சே குவாரா - புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல் - II

4

க்யுப அரசு படைப்பளிகளின் உரிமைகளை அங்கீகரித்து, அவர்களை சர்வதேச சந்தையில் பங்கேற்க அனுமதிக்கும் போது அது சமூகத்தில் ஒரு புதிய வர்க்கம் உருவாக வழி வகுக்கிறது. படைப்பாளி சமூக கடமைகளிலிருந்து விடுபட்டு தன் உழைப்பின் பயனை தனி நபராக அடைய முடிகிறது. மேலும் அறிவு சார் சொத்துரிமை என்பது சர்வதேச அளவில் நிலை நாட்டப்பட வேண்டிய உரிமை என்பதால் படைப்பாளி தன் படைப்பினை வெளியிடுவது குறித்து மட்டுமின்றி, அதை பிறர் முறைகேடாக பயன்படுத்தி லாபம் அடைவதை தடுக்க வேண்டியுமுள்ளது. இதை செய்ய வேண்டுமெனில் வழக்கறிஞர்கள் உட்பட பலரின் உதவி தேவை. மேலும் மொழிபெயர்ப்புகள், கலை நிகழ்வுகள், இசைத்தட்டு விற்பனை என பலவகைகளில் வருமானம் பெற முடியுமென்பதால் இது குறித்தும் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவற்றின் விளைவாக க்யுபக் கலைஞர்களும், படைப்பாளிகளும் தவிர்க்க இயலாதபடி முதலாளித்துவ நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருப்பதுடன், அவற்றின் சேவைகளை பயன்படுத்துவதும், அவற்றிற்கு தம் படைப்புகளை வழங்குவதும் தவிர்க்க இயலாதவையாயின. உதாரணமாக இசைக்கலைஞர் ஒருவர் தன்வாத்ய இசையினை நேரில் நிகழ்த்துவதன் மூலமும், அதை ஒலி நாடா, குறுந்ததகடு போன்றவற்றில்பதிவு செய்வதன் மூலமும் வருவாய் ஈட்ட முடியும். அவர் அதை பிறர் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும், விளம்பரங்கள், ஒலிபரப்புகளில் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும் வருவாயீட்ட முடியும். எனவே உபரி மதிப்பு என்பது பிறர் இதை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமும் உருவாகிறது.
மேலும் இன்றைய உலகமயமாக்கலில் கலாச்சாரம் என்பது ஒரு முக்கியமான பொருளாதார செயல்பாடும் ஆகும். நுகர்வு என்பது பல்கிப் பெருகும் போது, ஒரு கலைப்பிரதி அல்லது படைப்பு என்பது பல வழிகளில், உலகெங்கும் நுகரப்படுவது சாத்தியமாகிறது. இணையம் ஒரு உலகளாவிய சந்தை உருவாக்கத்திற்கு உதவியாக உள்ளது. இவையெல்லாம் படைப்பாளிக்களுக்கும், கலைஞர்களுக்கும் பொருளீட்ட பல புதிய வாயில்களை திறந்துவிட்டுள்ளன.
ஆனால் இதைப் பயன்படுத்திக் கொள்ள படைப்பளிக்கும் தன் படைப்பின் மீது உரிமை இருப்பது அவசியமாகிறது. அறிவு சார் சொத்துரிமை இதை உறுதி செய்கிறது. இந்த உரிமையினை உறுதி செய்யவும், அதிலிருந்து மிக அதிகமான பயனைப் பெறவும் படைப்பாளி தன் படைப்பின் நுகர்வு, உபயோகம், அது பயன்படுத்தப்படும் விதம் குறித்தும் அக்கறை காட்ட வேண்டும். எங்காவது அனுமதி பெறாமல் யாராவது தன் இசையினை பிரதி எடுத்து விற்கிறார்களா அல்லது பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க பல நாடுகளில் உள்ள இதற்கென்று பிரத்யேகமாக செயல்படும் நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. மேலும் இசையினை பயன்படுத்த அனுமதித்தால் அது குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காகவும், ராயல்டியினை பெற்றுத்தரவும் வழக்கறிஞர்களையும், ராயல்டினை பெற்றுத்தரும் அமைப்புகளின் உதவினையும்நாட வேண்டும். மேலும் அறிவுசார் சொத்துரிமைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். உதாரணமாக ஒரு நாவலாசிரியரின் பதிப்புரிமை நாவலாசிரியரின் ஆயுள், அதற்குப்பின் 60 அல்லது 75 ஆண்டுகள் வரைதான். அதே சமயம் நுகர்வுப் போக்குகள் வேகமாக மாறும் போது குறுகிய காலத்திற்குள் சந்தையில் தேவையும், மதிப்பும் இருக்கும் போதே எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிப்பதே புத்திசாலித்தனம். ஒரு படைப்பின் மூலம் பல வழிகளில் சம்பாதிக்கமுடியும் போது படைப்பு என்பதே ஒரு மூலதனமாகிறது. அதை திறம்பட பயன்படுத்துவதான் படைப்பாளிக்கு முன் உள்ள சவால். இத்தகைய நிலையினை க்யுப கலைஞர்கள் எதிர்கொண்ட போது, பலர் திடீரென்று பணக்காரர்களாக மாறினார்கள்.
ராயல்டிகளை வெளிநாட்டில் சம்பாதிக்க முடியும், அதுவும் அந்நிய செலாவணியாக சம்பாதிக்க முடியுமென்பதால் வெளிநாட்டுப்பயணங்களும், உல்லாச வாழ்க்கையும் சாத்தியமாயிற்று. இதற்கு உதாரணமாக கோர்டாவைக் கூறலாம்.
அவர் 1992 அரசுப்பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.பின் ஒரு பிரேசிலிய-க்யுப புகையிலை நிறுவனத்திற்கு விளம்பர புகைப்பட கலைஞராகப் பணியாற்றினார். கடந்த காலத்தில் காஸ்ட்ரோ உட்பட பலரது புகைப்படங்களை அவர் எடுத்திருந்தார். அவற்றைக் கொண்டும், க்யுபாவில் தான் எடுத்த பிற புகைப்படங்களைக் கொண்டும் உலகெங்கும் புகைப்பட கண்காட்சிகள் நடத்தினார். பல நாடுகளுக்கு சென்று இக்கண்காட்சிகள் மூலம் பொருளீட்டினார். மேலும் புகழ்பெற்ற அந்தப் புகைப்படம், சேயின் புகைப்படத்தின் பதிப்புரிமை அவரிடம் இருந்ததால் அப்புகைப்படம் அனுமதியின்றி பிரசுரிக்கப்படுவதை தடுக்க பல நாடுகளில் வழக்கறிஞர்களை நியமித்தார். அவரே ஒரு பேட்டியில் வெகு விரைவில் நான் ஒரு பலலட்சாதிபதியாகிவிடுவேன் என்றார். இவர் போல் பல கலைஞர்கள் வறுமையிலிருந்து திடீரென்று பெரும் பணக்காரர்களாக மாறினார். சராசரி மாத வருமானம் 223 பெசோக்களாக அதாவது 10 டாலராக இருக்கும் நாட்டில் உச்ச நிலையில் உள்ள இசைக்கலைஞர்கள் வருட வருமானம ஆறு இலக்கத்தில் அதுவும் டாலரில். க்யுப சமூகத்தில் பேராசியர்கள், விஞ்ஞானிகள் நிலை முன்பு போலவே இருந்தது.
5
இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன.1988ல் க்யுப கலாச்சார பொருட்களை அமெரிக்காவில் விநியோகிக்க இருந்த தடை நீக்கப்ப்ட்டது. இதனால் க்யுப படைப்பளிகளும், கலைஞர்களும் அமெரிக்காவிலிருந்து ராயல்டி பெறுவது சாத்தியமானது. க்யுப இசைக்கு அமெரிக்க சந்தை முக்கியமான சந்தை.1990 களில் சர்வதேச அளவில் அறிவுசார் சொத்துரிமையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டன.க்யுப அரசு அறிவுசார் சொத்துரிமை குறித்த சட்டங்களை வலுப்படுத்தியது. 