கட்டுரைகள், புத்தகங்கள் .....

ஆண்டு முடிவுக்கு வருகிறது.இன்னும் பத்து நாட்களுக்குள் செய்ய வேண்டியவை பல.ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக படிக்க ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.அல்லது முக்கியமான கட்டுரைகள், தகவல்கள் கிடைக்கின்றன.கைக்கு கிடைத்த உடன் அச்சிட்டு பின்னர் படிப்பதற்காக வைத்திருப்பவை,பாதி படித்திருக்கும் புத்தகங்கள், படித்து விட்டு கருத்து சொல்கிறேன் என்று கூறி விட்டு இன்னும் படிக்காதிருக்கும் கட்டுரைகள்,மதிப்புரைக்கான புத்தகங்கள் என்று ஒரு குவியலே இருக்கிறது.இந்தப் பத்து நாட்களுக்குள் இக்குவியலின் அளவை கொஞ்சமாவது குறைக்க வேண்டும்.
அண்மையில் Hacking Cyberspace என்ற நூலிற்கு மதிப்புரை எழுதினேன். ஒரு சுவாரசியமான நூல், ஆனால் சாதாரண வாசகர்கள் படிப்பதற்கு எளிய நூல் அல்ல. அதில் உள்ள கட்டுரைகள் சிலவற்றை முன்பே படித்திருந்தேன்.2005ல் இம்மதிப்புரை வெளியாகும். தமிழில் இந் நூல் பற்றி பின்னர் எழுதக்கூடும்.
ஆண்டு முடியும் முன் இரண்டு புத்தகங்களையாவது படித்து விடலாமென்றிருக்கிறேன். இன்று மாலைஎதையோ தேடியதில் ஒரு கட்டுரை கிடைத்தது. கிடைத்த சூட்டில் அதைப் படித்து ஒரு பேராசிரியருக்கு அதை குறிப்பிட்டு எழுதி படித்த சூட்டில் சுருக்கமாக என் கருத்துக்களை கட்டுரையாசிரியருக்கும் எழுதி விட்டேன். பல சமயங்களில் படித்துக்கொண்டிருக்கும் கட்டுரையில் சான்று காட்டப்படும் கட்டுரைகளை உடனே தேடி அதையும் அச்சிடுவதுண்டு.அப்படி இப்படியென்று கட்டுரைகள் குவிந்து விடுகின்றன. அலுவலகத்தில் மின்னஞ்சல் மூலம் கட்டுரைகள் குறித்து என் கருத்துக்களை குறிப்பிடுவதுண்டு, பல கட்டுரைகளை பிறர் கவனத்திற்குக் கொண்டு வருவதுண்டு.யாராவது ஒரு கட்டுரையைப் பற்றி கருத்துச் சொல்லியிருந்தால் அதையும், கட்டுரையையும் படித்து விட்டு மின்னஞ்சலில் கருத்து கூறுவதுமுண்டு வரும் ஆண்டில் இதைக் கொஞ்சம் முறையாகக் செய்யவிருக்கிறேன். வாரம் ஒரு கட்டுரை அல்லது நூல் குறித்து என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியுள்ளேன்.
அண்மையில் தமிழில் படித்த பல கட்டுரைகள் ஏமாற்றத்தையே தருகின்றன. ராஜ் டி.வி, எம்.எஸ். சுப்புலஷ்மி குறித்து ஞாநி எழுதியவை, தீராநதியில் சுந்தர ராமசாமியின் கட்டுரை இவை சலுப்பூட்டின. இவற்றிற்கு எதிர்வினை கூறுவதும் வீண் என்ற தரத்தில் இருக்கின்றன. தமிழ் வார ஏடுகளில் வரும் கட்டுரைகள் குறித்து கேட்கவே வேண்டாம்.தினமணியில் வெளியாகும் கட்டுரைகளை நான் தினசரி படிப்பதில்லை, எனினும் பல சமயங்களில் மிகவும் சாதாரணமான கட்டுரைகளே தினமணியில் வெளியாகின்றன. இவற்றுடன் ஒப்பிடுகையில் வலைப்பதிவுகள் பரவாயில்லை. கலைச்சொற்கள் குறித்த வலைப்பதிவு முக்கியமான கேள்விகளைஎழுப்புகிறது. பின்னர் விரிவாக இது குறித்து எழுதுகிறேன்.
முன்பெல்லாம் எக்னாமிக் அண்ட பொலிடிகல் வீக்லியை அச்சில் படித்துக் கொண்டிருந்தேன்.எனவேஒரு இதழில் வெளியாகும் எல்லாக் கட்டுரைகளையும் முடிந்த அளவு படித்துவிடுவேன்.இப்போது இணையத்தில் படிக்கும் போது அவ்வாறு செய்ய முடிவதில்லை. ஆனால் என்ன வெளியாகிறதுஎன்பதை கவனித்துக் கொண்டிருப்பேன்.மேலும் தேர்ந்தெடுத்து படிப்பதால் தேர்ந்தெடுப்பதில் நேரம்செலவாகிறது. நான் வழக்கமாக செல்லும் இணையதளங்கள், தினசரி படிப்பவை அல்லதுமேலோட்டமாகப் பார்க்கும் தினசரிகள் என்று ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். இது தவிரமின்னஞ்சல் மூலம் வரும் தகவல்களின் அடிப்படையில் படிக்க வேண்டியதை தேர்வு செய்கிறேன்.புத்தக மதிப்புரைகள், பிறர் தரும் பரிந்துரைகள் என்று பல வழிகளில் கிடைக்கும் தகவல்கள்,கருத்துக்களின் அடிப்படையில் புத்தகங்கள் குறித்து அறிய முயல்கிறேன். இப்படியெல்லாம்செய்தாலும் சமயங்களில் மிக முக்கியமான புத்தகங்கள் என் கவனத்திற்கு வராமல் போவதுண்டு.அதே சமயம் நான் விரும்பும் புத்தகங்கள் எதிர்பாராதவிதமாக கிடைத்துவிடுவதுமுண்டு.
இப்போது படிப்பவற்றில் பெரும்பான்மையானவை செய்யும் ஆய்வுகளுடன் தொடர்புடையவாகஇருப்பதால் வேறு சில துறைகளில் முன்பு போல் படிக்க முடிவதில்லை. இது தவிர்க்க முடியாதது.ஆனால் தொடர்புகள், ஆர்வம் காரணமாக அத்துறைகளிலுள்ள புத்தகங்கள், கட்டுரைகள் கிடைக்கும் அல்லது கவனத்திற்கு வரும். அவையும் குவிய ஆரம்பித்துவிடும்.இது தவிர தமிழில் எழுத உதவும் என்று சேர்க்கும் கட்டுரைகள், நூல்கள் சேர்ந்துவிடும், தமிழ்க் கட்டுரைதான் ஒத்திவைக்கப்பட்டு, பின் கைவிடப்படும்.நல்லவேளையாக இப்படி திரட்டுவதையெல்லாம் அச்சிடுவதில்லை. அவை கணினியில் கண்ணுறங்கிக் கொண்டிருக்கும்.
இப்படியாக இருக்கிறது புத்தகங்கள், கட்டுரைகளுடான என் வாழ்வு.

