்ப்பதால் அதை குறித்து விமர்சனம் அவர்களிடமிருந்து எழாது. முதலில் இட ஒதுக்கீட்டினை விமர்சித்த பா.ஜ.க பின் தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீட்டினை ஆதரித்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைந்த வேறு பல பரிந்துரைகள், குறிப்பாக நில உச்சவரம்பினை கறாராக அமுல் செய்தல் குறித்து கட்சிகள், சாதிச் சங்கள் அக்கறை காட்டவில்லை. இதன் காரணம் வெளிப்படை. ஆனால் இட ஒதுக்கீடு கேள்விக்குட்படுத்த்க கூடாத அல்லது முடியாத அடிப்படை உரிமை என்ற் தோற்றத்தினை இவை உருவாக்கியுள்ளன. அரசியல் சட்டம் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை நிரந்தரமானது என்று கூறவில்லை. இட ஒதுக்கீடு ஒரு வழி முறை, அது அடிப்படை உரிமையல்ல. அனைவருக்கும் சம வாய்ப்பு, பாரபட்சமின்மை அடிப்படை உரிமைகள். இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரின் வாய்ப்புகளை பறிக்க கூடாது என்பதற்காகவும், இட ஒதுக்கீடு என்பதுசம உரிமைகளுக்கு முரணாக மாறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும்தான் உச்ச நீதி மன்றம் 50% இட ஒதுக்கீட்டினை உச்சவரம்பு என்று தீர்ப்பளித்தது.

இட ஒதுக்கீடு சாதிய முறையினை 'நவீனமய' மாக்கியுள்ளது. இட ஒதுக்கீடு புதிய பாகுபாடுகளை சாதிகளிடையேயும், சமூகத்தில் உருவாக்கியுள்ளது. சாதி ஒழிப்பினை முன் வைத்த பெரியார் முன்னிறுத்த இட ஒதுக்கீடு இதைச் செய்திருப்பது ஒரு வகையில் முரண்தான். இதன் மூலம் சாதியம் என்பது வேறொரு பரிமாணம் பெற்றிருக்கிறது.

இட ஒதுக்கீடு குறித்த ஒரு அறிவார்ந்த விவாதம் தேவை. அதற்கு இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள்,விவாதங்களில் எழுந்த கருத்துக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு ,மற்றும் பல்வேறும் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பெறப்பட்ட புள்ளி விபரங்கள் - இவற்றை தொகுத்துக் கொள்வது அவசியம். இட ஒதுக்கீடு ஒரு கொள்கை என்றால் அதன் மூலம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த விரும்புகிறோம், அதற்கான வழி முறைகள் என்ன என்பதையும் விவாதிக்க வேண்டும்.

இங்கு இட ஒதுக்கீட்டினை கண் மூடித்தனமாக ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இதற்கெல்லாம் தயாராக இல்லை. பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை. இதுதான் அவர்களது பகுத்தறிவின் எல்லை.
கலைஞன், வாசகர்கள், காலமுரண் -ஜெயகாந்தனை முன் வைத்து ஒரு குறிப்பு

ஜெயகாந்தன் ஆனந்த விகடனுக்களித்த பேட்டியில் கூறியிருப்பவை வியப்பளிக்கவில்லை. அவரிடமிருந்து வேறெப்படிப்பட்ட பதில்களை நாம் எதிர்பார்க்கமுடியும்.

காங்கிரஸ் தொடர்ந்துபல ஆண்டுகள் ஆட்சி செய்த மாநிலங்கள் பல எந்த அளவு பின் தங்கியுள்ளன என்பதும் நமக்குத்தெரியும். வட இந்தியாவில் 1947க்குப் பின் காங்கிரஸ் அதிக ஆண்டுகள் ஆண்ட மத்திய பிரதேசம்,பீகார் , இப்போதைய ஜார்க்கண்டையும் சேர்த்து, ராஜஸ்தான், ஒரிஸ்ஸாவுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு பலவற்றில் மிகவும் முன்னேறியிருக்கிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணிதான் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது.அம்மாநில நிதி நிலைமை படு மோசம், ஊழலுக்கும் பஞ்சமில்லை. இதற்கு யார் பொறுப்பு.

1967க்குப் பின் தமிழ் நாட்டில் ஊழல் செழித்தது உண்மை தான், ஆனால் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் இன்னும் மோசம். ஏன், நேரு காலத்திலேயே ஊழல்கள் இல்லையா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏன் பதவி விலகினார். இந்திரா காலத்திலும் எத்தனையோ ஊழல் புகார் எழவில்லையா, ராஜிவ் காலத்தில் போபார்ஸ். நரசிம்ம ராவ் ஆடசியில் ஊழல்கள் இல்லையா.இன்னும் சொல்லப் போனால் 'சோசலிச' அரசில் இருந்த லைசென்ஸ், பெர்மிட் விதிமுறைகளும், அதிகாரக் குவிப்பும் ஊழலுக்கு உதவின.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் அதிகம் இல்லை என்றாலும் அது அப்படியே தொடர்ந்திருக்கும், ஊழல் அதிகரித்திருக்காது என்று கூற முடியாது. ஏனெனில் அரசின் வரவும், செலவும் அதிகரிக்க அதிகரிக்க ஊழல் அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் கூடுகின்றன, இது அனைத்து மட்டத்திற்கும் பொருந்தும் என்பதுதானே இந்தியர்களின் அனுபவம்.

