சே குவாரா - புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல் - I

உயிர்மை ஜனவரி 2005 இதழில் வெளியானது. இதை வெளியிட்ட மனுஷ்ய புத்திரனுக்கு என் நன்றிகள்.
1

சே குவாராவின் இந்தப் புகைப்படம் உலகெங்கும் புகழ்பெற்றது.இன்றும் வெகு ஜன இயக்கங்களால், புரட்சியாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இப்புகைப்படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இப்புகைப்படம் டி ஷர்ட்களில், தேனீர் கோப்பைகளில், சுவரொட்டிகளில், புத்தகங்களின் அட்டைகளில் என்று பலவற்றில் காணப்படுகிறது. இப்புகைப்படத்தினை 1960 ல் எடுத்த ஆல்பர்டோ ல்ய்ஸ் குடிஈரிஸ் (Alberto Diaz Guttierez) பரவலாக கோர்டா (Korda) என்ற பெயரில் அறியப்பட்டவர். 1960 ல் இந்தப்படம் எடுக்கப்பட்டாலும் 1967க் குப்பின்னரே இது வெளிவுலகிறகு அறிமுகமானது.பொலிவியாவில் 1967ல் சே கொல்லப்பட்டப் பின்னரே இப்புகைப்படம் வெளியிடப்பட்டது.1960ல் ஒரு வெடிகுண்டு தாக்குதலில் ஹவானா துறைமுகத்தில் கொல்லப்பட்ட 80 பேரின் இறுதி ஊர்வலத்தில் சேகுவாரவை இரண்டு முறை படமெடுத்த கோர்டா, இரண்டாவது முறை எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பிண்ணணியில் இருந்த ஒரு மரத்தினையும், ஒரு மனிதனின் உருவத்தினையும் நீக்கி இந்தப் புகழ் பெற்ற புகைப்படத்தினை வெளியிட்டார். 1967ல் இப்புகைப்படத்தின் இரண்டு பிரதிகளை இத்தாலியைச் சேர்ந்த இடது சாரி பதிப்பாளர் பெல்டிரினெலி (Giangiacomo Feltrinelli) அவர் கொடுத்தார்.
இப்புகைப்படத்தின் மதிப்பினை உடனடியாகக் கண்டுகொண்ட பதிப்பாளர் சேயின் பொலிவிய நாட்குறிப்புகளை வெளியிட்ட போது அந்நூலின் அட்டைப்படத்தில் அதை பயன்படுத்தினார்.சே கொல்லப்பட்ட பின் அவரது அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரங்கல் ஊர்வலத்தில் காஸ்ட்ரோ உரையாற்றினார். அப்போது அவர் பேசிய மேடைக்கு எதிர்ப்புறம் இருந்த கட்டிடத்தில் இப்புகைப்படம் இடம் பெற்றிருந்தது. பின்னர் 1968ல் ஐரோப்பாவில் மாணவர்கள் போராட்டத்தின் போது இப்புகைப்படத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட சுவரொட்டிகள், பதாகைகள் பரவலாக இடம் பெற்றன. பின்னர் இப்புகைப்படம் உலகெங்கும் பல்வேறு இயக்கங்களாலும், இடதுசாரி கட்சிகளாலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாலும், இளைஞர்கள், இளைஞிகள் மத்தியில் இது மிகவும் பிரபலமானதாலும் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான புகைப்படங்களில் ஒன்றாக உள்ளது.
இப்படி பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்டாலும் இப்புகைப்படத்தினை எடுத்தவருக்கு ராயல்டியாக எதுவும் கிடைக்கவில்லை. இப்புகைப்படம் மிகப்பரவலாக தெரிய வந்தாலும் இதை எடுத்தவர் யார் என்பது கூட பரவலாக தெரியவில்லை. பலர் கியுபாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் என்பதை மட்டும் அறிவர். இதற்கு ஒரு முக்கிய காரணம் இதை வெளியிட்ட பதிப்பாளர் அவர் பெயரை சரியான முறையில் வெளியுலகிறகு அறியத்தராததே. இதானல் இதைப் பயன்படுத்தி பலர் லாபம் சம்பாதித்தாலும் படத்தை எடுத்தவருக்கு உரிய பெயரோ, புகழோ, பணமோ கிடைக்கவில்லை. மேலும் 1997ல்தான் க்யுபா பெர்ன் ஒப்பந்த்ததில் (Berne Convention) கையெழுத்திட்டது. மேலும் பலர் இப்புகைப்படம் பொதுக்களனில் (public domain) இருப்பதால் இதற்கு ராயல்டி தர வேண்டியதில்லை என்று கருதிவிட்டனர்.