1997ல் பெர்ன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி படைப்பாளிகள் அந்நியச் செலாவணியில் ராயல்டி சம்பாதிப்பதும், பிற நாட்டு நிறுவனங்களுடன் கையெழுத்திடுவதும், தனி நபர் உரிமைகளை படைப்பளிகள் பெறுவதும் சாத்தியமானது. மேலும் க்யுப அரசு சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவமளித்தது. இவற்றால் உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் கலாச்சாரப் பொருட்களுக்கான சந்தை விரிவுற்றது. சில அரசு நிறுவனங்களின் பிரச்சாரத் துறைகள் விளம்பர நிறுவனங்களாக உரு மாறின. இவை நிரந்தர் ஊழியர் என்பதற்கு பதிலாக திட்டங்களைப் பொறுத்துகலைஞர்களை பயன்படுத்திக் கொண்டன.பல கலைஞர்கள் இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சுதந்திரமாக செயல்பட முடிந்தது. சர்வ தேச அளவில் அங்கீகாரம் பெறவும், தன் மதிப்பினை உயர்த்தவும் க்யுப அரசு கலைஞர்களுக்கும், படைப்பளிக்கும் பல சலுகைகளை வழங்கியது. இவர்கள் மூலம் க்யுபா குறித்து வெளிநாடுகளில் நல்லெண்ணம் ஏற்படும் என்றும் அரசு கருதியது. இவர்கள் வெளிநாட்டு கலைஞர்கள், படைப்பாளிகளிம் கூட்டமைப்புகளில் சேர அனுமதித்து. அதே சமயம் உள்நாட்டில் அவர்கள் ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்துவதை அது ஏற்கவில்லை. பல சமயங்களில் க்யுப அரசு அவர்களின் படைப்புகளை இலவசமாக பயன்படுத்திக் கொண்டது. சுதந்திரமாக செயல்படும் கலைஞர்கள் அரசுக்கு வரி செலுத்தினர். பலர் தங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறது என்பதைக் காட்டும், புரட்சிகர கருத்தியலுக்கு தங்கள் ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படுத்தவும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியினைநன்கொடையாகக் கொடுத்தனர். அதே சமயம் அரசின் ஊழியர்களாக இருக்கும் கலைஞர்கள் அரசின் ஊழியர் என்ற நிலையில்தான் இருந்தனர்.
இப்படி அரசுக்கும், படைப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும், சமூகத்திற்கும் இருந்த உறவில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. சோசலிச நாடு முதலாளித்துவ அறிவு சார் சொத்துரிமைகளை அங்கீகரித்ததுடன், ஒரு பிரிவினர் அதை கொண்டு பெரும் பயனடையும் அனுமதித்தது. இதன் விளைவாக க்யுப கலைஞர்கள் சோசலிச சித்தாந்தத்தின் கருத்தியலை வலுப்படுத்தவும், மக்களின் புரட்சிகர உணர்வுகளை வளர்த்தெடுக்கவும் உதவும் ஊழியர்கள் என்ற நிலையிலிருந்து தங்கள் படைப்புகளின் பயனை பெறும் உற்பத்தியாளர்களாகவும், தங்கள் படைப்புகளின் பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் உரிமை கொண்டவர்களாகவும் மாறினார்கள். இந்த மாற்றம் ஏற்ப்டத் துவங்கிய போது உலகமயமாதல் ஒரு உத்வேகத்துடன் கட்டுப்படுத்த முடியாத வியக்தியாக உருவெடுத்திருந்தது. கலாச்சார நுகர்வினை உலகமயமாக்கல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. அறிவு சார் சொத்துரிமைகள் மிகப் பெரும்பான்மையான நாடுகளில் வலுப்பெறத்துவங்கின. இது போன்ற பல காரணிகளால் சேயின் புகைப்படம் குறித்த வழக்கு நடைபெற்ற போது அது ஒரு பதிப்புரிமை குறித்த வழக்காக இருந்தாலும் க்யுப சமூகத்தில் ஏற்பட்ட ஒரு மாறுதலின் உதாரணமாக அதை கருத முடியும். உள்நாட்டில் பண்பாட்டுத் துறையில் தன் கட்டுப்பாடுகளை தளர்த்தாத அரசு வேறு சிலவற்றில் தாரளமாகவும், நீக்குப்போக்காகவும் நடந்து கொண்டது.
