இயற்கை உற்பாதங்களும், அவற்றை எதிர்கொள்வதும்

இன்று காலை எழுந்தவுடன் இணையத்தில் நில நடுக்கம், கடலோர பகுதிகளில் பாதிப்பு குறித்த செய்திகளை படிக்கும் போது மனதில் இனம் புரியா உணர்வுகள்.தொலைக்காட்சியில் வரிசையாக வரிசையாக உறங்குவது போல் குழந்தைகள், முதியவர்கள் அருகில் சோகமே உருவாக உறவினர் என்று பரிதாபக் காட்சிகள். இந்த நிலநடுக்கம் எதிர்பாராதுதான். ஆனால் மீட்பு மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டாலும் இது போன்ற இயற்கை உற்பாதங்களை எதிர் கொள்ள தயார் நிலையில் சமூகம் இல்லை என்பதுதான் உண்மை. இது போன்றவை நிகழ்ந்தவுடன் என்ன செய்ய வேண்டும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறவும், பீதியினை தணிக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதை உடனே எதிர்கொள்ளும் நிலையில் அரசு இயந்திரம் இல்லை. அவசரகால நிலைகளை திறம்பட சமாளிப்பு என்பதில் பயிற்சி தரப்பட வேண்டும்.மாநிலத்தின் எப்பகுதியில் இது போன்ற உற்பாதங்கள் நிகழ்ந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று உடனே முடிவு செய்ய ஒரு குழு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள நண்பர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. மதுரையிலிருந்தே சென்னைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அறிந்தேன்.
அமெரிக்காவில் பல மாநிலங்களில் இது போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு அதிகம்.இருப்பினும் அதிக அளவு உயிர்ச் சேதம் ஏற்படாமல் அதை சமாளிக்கின்றனர். ஒரு சிறு புயல் ஏற்பட்டால் கூட அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகிறார்கள். கட்டிடங்களில் அபாய எச்சரிக்கை மணிகள், தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்புகள் என்று அப்புயல் அப்பகுதியைக் கடக்கும் வரை தொடர்ந்து எச்சரிக்கைகளும், அறிவுரைகளும் தரப்படுகின்றன. காரோட்டிகளும், பிற பயணிகளுக்கும் தகவல்கள் தரப்படுகின்றன.
இந் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் தொலைக்காட்சி, வானொலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கையும், பீதியைக் குறைக்கும் வகையில் செய்திகளும் தரப்பட்டிருக்க வேண்டும். மேலும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் பிரத்தியேக கவனத்திற்காக அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகளும் தரப்பட்டிருக்க வேண்டும். இவை செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இனி வரும ஆண்டுகளில் தட்பவெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கப்படுவதால் வெள்ளம், வறட்சி போன்றவை முன்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு