கட்டுரைகள் குறித்த எதிர்பார்ப்புகளும், யதார்த்தமும்

P.K.சிவகுமார் தன் வலைப்பதிவில் சில கருத்துக்களை முன் வைத்திருந்தார்.அவருக்கு என் நன்றிகள்.அவர் கூறியுள்ள சில ஆலோசனைகளை கருத்தில் கொள்கிறேன்.அவர் குறிப்பிட்டுள்ளது போல் குறிப்புகள் தரலாம்.இனி எழுதும் கட்டுரைகளில் தர முயல்கிறேன். தமிழில் எழுதும் போது கட்டுரையைப் படிக்கும் வாசகர் குறித்து யூகிப்பது கடினம். ஏனெனில் பல ஆண்டுகள் சிறு பத்திரிகைகள் படிப்பவர்கள், அவற்றில் எழுதுபவர்கள் முதல் சமீப காலமாகத்தான் இது போன்ற கட்டுரைகளை படிக்கத் துவங்கியிருப்பவர்கள் என்று பலதரப்பட்ட வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டு கட்டுரை எழுத வேண்டியுள்ளது. எனவே கட்டுரையின் சில பகுதிகளை ஆரம்ப நிலை வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதினாலும் முழுக்கட்டுரையும் அவ்வாறு இருக்கத் தேவையில்லை. மேலும் கட்டுரை எழுதும் போது அது மிகவும் நீண்டு விடாமலும் அதே சமயம் நாம் சொல்ல நினைத்தவற்றை முடிந்த அளவு சொல்லிவிட வேண்டிய தேவையுமிருக்கிறது. ஏனெனில் அதே பொருளில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகும் என்று கூற முடியாத சூழல்தான் இங்குள்ளது.
எனவே தேவையான அளவு சான்றுகளையும், மேலும் அறிந்து கொள்ள நூல் பட்டியல், இணைய முகவரிகள்போன்றவற்றை தர வேண்டியுள்ளது. படிப்பவர்களில் 2 அல்லது 3 சதவீதத்தினர் இவற்றால் பயன் பெற்றால் கூட அது அவர்களுக்கு மேலும் அறிய உதவும் என்பதால் அவ்வாறு தர வேண்டியுள்ளது. இது தவிரஒரு கட்டுரையில் தகவல்கள், கருத்துகள், விவாதங்கள் என பலவற்றை குறிப்பிட வேண்டியுள்ள நிலையில்கட்டுரையாளர் எல்லாவற்றையும் குறிப்புகள் கொடுத்து விளக்குவது கடினம். அதிக பட்சம் ஒரு கட்டுரை 10 முதல் 12 பக்கங்கள் வரை இருக்கலாம் என்ற நிலையில் கட்டுரையாளர் , இதழாசிரியர் ஒரு கட்டுரைக்கு அதிகபட்சம் எவ்வளவு பக்கம் ஒதுக்குவார் என்பதனையும் கருத்தில் கொண்டே எழுத வேண்டியுள்ளது.
தமிழ் சிறுபத்திரிகை சூழலில் பூக்கோ என்ற பெயரும், பான் ஆப்டிகன் என்ற கருத்தும் பேசப்பட்டுள்ளது.எனவே அது குறித்து ஒரு விளக்கத்தினை தரவில்லை. ஆனால் ஆர்வெல், அவர் எழுதிய 1984 என்ற நாவலும் மிகப் பிரபலமானவை. இதற்கும் குறிப்பு தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை. கட்டுரையில்குறிப்பிடப்படும் ஒவ்வொரு சிந்தனையாளர், ஆசிரியர் குறித்து குறிப்புகள் தரலாம். அதே சமயம் கட்டுரையின் நீளத்தினையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும். பத்து சிந்தனையாளர்கள், பத்து கருத்துகள் குறித்துகுறிப்புகள் தர வேண்டுமெனில் சுமார் 200 வாக்கியங்கள் எழுத வேண்டும். இது செறிவுள்ளதாகவும் இருக்க வேண்டும். இவை கட்டுரையின் நீளத்தினை இன்னும் அதிகமாக்கும்.
ஆங்கிலத்தில் இத்தகைய கேள்விகள், பிரச்சினைகள் இல்லை. எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியின்சராசரி வாசகர், தமிழ் சிறுபத்திரிகைகளின் சராசரி வாசகரிலிருந்து பல விதங்களில் வேறுபட்டவர். அங்குஎழுதும் போது 2000 வார்த்தைகளில் செறிவுள்ள கட்டுரையினை எழுதிவிட முடியும். (கலைக்களஞ்சியங்களுக்கு எழுதும் போது 7000 அல்லது 8000 வார்த்தைகளில் மிகச் செறிவுள்ள ஒரு கட்டுரையினைஎழுத முடியும்) அதனையே, 2000 வார்த்தைக் கட்டுரையினை தமிழில் எழுதுவதென்றால் 10,000 வார்த்தைகளில் விரிவாக, தேவையான அறிமுகங்கள் கொடுத்து எழுதினால்தான் ஒரளவேனும் அது வாசகர்களை எட்டும். மேலும் ஆங்கிலத்தில் அடிக்குறிப்புகள், மேற்கொள் காட்டப்படும் சான்றுகள் மூலம் பலவற்றை விவரிக்காமல் சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் பான் ஆப்டிக்கன் என்று எழுதினால் அது குறித்து ஒரு நீண்ட விளக்கம் தேவையில்லை. தமிழில் அது தேவையாகிறது. இது தவிர ஆங்கிலத்தில் எழுதும் போது கலைச்சொற்கள் ஒரு பிரச்சினையேயில்லை. தமிழில் அது ஒரு முக்கியமான பிரச்சினை. சமயங்களில் கட்டுரையாளர் புதிய கலைச்சொல்லை உருவாக்கி அதை அறிமுகம் செய்து விளக்க வேறு செய்ய வேண்டும் என்ற நிலைதான் இங்கு உள்ளது. இது போன்ற பல காரணங்களால் ஆங்கிலத்தில் எழுதுவது எளிதாக உள்ளது, நேர ரீதியாகவும் வசதியாக உள்ளது. தமிழில் ஒரு கட்டுரை, உதாரணமாக கண்காணிப்பு சமூகம், எழுதி அதை மீண்டும் ஒரிரு முறை படித்து, குறிப்புகள் சேர்த்து, முழுமை பெறச் செய்ய 4 அல்லது 5 மணி நேரம் ஆகிறது. இது தவிர முன் உழைப்பாக படிக்க வேண்டிய நேரம் வேறு. ஆங்கிலத்திலிருந்து ஒரு கட்டுரையினை மொழிபெயர்த்துத் தரலாம் என்றாலும் கூட, மொழிபெயர்ப்பாளர் பொருத்தமான கலைச்சொற்கள், குறிப்புகள் போன்றவற்றிற்கு கணிசமான அளவில் நேரம் செலவழித்தால்தான் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு வசதியாக இருக்கும். அவ்வாறின்றி வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பினைக் கொடுத்தால் அது நோக்கத்தினை பூர்த்தி செய்யாது.
நான் தமிழில் எழுதும் போது எவ்வளவு எளிய தமிழில் எழுத முடியுமோ அவ்வளவு எளிய தமிழில் எழுதுகிறேன். நடையினை விட கூறும் பொருளில் அதிக கவனம் செலுத்துகிறேன். பல காரணங்களால் தமிழில்மிகக் குறைவாகவே எழுதுகிறேன். இன்னும் சொல்லப் போனால் தமிழில் எழுதுவது, படிப்பதை விடஆங்கிலத்தில் எழுதுவதிலும், படிப்பதிலும் நான் கவனம் செலுத்தினால் தொழில் ரீதியாகவும், வேறு வகைகளில் எனக்கு அது மிக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் என் தாய் மொழியில் சில புதியவிஷயங்களை சொல்ல வேண்டும், இயன்ற அளவு அதை வளப்படுத்த உதவ வேண்டும் போன்ற காரணங்களுக்காக தமிழில் எழுதுகிறேன். இதை இன்னும் சிறப்பாக செய்ய உதவிடும் வகையில் உங்கள்கருத்துக்களை தந்து உதவலாம்.

2 மறுமொழிகள்:

Blogger PKS மொழிந்தது...

Hi Ravi, Thanks for this reply. I agree that many times the author has to write to the page limits set by magazine editors. Thanks for considering my views and replying. Regards, PK Sivakumar

2:38 PM  
Blogger நற்கீரன் மொழிந்தது...

Hell Ravi:

I share similar view points as you concerning Tamil technical writing. For a person who received his/her training in English, articulating technical concepts in Tamil requires a great effort. First one has to assemble Tamil technical words. Then, the concepts has to be related and explained in a unique context. The classic examples can not assumed to be common knowledge. I find this very difficult. Of course, being a student of Tamil and English at the same time does not help either. Moreover, typing in Tamil takes 10 times as much time.

I went to the Tamil Library in Toronto once, and they do have few highly technical books in Tamil in the subjects such as biology, architecture or civil engineering and some other areas. But they are very difficult to comprehend, and their contexts are totally unfamiliar. I would like to have some sample Tamil technical articles. Your essays are good. Are there other on the net.

Also, other than the wonderful http://www.tcwords.com/, is there any other accessible Tamil technical world collection available on the net, particularly for the fields of mathematics, physics, and signal processing. Please let me know at natkeeran@gmail.com.

3:34 PM  

Post a Comment

<< முகப்பு