பண்டிதர் தமிழ், பாமரர் தமிழ் - மாலனின் கருத்துகள் குறித்து

இன்று தமிழை பண்டிதர் தமிழ்,பாமரர் தமிழ் என்று பிரிக்க முடியாது, ஏனெனில் இன்று பண்டிதர் தமிழ் என்று ஒன்று இருக்கிறெதன்றால் அதைப் பேசும் பண்டிதர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. பரிதிமாற்க் கலைஞர் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. தூயத் தமிழ் பேச வேண்டும், எழுதவேண்டும் என்பவர்களைக் கூட பண்டிதத் தமிழினை முன்னிறுத்துவோர் என்று கூற முடியாது. தினத்தந்தியின் தமிழ் ஒரு வழக்கறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது.கானா பாடல் இன்று மரியாதைக்குரியவை, ஆய்விற்குரியவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இது போன்ற மாற்றங்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.

டென்த் படிக்கும் டெரரிஸ்ட் என்று எழுதும் விகடனின் தமிழ் யாருடைய தமிழ்.கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த போது பண்பலை நிகழ்ச்சி ஒன்றினைக் கேட்டேன். அதில் நிகழ்ச்சியைத் தொகுத்தவர் பேசியவற்றில் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகளே அதிகம்.ஊடகங்கள் கையாளும் தமிழ் பாமரர் தமிழா, நாம் தினசரி வாழ்க்கையில் பேசும் தமிழா - இரண்டும் இல்லை. ஊடகங்கள் உருவாக்கிய தமிழ்.

ஸ்பாட் லைட், கவர் ஸ்டோரி, புக் கிளப்,க்ளிக்ஸ்,லைட்ஸ் ஆன் - இப்படித்தான் எழுத வேண்டுமா. இங்கு அன்றாடப் பேச்சு தமிழிலும் ஆங்கிலத்தினை புகுத்தும் முயற்சியைத் தானே ஊடகங்கள் செய்கின்றன.இதற்கு யார் காரணம்- ராமதாஸா, திருமாவளவனா இல்லை அரசியல்வாதிகளா, பண்டிதர்களா. இப்படி எழுதுங்கள் என்று வாசகர்கள் ஆலோசனை கூறினார்களா.

திரைப்படங்களில் முன்பு டைரக்ஷன், எடிட்டிங்,சங்கீதம் போன்ற சொற்கள்தான் சுவரொட்டிகளில் காணப்பட்டன.காலப்போக்கில் தமிழில் பொருத்தமான சொற்கள் இடம் பெற்றன. இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களில் பிக்சர்ஸ், புரொடக்ஷன்,மூவி மேக்கர்ஸ், பிலிம்ஸ், கம்பைன்ஸ்,டாக்கிஸ்,மூவிஸ்,ஆர்ட்ஸ் போன்றவை அன்றும் இருந்தன, இன்றும் இருக்கின்றன. அது போல் ஸ்டுடியோ, லாபரட்ரிஸ்,லாப் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன. எனவே அன்றும் இன்றும் திரைப்படங்களின் தலைப்பில் மட்டும் ஆங்கிலம் இருப்பதில் புதுமையில்லை. சரசா பி.ஏ, மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், மோட்டர் சுந்தரம் பிள்ளை - இவையெல்லாம் ரகசிய போலிஸ் 115க் கு முன் வந்த படங்கள் என்று நினைக்கிறேன். நீலகிரி எக்ஸ்பிரஸ், டவுன் பஸ்,சி.ஐ.டி. சங்கர், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், ரிவால்வர் ரீட்டா, கன்பைட் காஞ்சனா என்று ஒரு பட்டியலே தரலாம்.டாக்டர் சிவா வெளிவந்தது 1975 அல்லது 1974. அதற்குப் பின்னும் பல படங்களின் பெயர்களில் ஆங்கிலச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புதான் அதிகம், ஆங்கில எதிர்ப்பல்ல. எனவே இதை யாரும் ஒரு பிரச்சினையாகப் பார்க்கவில்லை. எனவே இதையும்,பண்டித தமிழையும் தொடர்புபடுத்த முடியாது. பண்டிதர்கள் ம.கோ.இராமச்சந்திரன் என்று வேண்டுமானால் எழுதியிருப்பார்கள்.பெயர்களை மாற்ற வேண்டும் என்று கோரியதுண்டா.
இப்போது தமிழ்ப் படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டுமென்பது பண்டிதர் தமிழின் தொடர்ச்சி என்றால் 1950கள்,1960கள்,1970களில் பண்டிதத் தமிழ் வாதிகள் இப்படங்களின் பெயர்கள் குறித்து எதிர்த்தார்களா. எதிர்க்கவில்லையெனில் ஏன்.