ஆனால் 2000ல் இப்புகைப்படம் ஒரு மதுபான விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்ட போது அவர் தன் பதிப்புரிமை குறித்து ஒரு வழக்கினைத் தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். லண்டனைச் சேர்ந்த க்யுபா ஆதரவு இயக்கம் அவர் சார்பாக இந்த விளம்பரத்தினை உருவாக்கிய நிறுவனம் (Lowe Lintas Ltd), புகைப்பட நிறுவனம் (Rex Features) மீது வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கில் அவர் பக்கம் நியாயம் இருப்பதாகவும், இப்புகைப்படத்தின் பதிப்புரிமை அவருக்கு உண்டு என்றும், அவர் அனுமதியின்றி இதைப் பயன்படுத்தியது தவறு என்றும், அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தீர்ப்பானது. அத்தீர்ப்பினை ஏற்று விளம்பர நிறுவனமும், புகைப்பட நிறுவனமும்கொடுத்த தொகையினை க்யுபாவில் குழந்தைகள் மருத்துவ, மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படும் வகையில் நன்கொடையாக அவர் கொடுத்துவிட்டார். சமுக மாற்றத்திற்காக, நியாயமான நோக்கங்களுக்காக இப்புகைப்படம் பயன்படுத்தப்படுவது குறித்து தனக்கு மகிழ்ச்சி, ஆனால் மதுபானம் போன்ற ஒன்றிற்கு இதை விளம்பரம நோக்கங்களுக்கு பயன்படுத்துவது தனக்கு ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். இத்தீர்ப்பு வழங்கப்பட்ட போது இது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது முதலாளித்துவத்ற்கு எதிரான வெற்றி என்று சிலர் கருதினாலும் இதை அவ்வளவு எளிதாக அவ்வாறு கருதிவிட முடியாது
2

ஆய்வாளர் அரியானா இது குறித்து சில முக்கியமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். கோர்டா கியுபாவின் பிரஜை. அவர் தன் பதிப்புரிமை குறித்து வேறொரு நாட்டில், இன்னும் சரியாகக் சொன்னால் ஒரு முதலாளித்துவ நாட்டில் சட்ட ரீதியாக தன் உரிமை குறித்து வழக்குத் தொடர்ந்தார். அதற்கு கியுப அரசின் ஆதரவும் இருந்தது. தான் இப்புகைப்படத்தின் ஆசிரியர் என்று அவர் வழக்குத் தொடர்ந்த போதிலும் க்யுபாவில் அவருக்கு அவ்வாறு உரிமை கோர சட்ட ரீதியாக உரிமை இருந்ததா என்பது கேள்விக்குறி. ஏனெனில் அவர் ஒரு சுதந்திரமான புகைப்பட நிபுணராக இப்புகைப்படத்தினை எடுக்கவில்லை, மாறாக க்யுப அரசின் ஒரு ஊழியராகவே இதைஎடுத்தார். சட்ட ரீதியாக அவர் இப்புகைப்படத்தின் மீது உரிமை கோர முடியாது. ஏனெனில் க்யுபா உட்பட பல சோசலிச நாடுகள் இப்படிப்பட்ட உரிமைகளை அங்கீகரிக்கவில்லை. மாறாக அறிவு சார் சொத்துரிமை என்பதில் அவர் வேறொரு கண்ணோட்டத்தினைக் கொண்டிருந்தன. இதன்படி ஒருவரின் படைப்பு தனி நபர் உரிமை என்றில்லாமல் பொதுச்சொத்தாகிறது. அப்படைப்பாளியை கெளரவிக்கும் வகையில் அரசு பாராட்டு பத்திரம், பட்டம், கெளரவம், விருது போன்றவற்றை அளிக்கும், ஆனால் அவர் தனி உரிமை கொண்டாடுவதினை ஏற்காது. உதாரணமாக இந்தியாவில் அல்லது பிரிட்டனில் அவர் போன்ற ஒரு புகைப்படக்காரர் தன் புகைப்படம் மீதான உரிமையினை பிறருக்கு விற்கலாம், தன் பதிப்புரிமையினைக் கொண்டு அதைப் பயன்படுத்துவோரிடமிருந்து ராயல்டி பெறலாம், இப்புகைப்படம் இதற்குதான் பயன்படுத்தலாம் என்று நிபந்தனை விதிக்கலாம். பதிப்புரிமை என்பது சொத்துரிமையைப் போல் பயன்படுத்தக்க்கூடிய ஒரு உரிமை. அது மட்டுமல்ல படைப்பளி என்ற வகையில் அவர் தன் தார்மீக உரிமைகளை (moral rights) நிலைநாட்ட நீதிமன்றத்தின் உதவியினை நாடலாம்.
இதற்கு இரண்டு உதாரணங்களைத் தர முடியும். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது ஆனந்த விகடனின் மாப்ஸ் என்கிற பார்த்தசாரதி எடுத்த புகைப்படங்கள் பின்னர் பரவலாக பல வெளியீடுகளில் பயன்படுத்தப்பட்டன. அவை விகடனின் அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டன. இதற்கு விகடன் எவ்வளவு கட்டணம் வசூலித்தது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் விகடன் வசம் பதிப்புரிமை இருந்ததால்தான் இது சாத்தியமானது. சமீபத்தில் ஹிந்து தன் புகைப்பட தொகுப்பினைப் பயன்படுத்த உதவியாக ஒரு இணையதளம் அமைத்துள்ளது. இங்கும் புகைப்படத்தின்பயன்பாடு குறித்த தகவல்கள் கோரப்படுகின்றன. மேல் நாடுகளில் இது போல் புகைப்படங்களின் மீதான உரிமைகளை நிர்வகிக்கும் அமைப்புகள் உள்ளன. புகைப்படங்களின் மீதான பதிப்புரிமை புகைப்படம் எடுப்பவருக்கு. ஆனால் பல நிறுவனங்களிலும், ஊடக நிறுவனங்களில் புகைப்படமெடுப்பவரின் வேலையின் ஒரு பகுதியாக அது கருதப்படுவதால் பதிப்புரிமை பெரும்பாலும் அந் நிறுவனங்களுக்கே சொந்தம் என்ற வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. பல சமயங்களில் சட்டமும் இத்தகைய கண்ணோட்டத்தினையே முன் வைக்கிறது. இது குறித்த விரிவான விளக்கத்திற்கான இடம் இதுவல்ல என்பதால் இந்த பொதுவான குறிப்புகளை தந்துள்ளேன்.
3
ஆனால் சோசலிச நாடுகளில் படைப்பாளிக்கு இத்தகைய உரிமைகள் கிடையாது. மேலும் பல சோசலிச நாடுகள் முன்பு அறிவுசார் சொத்துரிமைக் குறித்த சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதில்லை. இதனால் அவை இவ்வொப்பந்தங்களின்படி தங்கள் சட்டங்களை மாற்றவேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் 1989ல் சோவியத் ஒன்றியம் சிதைந்த பின், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வேறு பாதையில் சென்ற பின் இந்த நிலை வெகுவாக மாறிவிட்டது.இன்று சில நாடுகளே உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக இல்லை அல்லது அதில் உறுப்பினராக முயற்சி எடுக்கவில்லை. 1990 களிலும், அதன் பின்னரும் அறிவு சார் சொத்துரிமைகளின் முக்கியத்துவம் வணிகரீதியாக அதிகரித்துள்ளது. வணிக தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த ஒப்பந்தம் (Trade Related Intellectual Property Rights - TRIPS) உலகளாவிய அளவில் அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து சில முக்கியமான விதிகளை முன்னிறுத்துகிறது. எனவே பதிப்புரிமையின் முக்கியத்துவம் வணிக ரீதியாகவும், சர்வதேச சட்டரீதியாகவும் அதிகரித்தது.
