செய்திகளின் பிண்ணனியில்

அவரவர் கவலை அவரவருக்கு - இலங்கை அரசு கவிழக்கூடாது என்ற கவலை ஹிந்துவிற்கு, மத்தியில் அரசு நீடிக்கிறதே என்ற கவலை தினமலருக்கு. அதற்குத் தகுந்தாற்ப் போல் செய்திகள்வெளியாகின்றன. ஹிந்து அரசு கவிழாது, ஆபத்தில்லை என்ற தொனியில் செய்தி தருகிறது.திமுக அமைச்சர்கள் பதவி விலகல் என்கிறது தினமலர்.பாவம் தினமலர் புயல் ஒரு தேனீர்க் கோப்பைக்குள் எழுந்த புயலாக அடங்கிவிட்டது.ராஜினாமா என்ற ஆயுதத்தினை திமுக எடுக்கக்கூடும் என்று பிற ஏடுகள், இணையதளங்கள் கூறுகின்றன.தினமலரோ ராஜினாமா என்றே செய்தி வெளியிடுகிறது.

செய்திகளை ஊன்றி கவனிப்பவர்களுக்கு ஹிந்து,தினமலரின் விருப்பங்கள் அல்லது கனவுகளே இப்படி செய்திகளாக வெளியாகின்றன என்பது எளிதில் புலனாகும்.தினமலரின் விருப்பம் திமுக விலகுவது மட்டுமல்ல, அரசு கவிழவேண்டும் என்பதே.எனவே அடிக்கடி அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்ற தொனியில் செய்திகள் வெளியாகின்றன. இடதுசாரிகள் எதையாவது அரசுக்கு எதிராக கூறினால் உடனே தினமலர் அதற்கு தரும் முக்கியத்துவம் அலாதியானது. செப்டம்பரில் அரசு கவிழும் என்று ஒருவர் ஆருடம் கூறினார். பிப்ரவரியிலிருந்து ஏப்ரலுக்குள் கவிழ்ந்துவிடும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

தினமலரைப் பொறுத்த வரை சிக்கல்,எதிர்ப்பு என்று கொட்டை எழுத்தில் போட்டு வதந்திகளை செய்திகளாக மாற்றுவது கைவந்த கலை. படிக்கும் வாசகருக்கு எது செய்தி என்பதே தெரியாத அளவிற்கு வதந்திகளையும் செய்திகளையும் கலந்து எழுதுவதால் இதை தினமலரின் மாந்தீரிக யதார்த்தவகை எழுத்தாக கொள்ளலாம். எழுத்தே மாந்தீரிகமாக மாறுவதை நாம் பாராட்டத்தானே வேண்டும். இந்த செய்தி பிரதிகளை வாசிக்க தனிக் கையேடு தேவையில்லை. என்ன செய்வது எந்த மாந்தீரிகம் செய்தாலும் காரியம் கைக்கூடாத நிலைதான் இருக்கிறது. அப்போது மனதின் ஆசைகளை,விருப்பங்களை,அச்சங்களை இப்படி இலக்கியம் படைத்துதானே வெளிப்படுத்த முடியும். இந்த செய்தி இலக்கியத்தினை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்வோம்.


உச்ச நீதிமன்றம் வழக்குகளில் தகவல்களைக் கோருவதும், தேவையான ஆவணங்களைத் தர வேண்டும் என உத்தரவிடுவதும் வழக்கமான ஒன்று. தினமலருக்கோ இதுவே அதிரடி நடவடிக்கை. இது தமிழ்ப் படங்களில் பேசப்படும் பண்ச் டையலாக்குகளை நினைவுபடுத்தினால் ஆச்சரியமில்லை.தினமலரின் செய்தியாளர், செய்தி ஆசிரியர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறுவதையும் அப்படி எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி உச்சநீதி மன்றமோ அல்லது தேர்தல் ஆணையமோ வழக்கமாக செய்வதைக் கூட அதிரடி நடவடிக்கை என்று சித்தரிப்பவர்கள் ஒரு வழக்கு குறித்த செய்திகளை எப்படி வெளியிடுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.

