குருமூர்த்தியின் பிரச்சினை


குருமூர்த்தி மதச் சார்பற்ற இந்தியாவில் ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்காது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளதிலிருந்து ஒன்று புரிகிறது. இந்த மதச்சார்பற்ற அரசியல் சட்டம்தான் பிரச்சினை. அது மடாதிபதிகள் என்ன செய்தாலும் தண்டனை கிடையாது, அவர்களை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதியினைக் கூட பதவியிறக்கம் செய்ய வழி இருக்கிறது. குற்றங்கள் குறித்த சட்டம் அனைவருக்கும் பொதுவாக, மத ரீதியான பாகுபாடின்றி உள்ளது. ஆங்கில ஊடகங்களும், ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், பேசுபவர்களும் ஜெயேந்திரர் கைதை ஆதரித்திருப்பதும், அது குறித்து செய்தி வெளியிடுவதும், கருத்து தெரிவிப்பதும் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. இந்த அரசியல்சட்டத்தினை கையாள்வது பா.ஜ.க விற்கு சிரமமாக இருந்தது என்று கூறியிருக்கிறார். யார் உங்களை அரசியல் சட்டத்தினை ஏற்று தேர்தலில் நிற்கக் சொன்னது, பதவி ஆசைக்காக நீங்கள் ஏன் சம்ரசம் செய்து கொண்டீர்கள்.
பிரச்சினையின் வேர் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததும், மதச்சார்பின்மையினை அடிப்படைக் கோட்பாடாக கொண்டிருப்பதும்தான் பிரச்சினை. உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் சொல்லும் தீர்வு ஹிந்து ராஷ்டிரம் என்று கொள்கிறேன். ஆனால் குருமூர்த்திக்கு ஒன்று தெரியவில்லை இந்த அரசியல்சட்டமும்,மதச்சார்பின்மையும்தான் இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அது தரும் கருத்து சுதந்திரமும், தேர்தல் அமைப்பும்தான் உங்கள் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. அதை நிரகாரித்து நக்சல்கள் போல் தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று கூறி பதவி ஆசையற்ற அரசியல் நடத்த உங்களால் முடியுமா.
1980 களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் போபர்ஸ் ஆயுத பேரம், ராஜீவ் காந்தி குறித்து குருமூர்த்தி எழுதியது நியாயம் எனில் இன்று ஊடகங்கள் ஜெயேந்திரர் குறித்து ஏன் எழுதக்கூடாது. அன்று பாம்பே டையிங் ,ரிலையன்ஸ் வணிகப் போரில் குருமூர்த்தி ஒரு தரப்பிற்கு எதிராக எழுதியது சரியென்றால் இன்று ஊடகங்கள் ஜெயேந்திரர், மடத்தின் விவகாரங்கள் குறித்து எழுதுவதும் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடுதானே. இந்த ஊடகங்கள் மூலம் விசாரணையினை திறம்பட செய்த சோ, குருமூர்த்தி, அருண் ஷெளரி போன்றவர்களுக்கு இதையே பிறர் காஞ்சி மடத்தின் மீது செய்வது கசக்கிறது.
இனி ஹிந்து தர்மத்தின்படி ஜெயேந்திரர் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரலாம். துறவியை விசாரிக்க எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்று தயானந்த சரஸ்வதி, குருமூர்த்தி கோரலாம். இந்த அரசியல் சட்டம் இருக்கும் வரை உங்கள் ஆசைகள் நிறைவேறாது. இதை மாற்ற உங்களால் முடியாது. ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் நீங்கள் யார், உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்குகிறீர்கள்.
ஜெயேந்திரர் கைது பலவற்றை தெளிவாக்கியுள்ளது. சட்டம், நீதி, நியாயம் போன்றவை குறித்து சோ, குருமூர்த்தி போன்றவர்கள் இதுவரை பேசி வந்தது நாடகம் என்று தெளிவாகியுள்ளது. சமத்துவம் என்பதே இவர்களுக்கு உவப்பான ஒன்றல்ல. சமத்துவம் என்பது காஞ்சி மடத்திற்கும் உவப்பான ஒன்றல்லதானே. அதை ஏற்றுக் கொண்டதாக நடித்த நாடகம் இப்போது முடிவிற்கு வந்துள்ளது.
குருமூர்த்திகள், சோக்கள், ஜெயகாந்தன்கள், சுப்பிரமணியம் சாமிகள் இணையும் புள்ளி இதுதான். சமத்துவம், மதச்சார்பின்மை இந்த இரண்டையும் முன்னிறுத்தும் அரசியல் சட்டமும் இவர்களது பிரதான எதிரிகள். எனவே இந்திய அரசியல் சட்டத்தினை மதிக்கும் இந்தியரின் முதல் எதிரிகள் இவர்கள்தான்.