கழகங்களின் ஆட்சியில் நிர்வாகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆண்ட, ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழ் நாட்டில் நிர்வாகம் மோசமில்லை. 1967க்குப்பின் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லை என்பதும், அது தனியாக நின்று ஆட்சியினைப் பிடிப்பது இப்போதிருக்கும் நிலையில் சாத்தியமே இல்லை என்ற யதார்த்தம் அவருக்கு எரிச்சல் தருகிறது. அந்த எரிச்சலே இப்படி வெளிவருகிறது. அவரது பிற பதில்களையும் அலசி ஆராய்ந்தால் இது போன்ற முடிவுகளுக்கே வர வேண்டியிருக்கும். ஜெயலலிதா பெண்மணி என்றால் பெரியார் மறைவிற்குப் பின் தி.க வினை வழி நடத்திய மணி அம்மையார் பெண்மணி இல்லையா. தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாத அளவிற்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.

1967ல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் தோற்றது, பதவியிழந்தது. காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் பதவி ஏற்ற போதெல்லாம் அவை முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆளவிடாமல் காங்கிரஸ் சதி செய்யவில்லையா. காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு வலுவான கூட்டணி அமைத்தது பா.ஜ.க. இன்று காங்கிரஸ் தனித்து நின்று மத்தியில் ஆட்சியினைப் பிடிக்க முடியாத அளவிற்கு வலுவாக உள்ளது. காமராஜ் கால காங்கிரஸ் நினைவிலிருக்கும் ஜெயகாந்தன் நிகழ்காலத்தினை புரிந்து கொள்வாரா.

ஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் அவரது பேட்டிகளைப் படிப்பவர்கள் இப்படி உளறுகிறவர் எழுதியிருப்பதை படிக்க வேண்டுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இவற்றைப் பொருட்படுத்தாது அவரது இலக்கியப் படைப்புகளைப் படியுங்கள். அவர் இப்படிப் பேசுவது புதிதல்ல.காலம் நிர்தாட்சண்யமாக அவரது பல கருத்துக்களை நிராகரித்துவிட்டது, சமூகமும்தான். அதனடிப்படையில் தன் கருத்துக்களை மறுபரீசலனை செய்ய அவர் தயாராக இல்லாத போது அவர் ஒரு விதத்தில் காலமுரண்தான். இதை அவரது வீழ்ச்சி என்பதை அறிந்த வாசகர்கள் பலர் அவரை ஒரு பீடாதிபதியாக்கவில்லை, உரிய அங்கீகாரத்தினை அளித்து விட்டு முன் நகன்றுவிட்டனர். இன்று அவரை எந்தவித விமர்சனமுமின்றி புகழ்வோரும், அவரும் என்றேனும் ஒரு நாள் இவற்றை உணரக்கூடும்.
பெண்களும், அறிவியலும்


'பெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை' என்ற தலைப்பில் உயிர்மை மாத இதழுக்காக எழுதப்பட்ட இக்கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளியாகிறது.கட்டுரையின் அடுத்த பகுதி மே மாதம் வெளியாகும்

1
பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி.ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ்,சி.வி.ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் - அறிவியலில் பெண்கள் இல்லையா இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா.
ஜனவரி 2005ல் ஒரு கருத்தரங்கில் ஹார்வர்ட் பல்கலைத் தலைவர் லாரன்ஸ் ஸம்மர்ஸ் தெரிவித்த கருத்துக்கள் கடும் எதிர்வினைகளை உருவாக்கின. ஹார்வர்ட் பல்கலைகழக ஆசிரியர்கள் உட்படபலர் அவரை விமர்சித்தனர். தொடர்ந்து பத்திரிகைகளில் அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் கூட்டறிக்கைகள், கூட்டுக் கடிதங்கள் வெளியாகின்றன. தன் கருத்துக்களுக்காக வருந்துவதாக அவர் கூறியும் சர்ச்சை ஒயவில்லை. இப்போதும் சர்ச்சை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தான் பேசியது என்ன என்பதையும் வெளியிட்டு, தன் நிலைப்பாட்டினைத் தெளிவாக்கினார். ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர்கள், மூன்று பல்கலைகழகங்களின் தலைவர்கள் எனப் பலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர்.அவரை பதவி நீக்கம் செய்யமாட்டோம் என்று பல்கலைகழகத்தினை நிர்வகிக்கும் அமைப்பு கூறிவிட்டது. அவர் என்னதான் கூறினார். அவரது உரையில் மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. அவர் கூறியதை சுருக்கமாகச் சொன்னால், உள்ளார்ந்த திறன்கள், குடும்ப பொறுப்புகள், மற்றும் வேலைசார்ந்த காரணங்கள்தான் பெண்கள் அறிவியல், பொறியியற் துறைகளில் மேலிடங்களில் இஅட்ம் பெறாததற்கு காரணம், பாரபட்சமோ, சமூகமயமாதலோ அல்ல. இக்கருத்தினை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தேன், ஒரு விவாதத்தினை உருவாக்கவே முன்வைத்தேன் என்று அவர் கூறினாலும் அதை பலர் ஏற்கவில்லை. ஏனெனில் அவரது முழுப் பேச்சினைப் படித்தவர்களுக்கு அவர் தன்னுடய பாரபட்சமான கருத்துக்களுக்கு அறிவியல் முலாம் பூசுகிறார் என்பது புரிந்துவிடும். சம்மர்ஸ் தன் உரையில் ஒரு சில பெண்களே அறிவியல் புலங்களில் இருப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறினார். குழந்தை(கள்), குடும்ப பொறுப்புள்ள பெண்களால் வாரத்திற்கு 80 மணி நேரம் உழைக்க முடியாதது அல்லது அப்படி உழைக்க அவர்கள் தயங்குவது, உயர்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கணிதம், அறிவியலில் சில பெண்களே ஆண்களை விட அதிக மதிப்பெண் பெறுகின்றனர், இதற்குக் காரணம் பாலினங்களுக்கிடையே உள்ள இயற்கையாக அமைந்த வேறுபாடு.

வேறு வார்தைகளில் சொன்னால் பெண்களுக்கு எதிரான பாரபட்சமோ அல்லது நிறுவனங்களின் செயல்பாடுகள், கொள்கைகள், அறிவியல், பொறியியலில் பெண்கள் அதிக அளவில், குறிப்பாக உயர் பதிவிகளில் இடம் பெறாததற்கு காரணமல்ல. இயற்கையாகவே பெண்கள் சிலவற்றில் ஆண்களை விட திறன் குன்றியவர்கள். சம்மர்ஸ் ஒரு சாதாரண நபராக இருந்து இதைக் கூறியிருந்தால் இவ்வளவு தூரம் சர்ச்சை எழுந்திராது. அவர் உலகில் முதலிடத்தில் உள்ளதாக கருதப்படும் பல்கலையின் தலைவர்.இதற்கு முன்பு அமெரிக்க அரசிலும், அதற்கு முன்பு உலக வங்கியிலும் உயர்பதவிகள் வகித்தவர்.

இந்த இயற்கையாகவே பெண்கள் .... என்பதற்கு வரலாறே உண்டு. பெண்கள் அறிவியல் செய்வதற்கு படைக்கப்படவில்லை என்ற வாதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் நிலவியது. இயற்கையாகவே வெள்ளை நிறத்தவர் அல்லது ஐரோப்பியர்,அமெரிக்கவர் பிற இனத்தவரை விட அறிவில் மேம்பட்டவர்கள். இயற்கையாகவே மனிதரில் வேறுபாடு உண்டு, அதன் விளைவாக என்னதான் முயற்சி எடுத்தாலும் ஒரு சில இனத்தவர் வெள்ளையவர் போல் புத்திசாலிகளாக முடியாது. இந்த இயற்கையாகவே என்ற வாதத்தினை இயற்கையா அல்லது சூழல்,வளர்ப்பா என்ற சர்ச்சையின் (nature vs nurture) ஒரு பகுதியாகக் காணலாம். அனைவரும் சமம் என்று கூறும் போது நாம் பாலின ரீதியாகவோ அல்லது இன ரீதியகவோ யாரும் பிறக்கும் போதே யாரையும் விட உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் இல்லை என்று கொள்கிறோம். அதாவது இயற்கையையிலே சிலர் உயர்ந்தவர்கள், சிலர் தாழ்ந்தவர்கள் என்ற வாதத்தினை ஏற்பதில்லை. மேலும் சரியான சூழலும், போதுமான வசதிகளும் தரப்பட்டால் வறியவர்கள், படிப்பறிவில்லாத பெற்றோரின் குழந்தைகள்,பெண்கள் - இவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி சமூகத்தில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் என்பதை நிரூபிக்கமுடியும். அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது பாரபட்சங்களும், போதுமான வாய்ப்புகள் தரப்படமால் இருப்பதுதான் காரணம். இத்தடைகளை நீக்குவது மட்டுமல்லாது, இதுவரை போதுமான பிரதிந்தித்துவம் பெறாதவர்களுக்கு சில சலுகைகள் தரப்படவேண்டும்,
குறைந்தபட்சம் பாகுபாடுகள் எந்த விதத்தில் இருந்தாலும் அவை நீக்கப்பட வேண்டும். இன்னொரு தரப்பின் வாதம் இது போன்ற 'சலுகைகள்' தேவையேயில்லை, ஏனெனில் அனைவரும் சமமன்று. சிலர் பிறப்பிலேயே சில விசேஷத் திறன்களைப் பெற்றிருப்பவர். அதனால் அவர்கள் வாழ்வில் முன்னேறுவர். திறனற்றவர்கள் பின் தங்கி இருப்பதில் வியப்பில்லை. இதுதான் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. ஏற்றதாழ்வுகளுக்கு முக்கியமான காரணம் இதுதான். எனவே 'தகுதியற்றோருக்கு' சலுகைகள் வழங்குவது இயற்கைக்கு முரணனாது. இது போன்ற வாதங்கள் புதிதல்ல என்றாலும் பல்வேறு கட்டங்களில் இவ்வாதங்கள் அறிவியல் பூர்வமானவை என்று நிரூபிக்கவேமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை சமூக டார்வினியக் கோட்பாட்டுடன் சேரும் போது சமூகத்தில் வெற்றி, தோல்வி என்பதற்கு பரிணாம பரிமாணம் தரப்படுகிறது. கால்ங்காலமாக இவை இனவாதத்தினையும், காலனியாதிக்கதினையும், ஜாதி பாகுபாட்டினையும், ஆணாதிக்கத்தினையும் இன்ன பிற பாகுபாடுகளையும் நியாயப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கு உதாரணமாக 1990களில் வெளியான The Bell Curve (Hernstein & Murray, 1994) என்ற நூலினை கூறலாம். இந்நூலாசிரியர்கள் அறிவுத்திறனை பரிசோதிக்க செய்யப்பட்டும் ஆய்வுகள்,சோதனைகளின் அடிப்படையில் அமெரிக்க-ஆப்ரிக்கர்கள் அறிவுத்திறன்களில் (வெள்ளையரை விட) மட்டமானவர்கள் என்றும், இதற்குக் காரணம் மரபணு ரீதியானது என்றும் வாதிட்டனர். இவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதரவாக பல புள்ளிவிபரங்களையும், சோதனை முடிபுகளையும் முன் வைத்தனர். ஆனால் இதை விமர்சித்தவர்கள் இவர்கள் ஆய்வு முடிவு, முடிபுகளைக் கையாண்ட விதம், பயன்படுத்திய புள்ளியல் முறைகளைக் கேள்விக்குள்ளாக்கினர். அப்படிப்பட்ட முடிவிற்கு, அதாவது அமெரிக்க-ஆப்ரிக்கர்கள் அறிவு ரீதியாக திறன் குறைந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்பது இவர்கள் வாதம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் அமெரிக்க ஆப்ரிக்கர்கள் இயற்கையாகவே திறன் குறைந்தவர்கள் என்றால் அவர்கள் முன்னேறமடையமாதற்கு காரணம் இயற்கையான இந்த வேறுபாடு என்று கூற முடியும். மேலும் அப்படி இயற்கையாகவே திறன் குன்றியோருக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னிரிமை தருவதோ சரியல்ல, ஏனெனில் எவ்வளவுதான் முயன்றாலும் இயற்கையாக அமைந்த பாகுபாட்டினை மாற்ற முடியாது. இது போன்ற வாதங்கள் பல்வேறு விதங்களில் முன் வைக்கப்படுவதுடன், இவற்றில் இயற்கை என்பது ஒரு மாற்றவியலாத, முக்கிய காரணியாகக் காட்டப்படுவதுதான. இந்த இயற்கை என்பது பல்வேறு வகைகளில் முன்னிறுத்தப்படுகிறது - மரபணுரீதியான வேறுபாடுகள் என்பது அதில் ஒன்று.