மதுரையில் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது.இதில் ஜெயேந்திரர் சம்பந்தப்பட்டுள்ளார். கடந்த மாதம் விசாரணை நடைபெற்ற போது அடுத்த விசாரணை பிப்ரவரி 24ம் தேதி என்று நீதிமதி கூறினார். தினமலரிலும் விசாரணை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது என்று செய்தி வெளியானது. அன்று நடந்த விசாரணை குறித்து முழு விபரங்கள் இல்லை. ஆனால் தினகரனில் முழுமையான செய்தி புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. திருக்கோஷ்டியூர் மாதவனும் அன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் என்பதும் அதில் கூறப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் மார்ச் 10ம் தேதிக்கு விசாரணை த்திவைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.தினமலரில் இது குறித்து செய்தி வெளியானதாகத் தெரியவில்லை. தினகரன் தளத்தினை பார்ப்பது சிரமமாக உள்ளது. ஹிந்துவிலும் செய்தி வெளியானதாகத் தெரியவில்லை, முன்பும் வெளியாகவில்லை என்றே தோன்றுகிறது. இந்த வழக்குக் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் அல்லது முழுமையான செய்தியை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று தினமலர் முடிவு செய்துள்ளதாகத் தோன்றுகிறது. நான் எழுதியதில் தகவல் பிழை இருந்தால் தெரிவிக்கவும்.

ஒரு செய்தியை முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளும் வகையில் நியுஇண்ட்பிரஸ் வெளியிடுகிறது.தலைப்பு Lawyers protest seer’s presence என்கிறது. தரப்பட்டுள்ள தகவல்களும் தவறு. ஏனெனில் அவர் அங்கு இருப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லை.மாறாக பிறர் செயல்படுவதற்கு இடையூறாக இருந்ததைத் தான் கண்டித்து இங்கு அவர் ஒரு குற்றம்சாட்டப்பட்டவர் என்று அந்த வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.இது எதுவும் இந்தச் செய்தியில் இல்லை. ஜுனியர் விகடன் இதே செய்தியை வேறு சில தகவல்களுடன் வெளியிட்டுள்ளது. நியு இண்ட் பிரஸ் வெளியிட்டுள்ளதையும், ஹிந்து, ஜூ.வி தந்துள்ள செய்திகளைப் படித்தால் நியு இண்ட் பிரஸ் செய்துள்ள விஷமம் புரியும்.

இப்படித்தான் ஊடகங்கள் செயல்படுகின்றன. ஒரே செய்தித்தாளினை மட்டும் வாசித்தால் உண்மையான செய்திகள் கிடைக்கும் என்ற நிலை இன்று இல்லை. ஊடகங்கள் சங்கராச்சாரியார் வழக்கில் விசாரணை செய்து தீர்ப்பு கூறுகின்றன, செய்திகளை திரித்து வெளியிடுகின்றன என்ற புகார் திரும்பத் திரும்பக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு ஆதரவாக உள்ள தினமலரும்,நியுஇண்ட்பிர்ஸ¤ம் எப்படி செய்திகளைத் தருகின்றன என்பதற்கான உதாரணங்களை மேலே தந்துள்ளேன்.

