ஒரு ரசிகனின் குறிப்புகள் - P.B.ஸ்ரீநிவாஸ் - 1

1952 லேயே அறிமுகமானாலும் 1961ல் வெளியான பாவ மன்னிப்பு படத்தில் அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல் அவரை மிகவும் பிரபலமாக்கியது.அதற்கு முன்பும் அவர் பல குறிப்பிடதகுந்த பாடல்களை பாடியிருக்கிறார். தமிழில் ஜெமினி கணேசனுக்காக பல பாடல்களை பாடியிருந்தாலும் A.M.ராஜா தமிழில் பாடுவதை தேன் நிலவு படத்துடன் நிறுத்திக் கொண்டார்.கிட்டதட்ட 7 அல்லது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெமினிக்காக அவர் பாடியது ரங்க ராட்டினம் என்ற படத்தில் (முத்தாரமே உன் ஊடல் என்னவோ- ராஜா- ஈஸ்வரி).

ஸ்ரீநிவாஸின் பொற்காலம் 1961ல் ஆரம்பித்து 1968 அல்லது 1969 வரை தொடர்கிறது. 1970 களில் அவர் அதிகமாக பாடவில்லை, 1980 களில் இன்னும் குறைவு.தமிழில் அவர் கடைசியாகப் பாடிய முழுப்பாடல் ஊமை விழிகள் படத்தில் என்றால் அதற்கு முன் இளைய ராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். பத்தாண்டுகளுக்குள் காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார். சில படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார்- ஹிந்தியில். ராஜா பாடுவதை நிறுத்திக் கொண்ட போது ஜெமினி உச்சத்திலிருந்தார். ஜெமினிக்கு பொருந்தும் இன்னொரு குரல் ஸ்ரீநிவாஸ¤டையது என்பதால் ராஜா இல்லாத குறையை இவர் தீர்த்து வைத்தார் என்று சொல்லலாம். இருவர் குரலும் மென்மையானவை என்றாலும் வேறுபட்ட குரல்கள்.

ஸ்ரீநிவாஸின் குரல் பலருக்கு ஜெமினியை நினைவுபடுத்தினாலும் பாலாஜி,ரவிச்சந்திரன்,முத்துராமன், நாகேஷ் உட்பட பலருக்கு அவர் பாடியிருக்கிறார். அது மட்டுமல்ல அப்போது இசையமைத்த அனைத்து இசை அமைப்பளர்களுக்கும் பாடியிருக்கிறார். அதிலும் மெல்லிசை மன்னர்கள் ஸ்ரீநிவாஸ் கண்ணதாசன் கூட்டணி என்றும் சோடை போனதில்லை என்றே சொல்ல முடியும். பின்னர் விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த போதும் இம்மூவரும் தொடர்ந்து அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.

சரிகம (saregama - முன்பு HMV) Legends என்ற தலைப்பில் 5 குறுந்தகடுகளை ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளது. மொத்தம 94 பாடல்கள். ஸ்ரீநிவாஸின் முன்னுரை, முடிவுரை, அது தவிர சில பாடல்களுக்கு அறிமுக உரை - அவர் குரலில்.இத்தொகுதியின் முதல் தகட்டை அடிப்படையாக இன்று எழுதுகிறேன்.

காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலுடன் துவங்குகிறது. . கீதையில் சொல்லப்பட்ட சில வரிகளை வைத்துக் கொண்டு ஒரு காதல் பாட்டை துவங்குவது கண்ணதாசனின் கவித்துவத்தினைக் காட்டுகிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் இசை அமைப்பாளர்களும் பாடகரும். இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருமே நாமும் இது போல் எழுதமாட்டோமோ என்று எண்ணவைக்கும் பாடல் இது.ஸ்ரீநிவாஸை பிரதிநிதித்துவபடுத்தும் பாடல் இன்றும் இதைச் சொல்லலாம்.

கண்ணாலே பேசிபேசி இது அடுத்த வீட்டுப் பெண். டி.ஆர்.ராமசந்திரன் அஞ்சலி தேவி நடித்த நகைச்சுவைப் படம். இதில் வனிதா மணியே என்ற பாடலும் மிகவும் பிரபலமானது. இப்பாடலும் ஸ்ரீநிவாஸின் குரல் ஜாலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. தெளிவான உச்சரிப்பும், குரலில் வெளிப்படும் பாவங்களும் ஸ்ரீநிவாஸின் முத்திரையை கொண்டவை.

காதல் நிலவே கண்மணி ராதா ஹலோ மிஸ்டர் ஜமின்தார் இந்த மூவர் கூட்டணியின் திறமைக்கு இன்னொரு உதாரணம், நாளும் தூக்கமில்லாமல் ஒடும் நதியினைப் போலே என்று எளிய வார்த்தைகளில் காதலன் உள்ளத்தினை சித்தரிக்கும் கண்ணதாசன் இதே படத்தில் வேறு சில பிரமாதமான பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்பாடலைக் கேட்கும் போது எனக்கு நினைவிற்கு வரும் இன்னொரு பாடல் , இது துளசி மாடம் என்ற படத்தில் என்று நினைக்கிறேன்

உள்ளம் அலைமோதுதே
கண்கள் குளமாகவே
கண்ணன் ராதையைப் பிரிந்தே போகிறான்
பிரிந்தே போகிறான்

என்று துவங்கும் பாடல்.

ஒரு சோகக் காட்சி, யமுனா நதிக்கரையில் மாலை மயங்கி இருள் சூழும் வேளையில் காதலர்கள் பிரிகிறார்கள். இதில் கவிதைக்கு உயிர் தருவது ஸ்ரீநிவாஸின் குரல். உறுத்தல் தராத பிண்ணனி இசை சற்றே நீண்ட பாடல். ஏதோ நாம் அங்கே இருந்து இந்த துயர்க் காட்சியினை உணர்வது போன்ற மன நிலையை ஏற்படுத்தும் பாடல் இது. ராதை வேறானாள் கண்ணன் வேறானான் என்று பிரிவினை அதற்குரிய சோகத்துடன் நம் முன் கொண்டுவரும் பாடல் இது. சந்தடியேயில்லை யமுனா நதி தீரம் என்று இடப்பிண்ணியின் வர்ணனை அவர் குரலில் ஒலிக்கும் போது நமக்கு உடனே அங்கு போய் அவர்களை இணைப்போமா என்றுதான் தோன்றும். யாரவது முழுப் பாடலையும் இணையத்தில் இடலாம்.

கண்படுமே கண்படுமே நீ வெளியே வரலாமா - காத்திருந்த கண்கள்- இதில் அத்தனை பாடல்களும் பிரமாதம்.ஜெமினி இரண்டு சாவித்ரி வித்தியாசமான கதை இருவரும் ஜெமினியைக் காதலிப்பார்கள். உருவ ஒற்றுமையை பயன்படுத்தி, சந்தர்ப்பசூழ நிலைகளை சாதகமாக்கிக் கொண்டு ஒரு சாவித்ரி ஜெமினியை மணம் செய்து கொள்வார். ஜெமினி காதலித்தது இன்னொரு சாவித்ரியை. விபத்தில் சிக்கிய அவர் குணமாகி உண்மை தெரிய வரும் போது இங்கே ஜெமினி குழந்தை, மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்.

இப்படத்தில் சீர்காழியின் குரலில் ஒலிக்கும் சோகப்பாடலும் பிரபலமானது. ஒடம் நதியினேலே, ஒருத்தி மட்டும் கரையினிலே என்று துவங்கும் பாடல் அந்தச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இது போல் பிற பாடல்களும் படத்தின் கதைப் போக்குடன், காட்சியுடன் மிகவும் பொருந்தியிருக்கும்.

மாயவநாதன் எழுதிய அழகான மலரே என்று துவங்கும் பாடல் அதிகம் தெரியவராத பாடல்.இங்கும் பாடகரின் குரல் பாட்டினை வேறொரு பரிமாணத்திற்கு உயர்த்துகிறது. எளிமையான வார்த்தைகளுடன் தாலாட்டுப் பாடல் இது ஆனால் வெறும் தாலாட்டு பாடல் மட்டுமல்ல.

உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்,
என்கண்ணில் நீ கண்டதென்ன,
என் பாடல் போலே உன் பாடல் வேண்டாம்

போன்ற வரிகள் யோசிக்க வைக்கும்.

நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கைப் படகு.இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் தேன் என்று சொல்லலாம். இதில் ஸ்ரீநிவாஸ் பாடிய சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ - இது போன்ற பாடலும், பொருத்தமான இசையும், குரலும் சாதனைகள்தான். கண்ணதாசன் எளிய சந்தங்களைக் கொண்டு விளையாடுவதில் வல்லவர் என்பதற்கு இன்னொரு உதாரணம் இப்பாடல்.குழந்தையாய் இருந்து விட்டால் துன்பங்கள் இல்லைஎன்று பாடும் கதாபாத்திரம் சந்தித்த ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை பாடல் கோடிட்டு காட்டுகிறது. இப்படி குழந்தையை நோக்கி பாடும் பாடலில் ஒருவரின் கதையை சொல்லியிருப்பார் கவிஞர். . ஜெமினி ஸ்டூடியோஸின் வெள்ளி விழா ஆண்டில் வெளியான படம் இது. படத்தினை பார்த்திருக்கிறேன், கதை நினைவில் இல்லை, பாடல்கள் மனதில் நிற்கின்றன.


மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்-இப்படி பாடுவதற்கவே காதலிக்கலாம் என்று நினைக்கும் வகையில் மெல்லிய காதல் உணர்வுகளின் அழகான வெளிப்பாடு.ஸ்ரீநிவாஸின் உச்சரிப்பும், அவர் பாடும் விதமும் நம்முள் அந்த உணர்வினை ஏற்படுத்திவிடுகின்றன.

உன் அழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் - கண்ணதாசன் மிக எளிய வார்த்தைகளை கொண்டு இப்பாடலை ஆரம்பித்து வைக்கிறார் என்றால் குரல் மூலம் அந்த வார்த்தைக்குரிய பெண்ணை நாம் கற்பனை செய்யத் தூண்டுகிறார் பாடகர். கோவர்த்தனின் சிறப்பான இசை எங்கும் உறுத்துவதில்லை, பாடலுடன் இழையோடும் இசை அது.

இந்தப் பாடலை கேட்டால் ஒரு வேளை S.P.B பாடியதை ஸ்ரீநிவாஸ் பாடியது என்று தப்பாகப் போட்டுவிட்டார்களா என்று தோன்றும். நடந்தால் அன்னத்தின் நடை அழகு, நாடகமாடும் இடை அழகு என்ற வரிகளை ஸ்ரீநிவாஸ் பாடியிருக்கும் விதம் S.P.B யின் ஆரம்ப காலப் பாடல்களை நினைவுபடுத்தும். இது போல் இப்பாடலின் வேறு சில வரிகளும் S.P.B யின் குரலினை நினைவுபடுத்தும். இந்த எண்ணம் எழுவது குறித்து தொடர்புடைய குறிப்பினை இன்னொரு பாடல் குறித்து எழுதும் போது தருகிறேன்.

அழகே உருவாய் அவள் வந்தாள்-மருதகாசி எழுதி பாட்டொன்று கேட்டேன் படத்தில் இடம் பெற்றது.C. ராமச்சந்திரா இசை. இவர் ஹிந்தியில் 1950களில்,1960களில் பிரபலம். தமிழிலும் இசை அமைத்துள்ளார். வஞ்சிக்கோட்டை வாலிபன் இவருக்கு பெரும் புகழ் தந்த படம். நான் அறிந்த வரையில் தமிழில் 1960களில் இவர் மிக குறைவாக இசை அமைத்துள்ளார். ஒருவேளை இப்படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்பாடலில் இசை அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால் ஸ்ரீநிவாஸின் குரல் மட்டுமே பாடலைக் காப்பாற்றுகிறது.மருதகாசியின் வரிகள் மிகப் பிரமாதம் என்று சொல்லமுடியாது. மெல்லிசை மன்னர்கள் கையில் இப்பாடல் இன்னும் மெலடி கொண்டதாக வந்திருக்கும்.

இந்த குறுந்தகட்டில் உள்ள பிற பாடல்களில் துள்ளித் திரிந்த பெண்ணொன்று, சின்னச் சின்ன கண்ணனுக்கு, தோள் கண்டேன், உங்கள் பொன்னான கைகள் மிகவும் அறியப்பட்டவை. உங்கள் பொன்னான கைகள் போன்ற பாடல்களில் குரல் மூலம் பரிகாசம் செய்யும் உணர்வினை ஸ்ரீநிவாஸ் கொண்டு வந்திருப்பார். அதற்காக அவர் சிரமப்பட்ட மாதிரியே தெரியாது.