2
1879ல் பெண்களின் மூளை அளவு சிறியது, எனவே அவர்களது அறிவாற்றல் குறைவானது என்று எழுதிய ஒரு ஆய்வாளர் பெண்களின் அறிவாற்றிலினை ஆராய்ந்த உளவியலாளர்கள் அவர்கள் அறிவாற்றல் குன்றியவர்கள், அவர்களது அறிவாற்றல் ஒரு சிறு குழந்தையின் அறிவாற்றலுடன் ஒப்பிடத்தக்கது என்று எழுதியதுடன் ஒரு சில பெண்கள் அறிவாற்றல் அதிகம் பெற்றிருப்பது ஒரு விதிவிலக்காகவே கொள்ளப்படவேண்டும் என்று வாதிட்டார். எனவே அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான கல்வி தருவதோ, ஆண்களின் இலக்குகளை அவர்களுக்கு நிர்யிணப்பதோ சரியல்ல என்பது அவரது வாதம். எனவே சம்மர்ஸ் கூறியது முற்றிலும் புதிது அல்ல.பெண்கள் இத்தகைய 'பேருண்மை'களை பல முறை, பல வடிவங்களில் கேட்டுள்ளனர். ஆனால் இந்த வாதங்களுக்கு எதிரான ஆய்வுகள், வாதங்கள் இன்று மிக வலுவாக உள்ளன. ஒரு சில ஆய்வுகள் ஆண்கள், பெண்களிடையே திறன்களில் வேறுபாடு இருப்பதாகக் கூறினாலும், அவை சர்சிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக டோரின் கிமுரா என்ற பேராசிரியர் 2002 ஆண்டு எழுதிய கட்டுரையில் ஆண்கள், பெண்களின் மூளைகள் வெவ்வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார். 3, 4 வயதுடைய ஆண் குழந்தைகள் மனரீதியாக உருவங்களை சுழற்றுவதில் பெண் குழந்தைகளை விட திறன்மிக்கவர்கள் என்று குறிப்பிட்டுகிறார்.மேலும் காமிலா பென்போ என்ற பேராசிரியர் கணிதத் திறன் என்பதில் உயிரியல் ரீதியான காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறுவதை சுட்டிக் காட்டுகிறார்.மழலையர் பள்ளியிலிருந்து, ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளின் கணித, மற்றும் வெளிரீதியான (spatial) திறன்களை ஆராயும் மிசைல் மாசோக்கா என்ற ஆய்வாளர் இவற்றில் ஆண், பெண் குழந்தைகளிடையே உள்ள வேறுபாடு மிக்ககு¨றைவு என்பதுடன் இவ் வேறுபாடுகள் தொடர்வதில்லை என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்.

யு சையி என்ற சமூகவியல் பேராசிரியர் இதுவரை ஆண், பெண் குழந்தைகள் சோதனைகளில் பெறும் மதிப்பெண் வேறுபாட்டிற்கு இயற்கை அல்லது உள்ளார்ந்த திறன்கள் என்பது சரியல்ல என்கிறார். இரட்டைக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வுகள் பல பாலினத்தினை கருத்தில் கொள்வதில்லை என்கிறார். மேலும் தர்க்க ரீதியாக சம்மர்ஸ் கூறுவது சரியல்ல என்று கூறும் இவர் பெண்கள் கணிதத்தில் பெரும் தேர்ச்சி பெற்றாலும் கூட கணிதம்,அறிவியல் துறைகளை வேலைக்காக மேற்கொள்வதற்கான சாத்தியம் குறைவு என்கிறார். கணிதம்,அறிவியல் துறைகளில் உயர் பதவிகளில் பெண்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் இயல்பாகவே அவர்களுக்கு உள்ள திறன் குறைவு என்பது சம்மர்ஸின் வாதம்.

ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல், பொறியியல் துறைகளின் பெண்களின் பங்கேற்ப்பு தொடர்ந்து கூடியபடித்தான் உள்ளது. இயல்பான திறன் அல்லது மரபணு காரணம் என்பது காரணமென்றால் இது சாத்தியமே இல்லை. ஏனெனில் நமது மரபணுகளில் சில பத்தாண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வாதிடவே முடியாது. மாறாக பெண்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது போன்றவைதான் காரணிகளாக இருக்க முடியும் என்பது இவர் கருத்து.க்யுபாவில் பெண்கள் அறிவியல், பொறியியல் துறைகளில் உயர் பதவிகளில் அதிகம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ரிச்சர்ட் லெவின்ஸ் 1959 ல் மனித மூலக்கூறு தொகுப்பில் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டுவிட்டதா என்று கேட்கிறார். 1959ல் க்யுபாவில் புரட்சி காரணமாக ஆட்சி அதிகாரம் மாறியது.

எனவே சம்மர்ஸ் கூறியதை கேள்விக்குள்ளாக்குவோர் இதில் ஒரு ஒருமித்த கருத்து இல்லை என்பதுடன், பல ஆய்வுகள் ஆண்,பெண் திறன்கள் வேறானவை என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொன்னால் இயல்பாக வேறுபாடு இருப்பதாக கூறும் ஆய்வுகளால் சிலவற்றை திருப்திகரமாக விளக்க முடியவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். மேலும் பெண்கள் பங்கேற்ப்பிற்கு தடையாக உள்ள சமூக ரீதியான, அமைப்பு ரீதியான காரணிகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்பதை வலியுறுத்துகிறார்கள்.

இதன் பொருள் மரபணு ரீதியான வேறுபாடுகளை முற்றிலும் மறுப்பதல்ல.மாறாக மரபணுக்கள் அறிவாற்றல் போன்றவற்றை தீர்மானிக்கும் காரணிகள் என்ற நிர்ணயவாதத்தினை ஏற்க முடியாது என்பது. மாறாக மரபணுக்களை விட புறக் காரணிகளான சூழல்,சமூக நிலை போன்றவையே அறிவாற்றலை வளர்ப்பது, வெளிப்படுத்துவது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மரபணுக்களைக் காரணம் காட்டி பாகுபாடு செய்வது சரியல்ல, மாறாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகள், வசதிகள் தரப்பட வேண்டும். காலங் காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சலுகைகள், வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்ய முடியும். சமூக அறிவியல் ஆய்வுகளை கொள்கை முடிவுகளை எடுக்க பயன்படுத்தும் போது இந்த ஆய்வுகளின் போதாமைகள், வரையறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சில ஆய்வுகள் மூலம் இவை காரணி அல்ல என்று அறிய நேர்ந்தாலும் வேறு காரணிகள் என்ன என்பதை அறிய மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும். அது மட்டுமின்றி அமுல் செய்யப்பட்ட கொள்கை முடிவுகள் உண்மையிலேயே விரும்பிய பயன்களை விளைவித்தனவா என்பதையும் ஆய வேண்டும். உதாரணமாக பெண்கள் அறிவியலில் அதிகமாக பங்கேற்கும் வகையில் ஒரு திட்டம் வகுக்கப்படுகிறதென்றால், அது அமுல் செய்யப் படும் போது ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் அறிய வேண்டும். ஏனெனில் அத்திட்டம் சில அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். நடைமுறையில் அவ்வானுமானங்கள் சரிதானா அல்லது எதிர்பார்த்திராத காரணிகள் காரணமாக விளைவுகள் திருப்திகரமாக இல்லையா என்பதையும் அறிய வேண்டும்.

ஒரு சிக்கலான சமூக பிரச்சினைக்கு ஒற்றைத் தீர்வையோ அல்லது ஒற்றைக் காரணியையோ முன்னிறுத்துவது கவர்ச்சிகரமாக இருக்கலாம்.ஆனால் யதார்த்தம் வேறு விதமாக இருக்கும். எனவேதான் பெண்ணியமும், அறிவியலும் குறித்து அனைத்தையும் வெறும் ஆணாதிக்கம் என்ற ஒற்றைக் காரணி மூலம் விளக்கிவிட முடியாது. ஏனெனில் சமத்துவம் நிலவுவதாகக் கருதப்படும் சூழலிலும் கூட வேறு சில காரணிகள் காரணமாக பெண்கள் அதிகமாக பங்கேற்பது சாத்தியமின்றிப் போகலாம். உதாரணமாக ஒரு நிறுவனம் ஆண்-பெண் பாகுபாடின்றி பணிக்கு ஆட்களை தகுதி அடிப்படையில் எடுப்பதாகக் கூறினாலும் தனியே தங்கி பெண்கள் வேலைக்கு செல்ல வசதிகள் இல்லாத போது, அதாவது பெண்களுக்கான தனி விடுதிகள் போன்றவை இல்லாத போது, தனியே தங்கும் பெண்களுக்கு வீடுகள் கிடைக்காத போது, பெண்களால் அந்த வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள இயலாது போய்விடும்.
பல்கலைகழகங்களில் பெண்கள் உயர்கல்வி பயில் வெறும் அனுமதி அல்லது இடம் மட்டும் கிடைத்தால் போதாது. அதை பயன்படுத்திக் கொள்ள விடுதிவசதிகளும் தேவை. ஆகையால் பெண்கள் அறிவியலில் அதிகம் பங்கேற்கவகை செய்ய வேண்டுமென்றால் பாரபட்சங்களை நீக்குவது முதல் படி, அது மட்டுமே விரும்பிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.