இந்த அரசியலைப் புரிந்து கொண்டால்தான் இந்த ஊடகங்களை எந்த அளவிற்கு நம்ப வேண்டும், எப்படி செய்திகளை ஒரே ஊடகம் அல்லது செய்தித்தாள் மூலம் அறிந்து கொள்வது பல சமயங்களில் போதாதது என்பதும் புரியும்.
வலைப்பதிவுகளின் பலம், பலவீனம்

சி.என்.என் னில் பிரதான செய்தி நிர்வாகியாக பணியாற்றிய ஈசான் ஜொர்டன் பதவி விலகியதில் வலைப்பதிவாளர்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவர்கள் வலைப்பதிவுகளை பயன்படுத்திய விதம் சரியா, தவறா என்ற கேள்விக்கு விடை காண இக்கட்டுரை உதவலாம். வலைப்பதிவுகள் பெரும் வளர்ச்சிப் பெற்று வரும் நிலையில் இக்கட்டுரையில் விவாதிக்கப்படும் விஷயங்கள் முக்கியமானவை.
பதிப்புரிமை, ஒரு ஒவியம், ஒரு சர்ச்சை - ஒரு குறிப்பு

இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளவை அதிர்ச்சி தருகின்றன.இப்படிக் கூட நடக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது. பதிப்புரிமையின் அடிப்படைகள் கூடத் தெரியாதவர்களா தமிழ் எழுத்தாளர்கள். இல்லை அலட்சியம்தான் காரணமா. எதுவாக இருப்பினும் வெளியீட்டாளர் கூறியுள்ளது ஆறுதலளிக்கிறது.

ஒவியமோ அல்லது கவிதையோ அல்லது நாவலோ தனியே பதிவு செய்தால்தான் பதிப்புரிமை உண்டு என்பதில்லை. படைக்கப்பட்டவுடனே அதன் மீதான பதிப்புரிமை அதை படைத்தவருக்கு சொந்தமாகிறது.அது வெளியிடப்படும் போது அது எந்த ஊடகமாக இருந்தாலும் பதிப்புரிமைக்குட்பட்டதுதான், பதிப்புரிமை இல்லை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று படைப்பாளி கூறாதவரை. இணையத்திலிருந்து எதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம், பதிப்புரிமை அது செல்லுபடியாகாது என்று கூற முடியாது. இது குறித்து சட்டத்தில் தெளிவாக உள்ளது. ஒருவர் பதிப்புரிமை குறித்து ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை, எனவே அந்த ஒவியம் பதிப்புரிமைக்குட்பட்டதல்ல என்று நினைத்தேன், பயன்படுத்திக் கொண்டேன் என்று கூற முடியாது. இவ்வோவியம் ஒரு வலைப்பதிவில் வெளியாகியுள்ளது. இதை உருவாக்கியர் குறித்த விபரங்களும் உள்ளன. அப்படியே இணையத்தில் இருந்து எடுத்தாலும் அதன் பதிப்புரிமை யாரிடம் உள்ளது என்பதை கண்டுபிடித்து, அனுமதி பெற்றே பயன்படுத்துவதுதான் முறை, அதுவும் வணிக ரீதியான காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் போது பதிப்புரிமை பெற்றவர் அனுமதி இன்றி பயன்படுத்துவது சட்ட ரீதியாகவும் சரியல்ல. இப்படி பிரச்சினைகள் எழக்கூடாது என்பதற்காக படைப்பாளி, வெளியீட்டாளர் பதிப்புரிமை குறித்து ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது சகஜம், தமிழில் இப்படி ஒப்பந்தம் செய்து கொள்வது, அதில் இரு தரப்பாரும் கையெழுத்திடுவதும் நடைமுறையில் இருக்கிறதா. பொதுவாக படைப்பாளி தானாக படைப்புரிமையினை விட்டுக் கொடுக்காதவரை அது படைப்பாளியைச் சேர்ந்தது. இங்கு வேறுசிலவற்றையும் குறிப்பிட வேண்டும். ஆனால் அது இந்த சர்ச்சைக்குத் தொடர்பில்லாதது என்பதால் அதை விவரிக்க விரும்பவில்லை.