6
ஒரு புரட்சியாளரின் புகைப்படம் குறித்த உரிமையினை நிலைநாட்ட முதலாளித்துவ உரிமைகள் தேவைப்பட்டன.அதை ஏற்று ஒரு சோசலிச அரசு ஒரு படைப்பாளிக்கு உள்ள தார்மீக மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளுக்கு ஆதரவாக வாதிட்டது. அதே சமயம் இந்தப் புகைப்படத்தினை பயன்படுத்த உதவிய புகைப்பட நிறுவனம் அப்புகைப்படம் அனைவரும் பயன்படுத்த்க் கூடிய வகையில் பொதுக்களனில் இருந்ததாக கருதினோம் என்று வாதிட்டது. இதில் உள்ள நகைமுரண் எதைக் காட்டுகிறது. உலகமயமாதலின் விளைவாக ஒரு புரட்சியாளரின் புகைப்படம் கூட ஒரு நுகர்வுக் குறியீடாக மாற்றப்படக் கூடுமென்பதனையும், அந்த நுகர்வுக் குறியீட்டினை எதிர்க்க சோசலிச அரசு கூட முதலாளித்துவ விழுமியங்களையும், உரிமைச்சட்டங்களையும் பயன்படுத்த வேண்டி வந்தது என்பதனையும்.
நுகர்வு, கலாச்சார உற்பத்தி, அறிவுசார் சொத்துரிமைகள்- இவற்றிற்கிடையே உள்ள உறவு என்பது சிக்கலானது. எதையும் நுகர்விற்கு உரியதாக மாற்றமுடியும், எதன் மீதும் அறிவு சார் சொத்துரிமைகொண்டாட முடியுமென்பது போல் தோன்றினாலும் கலாச்சார உற்பத்தியும், நுகர்வும் முரண்படும்சக்திகள் மோதும் களங்களாக உள்ளன. இதில் சமரசம் ஏற்பட்டாலும் அது எத்தகைய சமரசம்என்பதை கவனிக்க வேண்டும். வேறொரு கோணத்தில் பார்த்தால் நுகர்வுக்கான சந்தையின் விரிவாக்கம் படைப்பாளி முன்னெப்போதும் இருந்திராத வகையில் படைப்பினை மூலதனமாக மாற்றவும், அது கொண்டு லாபம சம்பாதிக்கவும், படைப்பின் பரவலாக நுகர்வினை பல ஊடகங்கள் மூலம் அதிகரிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை சாத்தியமாக்க படைப்பாளி அறிவுசார் சொத்துரிமைகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. இது அப்படைப்பாளி சில விழுமியங்களை ஏற்றுக்கொண்டால்தான் சாத்தியம். அப்போது படைப்பாளி விரும்பியோ விரும்பாமலோ படைப்பாளியாக மட்டுமிராமல படைப்பு மீதான உரிமைகள்குறித்த நிர்வாகியாகவும் அதற்காக திட்டமிடவும் வேண்டியுள்ளது. அதற்கென நிறுவனங்களை நாட வேண்டியுள்ளது. இதன் விளைவாக படைப்பாளி நுகர்வுக் கன்ணியின் ஒரு பகுதியாக மாற வேண்டியுள்ளது.
படைப்பு,படைப்பாளி குறித்த நம் வழக்கமான புரிதலையும், பண்பாடு, நுகர்வு குறித்த புரிதல்களையும் உலகமயமாக்கலும், அறிவு சார் சொத்துரிமைகளுக்கும் கேள்விக்குள்ளாக்குகின்றன. சேயின் புகைப்படம் குறித்த சர்ச்சை புலப்படுத்துவது இதைத்தான்
குறிப்புகள்
1, இக்கட்டுரைக்கான தகவல்கள் இணையத்திலிருந்தும், Copyrighting Che : Art and Authorship Under Cuban Late Socialism - Ariana Hernandez-Regunat , Public Culture Vol 16 No 1 , 2004 என்ற கட்டுரையிலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இக்கட்டுரையாளர் முன் வைத்துள்ள வேறு சில கருத்துக்களை நான் இங்கு பயன்படுத்த வில்லை. ஏனெனில் அது குறித்து எழுதினால் கட்டுரை இன்னும் நீண்டு விடும், மேலும் ஒரு விரிவான அறிமுகமின்றி அவற்றை முன்வைக்க முடியாது.
2, 'A PHILOSOPHY OF INTELLECTUAL PROPERTY' by Peter Drahos APPLIED LEGAL PHILOSOPHY SERIES, DARTMOUTH, 1996 இது ஒரு முக்கியமான நூல். டிரகோஸ் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து பல கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் ஜான் பிரேய்த்வாததிடுடன் சேர்ந்து எழுதியுள்ள Information Feudalism என்ற நூல் மிக முக்கியமானது.
3, பெர்ன் ஒப்பந்தம் - The Berne Convention for the Protection of Literary and Artistic Works- பதிப்புரிமை குறித்த சர்வதேச ஒப்பந்தம். முதலில் 1886ல் கையெழுத்திடப்பட்டது. பின்னர் மாறுதல்களுக்குட்படுத்தப்பட்டது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு WIPO இதை நிர்வகிக்கிறது.
4,பொதுக்களன் இது பல பொருட்களில் குறிப்பிடப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமைகளைப் பொறுத்த வரை இவ்வுரிமைகள் காலாவதியான அல்லது அவை கட்டுப்படுத்தாதவை உள்ள தொகுப்பு பொதுக்களன் எனலாம். உதாரணமாக பாரதியார் பாடல்கள், ஷேக்ஸ்பியர் படைப்புகளை பயன்படுத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை. இவை பொதுக்களனில் உள்ளன. ஆனால் மனுஷ்ய புத்திரனின் படைப்புகளின் பதிப்புரிமைக் காலம் முடியவில்லை என்பதால அவை பொதுக்களனில் இல்லை. அரசு அதை நாட்டுடமையாக்கினாலோ அல்லது அவர் பதிப்புரிமையினை விட்டுக் கொடுத்தாலோ அவை பொதுக்களனில் வந்துவிடும். புதுமைப்பித்தன் மறைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்னரே, 2008ல் அவர் படைப்புகள் பொதுக்களனின் பகுதியாகும். ஆனால் அரசு அதை நாட்டுமடையாக்கியதால் அவை 2008க்கு முன்னரே பொதுக்களனின் பகுதியாகிவிட்டன.
5,தார்மீக உரிமைகள் இவை படைப்பாளி அல்லது படைப்பாளியின் வாரிசுதாரர்கள் அல்லது பிரதிநிதிகளால் நிலை நாட்டக் கூடிய உரிமைகள். ஒரு படைப்பாளி தன் பதிப்புரிமையினை பிறருக்குக் கொடுத்தாலும் தார்மீக உரிமைகள் படைப்பாளிக்கு உண்டு.படைப்பினை அதன் நோக்கத்திற்கு முரணாக பயன்படுத்தல், படைப்பினை படைப்பாளிக்கு எதிராக பயன்படுத்துதல், அதன் ஒருமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பயன்படுத்துதல் போன்றவற்றை தார்மீக உரிமைகளை மீறிய செயல் என்று கருதும்பட்சத்தில் படைப்பளி நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக படைப்பாளி ஒரு சிற்பத்தினை உருவாக்கி விற்ற பின்னரும் கூட அச்சிற்பம் சிதைக்கப்பட்டு ஒரு காட்சியகத்தில் வைக்கப்படுமானால் அதை தடுக்க இவ்வுரிமைகளைபயன்படுத்த முடியும். அது போல் ஒரு பக்திப்பாடலின் வரிகளை அதன் பொருளுக்கு முற்றிலும் மாறாக வெறொரு பாடலில் அப்பாடல் பாராட்டும் இறைவனை கிண்டல செய்யும் வகையில் பயன்படுத்தினால் தன் தார்மீக உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்று படைப்பாளி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும். பொதுவாக ஐரோப்பாவில் இவ்வுரிமைகளுக்கு பெரும் மதிப்பளிக்கப்படுகிறது, அதே அளவு மதிப்பு அமெரிக்காவில் அளிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.

2 மறுமொழிகள்:

Blogger ROSAVASANTH மொழிந்தது...

படிக்க தொடங்கினேன். பாதிகூட கடக்கவில்லை. அப்பறம் பார்த்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது. இணையத்தில் படிக்க தொடங்கிய பிறகு, துணுக்கு மாதிரி இருந்தால்தான், அல்லது லேசான வாசிப்புக்கு உகந்ததாய் இருந்தால்தான் உடனடியாய் படிக்கமுடிகிறது. ஸீரியாஸாய் நம் முனைப்பை வேண்டும் எழுத்துக்களை தள்ளிபோட்டு அப்படி ஒரு குவியலே பட்டியலில் இருக்கிறது.

சாரி ரவி, முழுவதும் படிக்கவில்லை. பிறகு வந்து படிப்பேன், ஒரு சிலராவது படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

12:10 PM  
Blogger சன்னாசி மொழிந்தது...

//மேலும் இன்றைய உலகமயமாக்கலில் கலாச்சாரம் என்பது ஒரு முக்கியமான பொருளாதார செயல்பாடும் ஆகும்.//

கலாச்சாரம் பொருளாதாரம் இரண்டையும் bipolar நிலைப்பாடு அல்ல, அது ஒருவிதமான commensalism மட்டுமே. கலாச்சாரம், அதைப் பிரதிபலிக்கும் கலையிலக்கியப் படைப்புக்கள் அனைத்தும் நாம் கற்பனைசெய்யுமளவு idealistic/rebellious ஆக இருப்பதாக நாம் அனுமானித்துக்கொள்வதுமே various degrees of compromises வழி தான். ஏதேன் தோட்டத்தில் மரத்திலிருந்து ஆப்பிள் பறிக்கப்பட்ட கணத்தை ஒரு கலைத்துவமான கணமாகக் கொள்வீர்களா அல்லது மரத்துக்கும் மனிதனுக்கும் (அ) கடவுளுக்கும் மனிதனுக்கும் (அ) இம்மைக்கும் மறுமைக்கும் (அ) மேதைமைக்கும் அறியாமைக்கும் (அ) துக்கத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் நிகழ்ந்த பண்டமாற்றின் கணம் என்று கொள்வீர்களா? சம்பவங்கள் திசையற்றவை. நிர்ணயங்களே அவற்றின் திசையைத் தீர்மானிப்பவை. ஒரு தீர்மானம் ஓராயிரம் தீர்மானங்களைக் கொன்றுதான் வாழமுடியுமென்பது நாமனைவரும் அறிந்த விதி என்பதால், கலாச்சாரம்-பொருளாதாரம் என்பதைத் தாண்டிய ஒரு ஸ்தாயியில் சம்பவங்களைப்பற்றிப் பேசமுடியுமாயின் இன்னும் சில சாத்தியங்கள் கிடைக்கக்கூடும்.

7:27 PM  

Post a Comment

<< முகப்பு