இந்தப் பிண்ணனியில் அரியானா சுட்டிக்காட்டும் சில தகவல்கள் முக்கியமானவை :1, கோர்டா கடந்த காலத்தில் க்யுப அரசு இப்புகைப்படத்தினை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைஎதிர்க்கவில்லை.உதாரணமாக க்யுப அரசு ஸ்வாட்ச் என்ற கடிகாரத் தயாரிப்பு நிறுவனம் சே கடிகாரம் என்ற பெயரில் கடிகார வகையினை உற்பத்தி செய்து, விற்க அனுமதித்தது.அதாவது சே யின் பெயரும், புகைப்படமும் பயன்படுத்தப்பட அனுமதி கொடுத்தது2,இதற்கு முன்னர் ஒரு பீர் தயாரிப்பு நிறுவனம் சேயின் பெயரை பயன்படுத்தியுள்ளது3,சேயின் புகைப்படம் இதற்கு முன் வணிக ரீதியாக பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்பொழுதெல்லாம் கோர்டாவோ அல்லது க்யுப அரசோ ஆட்சேபிக்கவில்லை.4, இப்படி ஆட்சேபிக்காததால் அப்புகைப்படம் பொதுக்களனில் உள்ளது என்று தாங்கள் அனுமானித்தாக விளம்பர நிறுவனம் கூறியது

இத்தாலிய பதிப்பாளருக்கு தான் இப்புகைப்படத்தினை கொடுத்தாலும் தன் பெயரை அவர் வெளியிடவில்லை என்றும், பல லட்சக்கணக்கான சுவரொட்டிகள் விற்கப்பட்டாலும் தனக்கு அதிலிருந்து வருவாய் ஏதுமில்லை என்றார் கோர்டா. ஆனால் பதிப்பாளரோ தான் இதிலிருந்து பெற்ற லாபத்தினை க்யுப அரசுக்கும்,பிற புரட்சிகர இயக்கங்கள் போன்றவற்றிற்காவும் கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார். கோர்டா ஏன் முன்னர் இது போன்ற வழக்குகளை தொடரவில்லை. ஏனென்றால் 1990 களின் மத்தி வரை க்யுபாவில் படைப்பளிகளால் இது போல் வழக்குகள் தொடர முடியாத நிலை இருந்தது. க்யுப அரசு அவர்களது படைப்புகள் மீதான் அறிவுசார் சொத்துரிமைகளை அங்கீகரிக்கவில்லை. எனவே சர்வதேச அளவில் அவர்களால் அத்தகைய உரிமைகள் குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியவில்லை.ஆனால் 1990களில் க்யுபாவில் ஏற்பட்ட மாற்றங்களினால் அவர் இப்படி வழக்குத் தொடருவதுசாத்தியமானது. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் க்யுப அரசு படைப்பளிகளுக்கு படைப்பு மீது தார்மீக மற்றும் சொத்துரிமை இருப்பதை அங்கீகரித்த பின்னரே அவர்களால் சர்வதேச அளவில் தங்கள் உரிமைகளை குறித்து வழக்குத் தொடர முடிகிறது.இது உழைப்பு, படைப்பு, சொத்துரிமை குறித்து ஒரு மாற்றம் ஏற்பட்டதால்தான் சாத்தியமாயிற்று. 1990 களில் க்யுபா தனது அறிவு சார் சொத்துரிமை குறித்த சட்டங்களை மாற்றியது.இதனால் பதிப்புரிமை அங்கீகரிக்கப்பட்டதோடு, படைப்பளிகள் படைப்புகள் மீது உரிமை கொண்டாவது மட்டுமின்றி, சுதந்திரமான தொழில் முனைவோராக, அதாவது சர்வதேச சந்தைக்கு தங்கள் படைப்புகளை உற்பத்தி செய்வோராக இருக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இது எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், புகைப்படகலைஞர்கள் போன்றோர் தங்கள் திறனையும், படைப்பாற்றலையும் பயன்படுத்தி அன்னிய செலாவணி சம்பாதிக்கவும், சர்வதேச அளவில் தங்கள் படைப்புகளை கொண்டுசெல்லவும் வழிவகுத்தது. ஒரு காலத்தில் இவர்கள் சோசலிச அரசின் ஊழியர்கள் மட்டுமே, சம்பளம்தரும் அரசுக்கே இவர்கள் படைப்புகள் மீதான உரிமை இருந்தது. அந்தப் படைப்பினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதனையும் அரசே தீர்மானித்தது. இதற்கு காரணம் பாரம்பரிய மார்க்சிய கோட்பாட்டின்படி சோசலிச சமூகத்தில் உருவாக்கப்படும் அனைத்தும் பொதுவுடமையாக இருக்குமே, ஒழிய