ஒவியர் விரும்பினால் நீதி மன்றத்தினை அணுகி நிவாரணம் கோரலாம். அவர் கனடாவில் இருந்தாலும் சரி கலிபோர்னியாவில் இருந்தாலும் சரி அவருக்கு இந்த உரிமை உண்டு. ஏனெனில் இந்தியா சர்வதேச வர்த்தக அமைப்பில் உறுப்பினர், வணிக தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் படி படைப்பாளி அயல் நாட்டவர் அல்லது அயல் நாட்டு குடிமகர் என்பதால் அவரது அறிவுசார் சொத்துரிமை இங்கு, அதாவது இந்தியாவில் செல்லாது என்று வாதிட முடியாது. அவரது பதிப்புரிமையினை இந்தியாவில் உள்ளவர்களும் அங்கீகரித்தேயாக வேண்டும். எனவே ஒவியர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இந்த ஒவியம் அட்டைப்படத்தில் உள்ள நூல் விற்பனையாவதை தடைசெய்யுமாறும், தனக்கு உரிய தொகையும் , அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக நட்ட ஈடும் தர வேண்டும்எனக் கோரலாம். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது - படைப்பாளியின் கவனத்திற்கு இது வரவில்லை என்பதால் அவர் வழக்குத் தொடராத போது, பதிப்புரிமை மீறல் நியாயமானாதாகிவிடாது.மாறக இது பதிப்புரிமை மீறல் என்று தெரிந்த பின்னரும் அதைத் தொடர்வதுதான் தவறு.
இது முதல் முறையல்ல, தமிழ் பதிப்புலகில் இது சகஜம் என்ற வாதம் நீதிமன்றத்தில் எடுபடாது. ஏனெனில்பதிப்புரிமையாளரை தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டியது வெளியீட்டாளரின் பொறுப்பு. ஒரு வேளை பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவே இல்லை என்றாலும் கூட அதைநூலில் தெரிவிப்பதுதான் முறை.அவ்வாறு தெரிவிக்கும் போது நாங்கள் முயற்சி எடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை, யாருக்கானேனும் இது குறித்து விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும் அல்லது பதிப்புரிமைஉள்ளவர் தொடர்பு கொள்ளவும் என்று ஒரு அறிவிப்பினைத் நூலில் தர வேண்டும். இங்கு அப்படிப்பட்டநிலை இல்லை. எனவே அனுமதி பெறமால் பயன்படுத்துவது சாதாரணம் என்று வாதிடுவது எந்த விதத்திலும்சரியல்ல. பிறர் தவறு செய்தால் நானும் தவறு செய்யலாம் என்று நீதி மன்றத்தில் வாதிட முடியாது. ஏனெனில் பிறர் குற்றம் அல்லது தவறு அல்ல இங்கு பிரச்சினை. இங்கு கேள்வி ஒவியர் குறித்து தகவல்கள் தெரிந்தும் ஏன் அனுமதி பெறவில்லை என்பதுதான்.
இணைய யுகத்திற்கு முன்பும் தமிழில் சிறு பத்திரிகைகளில், வெளியீடுகளில் பதிப்புரிமையாளர் அனுமதிபெறாமல் ஒவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் ஒவிய நூல்களில் எடுக்கப்பட்டுபயன்படுத்தப்பட்டவை. அப்போதும் கூட ஒவியம் குறித்த தகவல்கள் ஒவியரின் பெயருடன் தரப்பட்டிருக்கும்.அப்போது பதிப்புரிமை குறித்த அக்கறையில்லை, மேலும் பல சமயங்களில் பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்பதைக் குறித்த முழு விபரங்கள் ஒவிய நூல்களில் இல்லாத போது அதைத் தேடிக் கண்டுபிடிப்பதும்எளிதல்ல.