பெண்களைப் பொருத்தவரை அவர்கள் பங்கேற்ப்பிற்கு பல காரணிகளும் தடையாக உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும், குடும்ப நிர்வாகம் செய்யவும்படைக்கப்பட்டார்கள் என்ற கருத்து.இதன்படி பெண்களின் விதியை அவர்கள் உடலே தீர்மானித்துவிட்டது. இதற்கு மாறாக செயல்படுவது என்பது இயற்கைக்கு முரணானது, சமூக அமைப்பிற்கே எதிரானது. ஆண்டவன் பெண்களை இப்படித்தான் படைத்திருக்கிறான் என்ற வாதத்தினை மறுக்கும் பெண்ணியவாதிகள் சொல்வது Biology is not destiny. ஆனால் குழந்தை மணம் முதல் பல கொடுமைகளை நியாயப்படுத்த பெண்களின் இந்த உடல் குறித்த கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது சரி அல்லது அவர்களின் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டதோ நியாயம் என்ற வாதங்கள் காலங்காலமாக மதவாதிகளால் தெய்வ வாக்காகவும், தீர்க்கதரிசிகளின் வாக்காகவும் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் பெண்களிற்கு மூளை உள்ளது, பல திறன்கள் அவர்களிடம் இருப்பது என்பதை ஏற்பதில்லை. அப்படியே ஏற்றாலும் அவைகளை குடும்பம் என்ற வட்டத்திற்குள் பயன்படுத்தலாம் என்றே கருதினர். உதாரணமாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியபலர் அது குழந்தை வளர்ப்பிற்கு உதவும், அறிவுள்ள குழந்தைகள் பெற, குடும்ப நிர்வாகத்திற்கு உதவும் என்பது போன்ற காரணங்களை முன்வைத்தனர். அதாவது பெண் கல்வி என்பது குடும்பத்திற்கும், கணவனுக்கும் பயன்படும் என்பதால் அதை ஏற்கலாம் என்றனர். மேலும் கல்வி கற்ற பெண் என்பவள் வேலைக்குப் போவது என்பதோ, நிதி ரீதியாகவும், வேறு வகைகளில் சுதந்திரமாக செயல்படுவது என்பதும் அவர்களைப் பொருத்த வரை தேவையற்றவை. எனவே திருமணம் செய்து வைக்கப்படும் முன் பெண் கல்வி பெறலாம் என்று கருதப்பட்டது. இப்படிப்பட்ட குறுகிய பார்வைகள் இன்று நகைப்புக்குரியவையாக தோன்றினாலும் போன நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் இவை வெகுவாக விவாதிக்கப்பட்டவை. இதைக் கூட ஏற்க இயலாத பிற்போக்குவாதிகள் இருந்தார்கள்.

பொதுவாகவே பொதுக்களன் , தனிக்களன் என்ற பாகுபாடு நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் உள்ளது. காலங்காலமாக நிலவிய கருத்தின்படி பொதுக்களன் என்பது ஆண்களுக்கு உரியது, அங்கு பெண்களுக்கு சமமான இடமில்லை. தனிக்களன் என்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடமுண்டு. ஆனால் இங்கும் பெண்களின் இடத்தினை தீர்மானிப்பது ஆண்கள்தான். பொதுக்களன் என்பதை பலர் கூடுமிடம், பலர் உரையாடும்,விவாதிக்கும் இடம், சந்தை போன்ற இடங்கள், அரங்கங்கள், கல்வி நிலையங்கள் என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.தனிக்களன் என்பதை வீடு,தனி நபர் இடம், அனுமதியின்றி பிறர் நுழைய முடியாத இடம் என்று கொள்ளலாம். ஆனால் மதரீதியாகவும், இன்ன பிற வகைகளில் பெண்களின் நடமாட்டங்கள் குறித்து பல விதிகள் பெண்கள் தனிக்களனில் இருப்பதையே வலியுறுத்துவதுடன், அதுதான் முறை,தர்மம் என்று கூறுகின்றன. இதில் முக்கியமாக பெண்களின் உடைகள் குறித்த விதிகள் இதை முன் வைத்து பொதுக்களனில் பெண்கள் பங்கேற்ப்பதை கிட்டதட்ட தடை செய்கின்றன. இவ்விதிகள் எல்லா சமூகங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால் பொதுக்களனில் பங்கேற்கும் உரிமைகள் பெண்களுக்கு பல விதங்களில் கட்டுப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை என்பது கடந்த ஆண்டின் துவக்கத்தில் சில நாடுகளில்தான் தரப்பட்டது.இன்றும் எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. இந்த பொதுக்களன், தனிக்களன் என்ற பாகுபாடு பெண்களுக்கு உரிய இடம் வீடு என்பதை ஏதோ ஒரு வகையில் வரையறை செய்யும் போது, பொதுக்களனில் பெண்கள் எந்த அளவு பங்கேற்கலாம் என்பதையும் பெண்களின் குடும்ப வாழ்க்கையுடன் தொடர்புடைய வகையிலே தீர்மானிக்கிறது. பெண்களின் தனிப்பட்ட,சமூகரீதியான எல்லைகள் இப்படி வகைப்படுத்தப்படும் போது உயர்கல்வி, அறிவியல் பயிற்சி போன்றவை பெண்களுக்கு நூற்றாண்டுகளாக மறுக்கப்படுவது இயற்கையாக சித்தரிக்கப்பட்டது. சமத்துவம் என்ற குரல்கள் எழுந்த போதும் கூட பெண்களுக்கான உரிமைகளுக்கான போராட்டம் பல சவால்களையும், பிற்போக்கான கருத்தியல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அதே சமயம் பெண்களுக்கு தரப்பட்ட உரிமைகள் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் பெற போதுமானவையாக இருந்தன என்று கூறமுடியாது.உதாரணமாக இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டிருந்தாலும் மக்களவை, மாநில சட்டசபைகளில் பெண்களில் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வந்தபின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் எண்ணிக்கை கூடியது. எனவே பொதுக்களனில் பங்கேற்கும் உரிமை தேவை, ஆனால் அது மட்டுமே பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் பெற்று தரும் என்று கருத முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை கூடினாலும் அதன் காரணமாகவே அறிவியல்,பொறியியல் துறைகளில் உயர்பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கைவெகுவாக அதிகரிக்கும் என்று கூற முடியாது. இது ஏன் என்பதை இன்னொரு பகுதியில் விளக்குவோம்.

3
இன்றுதான் இப்படி என்றால், வரலாற்றில் பெண் அறிவியலாளர்கள் முற்காலங்களில் இருந்திருக்கிறார்களா, அறிவியலில் பெண்களின் பங்களிப்பு என்ன என்பது போன்ற கேள்விகள் எழுவது சகஜம். பொதுவாக பாடநூல்கள், வெகுஜன புரிதல் அறிவியலில் சிலரை பங்களிப்பினை மட்டும் முன்னிறுத்தினாலும் அறிவியலின் வரலாறு, அறிவியலை ஒரு சில மேதைகளின் உழைப்பினால், அறிவாற்றலால் மட்டும் உருவான ஒன்று என்று சித்தரிப்பதில்லை. ஒரு ஆர்க்கிமிடிய புள்ளியிலிருந்து அறிவியல் செய்வதில்லை. பெண்களின் பங்களிப்பு குறித்த அக்கறைகள் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு குறித்து போதுமான தகவல்கள் இல்லை. பெண்கள் ஆதிகாலத்தில் விவசாயத்திலும், வேட்டையாடுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளனர். புதிய பயிரின வகைகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ஆனால் முதல் பெண் அறிவியலாளர் யார் என்பது நமக்குத் தெரியாது. பதிவு செய்யப்பட்டவரலாற்றில் பண்டைய கிரேக்கத்தில் பெண் தத்துவஞானிகள் இருந்திருப்பது தெரியவருகிறது. உபநிடதங்களிலிருந்து கார்கி என்ற பெண் தத்துவஞானி இருந்திருப்பதும் தெரிகிறது.

ஹிப்பேஷியா - இவர் கணித அறிஞர், தத்துவஞானி.இவர் கருவிகளை உருவாக்கியவர். தியொன் என்ற கணிதவியலாளரின் மகளான இவர் கணிதமும், இயற்கைத் தத்துவமும் கற்பித்தார்.கணிதம், வானியல் குறித்து நூல்களுக்கு உரைகள் எழுதியிருக்கிறார்.சமகால தத்துவஞானிகளிடம் உரையாடியவர். நீர் வடிகட்டும் கருவி, கன அடர்த்தியை அளக்கும் கருவி உட்பட மூன்று கருவிகளை உருவாக்கியவர். எகிப்தில் அலெக்சண்டிரியா நகரில் வசித்தார்.அப்போதைய மத்தியதரைக் கடல் பகுதியில் இயற்கைத் தத்துவத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த தத்துவவாதிகளில் ஒருவராக கருதப்பட்டார். சுதந்திர சிந்தனைக்கும், பகுத்தறிபிற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். தவறாக சிந்திப்பது சிந்திக்காமலே இருப்பதை விட மேலானது என்பதால் சிந்திக்கும் உரிமைக்கு முக்கியத்துவம் கொடு என்று எழுதினார். இவர் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு காரணங்கள் சரியாகத் தெரியவில்லை. சிரில் என்ற கிறிஸ்துவ பிஷப்பின் ஆதரவாளர்களால் இவர் கொல்லப்பட்டார் என்றும், உள்ளூர் அரசியல் காரணங்களால் கிறிஸ்துவர்கள் இவரைக் கொன்றனர் என்றும் கூறப்படுகிறது.கிறிஸ்துவர்களால் இவரது தத்துவம், புகழ் ஆகியவற்றை ஏற்க இயலவில்லை, மேலும் இவர் பெண்ணாக வேறு இருந்ததும் இவர் மீது பொறாமை ஏற்பட காரணமாக இருந்தது. எனவே சிரில் தன் ஆதரவாளர்களை கும்பலாக அனுப்பி அவரை கொலைச் செய்தான் என்று குறிப்புகள் கூறுகின்றன. தேவாலயத்தில் இவர் கொலைச் செய்யப்பட்டார் என்றும் குறிப்புகள் கூறுகின்றன. ஹிப்பேஷியா பிளாட்டோவின்தத்துவங்களின் அடிப்படையாகக் கொண்ட நவபிளாட்டோனியத்தை முன்னிறுத்தியவர்.ஏக இறைக்கொள்கை கொண்ட கிறித்துவர்கள் இவரைக் கொன்றிருக்கிறார்கள்.