ஸ்ரீநிவாஸின் பல பாடல்களில் மிக அனாசயமாக உணர்ச்சிகளை காட்டியிருப்பார். கேட்பவர்களுக்கு மிக இயல்பாக மிகையின்றி இவற்றை உணர முடியும். சில பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்பு, இடையீடு மூலம் அவர் பாடலின் கருத்தினை எளிதாக நாம் அறியச் செய்துவிடுவார். அதை வைத்துக் கொண்டு நாம் ஒரளவிற்கு காட்சி அமைப்பினை ஊகிக்க முடியும். இப்படி அவர் பாடல்களுக்கு உயிர் கொடுப்பதால்தான் ராஜ்குமார் தனக்கென 20 ஆண்டுகளுக்கு மேலாக பிண்ணனி பாடிய ஸ்ரீநிவாஸை தன் ஆன்மா என்று அழைத்தாரோ?.

தொடரும்

15 மறுமொழிகள்:

Blogger icarus prakash மொழிந்தது...

//ஸ்ரீநிவாஸின் குரல் பலருக்கு ஜெமினியை நினைவுபடுத்தினாலும் பாலாஜி,ரவிச்சந்திரன்,முத்துராமன், நாகேஷ் உட்பட பலருக்கு அவர் பாடியிருக்கிறார்//

எம்.ஜி.ஆர் உடன் ஒரு ரேர் காம்பினேஷனை விட்டுட்டீங்களே? பால் வண்ணம் பருவம் கண்டு... -பாசம். சிவாஜிக்கும் அதிகமாகப் பாடியதில்லை, இல்லையா?
ரசிகனின் குறிப்புக்களை வெகுவாக ரசித்துப் படித்தேன்.

3:43 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/ஸ்ரீநிவாஸ் பாடியிருக்கும் விதம் S.P.B யின் ஆரம்ப காலப் பாடல்களை நினைவுபடுத்தும்./

காதலிக்க நேரமில்லையிலே, ஜேசுதாஸின் குரல், கிட்டத்தட்ட பி. பி. ஸ்ரீனிவாஸை ஒத்தியெடுத்ததுபோல இருக்குமே:
என்ன பார்வை உந்தன் பார்வை [ http://www.musicindiaonline.com/p/x/UJpghWvDE-GfHDfOBitZ/ ], நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா [ http://www.musicindiaonline.com/p/x/W42gmY.kBgGfHDfOBitZ/ ].

3:49 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/எம்.ஜி.ஆர் உடன் ஒரு ரேர் காம்பினேஷனை விட்டுட்டீங்களே? பால் வண்ணம் பருவம் கண்டு... -பாசம். சிவாஜிக்கும் அதிகமாகப் பாடியதில்லை, இல்லையா? /

எஸ். எஸ்.ராஜேந்திரன், நாகேந்திரராவ்(?) (அன்னை)

3:53 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

//, சின்னச் சின்ன கண்ணனுக்கு//

வாழ்க்கைப் படகு பார்த்ததில்லை என்றாலும், இந்தப் பாட்டை பலமுறை பார்த்திருக்கிறேன். மிக அருமையான இனிமையான பாடல. பாடல் வரிகளும், அந்தக் குழந்தையும், சோகமயமாக இருக்கும் தேவிகாவும் தான் எத்தனை அழகு?. ' ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா... இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா.. " போன்ற ஓரிரு வரிகளிலே எத்தனை அடர்த்தி?

பிபிஎஸ்ஸின் குரல் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது, நிலவுக்கு என் மேல் என்னடி கோபமும், காற்று வெளியிடைக் கண்ணம்மாவும் தான்.

3:54 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

எனக்கு அவரின் குரலிலே எல்லாப்பாடல்களுமே பிடித்துப்போய்விடும்; ஆனால், "காலங்களில் அவள் வசந்தம்" பேசப்படுவது, பாட்டின் வரிகளுக்காகத்தானேயொழிய ஸ்ரீனிவாஸுக்காக என்று தோன்றவில்லை.

4:09 PM  
Blogger ravi srinivas மொழிந்தது...

thanks.please wait for the forthcoming posts wherei i will
discuss more in the context of some films and songs.