அப்போதெல்லாம் இப்போது போல் தொடர்பு வசதிகள் அதிகமாக இல்லை. மேலும் அப்போதுபல சமயங்களில் இவ்வொவியங்கள் வணிக நோக்கமற்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்போதுள்ளது போல் இப்போதும் அனுமதியின்றி பயன்படுத்துவோம் என்ற போக்கு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. இன்றும் வெளியீட்டாளர் அனுமதியின்றி பயன்படுத்தும் போக்கினை கண்டிக்கவே வேண்டும். இதில் சிறுபத்திரிகை, பெரிய பத்திரிகை, பெரிய நிறுவனம் என்ற பாகுபாடு காட்டிஇதை நியாயப்படுத்த முடியாது. மேலும் இதில் பொறுப்பு வெளியிடுபவர் அல்லது பதிப்பிக்கும் நிறுவனத்தினைச் சார்ந்தது. இந்த ஒவியத்தினை நூலாசிரியர் பரிந்துரைத்தாலும் அனுமதி பெறவேண்டியது வெளியீட்டாளர் கடமையாகும். அல்லது நூலாசிரியர் அதற்கு, அதாவது அனுமதி பெறுவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இனி என்ன செய்யலாம் - பல வழிகள் உள்ளன. உடனே ஒவியரைத் தொடர்பு கொண்டு நடந்ததை விளக்கி ஒரு தீர்வு காணலாம். அவருக்கு உரியத் தொகை, நட்ட ஈடு தந்து முறைப்படி அனுமதி பெறலாம்.தீர்வு காணும் வரை நூல் விற்பனையை நிறுத்தி வைக்கலாம். ஒரு வேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் விற்பனையில் உள்ள பிரதிகளை திரும்பப் பெற்று அட்டையினை மாற்றி வெளியிடலாம். விற்ற பிரதிகளின் அடிப்படையில் ஒவியருக்கு ஒரு தொகையினை முறையின்றி பயன்படுத்தியதற்காக தரலாம். அச்சிடப்பட்டு ஆனால் விற்பனைக்கு அனுப்பப்படாத பிரதிகளின் உள்ளே ஒரு அறிவிப்பினை ஒட்டி, வாசகர்களுக்கு உண்மையினைத் தெரிவிக்கலாம். அனுமதி கிடைக்கவில்லையெனில் அட்டையை மாற்றலாம்.தீர்வுகளை காண பதிப்பாளர் இப்போது கூட முயற்சிக்கலாம். காலம் கடந்து விடவில்லை.
இங்கு இன்னொரு கேள்வியும் எழுகிறது. அட்டையில் உள்ள ஒவியம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டஒவியமா இல்லை அதில் உள்ள நிறங்கள் மாற்றப்பட்டு வெளியாகியுள்ள.அப்படி மாற்றப்பட்டு வெளியாகியிருந்தால் அது பதிப்புரிமை மீறல் மட்டுமல்ல, படைப்பாளியின் தார்மீக உரிமைகளின் மீறலும் கூட. தார்மீக உரிமைகள் குறித்து ஏற்கனவே எழுதியுள்ளதால் அதை இங்கு விளக்கத்தேவையில்லை. இந்த ஒன்றைக் காரணம் காட்டி ஒவியர் புத்தக விற்பனையினை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தினைக் கோர முடியும்.
இனி இது போன்ற தவறுகள் நிகழாது என்று வெளியீட்டாளர் கூறியிருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் எழுத்தாளர்கள், வெளீயீட்டாளர்களிடம் பதிப்புரிமை குறித்து என்னபுரிதல் இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. பதிப்புரிமை என்பது வெறும் ராயல்டி சம்பந்தப்பட்டஒன்று என்று கருதப்பட்டால் அது மிகத் தவறான புரிதல். ஏனெனில் பதிப்புரிமை என்று வெறும் பொருளாதார ரீதியான உரிமை மட்டுமல்ல.இதையாவது படைப்பாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.பிறர் பதிப்புரிமையை மதிக்கக் கற்றுக் கொண்டால்தான் நம் பதிப்புரிமை குறித்து பிறர் அக்கறை கொள்வர் என்பதையாவது அவர்களும், வெளியீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
சித்திரவதை, சர்வதேச சட்டம், அமெரிக்கா...