பெண்ணியவாதிகளுக்கு ஹிப்பேஷியா மிக முக்கியமானவர்.எனவே பெண்களும்,தத்துவமும் குறித்த ஒரு ஜர்னல் ஹிப்பேஷியா என்ற பெயரில் வெளியாகிறது. அவரது நூல்கள் அழிக்கப்பட்டன, அலெக்சாண்டிரியாவில் இருந்த பெரும் நூலகம் தீக்கிரையானது.எனவே எஞ்சியிருப்பவை அவர் குறித்த குறிப்புகளும், வேறு தகவல்களும்தான். ஆனால் 18ம் நூற்றாண்டில் அவர் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்பட்டார். எனினும் அவரைக் குறித்த சில முக்கியமான நூல்கள் 1990களில்தான் வந்தன. இன்று ஹிப்பேஷியா ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறார். ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் உயர்குடிகளைச் சேர்ந்த பெண்களும், அறிவியலாளர்களின் மனைவிகள்,சகோதரிகள்,மகள்கள் அறிவியலில் ஆர்வம் காட்டினர். பரிசோதனைகள் முக்கியத்துவம் பெறத்துவங்கின. பெண்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தாலும் அவர்களுக்குஅங்கீகாரம் கிடைக்கவில்லை. மாறாக அவர் விதிவிலக்குகளாகவும், அச்சம் ஏற்படுத்தும் பெண்களாகவும் கருதப்பட்டனர். உதாரணமாக எமிலி டெ சாட்லெட் பெண்ணாக இருப்பதை குறையாகக் கொண்ட ஆண் என்று குறிப்பிடப்பட்டார்.மேரீ பால்ஸ் லவாசியர் பெண் உடலில் ஆண் மனது கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டார். பெண்கள் தங்கள் பல்வேறு வேலைகளுடன் அறிவியலிலும் ஈடுபட்டனர். ஆனால் மேதைகளின் சாதனைகள் அவர்களின் தனிப்பட்ட சாதனைகளாக கருதப்படும் போது பெண்கள் ஆற்றிய பங்கிற்கு உரிய மரியாதை இல்லை. உதாரணமாக நட்சத்திரங்களை பட்டியலிட்ட பெருமை ஹெவெலியஸிற்கு கிடைத்தது. ஆனால் இரவுகளில் அவருடன் சேர்ந்து உழைத்த அவர் மனைவி எலிபெத்தாவின்பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை பெரும்பான்மையான பல்கலைகழகங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இத்தகையப் படிப்பிற்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என்ற கருத்தும் நிலவியது. அவர்களின் சிறிய மூளைக்களுக்கு அறிவியல் உகந்ததல்ல எனவும், அவர்களுக்கு அறிவாற்றல் இல்லை எனவும் கருதப்பட்டது. மேலும் பல்கலையில் படிப்பது அவர்கள் உடல்நலத்திற்கு உகந்தது அல்ல எனெனில் உயர்கல்வி அவர்களது இனப்பெருக்க திறனைப் பாதிக்கும் என்றும் வாதிடப்பட்டது. 18ம் நூற்றாண்டில் மத்தியதர வர்க்கம் வலுப்பெற்றது. உயர்குடிப் பெண்கள் சலூன்கள் என்ற பெயரில் விவாத அரங்குகளை நடத்திய போது அது சமூக விரோதச் செயலாகவும், பெண்மைக்கே இழுக்கு எனவும் விமர்சிக்கப்பட்டது. மேலும் அறிவியல் ஆய்வு என்பது ஆண்தன்மையுள்ள செயல்பாடு அதில் பெண்களுக்கு இடமில்லை எனவும், அவ்வாறு பெண்கள் அறிவியலில் ஈடுபடுவது பெண்கள் ஆண்களாகவதற்கு ஒப்பானது என்றும் காரணங்கள் கூறப்பட்டன.பெண்களின் வேலைகுடும்ப நிர்வாகம், குழந்தைகளுக்கு கல்வி என்று வரையரை செய்த பின் பெண்களின் இடம் வீடு என்று வகுக்கப்பட்டது.

18ம் நூற்றாண்டில் ஆண்-பெண் இயற்கை பாகுபாடுகள் குறித்து ஏராளமாக பேசப்பட்டது.பெண்கள் தனிக்களன், உணர்ச்சிகள்,உணர்வுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஆண்கள் பொதுக்களன்,பகுத்தறிவு, ஆய்ந்தறிதலுடன் தொடர்புபடுத்தப்பட்டனர். இந்த எல்லையை மீறும் பெண்கள், அதாவது பொதுக்களனிற்கு செல்ல விழையும் பெண்கள் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை பெற்றவர்களாகிவிடுவார்கள் என்ற அச்சம் நிலவியது.ஆண் பெண் சமத்துவம் என்பதற்கு பதிலாக ஆணும் பெண்ணும் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள் என்பதால் ஒத்திசைவே சாத்தியம் சமத்துவம் அல்ல என்று வாதிடப்பட்டது. மேலும் அப்போது பல்கலைகழகங்களில் செய்யப்படுவதே அறிவியல், பொழுபோக்கு,ஆர்வம் காரணமாக வீட்டிலிருந்து பெண்கள் செய்பவை அறிவியல் அல்ல என்றும் கருதப்பட்டது. இது போன்ற பல காரணங்களால் பெண்கள் அறிவியலில் உரிய இடம் பெறாமல் போனது. மேலும் பெண்களின் சாதனைகள் மதிக்கப்பட்ட போதும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.உதாரணமாக தேசிய அறிவியல் அகாதமிகளில் பெண்கள் உறுப்பினராவது என்பது மிக அபூர்வமாகவே இருந்தது.

(அடுத்த பகுதி அடுத்த மாதம் அதாவது மே 2005ல் வெளியாகும்)