காப்புரிமை சட்டத்திருத்த மசோதா

காப்புரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இதன் சாதக பாதக அம்சங்களைப் பற்றி இருவிதமான கருத்துக்கள் உள்ளன. பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.ஆனால் இவை எந்த அளவிற்கு சாதகமானவை என்பதை ஆராய வேண்டும். பிரப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை.ஆனால் இவை மட்டுமே போதுமா என்பது கேள்விக்குறி. இந்தியா உலகில் பல நாடுகளுக்கு எய்ட்ஸ் நோய்க்கு மருந்துகளை மிக மலிவாக விற்பனை செய்துவருகிறது. உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருந்துகளின் விலைகள் குறைவு. ஆனால் இனி இது மாறக்கூடும். இப்போது நிறைவேறியுள்ள சட்டத்தின் விளைவாக பிற நாடுகளுக்கு மலிவான விலையில் கிடைக்கும் மருந்துகள், அதாவது ஜெனரிக்ஸ் என்று அழைக்கப்படும், மருந்துகளின் இனி கிடைக்க வாய்ப்புகள் குறைவு என்று அஞ்சப்படுகிறது. இரண்டு விஷயங்களை குறித்து, நுண்ணுயிரிகள், புதிய ரசாயணப் பொருட்கள் (micro-organisms, new chemical entities) குறித்து ஒரு நிபுணர் குழு பரிசீலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும் முக்கியமான விஷயங்கள். TRIPS தரும் சாத்தியக்கூறுகளை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இது வரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. embedded software க்கு காப்புரிமை வழங்கியிருப்பதும் சரியல்ல.காப்புரிமை குறித்த முன் அனுமதி எதிர்ப்பு முறையிலும், வேறு சிலவற்றிலும், உதாரணமாக கட்டாய அனுமதி (compulsory licensing) இச்சட்ட விதிகள் போதாதவை, காப்புரிமை உரிமையாளர்களுக்கு சாதகமாக உள்ளவை என்றே தோன்றுகிறது. இச்சட்டம் தவிர்க்க முடியாதது, நாம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டே இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தாகவேண்டும் என்று வாதிடலாம். ஆனால் அந்த விதிகளின் நெகிழ்வுதன்மைகளை நாம் சரியாகப் பயன்படுத்தியுள்ளோமா, இதன் நீண்ட காலத் தாக்கங்கள் என்னென்ன என்பதை யோசிக்க வேண்டும்.
இது எப்படி இருக்கு.....

அமெரிக்காவில் மனித உரிமைகள் குறித்து சீனா என்ன கூறுகிறது. சீனாவில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா புகார் செய்தால் சீனா இப்படித்தான் பதில் சொல்லும். இந்த இரண்டு நாடுகளிலும் மனித உரிமைகள் பற்றி நிலை பற்றி மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள், வெளியீடுகள் விரிவாகவே பேசுகின்றன. ஆனால் ஒன்றை மட்டும் கூற முடியும், மோடிக்கு விசா தர மறுத்ததை எதிர்த்து கூக்குரல் எழுப்பும் சங்க பரிவாரங்களால்இது போன்ற ஒரு அறிக்கையை, அதாவது சீனா வெளியிட்டுள்ளது போல், பகிரங்கமாக வெளியிட முடியாது. அதற்கான தைரியமும் கிடையாது, மனித உரிமைகள் குறித்து அக்கறையும் கிடையாது. மோடியின் உரையில் கூட அமெரிக்கா மீது கடுமையான கண்டனம் இல்லை என்பதை கவனிக்கவும்.
ஒரு வலைப்பதிவும் டைம்ஸ் ஆப் இந்தியாவும்

ஒரு வலைப்பதிவில் தொடர்ந்து பதிவுகள் செய்வதை ஒரு வலைப்பதிவாளர் நிறுத்திவிட்டார் - காரணம் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் வழக்கறிஞர் அனுப்பிய கடிதம்.அவரால் நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதத்தினை முன்வைத்து வாதாடி வெல்ல முடியுமென்றாலும், ஒரு பெரிய ஊடக நிறுவனத்தின் முன் எதிர்த்து நின்றாலும் தொடர்ந்து இது போன்ற தொந்தரவுகள் வரக்கூடுமென்பதால் அவர் வலைப்பதிவு செய்வதை நிறுத்திவிட்டார். சர்ச்சைகுரிய அந்த 19 பதிவுகளிலும் ஊடகங்கள் குறித்த செய்திகள், ஊகங்கள், கிண்டல்கள் உள்ளன.டைம்ஸ் ஆப் இந்தியா இத்தகைய விமர்சனங்களுக்கு உள்ளாவது முதல் முறையல்ல.

டைம்ஸ் ஆப் இந்தியா இந்தியாவில் மிக அதிகமாக விற்கும் நாளேடுகளில் ஒன்று. மேலும் அதன் உரிமையாளர்களான பென்னட் காலேமென் அண்ட் கம்பெனி ஊடகத்துறையில் இந்நாளேடு தவிர வேறு பல வெளியீடுகளையும் வெளியிடுகிறது.அச்சு ஊடகம் தவிர வானொலி (ரேடியோ மிர்ச்சி), இசை, உட்பட வேறு ஊடகத்துறைகளில் செயல்பட்டுவருகிறது. இதுதான் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் ஊடகக் குழுமம் என்று நினைக்கிறேன். இத்தகைய பலம் வாய்ந்த ஊடகக் குழுமத்தின் முன் ஒரு வலைப்பதிவென்பது எம்மாத்திரம் என்று கருதியும், கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்தும் அவர்கள் இதன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தொனி வேறு விதமாக இருக்கிறது.அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தினை திரும்ப பெறுமாறு கோரி ஒரு கையெழுத்தியக்கம் இணையத்தில் நடைபெறுகிறது.அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பி.கு நான் பார்த்த போது பெட்டிஷன் ஆன் லைன் தளத்தில் அந்த மனுவின் முழுப்பகுதியும் இல்லை.
பிரமீள் - இறுதி நாட்கள்

நவீனப்பெண்ணின் பதிவிற்கு ஒரு பதில்.

பிரமீள் சென்னையில் பல பகுதிகளில் இருந்திருக்கிறார்.எனக்குத் தெரிந்து பல ஆண்டுகள் ராயப்பேட்டையில் ஒரு அறையில், பின்னர் கோடம்பாக்கதில் ஒரு அறையில், பின் திருவான்மியூரில் தனி வீட்டில் என இடம் மாறிக்கொண்டேயிருந்தார். ஒரு கட்டதில் நுங்கம்பாக்கத்தில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வந்தார்.ஒரு நாள் திடீரென உடலின் ஒரு பகுதி இயங்காமற் போகவே விழுந்துவிட்டார்.அடுத்த நாள் அங்கு வந்த நண்பர் ஒருவர் உடனே அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் நண்பர்களை தொடர்பு கொண்டார். சென்னைப் பதிப்பு தினமணியில் அவர் சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டுகிறது என்ற செய்தி வெளியானது.அது சென்னைப் பதிப்பில் மட்டும் வெளியானதால் பலருக்கு தகவல் தெரியவில்லை.பிரமீள் இவ்வாறு உடல் நலம் குன்றி இருப்பதும், மருத்துவமனையில் இருப்பதும் எனக்கு தற்செயலாகத் தெரியவந்தது. கோணங்கி மதுரைக்கு வந்தால் நண்பர்களுக்கு தகவல் வரும். சில
சமயங்களில் மதியம் வந்துவிட்டு அன்றிரவே புறப்பட்டுவிடுவார். எப்படியாயினும் யாரேனும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பார். நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் அல்லது ஹோட்டலில் ஒரு அறை எடுத்து கூடுவோம்.அன்று சி. மோகனும் வந்திருந்தார். ஒரு பத்துப் பேர் ஒரு அறையில் கூடிப் பேசி குடிப்பது புதிதல்ல. மது அருந்தா என் போன்றவர்களுக்கு குளிர் பானங்கள் இருக்கும்.