மேற்கூறியது குறித்து சில நூல்கள், பல கட்டுரைகளைப் படித்து வருகிறேன். ஒரு நீண்ட கட்டுரை எழுதுமளவிற்கு 'சரக்கு' கைவசமிருப்பினும் சில காரணங்களால் (முன்னுரிமை தர வேண்டிய வேறு சில வேலைகள், சோம்பல்) இப்போது அதை எழுதப்பபோவதில்லை. இருப்பினும் இந்தப் பதிவிலும், இன்னொரு பதிவிலும் சில கட்டுரைகள் உட்பட இணையத்தில் கிடைப்பவற்றிற்கு சுட்டிகள் தருகிறேன். சட்டத்துறை உட்பட பல துறைகளைச் சார்ந்த ஜர்னல்களில் வெளியாகும் பெரும்பான்மையான கட்டுரைகள் இணையத்தில் இலவசமாகக் கிடைப்பதில்லை. எனினும் ஒரு சிறு பட்டியலாவது தரலாம் என்றிருக்கிறேன்.

2003 ல் அட்லாண்டிக் இதழ் வெளியிட்ட கட்டுரை விசாரணை,சித்திரவதை குறித்து சில முக்கியமான செய்திகளைத் தருகிறது. அண்மையில் நியுயார்க்கர் வெளியிட்டுள்ள கட்டுரை அமெரிக்கா எப்படி பிற நாடுகளை சித்திரவதை செய்ய பயன்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. இப்போது இந்த விஷயத்தைக் குறித்து ஏன் எழுதுகிறேன் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன ?.
ஒரு வித்தியாசமான வலைப்பதிவு

பல்கலைகழகங்கள் ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுவது, அணு ஆய்வுக் கூடங்களை நிர்வாகிப்பது உட்பட பலவற்றிற்கு, குறிப்பாக தனியார் முதலீட்டிற்கு ஆதரவாக செயல்படுவது, எதிர்ப்பு தெரிவித்து வலைத்தளங்கள் உள்ளன.பெர்க்கிலியில் ஒரு துணைப் பேராசிரியர் பணி நிரந்தரம் செய்யப்படாததை எதிர்த்து ஒரு வலைத்தளம் மூலம் ஒரு இயக்கம் நடத்தப்பட்டது.
தற்போது புது தில்லியில் உள்ள ஜவகர்லால் பல்கலை மாணவர்கள் சிலர் தனியார்மயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உணவு விடுதி நடத்த ஒரு ஏழைக்கு அனுமதி வேண்டும் என்றும் இயக்கம் நடத்தி வருகின்றனர். ஒரு வலைப்பதிவின் மூலம் இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர். வரவேற்கத்தக்க, ஆதரிக்கப்பட வேண்டிய முயற்சி இது
குருமூர்த்தியின் பிரச்சினை


குருமூர்த்தி மதச் சார்பற்ற இந்தியாவில் ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்காது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளதிலிருந்து ஒன்று புரிகிறது. இந்த மதச்சார்பற்ற அரசியல் சட்டம்தான் பிரச்சினை. அது மடாதிபதிகள் என்ன செய்தாலும் தண்டனை கிடையாது, அவர்களை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. உச்சநீதி மன்ற நீதிபதியினைக் கூட பதவியிறக்கம் செய்ய வழி இருக்கிறது. குற்றங்கள் குறித்த சட்டம் அனைவருக்கும் பொதுவாக, மத ரீதியான பாகுபாடின்றி உள்ளது. ஆங்கில ஊடகங்களும், ஆங்கிலத்தில் எழுதுபவர்கள், பேசுபவர்களும் ஜெயேந்திரர் கைதை ஆதரித்திருப்பதும், அது குறித்து செய்தி வெளியிடுவதும், கருத்து தெரிவிப்பதும் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது என்று அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. இந்த அரசியல்சட்டத்தினை கையாள்வது பா.ஜ.க விற்கு சிரமமாக இருந்தது என்று கூறியிருக்கிறார். யார் உங்களை அரசியல் சட்டத்தினை ஏற்று தேர்தலில் நிற்கக் சொன்னது, பதவி ஆசைக்காக நீங்கள் ஏன் சம்ரசம் செய்து கொண்டீர்கள்.
பிரச்சினையின் வேர் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. அது சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்ததும், மதச்சார்பின்மையினை அடிப்படைக் கோட்பாடாக கொண்டிருப்பதும்தான் பிரச்சினை. உங்கள் பிரச்சினைக்கு நீங்கள் சொல்லும் தீர்வு ஹிந்து ராஷ்டிரம் என்று கொள்கிறேன். ஆனால் குருமூர்த்திக்கு ஒன்று தெரியவில்லை இந்த அரசியல்சட்டமும்,மதச்சார்பின்மையும்தான் இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். அது தரும் கருத்து சுதந்திரமும், தேர்தல் அமைப்பும்தான் உங்கள் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. அதை நிரகாரித்து நக்சல்கள் போல் தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று கூறி பதவி ஆசையற்ற அரசியல் நடத்த உங்களால் முடியுமா.
1980 களில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் போபர்ஸ் ஆயுத பேரம், ராஜீவ் காந்தி குறித்து குருமூர்த்தி எழுதியது நியாயம் எனில் இன்று ஊடகங்கள் ஜெயேந்திரர் குறித்து ஏன் எழுதக்கூடாது. அன்று பாம்பே டையிங் ,ரிலையன்ஸ் வணிகப் போரில் குருமூர்த்தி ஒரு தரப்பிற்கு எதிராக எழுதியது சரியென்றால் இன்று ஊடகங்கள் ஜெயேந்திரர், மடத்தின் விவகாரங்கள் குறித்து எழுதுவதும் கருத்து சுதந்திரத்தின் வெளிப்பாடுதானே. இந்த ஊடகங்கள் மூலம் விசாரணையினை திறம்பட செய்த சோ, குருமூர்த்தி, அருண் ஷெளரி போன்றவர்களுக்கு இதையே பிறர் காஞ்சி மடத்தின் மீது செய்வது கசக்கிறது.
இனி ஹிந்து தர்மத்தின்படி ஜெயேந்திரர் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரலாம். துறவியை விசாரிக்க எந்த நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்று தயானந்த சரஸ்வதி, குருமூர்த்தி கோரலாம். இந்த அரசியல் சட்டம் இருக்கும் வரை உங்கள் ஆசைகள் நிறைவேறாது. இதை மாற்ற உங்களால் முடியாது. ஆனால் நீங்கள் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் நீங்கள் யார், உங்கள் உண்மையான நோக்கம் என்ன என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்குகிறீர்கள்.
ஜெயேந்திரர் கைது பலவற்றை தெளிவாக்கியுள்ளது. சட்டம், நீதி, நியாயம் போன்றவை குறித்து சோ, குருமூர்த்தி போன்றவர்கள் இதுவரை பேசி வந்தது நாடகம் என்று தெளிவாகியுள்ளது. சமத்துவம் என்பதே இவர்களுக்கு உவப்பான ஒன்றல்ல. சமத்துவம் என்பது காஞ்சி மடத்திற்கும் உவப்பான ஒன்றல்லதானே. அதை ஏற்றுக் கொண்டதாக நடித்த நாடகம் இப்போது முடிவிற்கு வந்துள்ளது.
குருமூர்த்திகள், சோக்கள், ஜெயகாந்தன்கள், சுப்பிரமணியம் சாமிகள் இணையும் புள்ளி இதுதான். சமத்துவம், மதச்சார்பின்மை இந்த இரண்டையும் முன்னிறுத்தும் அரசியல் சட்டமும் இவர்களது பிரதான எதிரிகள். எனவே இந்திய அரசியல் சட்டத்தினை மதிக்கும் இந்தியரின் முதல் எதிரிகள் இவர்கள்தான்.