4 மறுமொழிகள்:

Blogger Kathiravan மொழிந்தது...

//மதச் சார்பற்ற இந்தியாவில் ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்காது//

குருமூர்த்தி குறிப்பிடும் 'ஹிந்து' என்பது வேறு.

போராட அழைக்கப்படும் 'இந்து' வேறு - மடத்தினுள் காயத்ரி ஜெபம் சொல்ல அழைக்கப்பட்ட 'ஹிந்து' வேறு.

ஆமாம், கோத்ரா ரெயில் பெட்டியில் கருகிய பரிதாபத்துக்குரிய கரசேவர்களில் எத்துனை பேர் 'அவாள்'?

எல்லாம் தெரிந்ததுதானே!

-கதிரவன்

11:53 AM  
Blogger Thangamani மொழிந்தது...

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற இந்த கோட்பாடு வெறும் உதட்டளவில், மற்ற சிறுபான்மையினரை, தலித்துகளை ஒடுக்கும் போது இந்த சோ, சுவாமி, இந்து வகையறாக்களால் சொல்லப்பட்டு வந்தது. இது போன்ற கையறு நிலையை அவர்கள் சந்தித்துவிடாமலேயே வெறும் உதார் விடுவதிலும், தேவைப்படின் கமுக்கமாய் பச்சை பயங்கரவாதத்தை இரகசியமாய் பயன் படுத்தி சாதித்துக்கொள்வதிலும் (காந்தி கொலை, குஜராத் கலவரம், காஞ்சி கொலை..) வெற்றி பெற்றே வந்தனர். ஆனால் இந்த விசயத்தில் இது எப்படியோ கை மீறிப்போய்விட்டது. ஆட்சியாளருக்கு இப்போது 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' வசனமே கைகொடுக்கிறது. ஆனால் அதை இப்போது ஒத்துக்கொள்ளமுடியாது இவர்களால். ஏனெனில் சட்டத்துக்கு முன் மட்டுமல்ல, கடவுளுக்கு முன் கூட யாரும் சமமில்லை என்ற கருத்தாக்கம் ஊடுறுவிப் போன மனங்கள் அவை. 'எப்படி கைதுசெய்யலாம்?' என்ற உணர்வே இதில் மேலோங்கி இருக்கிறது.

2:17 PM  
Blogger Thangamani மொழிந்தது...

இதே குருமூர்த்தி, பஞ்சாயத்துகளின் தவறான கொடுமையான தீர்ப்புகளால், பஞ்சாயத்துக்களை நீதி மன்றங்கள் கண்டித்த்பொழுது அதை எதிர்த்து, பஞ்சாயத்துக்களை ஆதரித்து அவைகள் வலிமையாக நீதிபரிபாலனம் செய்ய அனுமதிக்கப்படவேண்டுமென இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதினான். ஏனெனில் பஞ்சாயத்து என்பது சாதி அமைப்புகளை பாதுகாப்பதும், அதன் அடிப்படையிலேயே நீதி(?) வழங்கிவருகிற ஒன்றுமாகும். இதுவே அவர்கள் யார் அவர்களது நீதி என்பது என்ன என்பதையும் சொல்லும்.

2:21 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//எழுதினான்// என்ற என்னுடைய முந்திய பின்னூட்டம் எழுத்துப்பிழையால் ஏற்பட்டது.

குருமூர்த்தி, சுவாமி போன்றோர் மனிதர்கள், இந்துக்கள் என்போர் யார் என்பதில் தான் தவறான புரிதல் இருக்கிறதே அதைச் சரியாகப் புரிந்துகொண்டால் பிரச்சனை இல்லை.

நன்றி ரவி.

4:57 PM  

Post a Comment

<< முகப்பு