மோகன் பேசும் போது பிரமீள் குறித்த தகவலை தெரிவித்தார்.மருத்துவமனையின் பெயரைத் தெரிவித்தார். உடனே சென்னையில் என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன், நிதி திரட்டவும் ஆரம்பித்தோம். சென்னையில் தங்கி ஹார்ட்வேர் தொடர்புடைய கல்வி பயின்றுக்கொண்டிருந்த சரவணன் என்ற வாசகர்-நண்பர்தான் பிரமீளை மருத்துவ மனையில் சேர்த்ததுடன், கூடவே இருந்தார்.நேரில் பார்த்த நண்பர் சிகிச்சையில் உடல் நிலை தேறியுள்ளது என்று கூறினார். பின்னர் நான் நேரில் சென்று பார்த்தேன், நாங்கள் திரட்டிய நிதியை முன்னரே அனுப்பியிருந்தோம். நான் பார்த்த போது அவரால் என்னை அடையாளம் காண முடிந்தது ,ஆனால் பேச முடியவில்லை.என் கைகளை மட்டும் பற்றிக் கொண்டார், உதட்டில் ஒரு புன்னகை. பின் சரவணனிடம் பேசியதில் மருத்துவர்கள் எதையும் இப்போது உறுதியாக கூற முடியாது என்று சொன்னதாகக் கூறினார். வேறு சில கோளாறுகள் காரணமாக உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.மருத்துவமனையில் வைத்திருப்பதில் பயனில்லை என்று தெரிந்த பின் கரடிக்குடியில் உள்ள மருத்துவர் ஒருவர் மேற்பார்வையில் பிரமீள் இருந்தார். சில வாரங்கள் கழித்து ஜனவரி மாதம் இறந்தார்.

அவருடைய வாசகர்கள், நண்பர்கள் நிதி உதவி செய்தனர். பெங்களூர் அன்பர் ஒருவர், மகாலிங்கம் என்று நினைக்கிறேன் பெரிய அளவில் உதவி செய்தார். எனவே நண்பர்கள், வாசகர்கள் அவரை கடைசி காலத்தில் கவனிக்கவில்லை என்பது சரியல்ல. பிரமீள் பல ஆண்டுகள் நிரந்தர வருமானமின்றி வாழ்ந்தவர். நண்பர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து உதவிகள் செய்துள்ளனர். அவர் தனியே வசித்து வந்தார். உதவி என்பதற்காக எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டார்.அவருடன் நெருங்கிப் பழகிப் பின் விலகியவர்களும் உண்டு. தொடர்ந்து அவருக்கு உதவி செய்தவர்கள் ஒரு சிலர்தான். அதில் முக்கியமானவர் லயம் சுப்பிரமணியம். பிரமீளின் சிகிச்சைக்கு உதவியவர்கள் பட்டியலைப் பார்த்தால் அதில் அவர் கடுமையாக விமர்சித்தவர்கள் பெயர்களும் இருப்பது தெரிய வரும்.அவரது விமர்சனங்களால் எரிச்சலுற்றவர்கள் கூட அவரது கவிதைகளை, மொழிபெயர்ப்புகளை நிராகரித்ததில்லை. கோவை ஞானி பிரமீளின் கவிதைகள் குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதிய போது அதை தடுக்கி விழுந்த நெடும் பயணம்என்ற பெயரில் விமர்சித்து கட்டுரை எழுதினார் பிரமீள். ஞானி பிரமீள் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். பின்னர் லயம் சுப்பிரமண்யம் முயற்சியால் ஒரு முறை கோவையில் ஞானியை பிரமீள் சந்த்தித்து உரையாடினார். அதன் பின் நிகழில் அவர் கட்டுரைகள், அறிவியல், மதம் குறித்தவை, வெளிவந்தன.

பி.கு : நான் எழுதியதுள்ளதில் தகவல் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது
பெண் அர்ச்சகர்கள்

தமிழக அரசின் நிலைப்பாடு,அதாவது பெண்களும் அர்ச்சகர்களாகலாம் என்பது வரவேற்கப்பட வேண்டியது. விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகம விதிகளை காரணம் காண்பித்து இதை ஏற்க மறுக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கவேண்டும்.தமிழக அரசு இதற்காக முழு முயற்சி எடுக்க வேண்டும், இதை பரவலாக மக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும். இது குறித்த பி.பி.சி செவ்வி. நான் உபயோகிக்கும் கணினியில் உள்ள சிறு பிரச்சினை காரணமாக என்னால் இதை கேட்க முடியவில்லை.
பிரமீள்-கடிதங்கள்-நினைவுகள்

பிரமீள் (தருமு சிவராமு, தருமு அரூப் சிவராம்,பிரமிள் பானுசந்த்ரன்) சி.சு.செல்லப்பாவிற்கு எழுதிய சில கடிதங்களை இம்மாத தீராநதியில் படித்தேன். அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன், கடிதத் தொடர்பும் இருந்தது . அவரை நான் நேரில் சந்திக்கும் முன் சுமார் 8 மாதங்கள் கடிதம் மூலமே 'பேசிக்கொண்டோம்'. நான் அப்போது இருந்த நகரம் சென்னையிலிருந்து 500 கீ.மீ தூரத்தில். திங்களன்று நான் அவருக்கு கடிதம் எழுதினால் அவருக்கு செவ்வாய் கிடைத்து புதன் காலை அல்லது மதியம் அவர் பதில் என் கையில்.நான் உடனே பதில் எழுதினால் வெள்ளி காலை அல்லது மதியம் அவரிடமிருந்து பதில் வந்துவிடும்.நான் பதில் போட்டால் அது சனியன்று கிடைத்தால் திங்களன்று பதில் எனக்கு கிடைக்கும். தன் பெயரில் பல சோதனைகளை செய்வார் என்பதால் பெயர் மாற்றங்கள் கடிதங்களில் வெளிப்படும். இடையில் முன் கடிதத் தொடர்ச்சி என்று வேறு பதில்கள் வரும்.சமயங்களில் நீண்ட கடிதங்கள் வரும், ஒரு முறை ஈழப்பிரச்சினை உட்பட வேறு சில குறித்து ஒரு 20 பக்க கடிதம் வந்தது. அவருடைய நண்பர்களிடம் இது போல் நிறையக் கடிதங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

அவர் நன்றாக படம் வரைவார்.ஆனால் அத்திறனை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சி எடுத்துக் கொள்ளவோ அல்லது அதில் முயற்சிகளை தொடர்ந்து செய்யவோ அவரிடம் பொருளாதார வசதி இல்லை.சுடுமண் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள் செய்வார். ஒரு முறை அப்பாத்துரை, யோகி ராம்சூரத்குமார் இருவர் உருவத்தையும், தலை முதல் கழுத்து வரை சிற்பமாக செய்து அதை புகைப்படமெடுத்திருந்தார். அச்சிற்பங்களை நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டதால் அவர் என்னிடம் காட்டியது புகைப்படம்தான். ஆங்கிலத்தில் அவரால் எழுத முடியும், சில முயற்சிகள் செய்திருக்கிறார். தமிழ் சிறுபத்திரிகை சூழலை மீறி, இதை நிராகரித்து அவர் வேறு திசைகளில் பயணித்திருக்க வேண்டும். அப்படி பயணித்திருந்தால் அவர் வேறு சில சாதனைகளை செய்திருப்பார்.
ஒரு ரசிகனின் குறிப்புகள் - P.B. ஸ்ரீநிவாஸ் - 2

இந்த இரண்டாவது குறுந்தகட்டில் முதல் பாடல் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - ஸ்ரீநிவாஸ¤க்கு புகழ் பெற்றுத் தந்த இன்னொரு பாடல்.கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணி கொடுத்துள்ள இன்னொரு சிறந்த பாடல். இன்றும் இதைக் கேட்டால் எளிய வார்த்தைகளில் ஒரு தத்துவப் பாடலை இப்படி எழுத கண்ணதாசனை விட்டால் யாரும் இல்லை என்றே உணர்வே ஏற்படும்.

உடலுக்கு உயிர் காவல் இதுவும் ஸ்ரீநிவாஸின் குரலில் ஒலிக்கும் போது வேறு பரிமாணம் பெறுகிறது.சரோஜாதேவி காதலிப்பது ஒருவரை, ஆனால் திருமணம் செய்வது இன்னொருத்தரை. தம்பியை காதலித்து அண்ணனை திருமணம் செய்கிறார். தம்பிக்கு இது தெரிய வரும் போது இருவர் மனதில் எழும் உணர்வுகள், உணர்ச்சி போராட்டங்களை வைத்து கதை பின்னப்பட்டிருக்கும். அந்தக் குடும்பத்தில்பெண் கேட்கிறார்கள் என்று சொன்னவுடன் அது அவருக்குகாக என்று நினைத்துக் கொண்டு புகைப்படத்தினைக் கூட பார்க்காமல் ஒப்புக் கொள்கிறாள் கதாநயகி. ராமண்ணா இயக்கம் என்று நினைக்கிறேன்.ஜெமின், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.இயல்பான நடிப்பு. இந்தப் பாடலில் குரல் மூலம் ஸ்ரீநிவாஸ் காட்டும் பாவங்கள் குறிப்பிட வேண்டியவை.யார் காவல் என்ற இரு வார்த்தைகளை உச்சரிக்கும் விதங்கள் மூலம் ரசவாதம் நிகழ்த்துவார்.

சுமைதாங்கி ஸ்ரீதர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணி தந்த இன்னொரு சிறப்பான படம். இதில் இரண்டு பாடல்களில் ஸ்ரீநிவாஸ் கலக்கியிருப்பார் - மனிதன் என்பவன், மயக்கமா கலக்கமா.இந்த இரண்டையும் அடுத்தடுத்து கேட்கும் போது நமக்கே தெரிகிறது இக்கூட்டணி எவ்வளவு திறமையானது என்று. மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்பது போன்ற வரிகள் கொண்ட இந்த இரண்டில் எது சிறந்தது என்று கூறுவது கடினம்.

நினைப்பதெல்லம் நடந்துவிட்டால் எளியவார்த்தைகளைக் கொண்டு சிரமமேயின்றி கவிஞர் நிகழ்த்தும் விளையாட்டு. பொருத்தமான இசை. இதுவும்ஒரு தோல்வியுற்ற காதலை அடிப்படையாக கொண்ட படம். படத்தின் இறுதிக் காட்சியில் இப்பாடல்வருகிறது என்று நினைக்கிறேன். ஒரு பாதிரியார் (சாமியார்) ஆவதென்று முடிவு செய்து ஜெமினி ஒரு வரிசையில் நிற்க அவரைத் தேடி பத்மினி வருவார்.

சிவாஜிக்காக ஸ்ரீநிவாஸ் பாடியுள்ள பாடல் சிலவே.அதில் ஒன்று எங்கும் சொந்தமில்லை. இங்கும் குரல் மூலம் அவர் எழுப்பும் உணர்வினை குறிப்பிட்டேயாக வேண்டும்.

யார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன வாலியின் வரிகள் ஸ்ரீநிவாஸின் குரலில்.எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் ஒருவன் பாடுவது போல் இருக்கும்.

அடுத்து வருவது எந்த ஊர் என்றவனே - ஊர் பெயரை வைத்து கவிஞர் பின்னி எடுத்திருப்பார். ஸ்ரீநிவாஸ்குரல் அதற்கு எத்தனை பொருத்தம். மகாதேவன் இசை. இதிலும் ஒருவனின் கதையை கவிஞர் ஊர் ஊராகக் சொல்லியிருப்பார்.இது போன்ற பாடல்களை இயற்றுவது கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது போலும்.மீண்டும் மீண்டும் கேட்கலாம். இது போல் ஊர்கள் பெயர்களைக் கொண்டு வைரமுத்துவும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் - தஞ்சாவூர் மண்ணெடுத்து - படம் பொற்காலம்.

உடைத்த கல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில் ஒன்று வாசல் இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றேஇடத்தைப் பொருத்தே எல்லாம் மாறும் - இது சிரிப்பு பாதி அழுகை பாதி என்று தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.இசை மகாதேவன் என்பதை பிண்ணனி இசையை வைத்தே சொல்லிவிடலாம்.

இரவின் மடியில் உலகம் உறங்கும் நிலவின் அழகில் மலரும் மயங்கும் வேதாவின் இசையில் இப்பாடலைக் கேட்கும் போது பாடலை மிகவும் ரசிக்க முடிகிறது. ஸ்ரீநிவாஸ்ஹம்மிங் பிரமாதம்.வேதாவின் திரை இசை வாழ்க்கை கொஞ்ச ஆண்டுகளே. பார்த்திபன் கனவு அவர் இசை அமைத்த முக்கியமான படங்களில் ஒன்று. அது போல் ஒராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் - ஹிந்திப் பாடல் ஒன்றில் மெட்டு என்றாலும் தமிழில் T.M.S குரலில் அது மிக பிரமாதமாகஇருக்கும். இரவின் மடியில் உலகம் - சரசா பி.ஏ என்பது படத்தின் பெயர். பாலாஜி,பானுமதி நடித்ததுஎன்கிறார் ஸ்ரீநிவாஸ். அவர் கூறுவது போல் இதைக் கேட்டுக் கொண்டே உறங்கலாம்.

தமிழ் திரைப்படங்களில் சிறந்த சோகப் பாடல்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் இடம் பெறும்பாடல் - நிலவே என்னிடம் - ராமு படத்தில். இப்படத்தில் அனைத்து பாடல்களும் பிரமாதம் என்றால்அதில் ஒளிரும் வைரமாக இருப்பது இப்படம். மெல்லிசை மன்னரும், ஸ்ரீநிவாஸ¤ம் இதில் நம்முள்அதிர்வுகளை ஏற்படுத்துகிறார்கள். கண்ணதாசனின் வரிகள் காலத்தால் அழியாதவை என்றால் இசையும்,குரலும் அது போன்றவை.

இப்படம் வெளியான போது தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் இது தவறாது இடம்பெற்றது என்கிறார் பாடகர்.ஜெமினி, கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சுப்பையா நடித்த படம்.ராமுவாக நடித்த சிறுவனும் சிறப்பாக நடித்திருப்பான். விஜயாவின் ஒரு தலைக் காதலுக்கு பதில் சொல்லும் பாடல் இது.இப்பாடல் மெல்லிசை மன்னருக்கும் மிகவும் பிரியமான பாடல்.

ஆரம்ப காலங்களில் வாய்ப்புக் கேட்கும் போது இப்பாடலை பாடி வாய்ப்புக் கேட்டுள்ளேன் என்று S.P.Bஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பாடகருக்கு ஒரு சவால்தான் இப்பாடல். ஆனால் பாடலைக் கேட்டால்ஸ்ரீநிவாஸ் சிரமமே இன்றி பாடியிருப்பது போன்ற உணர்வே எழும். ஸ்ரீநிவாஸின் சிறந்த பாடல்களைப்பட்டியிட்டால் இதற்கு அதில் கட்டாயம் இடம் உண்டு.

கிட்டதட்ட இதே போன்ற ஒரு பாடலை ஸ்ரீநிவாஸ் பின்னர் பாடியிருக்கிறார், சிவக்குமாருக்கு. அப்பாடல்அதிகம் பிரபலமாகவில்லை. ஆனால் ஸ்ரீநிவாஸின் குரல் 1966 ல் ஒலித்தது போல் 1979 அல்லது 1980லும் ஒலிப்பதை இப்பாடல் காட்டுகிறது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- ஊடல் உணர்வினை ஸ்ரீநிவாஸ் குரல் மூலம் சித்தரிக்கும் விதம் பிரமாதம்.கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணியின் இசைப்பயணத்தில் இன்னொருமைல்கல். போலிஸ்காரன் மகளில் இடம் பெற்ற பாடல்.இப்படத்தில் உள்ள பிற பாடல்களும் உன்னதம். அதிலும் சீர்காழி ஜானகி குரலில் ஒலிக்கும் கண்ணில் நீர் இதற்கு காலமெல்லாம அழுவதற்கு என்ற சோகப் பாடல் குறிப்பிட வேண்டிய ஒன்று. படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என அறிகிறேன்.

கண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள்பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்வாழ்க்கைப் படகில் இன்னொரு நல்ல பாடல்.இதிலும் ஸ்ரீநிவாஸ் அனாசயமாக உணர்ச்சிகளைமிக இயல்பாக காட்டியிருப்பார்.

கர்ணன் படத்தில் நான்கு பாடகர்கள் பாடும் பாடல் என்ன கொடுப்பான் என்று துவங்கும் பாடல் மிகவும் பிரபலம்.இப்படத்தில் அத்தனை பாடல்களும் ஹிட், அது மட்டுமல்ல படத்துடன் மிகவும்பொருந்தி இருக்கும் பாடல்கள்.

அதிலும் கர்ணனை நோக்கி கிருஷ்ணர் பாடுவதாக சீர்காழிகுரலில் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது, வல்லவன் வகுத்ததடா, கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்று துவங்கும் பாடல் கர்ணனின் சிறப்பினை காட்டும் . சீர்காழியின் கணீர் குரலில் அதைகேட்கும் போது இன்று நம்மிடையே இல்லாத சீர்காழி, கவிஞர் குறித்த் நினைவுகள் மனதில் எழும்.எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை, ஊர்ப் பழி ஏற்றடையடா, நானும் உன் பழி கொண்டேனடா, வஞ்சகன் கண்ணனடா என்ற வரிகள்ஒரு மனிதனின் கதையையும், ஒரு அவதாரத்தின் சுய விமர்சனத்தையும் உள்ளடக்கியவை.

நான்கு பாடகர்கள்- T.M.செளந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி, ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலில்ஸ்ரீநிவாஸ் பாடிய பகுதி மட்டுமே குறுந்தகட்டில் உள்ளது.முழுப் பாடலுமே ரசிக்கதகுந்த பாடல். கர்ணனாகசிவாஜி, மற்றும் சாவித்ரி. வேறென்ன சொல்ல வேண்டும்.

T.M.செளந்தரராஜன், சீர்காழி, ஸ்ரீநிவாஸ்சேர்ந்து பாடியுள்ள பாடல்கள் எனக்குத் தெரிந்து இன்னும் இரண்டு. ஒன்று தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே என்று துவங்கும் பாடல். படம் பெயர் நினைவில்லை. இன்னொன்று பழனி படத்தில் ஆரோடும் மண்ணில் தேரோடும் என்று துவங்கும் பாடல். T.M.செளந்தரராஜன், ஏ.எல்.ராகவன் , ஸ்ரீநிவாஸ்சேர்ந்து பாடியுள்ள பாடல் கலாட்டா கல்யாணம் படத்தில் - எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணாம்என்று துவங்கும்.

தோல்வி நிலையென - ஊமை விழிகள் 1980 களில் ஸ்ரீநிவாஸ் தமிழில் பாடிய ஒரே பாடல் இதுவெனநினைக்கிறேன். இங்கும் இசையும், குரலும் பிரமாதம்.ஒரு நம்பிக்கையூட்டும் உணர்வினை எழுப்பும் பாடல்.இதற்கு ஸ்ரீநிவாஸ்தான் பொருத்தம் என்று அவர் குரலை பயன்படுத்திக் கொண்ட ஆபாவாணன், மனோஜ் கியானை பாரட்ட வேண்டும். 1980 களிலும் ஸ்ரீநிவாஸின் குரல் மிக நன்றாகவே இருந்திருக்கிறது. அப்போது கன்னடத்தில் அவர் பாடிக்கொண்டிருந்தாக அறிகிறேன்.

இளமை கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீன் தார்), பூவரையும் பூங்கொடியே இதயத்தில் நீஇந்த இரண்டு பாடல்களுக்குப் பின் இறுதியாக வருகிறது வனிதா மணியே . இது அடுத்த வீட்டுப் பெண்ணில் இடம் பெற்ற பாடல். பாடலின் இறுதியில் வாதாபி கணபதி பதிம் என்று கர்நாடகஇசைப்பாடலாக முடியும், அதை வா வா என்று முடிப்பார் பாடகர். இதுவும் மிகவும் பிரபலமானபாடல்தான்.

தொடரும்
------------------------------------------------------------------------------------

ஒரு பாடகர் குரல் போல் இன்னொரு பாடகர் குரல் சில பாடல்களில் இருப்பதில் ஆச்சரியமில்லை. இசை அமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொனியில் பாட வேண்டும் என்று கேட்கும் போது பாடகர் என்ன செய்யமுடியும். மலேசியா வாசுதேவனின் சில பாடல்கள் T.M.S குரலை நினைவுபடுத்தும். மனோ பாடிய சில பாடல்கள் S.P.B பாடியது போலிருக்கும்.சில பாடல்களைக் கேட்கும் போது பாடியது S.P.B யா இல்லை மலேசியா வாசுதேவனா என்று சந்தேகம் எழும். இது போல் எம்.எல்.ஸ்ரீகாந்த் பாடியுள்ள ஒரு பாடல் S.P.B குரலை நினைவுபடுத்தும் ஆனால் அவர் குரல் வேறு. அவர் திரைப்டங்களில் பாடிய பாடல்கள் குறைவு. வானொலி, தொலைக்காட்சியில் மெல்லிசைப் பாடல்கள் பாடியுள்ளார், இசையமைத்துள்ளார். அவர் வாணி ஜெயராமுடன் பாடிய பாடல் பிரபலமானது.அது நினைவிற்கு இப்போது வரவில்லை. அவர் பாடியதில் நான் ரசித்த இன்னொரு பாடல்
கண்கள் தேடுது ஒளியெங்கே
கலை கூறுது அழகெங்கே
என்று துவங்கும்.

வேறு சில உதாரணங்கள் தரலாம். ஆனால் இவை விதிவிலக்குகள்தான். ஜெயச்சந்திரன் தமிழில் முதலில் பாடிய பாடல் அலைகள் படத்தில்,' பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே' ஒரு புதுக் குரலின் வரவினைத்தான் காட்டியது. இது போல் தீபன் சக்ரவர்த்தி, டி.எல்.மகராஜன் குரல்கள் திருச்சி லோகநாதனை நினைவுபடுத்தவில்லை.

தாராபுரம் சுந்தரராஜன், கோவை செளந்தரராஜன் இவர்கள் குரல் T.M..S குரலை நினைவுபடுத்தும்.தூறல் நின்னுப் போச்சு படத்தில் ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி என்றபாடலைப் பாடியவர் கோவை செளந்தரராஜன். T.M..S போல் பாடுவதால் அவரது இரண்டு மகன்கள், பால்ராஜ்,செல்வக்குமார் திரையுலகில் பிரகாசிக்கமுடியவில்லை. மெல்லிசை கச்சேரிகள்தான் செய்ய முடிந்தது.
ஒரு ரசிகனின் குறிப்புகள் - P.B.ஸ்ரீநிவாஸ் - 1

1952 லேயே அறிமுகமானாலும் 1961ல் வெளியான பாவ மன்னிப்பு படத்தில் அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல் அவரை மிகவும் பிரபலமாக்கியது.அதற்கு முன்பும் அவர் பல குறிப்பிடதகுந்த பாடல்களை பாடியிருக்கிறார். தமிழில் ஜெமினி கணேசனுக்காக பல பாடல்களை பாடியிருந்தாலும் A.M.ராஜா தமிழில் பாடுவதை தேன் நிலவு படத்துடன் நிறுத்திக் கொண்டார்.கிட்டதட்ட 7 அல்லது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெமினிக்காக அவர் பாடியது ரங்க ராட்டினம் என்ற படத்தில் (முத்தாரமே உன் ஊடல் என்னவோ- ராஜா- ஈஸ்வரி).

ஸ்ரீநிவாஸின் பொற்காலம் 1961ல் ஆரம்பித்து 1968 அல்லது 1969 வரை தொடர்கிறது. 1970 களில் அவர் அதிகமாக பாடவில்லை, 1980 களில் இன்னும் குறைவு.தமிழில் அவர் கடைசியாகப் பாடிய முழுப்பாடல் ஊமை விழிகள் படத்தில் என்றால் அதற்கு முன் இளைய ராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். பத்தாண்டுகளுக்குள் காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார். சில படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார்- ஹிந்தியில். ராஜா பாடுவதை நிறுத்திக் கொண்ட போது ஜெமினி உச்சத்திலிருந்தார். ஜெமினிக்கு பொருந்தும் இன்னொரு குரல் ஸ்ரீநிவாஸ¤டையது என்பதால் ராஜா இல்லாத குறையை இவர் தீர்த்து வைத்தார் என்று சொல்லலாம். இருவர் குரலும் மென்மையானவை என்றாலும் வேறுபட்ட குரல்கள்.

ஸ்ரீநிவாஸின் குரல் பலருக்கு ஜெமினியை நினைவுபடுத்தினாலும் பாலாஜி,ரவிச்சந்திரன்,முத்துராமன், நாகேஷ் உட்பட பலருக்கு அவர் பாடியிருக்கிறார். அது மட்டுமல்ல அப்போது இசையமைத்த அனைத்து இசை அமைப்பளர்களுக்கும் பாடியிருக்கிறார். அதிலும் மெல்லிசை மன்னர்கள் ஸ்ரீநிவாஸ் கண்ணதாசன் கூட்டணி என்றும் சோடை போனதில்லை என்றே சொல்ல முடியும். பின்னர் விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த போதும் இம்மூவரும் தொடர்ந்து அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.

சரிகம (saregama - முன்பு HMV) Legends என்ற தலைப்பில் 5 குறுந்தகடுகளை ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளது. மொத்தம 94 பாடல்கள். ஸ்ரீநிவாஸின் முன்னுரை, முடிவுரை, அது தவிர சில பாடல்களுக்கு அறிமுக உரை - அவர் குரலில்.இத்தொகுதியின் முதல் தகட்டை அடிப்படையாக இன்று எழுதுகிறேன்.

காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலுடன் துவங்குகிறது. . கீதையில் சொல்லப்பட்ட சில வரிகளை வைத்துக் கொண்டு ஒரு காதல் பாட்டை துவங்குவது கண்ணதாசனின் கவித்துவத்தினைக் காட்டுகிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் இசை அமைப்பாளர்களும் பாடகரும். இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருமே நாமும் இது போல் எழுதமாட்டோமோ என்று எண்ணவைக்கும் பாடல் இது.ஸ்ரீநிவாஸை பிரதிநிதித்துவபடுத்தும் பாடல் இன்றும் இதைச் சொல்லலாம்.

கண்ணாலே பேசிபேசி இது அடுத்த வீட்டுப் பெண். டி.ஆர்.ராமசந்திரன் அஞ்சலி தேவி நடித்த நகைச்சுவைப் படம். இதில் வனிதா மணியே என்ற பாடலும் மிகவும் பிரபலமானது. இப்பாடலும் ஸ்ரீநிவாஸின் குரல் ஜாலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. தெளிவான உச்சரிப்பும், குரலில் வெளிப்படும் பாவங்களும் ஸ்ரீநிவாஸின் முத்திரையை கொண்டவை.

காதல் நிலவே கண்மணி ராதா ஹலோ மிஸ்டர் ஜமின்தார் இந்த மூவர் கூட்டணியின் திறமைக்கு இன்னொரு உதாரணம், நாளும் தூக்கமில்லாமல் ஒடும் நதியினைப் போலே என்று எளிய வார்த்தைகளில் காதலன் உள்ளத்தினை சித்தரிக்கும் கண்ணதாசன் இதே படத்தில் வேறு சில பிரமாதமான பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்பாடலைக் கேட்கும் போது எனக்கு நினைவிற்கு வரும் இன்னொரு பாடல் , இது துளசி மாடம் என்ற படத்தில் என்று நினைக்கிறேன்

உள்ளம் அலைமோதுதே
கண்கள் குளமாகவே
கண்ணன் ராதையைப் பிரிந்தே போகிறான்
பிரிந்தே போகிறான்

என்று துவங்கும் பாடல்.

ஒரு சோகக் காட்சி, யமுனா நதிக்கரையில் மாலை மயங்கி இருள் சூழும் வேளையில் காதலர்கள் பிரிகிறார்கள். இதில் கவிதைக்கு உயிர் தருவது ஸ்ரீநிவாஸின் குரல். உறுத்தல் தராத பிண்ணனி இசை சற்றே நீண்ட பாடல். ஏதோ நாம் அங்கே இருந்து இந்த துயர்க் காட்சியினை உணர்வது போன்ற மன நிலையை ஏற்படுத்தும் பாடல் இது. ராதை வேறானாள் கண்ணன் வேறானான் என்று பிரிவினை அதற்குரிய சோகத்துடன் நம் முன் கொண்டுவரும் பாடல் இது. சந்தடியேயில்லை யமுனா நதி தீரம் என்று இடப்பிண்ணியின் வர்ணனை அவர் குரலில் ஒலிக்கும் போது நமக்கு உடனே அங்கு போய் அவர்களை இணைப்போமா என்றுதான் தோன்றும். யாரவது முழுப் பாடலையும் இணையத்தில் இடலாம்.

கண்படுமே கண்படுமே நீ வெளியே வரலாமா - காத்திருந்த கண்கள்- இதில் அத்தனை பாடல்களும் பிரமாதம்.ஜெமினி இரண்டு சாவித்ரி வித்தியாசமான கதை இருவரும் ஜெமினியைக் காதலிப்பார்கள். உருவ ஒற்றுமையை பயன்படுத்தி, சந்தர்ப்பசூழ நிலைகளை சாதகமாக்கிக் கொண்டு ஒரு சாவித்ரி ஜெமினியை மணம் செய்து கொள்வார். ஜெமினி காதலித்தது இன்னொரு சாவித்ரியை. விபத்தில் சிக்கிய அவர் குணமாகி உண்மை தெரிய வரும் போது இங்கே ஜெமினி குழந்தை, மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்.

இப்படத்தில் சீர்காழியின் குரலில் ஒலிக்கும் சோகப்பாடலும் பிரபலமானது. ஒடம் நதியினேலே, ஒருத்தி மட்டும் கரையினிலே என்று துவங்கும் பாடல் அந்தச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இது போல் பிற பாடல்களும் படத்தின் கதைப் போக்குடன், காட்சியுடன் மிகவும் பொருந்தியிருக்கும்.

மாயவநாதன் எழுதிய அழகான மலரே என்று துவங்கும் பாடல் அதிகம் தெரியவராத பாடல்.இங்கும் பாடகரின் குரல் பாட்டினை வேறொரு பரிமாணத்திற்கு உயர்த்துகிறது. எளிமையான வார்த்தைகளுடன் தாலாட்டுப் பாடல் இது ஆனால் வெறும் தாலாட்டு பாடல் மட்டுமல்ல.

உன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்,
என்கண்ணில் நீ கண்டதென்ன,
என் பாடல் போலே உன் பாடல் வேண்டாம்

போன்ற வரிகள் யோசிக்க வைக்கும்.

நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கைப் படகு.இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் தேன் என்று சொல்லலாம். இதில் ஸ்ரீநிவாஸ் பாடிய சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ - இது போன்ற பாடலும், பொருத்தமான இசையும், குரலும் சாதனைகள்தான். கண்ணதாசன் எளிய சந்தங்களைக் கொண்டு விளையாடுவதில் வல்லவர் என்பதற்கு இன்னொரு உதாரணம் இப்பாடல்.குழந்தையாய் இருந்து விட்டால் துன்பங்கள் இல்லைஎன்று பாடும் கதாபாத்திரம் சந்தித்த ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை பாடல் கோடிட்டு காட்டுகிறது. இப்படி குழந்தையை நோக்கி பாடும் பாடலில் ஒருவரின் கதையை சொல்லியிருப்பார் கவிஞர். . ஜெமினி ஸ்டூடியோஸின் வெள்ளி விழா ஆண்டில் வெளியான படம் இது. படத்தினை பார்த்திருக்கிறேன், கதை நினைவில் இல்லை, பாடல்கள் மனதில் நிற்கின்றன.


மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்-இப்படி பாடுவதற்கவே காதலிக்கலாம் என்று நினைக்கும் வகையில் மெல்லிய காதல் உணர்வுகளின் அழகான வெளிப்பாடு.ஸ்ரீநிவாஸின் உச்சரிப்பும், அவர் பாடும் விதமும் நம்முள் அந்த உணர்வினை ஏற்படுத்திவிடுகின்றன.

உன் அழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் - கண்ணதாசன் மிக எளிய வார்த்தைகளை கொண்டு இப்பாடலை ஆரம்பித்து வைக்கிறார் என்றால் குரல் மூலம் அந்த வார்த்தைக்குரிய பெண்ணை நாம் கற்பனை செய்யத் தூண்டுகிறார் பாடகர். கோவர்த்தனின் சிறப்பான இசை எங்கும் உறுத்துவதில்லை, பாடலுடன் இழையோடும் இசை அது.

இந்தப் பாடலை கேட்டால் ஒரு வேளை S.P.B பாடியதை ஸ்ரீநிவாஸ் பாடியது என்று தப்பாகப் போட்டுவிட்டார்களா என்று தோன்றும். நடந்தால் அன்னத்தின் நடை அழகு, நாடகமாடும் இடை அழகு என்ற வரிகளை ஸ்ரீநிவாஸ் பாடியிருக்கும் விதம் S.P.B யின் ஆரம்ப காலப் பாடல்களை நினைவுபடுத்தும். இது போல் இப்பாடலின் வேறு சில வரிகளும் S.P.B யின் குரலினை நினைவுபடுத்தும். இந்த எண்ணம் எழுவது குறித்து தொடர்புடைய குறிப்பினை இன்னொரு பாடல் குறித்து எழுதும் போது தருகிறேன்.

அழகே உருவாய் அவள் வந்தாள்-மருதகாசி எழுதி பாட்டொன்று கேட்டேன் படத்தில் இடம் பெற்றது.C. ராமச்சந்திரா இசை. இவர் ஹிந்தியில் 1950களில்,1960களில் பிரபலம். தமிழிலும் இசை அமைத்துள்ளார். வஞ்சிக்கோட்டை வாலிபன் இவருக்கு பெரும் புகழ் தந்த படம். நான் அறிந்த வரையில் தமிழில் 1960களில் இவர் மிக குறைவாக இசை அமைத்துள்ளார். ஒருவேளை இப்படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்பாடலில் இசை அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால் ஸ்ரீநிவாஸின் குரல் மட்டுமே பாடலைக் காப்பாற்றுகிறது.மருதகாசியின் வரிகள் மிகப் பிரமாதம் என்று சொல்லமுடியாது. மெல்லிசை மன்னர்கள் கையில் இப்பாடல் இன்னும் மெலடி கொண்டதாக வந்திருக்கும்.

