பிரமீள் - இறுதி நாட்கள்

நவீனப்பெண்ணின் பதிவிற்கு ஒரு பதில்.

பிரமீள் சென்னையில் பல பகுதிகளில் இருந்திருக்கிறார்.எனக்குத் தெரிந்து பல ஆண்டுகள் ராயப்பேட்டையில் ஒரு அறையில், பின்னர் கோடம்பாக்கதில் ஒரு அறையில், பின் திருவான்மியூரில் தனி வீட்டில் என இடம் மாறிக்கொண்டேயிருந்தார். ஒரு கட்டதில் நுங்கம்பாக்கத்தில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வந்தார்.ஒரு நாள் திடீரென உடலின் ஒரு பகுதி இயங்காமற் போகவே விழுந்துவிட்டார்.அடுத்த நாள் அங்கு வந்த நண்பர் ஒருவர் உடனே அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் நண்பர்களை தொடர்பு கொண்டார். சென்னைப் பதிப்பு தினமணியில் அவர் சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டுகிறது என்ற செய்தி வெளியானது.அது சென்னைப் பதிப்பில் மட்டும் வெளியானதால் பலருக்கு தகவல் தெரியவில்லை.பிரமீள் இவ்வாறு உடல் நலம் குன்றி இருப்பதும், மருத்துவமனையில் இருப்பதும் எனக்கு தற்செயலாகத் தெரியவந்தது. கோணங்கி மதுரைக்கு வந்தால் நண்பர்களுக்கு தகவல் வரும். சில
சமயங்களில் மதியம் வந்துவிட்டு அன்றிரவே புறப்பட்டுவிடுவார். எப்படியாயினும் யாரேனும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பார். நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் அல்லது ஹோட்டலில் ஒரு அறை எடுத்து கூடுவோம்.அன்று சி. மோகனும் வந்திருந்தார். ஒரு பத்துப் பேர் ஒரு அறையில் கூடிப் பேசி குடிப்பது புதிதல்ல. மது அருந்தா என் போன்றவர்களுக்கு குளிர் பானங்கள் இருக்கும்.

மோகன் பேசும் போது பிரமீள் குறித்த தகவலை தெரிவித்தார்.மருத்துவமனையின் பெயரைத் தெரிவித்தார். உடனே சென்னையில் என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன், நிதி திரட்டவும் ஆரம்பித்தோம். சென்னையில் தங்கி ஹார்ட்வேர் தொடர்புடைய கல்வி பயின்றுக்கொண்டிருந்த சரவணன் என்ற வாசகர்-நண்பர்தான் பிரமீளை மருத்துவ மனையில் சேர்த்ததுடன், கூடவே இருந்தார்.நேரில் பார்த்த நண்பர் சிகிச்சையில் உடல் நிலை தேறியுள்ளது என்று கூறினார். பின்னர் நான் நேரில் சென்று பார்த்தேன், நாங்கள் திரட்டிய நிதியை முன்னரே அனுப்பியிருந்தோம். நான் பார்த்த போது அவரால் என்னை அடையாளம் காண முடிந்தது ,ஆனால் பேச முடியவில்லை.என் கைகளை மட்டும் பற்றிக் கொண்டார், உதட்டில் ஒரு புன்னகை. பின் சரவணனிடம் பேசியதில் மருத்துவர்கள் எதையும் இப்போது உறுதியாக கூற முடியாது என்று சொன்னதாகக் கூறினார். வேறு சில கோளாறுகள் காரணமாக உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.மருத்துவமனையில் வைத்திருப்பதில் பயனில்லை என்று தெரிந்த பின் கரடிக்குடியில் உள்ள மருத்துவர் ஒருவர் மேற்பார்வையில் பிரமீள் இருந்தார். சில வாரங்கள் கழித்து ஜனவரி மாதம் இறந்தார்.

அவருடைய வாசகர்கள், நண்பர்கள் நிதி உதவி செய்தனர். பெங்களூர் அன்பர் ஒருவர், மகாலிங்கம் என்று நினைக்கிறேன் பெரிய அளவில் உதவி செய்தார். எனவே நண்பர்கள், வாசகர்கள் அவரை கடைசி காலத்தில் கவனிக்கவில்லை என்பது சரியல்ல. பிரமீள் பல ஆண்டுகள் நிரந்தர வருமானமின்றி வாழ்ந்தவர். நண்பர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து உதவிகள் செய்துள்ளனர். அவர் தனியே வசித்து வந்தார். உதவி என்பதற்காக எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டார்.அவருடன் நெருங்கிப் பழகிப் பின் விலகியவர்களும் உண்டு. தொடர்ந்து அவருக்கு உதவி செய்தவர்கள் ஒரு சிலர்தான். அதில் முக்கியமானவர் லயம் சுப்பிரமணியம். பிரமீளின் சிகிச்சைக்கு உதவியவர்கள் பட்டியலைப் பார்த்தால் அதில் அவர் கடுமையாக விமர்சித்தவர்கள் பெயர்களும் இருப்பது தெரிய வரும்.அவரது விமர்சனங்களால் எரிச்சலுற்றவர்கள் கூட அவரது கவிதைகளை, மொழிபெயர்ப்புகளை நிராகரித்ததில்லை. கோவை ஞானி பிரமீளின் கவிதைகள் குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதிய போது அதை தடுக்கி விழுந்த நெடும் பயணம்என்ற பெயரில் விமர்சித்து கட்டுரை எழுதினார் பிரமீள். ஞானி பிரமீள் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். பின்னர் லயம் சுப்பிரமண்யம் முயற்சியால் ஒரு முறை கோவையில் ஞானியை பிரமீள் சந்த்தித்து உரையாடினார். அதன் பின் நிகழில் அவர் கட்டுரைகள், அறிவியல், மதம் குறித்தவை, வெளிவந்தன.

பி.கு : நான் எழுதியதுள்ளதில் தகவல் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது

1 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

விபரங்களுக்கு நன்றி ரவி!

5:36 PM  

Post a Comment

<< முகப்பு