இப்போது இதை எதிர்ப்பவர்கள் தங்களுடைய தமிழ் அரசியலின் ஒரு பகுதியாக இதைப் பார்க்கிறார்கள். இதை விமர்சிக்கும் அதே வே¨ளையில் ,தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், கல்வியில் தமிழ் வழிக் கல்விக்கும், தமிழ் மொழிக்கும் உரிய இடம் வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைகள் என்பதைப் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு முன்னதை விமர்சிப்பவர்கள் பின் இரண்டையும் குறித்து எதுவும் கூறுவதில்லை. பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றின் அரசியலை ஏற்காதவர்கள் கூட இந்த இரண்டு கோரிக்கைகளையும் வரவேற்கலாம். எனக்கு ராமதாஸ், திருமாவளவன் நடத்தும் அரசியல் குறித்து ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். ஆனால் அதற்காக தமிழுக்காக அவர்கள் இயக்கம் நடத்துவதையே நிராகரிக்கத் தேவையில்லை.தாங்கள் முன் வைக்கும் லட்சியங்கள், இலக்குகள் குறித்து அவர்களிடம் தெளிவில்லை, இது வெறும் அரசியல் நாடகம் என்ற வாதம் உள்ளது. இதை நான் முற்றிலும் மறுக்கவில்லை. அரசியல்வாதிகள் மீது விமர்சனம் வைக்கலாம், ஆனால் நாட்டை கெடுத்தது அரசியல்வாதிகள் மட்டும்தான் என்ற வாதத்தினை நான் ஏற்கத் தயாரில்லை. பிரச்சினை என்னவெனில் பா.ம.க உட்பட பல கட்சிகளுக்கு கல்வி, மொழி குறித்த உண்மையான அக்கறை இல்லை, தெளிவான செயல்திட்டமோ, தொலை நோக்குப் பார்வையோ இல்லை. இது அவர்களிடம் மட்டும் இல்லையா, பிற துறைகளிலுள்ளோருக்கு இருக்கிறதா என்பதே கேள்வி.

6 மறுமொழிகள்:

Blogger -/பெயரிலி. மொழிந்தது...

/ஸ்பாட் லைட், கவர் ஸ்டோரி, புக் கிளப்,க்ளிக்ஸ்,லைட்ஸ் ஆன் - இப்படித்தான் எழுத வேண்டுமா. இங்கு அன்றாடப் பேச்சு தமிழிலும் ஆங்கிலத்தினை புகுத்தும் முயற்சியைத் தானே ஊடகங்கள் செய்கின்றன.இதற்கு யார் காரணம்- ராமதாஸா, திருமாவளவனா இல்லை அரசியல்வாதிகளா, பண்டிதர்களா. இப்படி எழுதுங்கள் என்று வாசகர்கள் ஆலோசனை கூறினார்களா. /

அண்ணே, ஒத்த வரி தமிழ் எழுத்துப்பிழ இல்லாமே எழுதத்தெர்யாத ரசகுல்லாடவுனு டம்மி பசங்களோட அடிமடீலே கை வைக்காதீங்கண்ணே. வுட்டுடுங்க.

6:52 PM  
Blogger maalan மொழிந்தது...

அன்புள்ள ரவி ஸ்ரீநிவாஸ்,

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். நீங்களும் நானும் இந்த விஷயத்தில் பல புள்ளிகளில் ஒன்றிணைகிறோம். அதனால் என் வேலை சிறிது சுலபமாகிறது.

என் கட்டுரையில் நான் சொல்லியிருப்பதைப் போல பல ஆங்கிலச் சொற்கள் தமிழ்ச் சொற்களாக சாதாரண மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. அந்தச் சொற்கள் எதைக் குறிக்கின்றன என்பதில் அவர்களுக்கு எந்தவிதக் குழப்பமும் இல்லை என்பதால் வெகுஜன ஊடகமான சினிமாத் தலைப்பில் அவை இடம் பெறுகின்றன.இன்று நேற்றல்ல பல காலமாக இடம் பெற்று வந்திருக்கின்றன. ஆனால் இப்போது திடீரென்று அவற்றை மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்புவது, அச்சுறுத்தல் விடுப்பது ஏன்?

விடை அரசியல்.

சினிமாக்காரர்கள் தங்களைவிட மக்களிடத்தில் அதிக செல்வாக்குப் பெற்றிருக்கிறார்கள் அதனால் மக்கள்மீது தாங்கள் செலுத்தக்கூடிய அதிகாரத்திற்கு வலு இல்லை எனக் கருதுபவர்கள் இதில் இறங்குகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல பலதமிழ்ப் பத்திரிகைகள் ஆங்கிலத் தலைப்புக்களை சரளமாகப் பயன்படுத்துகின்றன. பல பத்திரிகைகள் தமிழ்- ஆங்கிலப் பெயர்களையே தங்களது பெயர்களாகக் கொண்டிருக்கின்றன (ஜூனியர் விகடன், குமுதம் ஜங்ஷன், தமிழன் எக்ஸ்பிரஸ்,சில உதாரணங்கள்) ஆனால் இவர்கள் அதை எதிர்த்து ஏதாவது போராட்டம் அறிவித்திருக்கிறார்களா? குறைந்தபட்சம் அவற்றில் எழுத மாட்டோ ம், அவற்றிற்கு பேட்டி கொடுக்க மாட்டோ ம் என்று அறிவித்திருக்கிறார்களா? இல்லை. ஏன் அதைச் செய்யவில்லை? ஏனெனில் அவர்களுக்கு இந்த ஊடகங்களின் ஆதரவு தேவை.

இவர்களின் நோக்கம் தமிழைக் காப்பதல்ல. தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வது.

இதுதான் பாரதியார் எழுத வந்த காலத்திலும், இன்றும் சில சிறுபத்திரிகைகளிலும், தொடர்ந்து கொண்டிருப்பது. அதாவது சாதாரண மனிதனின் வார்த்தைகளில் இலக்கியம் படைக்கப்பட்டுவிடக்கூடாது. அப்படிப் படைக்கப்பட்டால் தனக்கு 'மதிப்பு' இல்லாமல் போய்விடும். அவனை மிரட்டி வைத்தால்தான் அவன் தன்னைப் பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்வான் என்ற எண்ணம்.இன்று அரசியல் கட்சிகள் அதையே வேறு வடிவில் செய்ய முற்படுகின்றன. சாதாரண மனிதன் ஏற்றுக் கொண்டுவிட்ட ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்று மிரட்டுகின்றன. இதைத்தான் பண்டித- பாமர அரசியலின் தொடர்ச்சி என்கிறேன்.

இன்று தமிழகத்தில் பணியிடங்களில் சரளமாக ஆங்கிலம் கலந்த தமிழ் பயன்படுத்தப்படுகின்றன. லைட்ஸ் ஆன்- சைலன்ஸ்- ஸ்டார்ட் காமிரா- ஆக்ஷன்! என்பது படப்பிடிப்புத் தளத்தில் பயன்படுத்தப்படும் ஓர் ஆணைத் தொடர். இதன் அர்த்தம் அங்கு பணியாற்றும் ஒரு சாதாரணத் தொழிலாளிக்குக் கூடத் தெரியும். இதைப் போல வங்கிகள், மென்பொருள் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பத்திரிகை அலுவலகங்கள், ஊடக நிறுவனங்கள், இங்கெல்லாம் ஆங்கிலம் கலந்த தமிழ் சரளமான பயன்பாட்டில் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் இன்று தமிழ்நாட்டில், தனது அன்றாட வாழ்விற்கு, தமிழர்கள் தனித் தமிழைச் சார்ந்து இல்லை. ஒருநாளில் அதிக நேரத்தைப் பணியிடத்தில் செலவிடுவதாலும், பள்ளிகளில் தமிழ் இல்லாததாலும், வீட்டிலும் இந்த ஆங்கிலத் தமிழ்க் கலப்பு தொடர்கிறது.

இந்த படித்த நடுத்தரவர்க்கம்தான் பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி, வானொலி, இவற்றின் வாடிக்கையாளர்கள்.வாடிக்கையாளர்களின் மொழியை அவை பேசுவது இயல்பு. அப்படி பேசாவிட்டால் அவை அந்த வாடிக்கையாளர்களை இழந்து விட நேரிடலாம்.

இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மொழிச் சிக்கல், ஆங்கிலம் பயின்ற நடுத்தர வர்க்கம் எண்ணிக்கையிலும், பொருளாதாரத்திலும், சமூக விழுமியங்களைத் தீர்மானிக்கும் அதிகாரத்திலும் வளர்ச்சி கண்டதன் ஓர் பின் விளைவு.

இவர்களிடத்தில் மொழி உணர்வை வளர்க்க வேண்டுமானால் ஆக்க பூர்வமான முயற்சிகள் வேண்டும். விமர்சன, கண்டன நடவடிக்கைகள் பயன் தராது. உதாரணத்திற்கு இன்று தமிழகத்தில் வீதி தோறும் இரண்டொரு இணைய மையங்கள் இருக்கின்றன.இவற்றைப் பயன்படுத்தி இளைஞர்கள் பலர் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். ஆனால் இவற்றில் பெரும்பாலான இடங்களிலுள்ள் கனினிகளில் தமிழ் மென்பொருட்கள் கிடையாது. இத்தனைக்கும் இந்த தமிழ் மென்பொருட்களை ( முரசு அஞ்சல், இ-கலப்பை) இலவசமாகவே கணினியில் நிறுவிக் கொள்ளலாம். தனி மென்பொருட்களே தேவைப்படாத நிலையை யூனிகோடு ஏற்படுத்தியிருக்கிறது. இவை குறித்து இந்த அரசியல் அமைப்புக்கள் ஒரு வார்த்தையாவது பிரசாரம் செய்தது உண்டா?
இளைய தலைமுறையை அதிகம் ஈர்த்திருக்கும் இன்னொரு ஊடகம் குறுஞ்செய்தி. இதிலும் இன்று தமிழ் வந்துவிட்டது. இதை பிரபலப்படுத்த ஏதேனும் திட்டங்கள் இவர்களிடம் உண்டா?

இதற்கெல்லாம் காரணம் இவர்களின் அரசியல். அது சாதாரண மனிதனின் தமிழ் Vs பண்டிதர் தமிழ் அரசியலின் தொடர்ச்சி.

இந்தி தங்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்திவிடும் என்ற அச்சம் இருந்ததால் அதற்கு எதிர்ப்பு இருந்தது. ஆங்கிலம் தங்களை அடிமைப்படுத்திவிடும் என்ற அச்சம் சாதாரணத் தமிழனுக்குக் கிடையாது என்பதால் அவனிடம் அதற்கு எதிர்ப்பு இல்லை என்பதை நான் என் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குறிப்பிடவே செய்துள்ளேன்.

மாலன்

11:04 PM  
Blogger -L-L-D-a-s-u மொழிந்தது...

//இந்தி தங்களை அரசியல் ரீதியாக அடிமைப்படுத்திவிடும் என்ற அச்சம் இருந்ததால் அதற்கு எதிர்ப்பு இருந்தது.//

தமிழ் சினிமா வசனகர்த்தாக்களாக இருந்த நம் தலைவர்கள் தம் வயிற்று பிழைப்பு , ஹிந்தியால், ஹிந்தி சினிமாவால், கெட்டுவிடுமோ என்று பயந்ததினால் வந்தது .

12:49 AM  
Blogger maalan மொழிந்தது...

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி1930களிலேயே துவங்கி விட்டது. அப்போது தமிழ்சினிமா வசனகர்த்தாக்கள் யாரும் அதில் பங்கேற்றதாகத் தெரியவில்லை. இந்தி எதிர்ப்பைத் தமிழ்நாட்டில் தலைமை தாங்கி நடத்தியவர்கள், பெரியார், திரு.வி.க போன்றவர்கள். அவர்கள் திரைப்படத் துறையில் பணியாற்றியதில்லை.
மாலன்

3:00 AM  
Blogger -L-L-D-a-s-u மொழிந்தது...

அட தேவுடா.... இந்தியாவே ஆங்கிலேயனுக்கு எதிராக போராடிய 1930களிலா...இந்தியாவை பிரிக்க வடக்கே மதம்.. தெற்கே மொழி .. என்னே அவர்களின் தொழில்திறமை..

3:40 AM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

சில சிறு பத்திரிக்கைகள் தங்கள் 'மதிப்பு கூடுவதற்காக' கடினமான தமிழ்ச் சொற்களை வலிந்து பயன்படுத்திக்கொண்டுள்ளன. பெரும்பான்மை மக்கள் வாசிக்கும் பிற ஏடுகளோ வித்தியாசமாகச் செய்கிறேன் என்று 'கவர்ச்சி'க்காக எப்போதாவது சிலமுறை உபயோகித்த ஆங்கில வார்த்தைகளே இன்று தவிர்க்க விரும்பா நடைமுறையாகிவிட்டது. இவற்றைப் படிக்கும் சாதாரணனின் பயன்பாட்டில், சிந்தனையில் இவையே 'தமிழாகியும்' போனது. புலிவால் பிடித்த கதைதான் இது. முதலில் திருந்த அல்லது திருத்தப்படவேண்டியவற்றுள் வெகுஜன ஊடகங்களும் ஒன்று.

5:18 AM  

Post a Comment

<< முகப்பு