பதிப்புரிமை, ஒரு ஒவியம், ஒரு சர்ச்சை - ஒரு குறிப்பு

இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளவை அதிர்ச்சி தருகின்றன.இப்படிக் கூட நடக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது. பதிப்புரிமையின் அடிப்படைகள் கூடத் தெரியாதவர்களா தமிழ் எழுத்தாளர்கள். இல்லை அலட்சியம்தான் காரணமா. எதுவாக இருப்பினும் வெளியீட்டாளர் கூறியுள்ளது ஆறுதலளிக்கிறது.

ஒவியமோ அல்லது கவிதையோ அல்லது நாவலோ தனியே பதிவு செய்தால்தான் பதிப்புரிமை உண்டு என்பதில்லை. படைக்கப்பட்டவுடனே அதன் மீதான பதிப்புரிமை அதை படைத்தவருக்கு சொந்தமாகிறது.அது வெளியிடப்படும் போது அது எந்த ஊடகமாக இருந்தாலும் பதிப்புரிமைக்குட்பட்டதுதான், பதிப்புரிமை இல்லை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று படைப்பாளி கூறாதவரை. இணையத்திலிருந்து எதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம், பதிப்புரிமை அது செல்லுபடியாகாது என்று கூற முடியாது. இது குறித்து சட்டத்தில் தெளிவாக உள்ளது. ஒருவர் பதிப்புரிமை குறித்து ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை, எனவே அந்த ஒவியம் பதிப்புரிமைக்குட்பட்டதல்ல என்று நினைத்தேன், பயன்படுத்திக் கொண்டேன் என்று கூற முடியாது. இவ்வோவியம் ஒரு வலைப்பதிவில் வெளியாகியுள்ளது. இதை உருவாக்கியர் குறித்த விபரங்களும் உள்ளன. அப்படியே இணையத்தில் இருந்து எடுத்தாலும் அதன் பதிப்புரிமை யாரிடம் உள்ளது என்பதை கண்டுபிடித்து, அனுமதி பெற்றே பயன்படுத்துவதுதான் முறை, அதுவும் வணிக ரீதியான காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் போது பதிப்புரிமை பெற்றவர் அனுமதி இன்றி பயன்படுத்துவது சட்ட ரீதியாகவும் சரியல்ல. இப்படி பிரச்சினைகள் எழக்கூடாது என்பதற்காக படைப்பாளி, வெளியீட்டாளர் பதிப்புரிமை குறித்து ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது சகஜம், தமிழில் இப்படி ஒப்பந்தம் செய்து கொள்வது, அதில் இரு தரப்பாரும் கையெழுத்திடுவதும் நடைமுறையில் இருக்கிறதா. பொதுவாக படைப்பாளி தானாக படைப்புரிமையினை விட்டுக் கொடுக்காதவரை அது படைப்பாளியைச் சேர்ந்தது. இங்கு வேறுசிலவற்றையும் குறிப்பிட வேண்டும். ஆனால் அது இந்த சர்ச்சைக்குத் தொடர்பில்லாதது என்பதால் அதை விவரிக்க விரும்பவில்லை.