4:17 PM  
Anonymous Balaji-paari மொழிந்தது...

Ravi: thool kilappunga...
Peyarilli: Oru murai KJY DD-chennai-kku vazhangiya sevviyil aaramba kaalathil PBS-ai immitate seivathu thanathu viruppamaaga irunthathu endru kuuriyathaaga ninaivu..

4:48 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

பாலாஜி-பாரி,
பிறகு கே. ஜே. ஜேசுதாஸையும் ஜெயசந்திரன் ஒத்திக் கொஞ்சக்காலம் பாடினாரே ;-)

5:10 PM  
Blogger icarus prakash மொழிந்தது...

//கே. ஜே. ஜேசுதாஸையும் ஜெயசந்திரன் ஒத்திக் கொஞ்சக்காலம் பாடினாரே ;-) //

ஜெயசந்திரனா? ஜேசுதாஸை இமிட்டேட் செய்தா? பி.ஜே குரல் கொஞ்சம் தடிமனாக இருக்கும் இல்லையோ? லேசான சாயல் தெரிவது 'ஆடி வெள்ளி தேடி உன்னை' மட்டும்தான்... வேணா சித்திரச் செவ்வானம் சேர்த்துக்கலாம்.

5:34 PM  
Blogger Jsri மொழிந்தது...

ரவி தூள்!!

ஆனாலும் PBஸ்ரீநிவாசிற்கு சில சமயம் ஹை பிட்ச் பிசிறும். இதை என் கணவரைச் சீண்டவே சொல்வேன் என்றாலும் இங்கும் சொல்லி வைக்கிறேன். :)

அவர் குரல் திறமை தாண்டியும் அவருக்கு அமையப்பட்ட பாடல்(வரி)களும் சிறப்பாக அமைந்துவிட்டது அவரது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

8:58 PM  
Blogger அருள் செல்வன் கந்தசுவாமி மொழிந்தது...

ரவி,
ஆஹா. இங்கே சென்னை வந்த புதிதில் pbs வீட்டிற்கு மூன்று வீடு தள்ளி சுமார் மூன்று ஆண்டுகள் இருந்தோம். பலமுறை பார்த்தாலும் பேசியதில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடகர்- தமிழிலும் கன்னடத்திலும். கன்னடத்தை தொட்டு சென்றிருக்கிறீர்கள். நன்றி.
எது என்னவானாலும், தமிழில் எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல்களுள் ஒன்று "மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கின ஒளியினைப் போலே" தொடர்ந்து விரிவாக எழுதுங்கள்.நன்றாக இருக்கிறது.
அருள்

9:35 PM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/ஜெயசந்திரனா? ஜேசுதாஸை இமிட்டேட் செய்தா?/

அப்படித்தான் ஜேசுதாஸே எரிச்சலுற்றார் என்று அந்த ஏழுநாட்கள் வந்த நேரம் ("கவிதை அரங்கேறும் நேரம்") எங்கோ வாசித்தேன்.

9:51 PM  
Blogger dondu(#4800161) மொழிந்தது...

வாழ்க்கைப் படகில் "அட சிரிக்கிறியே" என்றுத் தொடங்கும் வசனம் ஜெமினியின் குரலில் வரும். அதிலிருந்துப் பாட்டு P.B. சிறீநிவாஸ் குரலில் அலட்டிக் கொள்ளாமல் டேக்-ஆஃப் ஆகும். அது நான் மிகவும் ரசித்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

4:05 AM  
Blogger Balaji-Paari மொழிந்தது...

பெயரிலி:
ஆமாம்!! நான் ஜெ.ச. பாடிய சில பாடல்களை கேட்கும் போது இப்படி உணர்ந்ததுண்டு. மலையாளப் பாடல்களில் ஜெ.ச. KJY ஒப்பீடு பிரசித்தம்.

7:26 PM  
Blogger Ramakrishnan மொழிந்தது...

உள்ளம் அலைமோதுதே என்ற பாடல் மணமாலை என்ற படத்தில் வருகிறது .அதில் பாடல் வரிகள் அழகாக அமைந்திருக்கும் .கண்ணன் வேறானான் ராதை வேறானால் என்ற வரிகள் சோகத்தை பிழிந்துக் கொடுக்கும்

8:40 AM  

Post a Comment

<< முகப்பு