இந்த குறுந்தகட்டில் உள்ள பிற பாடல்களில் துள்ளித் திரிந்த பெண்ணொன்று, சின்னச் சின்ன கண்ணனுக்கு, தோள் கண்டேன், உங்கள் பொன்னான கைகள் மிகவும் அறியப்பட்டவை. உங்கள் பொன்னான கைகள் போன்ற பாடல்களில் குரல் மூலம் பரிகாசம் செய்யும் உணர்வினை ஸ்ரீநிவாஸ் கொண்டு வந்திருப்பார். அதற்காக அவர் சிரமப்பட்ட மாதிரியே தெரியாது.

ஸ்ரீநிவாஸின் பல பாடல்களில் மிக அனாசயமாக உணர்ச்சிகளை காட்டியிருப்பார். கேட்பவர்களுக்கு மிக இயல்பாக மிகையின்றி இவற்றை உணர முடியும். சில பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்பு, இடையீடு மூலம் அவர் பாடலின் கருத்தினை எளிதாக நாம் அறியச் செய்துவிடுவார். அதை வைத்துக் கொண்டு நாம் ஒரளவிற்கு காட்சி அமைப்பினை ஊகிக்க முடியும். இப்படி அவர் பாடல்களுக்கு உயிர் கொடுப்பதால்தான் ராஜ்குமார் தனக்கென 20 ஆண்டுகளுக்கு மேலாக பிண்ணனி பாடிய ஸ்ரீநிவாஸை தன் ஆன்மா என்று அழைத்தாரோ?.

தொடரும்
பிரதிவாதி பயங்கரம்.......

பிரதிவாதி பயங்கரம் என்றால் பலருக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் பெயர்தான் நினைவிற்கு வரும்.பன் மொழி வித்தகர், ஆயிரக்கணக்கான பக்கங்கள் உரைகள் எழுதியவர், ஸ்ரீராமனுஜன் என்ற இதழின் ஆசிரியராக பலகாலம் இருந்தவர். ஆழ்ந்த புலமை கொண்டவர், அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

அவர் எழுதியவற்றுள் சிலவற்றை வாசித்திருக்கிறேன்.பிரமிப்பூட்டும் புலமை அவருடையது. இப்படிக் கூட வியாக்கியானம் செய்ய முடியுமா என்று நம்மை வியக்க வைக்கும் எழுத்து அவருடையது.

தன் பெயரில் பிரதிவாதி பயங்கரம் என்பதை கொண்டிருக்கும் இன்னொருவரும் மிகவும் பிரபலமானவர்.தன் குரலால் தலைமுறை தலைமுறையாய் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருப்பவர். இன்றும் கவிதைகள் எழுதிக் கொண்டும், கஜல் பாடல்கள் இயற்றிக் கொண்டும் முதுமை என்பது தனக்கு இல்லை என்று காண்பிப்பவர். அவர்தான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivos) . இந்த வாரம் அவரைப் பற்றிய பதிவுகள் இடம் பெறும். அந்தக் குரல் பிரதிவாதி பயங்கரம் என்ற பெயருடன் பொருந்துகிறதா.பிரதிவாதியை மயக்கும் குரல் அல்லவா அது. வாதமில்லை பிரதிவாதமில்லை என்று சொல்லக்கூடிய இனியக் குரல் அது.முழுப் பெயரையும் சொன்னால் அபஸ்வரமாகத் தெரியும் என்றுதான் ஒரு வேளை P.B.ஸ்ரீநிவோஸ் என்ற பெயரில் அவர் எழுதுகிறாரோ என்னவோ.

லெஜெண்ட்ஸ் என்ற தலைப்பில் தமிழில் அவர் பாடிய திரைப்பட பாடல்கள் ஐந்து குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. அதன் அடிப்படையில் எழுதுகிறேன்.அவ்வாறு எழுதுவதில் சில வசதிகள் உள்ளன.உங்களுக்கும் பாடல்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். என்றாலும் அவற்றில் இடம் பெறாத பாடல்கள், எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் உட்பட வேறு பலவற்றை குறித்தும், சில அபூர்வமான பாடல்கள் குறித்தும் எழுதவிருக்கிறேன்.

இதை ஒரு ரசிகனின் பதிவு என்று எடுத்துக் கொள்ளுங்கள்
சந்திரமுகியும் லாயத்தில் இல்லாத குதிரையும்

ஒரு வலைப்பதிவாளர் ஆர்வக்கோளாறினால் சந்திரமுகி பாடல்களை இணையத்தில் MP3 வடிவில் தரும் இணையதளத்திற்கு சுட்டி கொடுத்து விட்டார். அதை இன்னொரு ரசிகர் கண்டித்ததால் அந்தச் சுட்டிக்குப் பதிலாக ராகா இணைய தள முகவரி கொடுத்துவிட்டார். இதில் பாடல்களைக் கேட்கத்தான் முடியும் MP3 வடிவில் இறக்கிக் கொள்ள முடியாது என்பதால் இந்த இணைப்பினைக் கொடுத்ததாக காரணம் வேறு கூறியிருக்கிறார்.

இணையதளங்களில் உள்ள பாடல்களை MP3, wav வடிவில் மாற்றித்தரும் மென் பொருட்கள் இருக்கின்றன. இவை கையாள்வதற்கு எளிதானவை. பாடல்களை தெரிவு செய்துவிட்டால் அவை ஒடிக் கொண்டிருக்கும் போதே மென்பொருள் வடிவமாற்றத்தினை செய்துவிடும். உதாரணமாக ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஒரே முறை தெரிவு செய்தால் தெரிவு செய்யப் பட்ட வரிசையில் பாடல்கள் வடிவமாற்றப்பட்டு கணினியில் சேமிக்கக் கூடிய நிலையில் இருக்கும். அதை நாம் சேமிக்க வேண்டும், அவ்வளவுதான். இதைக் கற்றுக் கொள்ள அதிக பட்சம் ஐந்து நிமிடம்தான் ஆகும்.
இதுதவிர P2P மூலமும் பாடல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.ஆகவே என்னிடம் MP3, wav வடிவில் மாற்றித்தரும் மென்பொருள் இல்லாதப் போதும் கூட நான் பிறரிடமிருந்து பாடல்களை இலவசமாக MP3 வடிவில் பெறமுடியும்,பகிர்ந்து கொள்ளவும் முடியும்.பாடல்கள் வெளியான 24 மணி நேரத்திற்குள் இணையத்தில் கிடைக்கின்றன.கூகிளில் தேடினால் அந்த இணைய முகவரியைக் கண்டுபிடிப்பதுகடினமேயில்லை.
வேறு வார்த்தைகளில் சொன்னால் குதிரை லாயத்தை விட்டு ஒடி விட்டது.அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பல்கிப் பெருகி ஒடிக் கொண்டிருக்கின்றன குதிரைகள். ஆனாலும் லாயத்தைப் பூட்டினால் குதிரையைப் கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர் சிலர். குதிரை லாயத்தை விட்டு ஒடிப் போன பின் பூட்டு போடச் சொல்லுவது புத்திசாலித்தனமா.
உண்மையில் கேட்க வேண்டிய கேள்வி வேறு - புதிதாக வெளியாகும் திரைப்பட பாடல்களின் ஒலி நாடா, குறுந்தகடு விலைகள் ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளன.இந்தியாவில் ரூபாய் 50க்குவிற்கும் ஒலிநாடாவின் உற்பத்திச் செலவு 15 ரூபாய் கூட இருக்காது, அது போல் ரூபாய் 99க்குவிற்கும் குறுந்தகட்டின் உற்பத்தி செலவு ரூபாய் 20 கூட இருக்காது.
இந்த குறுந்தகடு அமெரிக்காவில் 5 அல்லது 6 டாலருக்கு விற்கிறது. டாலரின் மதிப்பு ரூ 40 என்றால் ஒரு குறுந்தகட்டின் விலை ரூபாய் 200 அல்லது 240.மொத்தம் சுமார் 30 நிமிடங்கள் ஒடும் பாடல்களைக் கொண்ட குறுந்தகட்டின் விலை ரூபாய் 99 என்பது அதிகமாகத் தெரியவில்லையா?
சந்திரமுகி ஆடியோ உரிமை ஒரு கோடிக்கும் மேல் விலை போகிறது என்றால் அதை வாங்கியவர் இந்த விலை வைத்து விற்று குறுகிய காலத்தில் போட்ட முதலையும் எடுத்து, லாபம் வேறு சம்பாதித்துவிடுவார்.
இப்படி ஏன் இந்த விலை விற்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்காதவரை இப்படி அவர்கள் தலையில்மிளகாய் அரைப்பது தொடரும்.தங்கள் தலைகளில் மிளகாய் அரைக்கிறார்கள் என்ற உணர்வேஇங்கு இருப்பதாகத் தெரியவில்லை.இதை விட பரிதாபமானது யாருக்கோ நஷ்டம் வரக்கூடாது
என்பதில் இவர்கள் காட்டும் அக்கறை.

தேவுடா தேவுடா
ரிச்சர்ட் லெவின்ஸ்

சில தினங்களுக்கு முன் Science For The People மின்மடல்விவாத அரங்கில் ரிச்சர்ட் லெவின்ஸ் ஒருகுறிப்பினை எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தவை ஒரு நூலளவிற்கு விரிவாக எழுதப்பட வேண்டியவை. அவரது பல கட்டுரைகள், நூற்களின் அத்தியாயங்களையும், அவர் ரிச்சர்ட் லெவாண்டினுடன் சேர்ந்து எழுதியவை சிலவற்றைப் படித்திருக்கிறேன்.

லெவின்ஸ் ஹார்வர்ட் பல்கலைகழ்கத்தில் மானுட சூழலியல் பிரிவில் ஆராய்ச்சியாளர். அறிவியலின் சமூகத்தாக்கம் குறித்தும், அறிவியலுக்கும் சமூகம்,கருத்தலிற்குமிடையே உள்ள உறவுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவரது பல கட்டுரைகள், உரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.இங்கு நான் நான்கு சுட்டிகள் மட்டும் தருகிறேன்.

1, 1996ல் எடின்பர்க் உலக அறிவியல் விழாவில் விருது பெற்றபின் ஆற்றிய உரை.

2, உடல்,சமூகம் குறித்த ஒரு பேட்டி.இதில் நோய்கள் உருவாவது,பரவுவது குறித்து அவர் தரும்தகவல்கள், முன் வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை

3, உடல் நலம் குறித்த ஒரு சமூக சூழலியல் பார்வை .

கான்சாஸ் உடல்நல அறக்கட்டளைக்காக அவர் எழுதிய விரிவான அறிக்கையினைப்படித்திருக்கிறேன். அது இணையத்தில் கிடைப்பதாகத் தெரியவில்லை.

4,க்யுபாவின் 'உயிரியல் ஆயுதங்கள்' குறித்த கட்டுரை

இவற்றை சிறிது முயற்சி எடுத்தால் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.விசேஷமான அறிவையோ அல்லது குறிப்பிட்ட துறைகளின் அறிவை பின்புலமாகவோ இவை கோரவில்லை.வேறொரு சந்தர்ப்பத்தில் லெவின் பற்றி இன்னும் விரிவாகவும், radical science, science for the people இயக்கங்கள் குறித்தும் எழுத முயல்கிறேன்.
ஒரு மாறுதலாக

ஒரு மாறுதலாக இந்த வாரம் ஒரு தனிநபர் தொடர்புடைய ஐந்து அல்லது ஆறு பதிவுகளை பதியவிருக்கிறேன்.இவ்வலைப் பதிவில் அரசியல்,கலாச்சாரம், சமகால நிகழ்வுகள் குறித்தபதிவுகளைப் படித்தவர்களுக்கு இப்பதிவுகள் ஒரு மாறுதலாக இருக்கும்.அதற்காக இந்தவாரப் பதிவுகளெல்லாம் குறிப்பிட்ட நபர் தொடர்புடையவை என்று பொருள் கொள்ள வேண்டாம்.

சரி யார் அந்த நபர் என்று கேட்கிறீர்களா - ஒரு குறிப்புத் தருகிறேன் யூகிக்க முடியுமா என்றுபாருங்கள் - அவர் பெயரில் பிரதிவாதி பயங்கரம் என்பது ஒரு பகுதி. யூகிக்க முடிகிறதா,இன்னொரு குறிப்பு - இவர் பல் மொழி ஞானமுடையவர். இப்போதாவது தெரிகிறதா யார் இவர் என்று

பண்டிதர் தமிழ், பாமரர் தமிழ் - மாலனின் கருத்துகள் குறித்து

இன்று தமிழை பண்டிதர் தமிழ்,பாமரர் தமிழ் என்று பிரிக்க முடியாது, ஏனெனில் இன்று பண்டிதர் தமிழ் என்று ஒன்று இருக்கிறெதன்றால் அதைப் பேசும் பண்டிதர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. பரிதிமாற்க் கலைஞர் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. தூயத் தமிழ் பேச வேண்டும், எழுதவேண்டும் என்பவர்களைக் கூட பண்டிதத் தமிழினை முன்னிறுத்துவோர் என்று கூற முடியாது. தினத்தந்தியின் தமிழ் ஒரு வழக்கறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது.கானா பாடல் இன்று மரியாதைக்குரியவை, ஆய்விற்குரியவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இது போன்ற மாற்றங்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.

டென்த் படிக்கும் டெரரிஸ்ட் என்று எழுதும் விகடனின் தமிழ் யாருடைய தமிழ்.கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த போது பண்பலை நிகழ்ச்சி ஒன்றினைக் கேட்டேன். அதில் நிகழ்ச்சியைத் தொகுத்தவர் பேசியவற்றில் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகளே அதிகம்.ஊடகங்கள் கையாளும் தமிழ் பாமரர் தமிழா, நாம் தினசரி வாழ்க்கையில் பேசும் தமிழா - இரண்டும் இல்லை. ஊடகங்கள் உருவாக்கிய தமிழ்.

ஸ்பாட் லைட், கவர் ஸ்டோரி, புக் கிளப்,க்ளிக்ஸ்,லைட்ஸ் ஆன் - இப்படித்தான் எழுத வேண்டுமா. இங்கு அன்றாடப் பேச்சு தமிழிலும் ஆங்கிலத்தினை புகுத்தும் முயற்சியைத் தானே ஊடகங்கள் செய்கின்றன.இதற்கு யார் காரணம்- ராமதாஸா, திருமாவளவனா இல்லை அரசியல்வாதிகளா, பண்டிதர்களா. இப்படி எழுதுங்கள் என்று வாசகர்கள் ஆலோசனை கூறினார்களா.

திரைப்படங்களில் முன்பு டைரக்ஷன், எடிட்டிங்,சங்கீதம் போன்ற சொற்கள்தான் சுவரொட்டிகளில் காணப்பட்டன.காலப்போக்கில் தமிழில் பொருத்தமான சொற்கள் இடம் பெற்றன. இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களில் பிக்சர்ஸ், புரொடக்ஷன்,மூவி மேக்கர்ஸ், பிலிம்ஸ், கம்பைன்ஸ்,டாக்கிஸ்,மூவிஸ்,ஆர்ட்ஸ் போன்றவை அன்றும் இருந்தன, இன்றும் இருக்கின்றன. அது போல் ஸ்டுடியோ, லாபரட்ரிஸ்,லாப் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன. எனவே அன்றும் இன்றும் திரைப்படங்களின் தலைப்பில் மட்டும் ஆங்கிலம் இருப்பதில் புதுமையில்லை. சரசா பி.ஏ, மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், மோட்டர் சுந்தரம் பிள்ளை - இவையெல்லாம் ரகசிய போலிஸ் 115க் கு முன் வந்த படங்கள் என்று நினைக்கிறேன். நீலகிரி எக்ஸ்பிரஸ், டவுன் பஸ்,சி.ஐ.டி. சங்கர், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், ரிவால்வர் ரீட்டா, கன்பைட் காஞ்சனா என்று ஒரு பட்டியலே தரலாம்.டாக்டர் சிவா வெளிவந்தது 1975 அல்லது 1974. அதற்குப் பின்னும் பல படங்களின் பெயர்களில் ஆங்கிலச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புதான் அதிகம், ஆங்கில எதிர்ப்பல்ல. எனவே இதை யாரும் ஒரு பிரச்சினையாகப் பார்க்கவில்லை. எனவே இதையும்,பண்டித தமிழையும் தொடர்புபடுத்த முடியாது. பண்டிதர்கள் ம.கோ.இராமச்சந்திரன் என்று வேண்டுமானால் எழுதியிருப்பார்கள்.பெயர்களை மாற்ற வேண்டும் என்று கோரியதுண்டா.
இப்போது தமிழ்ப் படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டுமென்பது பண்டிதர் தமிழின் தொடர்ச்சி என்றால் 1950கள்,1960கள்,1970களில் பண்டிதத் தமிழ் வாதிகள் இப்படங்களின் பெயர்கள் குறித்து எதிர்த்தார்களா. எதிர்க்கவில்லையெனில் ஏன்.

இப்போது இதை எதிர்ப்பவர்கள் தங்களுடைய தமிழ் அரசியலின் ஒரு பகுதியாக இதைப் பார்க்கிறார்கள். இதை விமர்சிக்கும் அதே வே¨ளையில் ,தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், கல்வியில் தமிழ் வழிக் கல்விக்கும், தமிழ் மொழிக்கும் உரிய இடம் வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைகள் என்பதைப் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு முன்னதை விமர்சிப்பவர்கள் பின் இரண்டையும் குறித்து எதுவும் கூறுவதில்லை. பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றின் அரசியலை ஏற்காதவர்கள் கூட இந்த இரண்டு கோரிக்கைகளையும் வரவேற்கலாம். எனக்கு ராமதாஸ், திருமாவளவன் நடத்தும் அரசியல் குறித்து ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். ஆனால் அதற்காக தமிழுக்காக அவர்கள் இயக்கம் நடத்துவதையே நிராகரிக்கத் தேவையில்லை.தாங்கள் முன் வைக்கும் லட்சியங்கள், இலக்குகள் குறித்து அவர்களிடம் தெளிவில்லை, இது வெறும் அரசியல் நாடகம் என்ற வாதம் உள்ளது. இதை நான் முற்றிலும் மறுக்கவில்லை. அரசியல்வாதிகள் மீது விமர்சனம் வைக்கலாம், ஆனால் நாட்டை கெடுத்தது அரசியல்வாதிகள் மட்டும்தான் என்ற வாதத்தினை நான் ஏற்கத் தயாரில்லை. பிரச்சினை என்னவெனில் பா.ம.க உட்பட பல கட்சிகளுக்கு கல்வி, மொழி குறித்த உண்மையான அக்கறை இல்லை, தெளிவான செயல்திட்டமோ, தொலை நோக்குப் பார்வையோ இல்லை. இது அவர்களிடம் மட்டும் இல்லையா, பிற துறைகளிலுள்ளோருக்கு இருக்கிறதா என்பதே கேள்வி.
நான்கு கட்டுரைகள், இந்தி, மொழி


இந்த நான்கு கட்டுரைகளும் ஏனோ தானோவென்று உள்ளன,மாலன் கட்டுரையில் மது கிஷ்வர் குறிப்பிட்டது தொடர்பற்று இருக்கிறது, மரத்வாடாவிலும்,விதர்பாவிலும் உள்ள சராசரி விவசாயிக்கு மராட்டி மொழி பயன்படுமளவிற்கு இந்தி பயன்படுமா என்று தெரியவில்லை.அது போல் குஜராத்தில் உள்ளவருக்கு குஜராத்தி இந்தியை விட அதிக பயன்மிக்கதாக இருக்கலாம். பள்ளிக்குப் போகாதவர்களெல்லாம் இந்தி தெரிந்து வைத்திருப்பார்கள் என்பது ஒரு அனுமானம்தான், இந்தி பேசுவோரில் எத்தனை பேருக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரியும்.அப்படி யிருக்கும் போது கிஷ்வர் கூறுவது அபத்தம்.
இதில் வேடிக்கை என்னவெனில் இந்தியில் மனுஷி நடத்த முடியவில்லை என்பதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் இந்தியில் பொருத்தமான, போதுமான கட்டுரைகள் போன்றவை கிடைக்கவில்லை, பெரும்பாலும் ஆங்கில இதழில் வெளியானதையே மொழி பெயர்த்து வெளியிட்டோம் என்பது. அப்படியானால் இந்தி எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று தெரிகிறது.
மாலனுக்கு அடிப்படை விஷயங்களில் தெளிவில்லை.ஒரு மொழி என்பதினை பாமரர் மொழி பண்டிதர் மொழி என்று பிரிக்க முடியாது. பண்டிதர்கள் உருவாக்கும் சொற்களும் பாமரர்களிடம் செல்லும். அது போல் பாமரரும் மொழியின் வளர்ச்சிக்கு உதவியிருப்பார்கள். மேலும் மொழி என்பது தொடர்ந்து மாறுதல்களுக்கு உள்ளாவதுண்டு. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் எப்படி வந்தது.தினத்தந்தியின் தமிழ் யாருடைய தமிழ், கானா பாடல்களில் உள்ள தமிழ் யாருடைய தமிழ்.பேச்சு மொழி இந்தியும், அரசின் அதிகாரப் பூர்வ கிந்துஸ்தானியும் ஒன்றாகவா உள்ளன. அதிகார பூர்வ இந்துஸ்தானி அரசின் ஊடகங்களில், அலுவலகங்களில் வாழ்கிறது. பேச்சு மொழியில் ஆங்கிலம்,உருது சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

பாண்டியன் கட்டுரையில் உள்ள பல கருத்துக்களை நான் ஏற்க இயலாது.தி.மு.கவும் ஒரு காலத்தில் திராவிட நாடு கோரியது.மேலும் பாண்டியன் தமிழ் மிக நன்றாகவே உள்ளது, பிரச்சினை ஏதுமில்லை என்ற ரீதியில் எழுதியிருக்கிறார்.தமிழ் இங்கு ஆட்சி மொழியாக முழுமையாக இல்லை என்பதை மறைக்கிறார். மேலும் தமிழ் வழி கல்வி மட்டுமல்ல பிரச்சினை, கல்வியில் தமிழின் இடம் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பதை குறிப்பிடுவதில்லை.அவர் குறிப்பிடும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்று இன்று தமிழ் தேவையில்லை என்று கருதுவோர் மனநிலையே அவர் கட்டுரையில் வெளிப்படுகிறது.பாமாவின் நாவல் ஆங்கிலத்தில் கிடைக்கலாம், பாண்டியன் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகழகங்களில் ஆய்வு செய்யலாம்.அது நமக்கு பிரச்சினை இல்லை.

இங்கு பிரச்சினை தமிழ் வழியே கல்வி பயின்ற ஒரு தலித் பெண் ஏன் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பதே.இது போன்ற பிரச்சினைகளே இல்லாதது போன்ற ஒரு தொனியினை அவர் கட்டுரை தருகிறது. என் கருத்துக்களை விரிவாக பின்னர் எழுதுகிறேன்
21வது நூற்றாண்டில் ஒரு காப்கா 'கதை'

ஒரு பயணம், அடையாள அட்டை,வழக்கு,விசாரணை, விடை காணமுடியாத கேள்விகள், கருந்துளை அரசு,தொடரும் மர்மம்.
மேல்விபரங்கள் இங்கே.
தெரிந்தால் சொல்லுங்கள்


தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள், போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போது இதையெல்லாம் தடை செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு, தினசரிகளில் வாசகர் கடிதங்களிலும் அத்தகைய கருத்துக்களைப் படித்திருக்கிறோம். அது போல் அரசு ஊழியர் போராட்டம், கடையடைப்பு, போக்குவரத்துத் துறை தொழிலாளர் போராட்டம் என்றால் அதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுவதுண்டு. தமிழக அரசு ஊழியர் போராட்டத்தின் போது அரசின் நடவடிக்கைகளை பாராட்டியும், வரவேற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டன. சோ இப்போது கூட அரசு ஊழியர் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உச்ச நீதி மன்றம் பந்த, ஹர்த்தால் குறித்து தீர்ப்பளித்த போது பலர் அதை வரவேற்றனர். இப்போது காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.மார்ச் 7 வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். எதற்காகப் போராட்டம் என்று நமக்கெல்லாம் தெரியும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையா. ஆனால் அன்று போராட்டங்களை தவறு என்றும், அவற்றை நசுக்க வேண்டும் என்று நேரடியாகவும்,மறைமுகமாகவும் சொன்னவர்கள்,இன்று என்ன சொல்கிறார்கள். சோ இன்று இது குறித்து என்ன சொல்கிறார். தினமலர் இது குறித்து எதிர்ப்பினை தெரிவித்த மாதிரியே தெரியவில்லை.ஏன்.

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.