ஒவியர் விரும்பினால் நீதி மன்றத்தினை அணுகி நிவாரணம் கோரலாம். அவர் கனடாவில் இருந்தாலும் சரி கலிபோர்னியாவில் இருந்தாலும் சரி அவருக்கு இந்த உரிமை உண்டு. ஏனெனில் இந்தியா சர்வதேச வர்த்தக அமைப்பில் உறுப்பினர், வணிக தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் படி படைப்பாளி அயல் நாட்டவர் அல்லது அயல் நாட்டு குடிமகர் என்பதால் அவரது அறிவுசார் சொத்துரிமை இங்கு, அதாவது இந்தியாவில் செல்லாது என்று வாதிட முடியாது. அவரது பதிப்புரிமையினை இந்தியாவில் உள்ளவர்களும் அங்கீகரித்தேயாக வேண்டும். எனவே ஒவியர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இந்த ஒவியம் அட்டைப்படத்தில் உள்ள நூல் விற்பனையாவதை தடைசெய்யுமாறும், தனக்கு உரிய தொகையும் , அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக நட்ட ஈடும் தர வேண்டும்எனக் கோரலாம். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது - படைப்பாளியின் கவனத்திற்கு இது வரவில்லை என்பதால் அவர் வழக்குத் தொடராத போது, பதிப்புரிமை மீறல் நியாயமானாதாகிவிடாது.மாறக இது பதிப்புரிமை மீறல் என்று தெரிந்த பின்னரும் அதைத் தொடர்வதுதான் தவறு.
இது முதல் முறையல்ல, தமிழ் பதிப்புலகில் இது சகஜம் என்ற வாதம் நீதிமன்றத்தில் எடுபடாது. ஏனெனில்பதிப்புரிமையாளரை தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டியது வெளியீட்டாளரின் பொறுப்பு. ஒரு வேளை பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவே இல்லை என்றாலும் கூட அதைநூலில் தெரிவிப்பதுதான் முறை.அவ்வாறு தெரிவிக்கும் போது நாங்கள் முயற்சி எடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை, யாருக்கானேனும் இது குறித்து விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும் அல்லது பதிப்புரிமைஉள்ளவர் தொடர்பு கொள்ளவும் என்று ஒரு அறிவிப்பினைத் நூலில் தர வேண்டும். இங்கு அப்படிப்பட்டநிலை இல்லை. எனவே அனுமதி பெறமால் பயன்படுத்துவது சாதாரணம் என்று வாதிடுவது எந்த விதத்திலும்சரியல்ல. பிறர் தவறு செய்தால் நானும் தவறு செய்யலாம் என்று நீதி மன்றத்தில் வாதிட முடியாது. ஏனெனில் பிறர் குற்றம் அல்லது தவறு அல்ல இங்கு பிரச்சினை. இங்கு கேள்வி ஒவியர் குறித்து தகவல்கள் தெரிந்தும் ஏன் அனுமதி பெறவில்லை என்பதுதான்.
இணைய யுகத்திற்கு முன்பும் தமிழில் சிறு பத்திரிகைகளில், வெளியீடுகளில் பதிப்புரிமையாளர் அனுமதிபெறாமல் ஒவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் ஒவிய நூல்களில் எடுக்கப்பட்டுபயன்படுத்தப்பட்டவை. அப்போதும் கூட ஒவியம் குறித்த தகவல்கள் ஒவியரின் பெயருடன் தரப்பட்டிருக்கும்.அப்போது பதிப்புரிமை குறித்த அக்கறையில்லை, மேலும் பல சமயங்களில் பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் குறித்த முழு விபரங்கள் ஒவிய நூல்களில் இல்லாத போது அதைத் தேடிக் கண்டுபிடிப்பதும்எளிதல்ல.அப்போதெல்லாம் இப்போது போல் தொடர்பு வசதிகள் அதிகமாக இல்லை. மேலும் அப்போதுபல சமயங்களில் இவ்வொவியங்கள் வணிக நோக்கமற்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்போதுள்ளது போல் இப்போதும் அனுமதியின்றி பயன்படுத்துவோம் என்ற போக்கு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. இன்றும் வெளியீட்டாளர் அனுமதியின்றி பயன்படுத்தும் போக்கினை கண்டிக்கவே வேண்டும். இதில் சிறுபத்திரிகை, பெரிய பத்திரிகை, பெரிய நிறுவனம் என்ற பாகுபாடு காட்டிஇதை நியாயப்படுத்த முடியாது. மேலும் இதில் பொறுப்பு வெளியிடுபவர் அல்லது பதிப்பிக்கும் நிறுவனத்தினைச் சார்ந்தது. இந்த ஒவியத்தினை நூலாசிரியர் பரிந்துரைத்தாலும் அனுமதி பெறவேண்டியது வெளியீட்டாளர் கடமையாகும். அல்லது நூலாசிரியர் அதற்கு, அதாவது அனுமதி பெறுவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இனி என்ன செய்யலாம் - பல வழிகள் உள்ளன. உடனே ஒவியரைத் தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கி ஒரு தீர்வு காணலாம். அவருக்கு உரியத் தொகை, நட்ட ஈடு தந்து முறைப்படி அனுமதி பெறலாம்.தீர்வு காணும் வரை நூல் விற்பனையை நிறுத்தி வைக்கலாம். ஒரு வேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் விற்பனையில் உள்ள பிரதிகளை திரும்பப் பெற்று அட்டையினை மாற்றி வெளியிடலாம். விற்ற பிரதிகளின் அடிப்படையில் ஒவியருக்கு ஒரு தொகையினை முறையின்றி பயன்படுத்தியதற்காக தரலாம். அச்சிடப்பட்டு ஆனால் விற்பனைக்கு அனுப்பப்படாத பிரதிகளின் உள்ளே ஒரு அறிவிப்பினை ஒட்டி, வாசகர்களுக்கு உண்மையினைத் தெரிவிக்கலாம். அனுமதி கிடைக்கவில்லையெனில் அட்டையை மாற்றலாம்.தீர்வுகளை காண பதிப்பாளர் இப்போது கூட முயற்சிக்கலாம். காலம் கடந்து விடவில்லை.
இங்கு இன்னொரு கேள்வியும் எழுகிறது. அட்டையில் உள்ள ஒவியம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டஒவியமா இல்லை அதில் உள்ள நிறங்கள் மாற்றப்பட்டு வெளியாகியுள்ள.அப்படி மாற்றப்பட்டு வெளியாகியிருந்தால் அது பதிப்புரிமை மீறல் மட்டுமல்ல, படைப்பாளியின் தார்மீக உரிமைகளின் மீறலும் கூட. தார்மீக உரிமைகள் குறித்து ஏற்கனவே எழுதியுள்ளதால் அதை இங்கு விளக்கத்தேவையில்லை. இந்த ஒன்றைக் காரணம் காட்டி ஒவியர் புத்தக விற்பனையினை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தினைக் கோர முடியும்.
இனி இது போன்ற தவறுகள் நிகழாது என்று வெளியீட்டாளர் கூறியிருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் எழுத்தாளர்கள், வெளீயீட்டாளர்களிடம் பதிப்புரிமை குறித்து என்னபுரிதல் இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. பதிப்புரிமை என்பது வெறும் ராயல்டி சம்பந்தப்பட்டஒன்று என்று கருதப்பட்டால் அது மிகத் தவறான புரிதல். ஏனெனில் பதிப்புரிமை என்று வெறும் பொருளாதார ரீதியான உரிமை மட்டுமல்ல.இதையாவது படைப்பாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.பிறர் பதிப்புரிமையை மதிக்கக் கற்றுக் கொண்டால்தான் நம் பதிப்புரிமை குறித்து பிறர் அக்கறை கொள்வர் என்பதையாவது அவர்களும், வெளியீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

3 மறுமொழிகள்:

Blogger KARTHIKRAMAS மொழிந்தது...

avasaiyamaana pathivu Ravi!!! NanRi

2:38 PM  
Blogger Venkat மொழிந்தது...

ரவி - மிகச் சரியான பதிவு. ஆனால் இதையும் தாண்டி சில விஷயங்கள் இருக்கின்றன. அவை நெறிமுறையின்பாற்பட்டவை. வெறும் வழக்கு தொடர்தல், கடல்தாண்டி கேட்க முடியுமா என்றெல்லாம் சிந்திப்பதைவிட மிலவும் முக்கியமான விஷயம் அடிப்படை நெறிமுறைகள். ஒருவருக்குச் சொந்தமானதை அவர் அனுமதியின்றி பயன்படுத்துவது சார்ந்தது. அவர் என்ன செய்துவிட முடியும் என்பதைவிட நாம் இப்படிச் செய்திருக்கலாமா என்ற கேள்வி மிகவும் முக்கியம்.

எனக்கென்னவோ அடிப்படையில் கிழக்குப் பதிப்பகத்திற்கு இது வளர்நிலை என்றுதான் தோன்றுகிறது. ஒருவகையில் இது அவர்களை இன்னும் முறையாக நெறிப்படுத்திக் கொள்ள உதவலாம் என்று தோன்றுகிறது. அவர்களின் நடவடிக்கையும் நம்பிக்கை அளிக்கிறது. - வெங்கட்

7:29 PM  
Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

அவசியமான நல்ல பதிவு!
"படைக்கப்பட்டவுடனே அதன் மீதான பதிப்புரிமை அதை படைத்தவருக்கு சொந்தமாகிறது." - இதைப் பற்றி சமயம் கிடைக்கும்போது கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.
இவ்விஷயத்தில் அதிர்ச்சியை அளித்தது, எழுத்தாளர் சொன்னதாக தடித்த எழுத்துகளில் தோழியர் பதிவில் இடப்பட்டிருந்த வரிகள்தான். அது எழுத்தாளரின் முதிர்ச்சியடையாத மனநிலையைப் பிரதிபலிப்பதாகவே உணர்கிறேன். மற்றபடி, பதிப்பாளர்கள் விஷயத்தை உணர்ந்துகொண்டு புரியும் எதிர்வினை ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

7:23 AM  

Post a Comment

<< முகப்பு