3 மறுமொழிகள்:

Blogger டிசே தமிழன் மொழிந்தது...

ரவி, அடுத்தாண்டில் நீங்கள் இன்னும் நிறைய வாசித்து தமிழிலும் அதிகம் எழுதவேண்டும் என்பது என் விருப்பம். இப்போதே என் முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!!

9:38 PM  
Blogger ROSAVASANTH மொழிந்தது...

அன்புள்ள ரவி, நீங்கள் பரிந்துரைக்கும் சுட்டிகள் பல பயனுள்ளவையாக இருந்திருக்கின்றன. நீங்கள் படிப்பதை குறைந்தபட்சம் இங்கே பதிவாவது செய்யும்படி கேட்டுகொள்கிறேன். அன்புடன்..

10:18 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

அன்பின் ரவி உங்கள் பரிந்துரைகள் எனக்கும் உதவியாக இருந்திருக்கின்றன.அன்மையில் கூட கண்காணிப்புச் சமுதாயம் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்த ஆதாரங்கள் சிலவற்றைத் தேடிப் படித்தேன்.இவ்வாறான தகவல்களை அடிக்கடி வலையில் தந்தால் நாங்கள் தேடிப் படிப்பது இலகுவாகும் கண்டதையும் கற்கப் பண்டிதனாகலாம்தான் அதற்குள் கிழவனாகிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

12:00 AM  

Post a Comment

<< முகப்பு