தனி உடமை என்பதற்கு கிட்டதட்ட இடமே கிடையாது. பொதுவுடமை என்பது நடைமுறையில் அரசுடமை, அரசின் கொள்கைகளை தீர்மானிப்பது கட்சியின் கண்ணோட்டமே என்றான போது, கட்சிதான் அனைத்தையும் தீர்மானிப்பது என்றாகிவிட்டது. எனவே சோவியத் ஒன்றியம் உட்பட பல சோசலிச நாடுகளில் படைப்பாளி என்பவன் ஒரு தொழிலாளி, கட்சிக்கும் அரசுக்கும் அவற்றின் தேவைக்கேற்ப படைப்புகளை உற்பத்தி செய்பவன். எப்படி ஒரு தொழிலாளிக்கு தான் உருவாக்கும் பொருள் மீது உரிமை இல்லையோ அது போல்தான் படைப்பாளிக்கும். சோசலிச அரசுகள் படைப்பாளிகளை விருதுகள், சான்றிதழ்கள், கெளரவங்கள் மூலம் ஊக்குவித்தன.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்தில் பொருளுற்பத்தியும், அது குறித்த உற்பத்தி உறவுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டது. அன்று விவசாயமும், தொழிற்துறையுமே பொருளாதார ரீதியாக மிக முக்கியமானவையாக இருந்தன. ஊடகங்கள் பெரு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. எனவே படைப்பு, அறிவுசார் சொத்துரிமைகள் குறித்து மார்க்ஸ¤ம், ஏங்கெல்ஸ¤ம் அதிகம் கவனம்செலுத்தவில்லை. இருப்பினும் மார்க்ஸ் மூலதனத்தின் முதலாம் பாகத்தில் கலைஞன் அல்லது கலைஞி கூலித் தொழிலாளியாகவோ அல்லது தன் உழைப்பின் வெளிப்பாட்டினை பொருளாக மாற்றக்கூடிய ஒரு வியாபாரியாகவோ இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளதை அரியானா சுட்டிகாட்டுகிறார்.
மார்க்சிய சிந்தனையில் அந்நியமாதல் ஒரு முக்கியமான கருத்தாக்கம். இதனடிப்படையில் அறிவு சார் சொத்துரிமைகளை புரிந்து கொள்ள முடியும். எப்படி உற்பத்தியான பொருள் மீதான உரிமையினை, கட்டுப்பாட்டினை ஒரு தொழிலாளி இழந்துவிடுகிறானோ, அது போல் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் ஒரு படைப்பாளி தன் உரிமைகளை பிறருக்கு கொடுப்பதன் மூலம் தன் உரிமைகளை இழந்துவிடுகிறான். மார்க்சிய சிந்தனையில் அறிவு சார் சொத்துரிமை குறித்த விவாதம், விமர்சனம் குறைவாகவே உள்ளது, குறிப்பாக பண்டமயமாக்கல், உற்பத்தி உறவுகள் போன்றவை குறித்த விமர்சனங்கள், விவாதங்களுடன் ஒப்பிடுகையில். அறிவு சார் சொத்துரிமைகளை குறித்த த்ததுவார்த்த ரீதியான விவாதங்களில் லாக்கியின் கருத்துக்கள், ஹெகலின் கருத்துக்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அறிவுசார் சொத்துரிமை என்பது மன உழைப்பினால் உருவாவது, எனவே அதை உருவாக்கியவருக்கு உள்ள உரிமையே அறிவுசார் சொத்து ரிமை என்று இது நியாயப்படுத்தப்படுகிறது.
புதியனவற்றை சமூகத்திற்கு அளிப்பதற்கான ஒரு ஊக்குவிப்பாகவும், அதனால் சமூகம் பயன் பெறுவதால் அப்பங்களிப்பிற்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தரப்படும் உரிமை என்றும் அறிவுசார் சொத்துரிமையினை கருதுவதும் உண்டு. பாரம்பரிய மார்க்சிய சிந்தனையோ இதை இன்னொரு சொத்துரிமை என்ற ரீதியில் மட்டும் காண்பதால் சொத்துரிமையே இல்லாத சோசலிச சமூகத்தில் இதற்கோ, இதை நியாயப்படுத்தும் கண்ணோட்டங்களுக்கோ எப்படி இடமிருக்க முடியும். அறிவுசார் சொத்துரிமை குறித்த தத்துவம் குறித்து எழுதியுள்ள பீட்டர் டிரோகோஸ் தன் நூலில் மார்க்சிய கண்ணோட்டம் குறித்தும், அதன் பலங்கள், பலவீனங்கள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். (2)

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு