புதிய ஆண்டு 2005

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2005ன் துவக்கம், அதாவது இன்று அதிகக் குளிரில்லை, பகலில் நல்ல சூரிய வெளிச்சம் என்று நன்றாக உள்ளது. அதை அனுபவித்தபடி இதை எழுதுகிறேன்.

2004 லின் இறுதியில் ஏற்பட்ட துயரமான இயற்கைச் சீற்றம் நம்மை உலுக்கி இருக்கிறது. இதிலிருந்து மீள்வது எளிதல்ல. இயற்கை உற்பாதங்களை எதிர்கொள்வதில் உள்ள நம் குறைகள் இதன் மூலம் தெளிவாகத் தெரிந்துவிட்டன. எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர் ஏற்படாதென்று நம்புவோமாக. ஆனால் தட்பவெப்ப நிலையில் பல மாற்றங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளதால் புயல்கள், வெள்ளம், வறட்சி போன்றவற்றை முன்பை விட அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது நம் முன் உள்ள ஒரு சவால். இதை சந்திக்க நாம் அனைத்து விதத்திலும் தயாராக இருக்க வேண்டும்.
சுனாமி சுற்றுச்சூழல் குறித்த ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் என்று நம்புகிறேன். கடலுக்கு வெகு அருகில் கட்டிடங்கள் கட்டுவது குறையக் கூடும். 2005ல் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போமாக. அதே சமயம் இயற்கை மீதான மனித செயல்பாடுகளின் தாக்கங்கள் குறித்து நாம் போதுமான அக்கறைக் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது.உலகளாவிய சுற்றுச்சூழல் நிலை இன்னும் மோசமாகிக்கொண்டே போனால் வளர்ச்சியுறும் நாடுகளும், கடல் அருகே உள்ள பகுதிகளும், சிறு தீவு நாடுகளும் அதிகமாக பாதிக்கப்படுவதை தவிர்க்க இயலாது. சில தீவு நாடுகள் கடல் மட்டம் உயர்வதனால் பாதிக்கப்பட்டு, கிட்டதட்ட காணாமலே போகக் கூடும்.
சுனாமி பற்றி நாமெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்திய உரிமச் சட்டதிருத்த அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது இந்தியாவில் பல துறைகளில் குறிப்பாக மருந்து உற்பத்தித் துறையில்முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும். பாரளுமன்றத்தில் இச்சட்டத் திருத்தம் இதே வடிவில் நிறைவேற்றப்படுமா இல்லை மாறுதல்கள் இருக்குமா என்று தெரியவில்லை.இதுவும் நமது தொடர்ந்தகவனத்தை பெற வேண்டிய ஒரு விஷயம்.
இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் தமிழில் ஒரு கட்டுரை(யாவது) எழுதத் திட்டமிட்டுள்ளேன். இவை மூலம் தமிழில் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். டிசம்பர் மாத உயிர்மையில் வெளியான கட்டுரையை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். வேறு சில யோசனைகளும் உள்ளன. அவை செயல்படிவம் பெறுமா என்று உறுதி கூற இயலாது. யாருக்காவது மொழிபெயர்ப்பதில் ஆர்வமும் இருந்து,செய்ய நேரமும், வசதியும்படுமெனில் தொடர்பு கொள்ளுங்கள். சில கட்டுரைகளை பரிந்துரைக்கிறேன்.இவற்றை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் சாரத்தினை மட்டும் தமிழில் விரிவான குறிப்புகளுடன் தந்தால் கூடப் போதும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு