கண்காணிப்பு சமுதாயம் - 1


(உயிர்மை டிசம்பர் இதழில் வெளியான கட்டுரை, வலைப்பதிவில் இரண்டு பகுதிகளாக தரப்படுகிறது.இதனை வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு என் நன்றிகள்)
1
இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும்காலகட்டமாகவும் இருக்கிறது. கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984,மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம். ஆனால் இன்று கண்காணிப்பு என்பது தொழில் நுட்பத்தால் முன்னெப்போதயும் விட பரவலாகவும்,எளிதாக மேற்கொள்ளப்படுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதை அதிகம் பொருட்படுத்துவதில்லை அல்லது அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக இன்று பெரிய அங்காடிகளில், விமான நிலையங்களில், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பரபரப்பான சாலைகளில் Closed Circuit Television மூலம் தொடர்ந்து கண்காணிப்பது பரவலாக உள்ளது. இது அதிகரித்தும் வருகிறது. ஐரோப்பாவில் சில நாடுகளில் கண்ணுக்குத் தெரியாத விடியோ காமிரா மூலம் சில சாலைகளில் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பது நடைமுறையில் இருக்கிறது. இந்த இடத்தில் இந்த நேரத்தில் இந்தத் தேதியில் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறினீர்கள், அதற்கான அபராதம் இவ்வளவு என்று ஒரு அறிவிப்பு தபாலில் வரும் போதுதான் அங்கு வீடியோ காமிரா இருந்தது என்பதே தெரியவரும்.
இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் பெரும் வணிக நிறுவனங்கள் அக்கறைக் காட்டும் ஒரு தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசை அடையாளம் காட்டும் தொழில் நுட்பம் , RFID, Radio Frequency Identification Devices. இதன் மூலம் ஒரு சிறிய சில்லை ஒரு பொருளில் வைத்துவிட்டால் அந்த சில்லிருந்து வெளிப்படும் அலைவரிசை மூலம் அது எங்கு உள்ளது என்பதை கண்காணிக்க முடியும். இது பொருட்களின் நடமாட்டத்தினை, அவை உற்பத்தியாகும் இடத்திலிருந்து நுகர்வோரைச் சென்றடையும் வரைஎங்கெங்கு கையாளப்படுகின்றன என்பதை, அதற்கான காலத்தினையும் அறிய முடியும். இந்த ரேடியோ அலைவரிசையை உணரக்கூடிய அல்லது பதிவு செய்யக்கூடிய சிறு கருவிகள் மூலம் ஒரு பொருள் எங்கிருக்கிறது என்பதை அறிய முடியும். அடிப்படையில் இது பொருட்களுக்கென்றாலும், இதன் மூலம் மனிதர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். இந்த சில்லுகள் மிகச்சிறிய அளவில் இருப்பதால் அவற்¨றை சட்டை, கைப்பை, ஏன் பாட்ஜ்களில் கூட சந்தேகம் எழா வண்ணம் பொதிக்க முடியும். ஒவ்வொரு பொருளின் மீது பதிக்கப்பட்டுள்ள எண்ணை எப்படி கடைகளில் உள்ள ஸ்கானர்கள் கண்டறிகின்றனவோ அது போல் இந்த சில்லுகளிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசைகளை அறியும் கருவிகளை பல இடங்களில் வைத்தால் அதன் மூலம் அந்த சில்லு எங்கிருக்கிறது என்பதை அறியமுடியும்.
உதாரணமாக ஒருவரின் பாட்ஜில் பொதிக்கப்பட்டுள்ள சில்லிருந்து வெளிப்படும் ரேடியோ அலை, அந்த சில்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரத்தியேக எண் இவற்றை கண்டறியும் கருவிகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கிருந்து அவை தரும் தகவல்களிலிருந்து இந்த எண் தரப்பட்டுள்ள சில் பதிக்கப்பட்டுள்ளபாட்ஜ் அணிந்திருப்பவர் எங்கிருக்கிறார் என்பதை அறிய கண்டறியும் கருவிகளை நிறுவினால் போதும்.பின் தொடர ஒரு ஒற்றர் தேவையில்லை. இது போன்ற தொழில் நுட்பங்கள் கண்காணிப்பினை பரவலாக்குவதுடன், கண்காணிக்கப்படுகிறோம் என்ற உண்ர்வினையும் எழுப்புவதில்லை. இது இன்னும் மிகப்பரவலாக ஆகவில்லை, காரணம் ஒரு சில்லினைத் தயாரிக்க ஆகும் செலவுதான். இது குறையக் கூடும் என்பதால்நிறுவனங்கள் இதில் இப்போது ஆர்வம் காட்டினாலும், மிகக் குறைந்த அளவிலேயே இதைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக ஒரு பொருளைக் கண்காணிக்க ஆகும் செலவு 25 ரூபாய் என்றால் அதைச் செலவுசெய்யுமளவிற்கு அது விலை உயர்ந்ததா, முக்கியமானாதா என்று யோசிக்கிறார்கள்.
2
ஒற்றர்கள், உளவு பார்த்தல் போன்றவை மிகப் பழையவை. ஆனால் கண்காணிப்பு என்பதை நாம் இங்கு ஒரு பரந்த பொருளில் குறிப்பிடுகிறோம். கண்காணிப்பு சமுதாயத்தில் கண்காணிப்பு என்பது அரசு மட்டுமே செய்கிற ஒன்றல்ல. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கண்காணிப்பது, சக போட்டி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது என்பதையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறோம். உதாரணமாக பல நிறுவனங்களில் ஊழியர்கள் கணிணிகளைப் பயன்படுத்துவது, மின்ஞ்சலைப் பயன்படுத்துவது, இணையத்தில் பார்க்கும் தளங்கள் உட்பட பல கண்காணிக்கப்படுகின்றன. இது தவிர கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் பரவலாக உள்ள ஒரு காலகட்டம் இது. எனவே கண்காணிப்பு என்பது புதிதல்ல என்றாலும் கண்காணிக்கும் முறைகள், அதன் பின்னுள்ள தத்துவம், அரசியல் இவை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும்உலகமயமாதலின் ஒரு விளைவு கண்காணிப்பு என்பது இன்று உலகளாவிய அளவில் சாத்தியமாகியுள்ளது.தகவல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நாம் மேற்கொள்ளும் செயல்கள் குறித்த தகவல்கள், ஒருவரின் உடல் நலம், மருந்துகள் குறித்த தகவல்கள்,வேறு பல முக்கிய தகவல்கள், உதாரணமாக பாஸ்போர்ட் குறித்த தகவல்கள், தகவல்தொகுப்புகளில் தொடர்ந்து பதிவாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றை வைத்து ஒருவரை பின் தொடராமலே, நேரில் சந்திக்காமலே அவர் குறித்த மிக முக்கியமான தகவல்களை அறிய முடியும். இவற்றிலிருந்து அவரது ஆளுமை, தெரிவுகள் குறித்து யூகிக்க முடியும். நூலகங்களில் யார் யார் என்னென்ன நூல்கள், பத்திரிகைகளை இரவல் பெறுகிறார்கள் என்பதைக் கொண்டு சிலவற்றை யூகிக்க முடியும். இப்படி பல்வேறு தகவல் தொகுப்புகளிலிருந்து ஒருவரைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பெறுவதுடன் அதன் அடிப்படையில் அவரை வகைப்படுத்த முடியும்.
கண்காணிப்பின் ஒரு முக்கிய நோக்கம் இப்படி வகைப்படுத்த உதவுவதே. இதனடிப்படையில் ஒருவரை ஆபத்தானவர்,ஆபத்தற்றவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர், இவரது சில நடத்தைகள்,செயல்பாடுகள் குறிப்பாக கண்காணிக்கப்பட வேண்டியவை என்ற வகைப்பாடுகளில் எதில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவெடுக்க கண்காணிப்பு உதவுகிறது. எனவே கண்காணிப்பு என்பது ஒருவரது நடமாட்டத்தைம் மட்டும் அறிவதல்ல. மாறாக அவரது நடமாட்டம், செய்கைகள் இவற்றுடன் வேறு பலவற்றையும் தொடர்புபடுத்தி அலசி ஆராய்வதுமாகும்.
செப்டம்பர் 11,2001க் குப்பின் அமெரிக்க அரசு பயங்கரவாதத்தினை ஒழிப்பது என்ற பெயரில் நிறைவேற்றிய Patriot சட்டம் முன்னெப்போதும் இருந்திராத வகையில் தனிப்பட்ட நபர்களை, அமைப்புகளை அரசும்,அரசின் அமைப்புகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்காணிக்க வழி செய்தது. இதன் பின் இன்னும் அதிக அதிகாரங்களையும், மேலும் பரவலான,விரிவான கண்காணிப்பு வகை செய்யும் திட்டம் ஒன்று எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. அதே சமயம் சில உரிமைகளை விட்டுக்கொடுப்பது நம் பாதுகாப்பிற்காக, நாட்டுப்பாதுகாப்பிற்காக, எனவே அரசை சந்தேகிக்க வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு பயங்கரவாதம் ஒரு பெரும் ஆபத்தாக சித்தரிக்கப்பட்டது. மக்களிடையே நிலவிய அச்சமும், ஆபத்து குறித்த பயயுணர்வும் இப்படி கண்காணிப்பினை அதிகரிக்க உதவின. இப்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கண்காணிப்பும், சிவில் உரிமைகளை பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதும் அரசுகளுக்குஎளிதாகிவிட்டது. இவ்வளவிற்கும் அரசுகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டே வந்துள்ளன. அமெரிக்காவில் FBI தொடர்ந்து தனி நபர்களையும், அமைப்புகளையும் கண்காணித்தே வந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், பனிப் போர் நிலவிய போது பெரிய அளவிலான கண்காணிப்பு அமைப்புகள்செயல்பட்டே வந்துள்ளன. இவை தொலைபேசி உரையாடல்கள், தந்திகள் உட்பட பலவற்றை தொடர்ந்து பதிவு செய்தோ அல்லது வேறு விதமாகவோ கண்காணித்து வந்துள்ளன. நாடுகள் கண்காணிப்பின் அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதும் பெரிய அளவில் நடந்துள்ளது. இவற்றின் பரிணாம வளர்ச்சியாகவே இப்போதுள்ள கண்காணிப்பு அமைப்புகளையும், முறைகளையும் காண முடியும். மேலும்கண்காணிக்கப்படுவோர் என்பது முன்பு சிலர் என்பதலிருந்து இப்போது கிட்டதட்ட அனைவருமே என்றநிலை உண்டாகியுள்ளது. முன்பு அரசுகள் தங்களுக்கு எதிரானவர்கள், கலகக்காரர்கள் போன்றவர்களைகண்காணித்தன, அமைப்புகளும், நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை கண்காணித்தன. இன்று நுகர்வோர்,பயணிகள் உட்பட பல்வேறு பிரிவினரும் கண்காணிக்கப்படுகின்றனர். ஒருவரின் முந்தைய பயண விபரங்களைக் கூட தகவல் தொகுப்புகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியுமென்பதால் ஒருவர் முன்பதிவுசெய்துவிட்டு ஒரிரு முறை பயணம் செல்லாமலிருந்தாலும் அது கருத்தில் கொள்ளப்பட்டு அவர் மீதுஅதிக கண்காணிப்பு செலுத்துவது, அவர் அறியாமலே, இன்று சாத்தியமாகியுள்ளது.
மேலும் இப்போது ஒருவரது ரேகைகள் தவிர, விழிகள், முகத்தின் புகைப்படம் அல்லது பதிவு ஆகியவையும்கண்காணிக்க பயன்படுத்தப்படுவது சாத்தியமாகியுள்ளது. இப்படி ஒருவரின் உடல் அடையாளங்களைக் கொண்டு கண்காணிக்கப்படுவதன் மூலம் ஒருவரின் நடவடிக்கைகள் எளிதில் வேவு பார்க்கப்படும். எனினும் புதிய தொழில்நுட்பங்கள் காரணமாகவே கண்காணிப்பு அதிகரித்துள்ளது என்பதை விட கண்காணிப்பிற்கு புதியதொழில் நுட்பங்கள் அதிகமாக பயன்படுகிறதே பொருத்தமானது. ஏனெனில் கண்காணிப்பினை தொழில் நுட்பங்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக அரசின் அல்லது கண்காணிக்கும் அமைப்புகள் கொள்கைகள், கண்காணிப்பு குறித்த வரையரைகள், தனிமை குறித்த விதிமுறைகள் போன்றவை கண்காணிப்பினை தீர்மானிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால் அனைத்து தொழில் நுட்ப சாத்தியப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவசியமில்லை. எவையெவைநடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதினை தீர்மானிக்கும் காரணிகள் பல. இக்காரணிகள் பலவித தாக்கங்களுக்குள்ளாபவை என்பதால் கண்காணிப்பு என்பதும் நாட்டிற்கு நாடு, சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது.இதன் விளைவாக தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமாகக்கூடியவை கண்காணிப்பின் ஒரு பகுதியாக மாறுவதென்பது தற்செயல்லல்ல.
3
தேசிய குடிமக்கள் அடையாள அட்டை என்பது இன்று சில நாடுகளில் அமுலில் உள்ளது. தொழில் நுட்ப ரீதியாக இது சாத்தியமாகக் கூடிய எல்லா நாடுகளிலும் இது அமுலில் இல்லை. ஆனால் இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் முந்தைய அரசு பெரும் ஆர்வம் காட்டியது. இத்தகைய அடையாள அட்டை இல்லாதவர்கள் குடிமக்கள் அல்ல என்று கண்டறிய முடியும். அதே சமயம் பொது விநியோக அட்டை, வாக்களார அடையாள அட்டை போன்றவற்றைக் கூட இந்தியாவில் குழப்பங்களின்றி,குழறுபடிகளின்றி விநியோகிக்க முடியாத போது நடைமுறையில் குடிமக்கள் அடையாள அட்டை என்பதுஎந்த அளவு சாத்தியம். இதில் ஏன் இவ்வளவு அக்கறை. வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாககுடியேறிவர்கள் போன்றவர்களை அடையாளம் காட்ட இந்த அட்டை முறை பயன்படும் என்பதே இது குறித்த அதீத அக்கறைக்கான காரணம் என்பது என் ஊகம். இதை திறம்பட பயன்படுத்தும் அளவிற்கு இங்கு அனைத்தும் இன்னும் கணினிமயமாகவில்லை. இருப்பினும் இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்துவதன் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் கூறிக்கொள்ள முடியும், வெளியே கூற முடியாத அரசியல் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். குஜராத் இனக்கலவரத்தின் போது இருக்கின்ற தகவல்களை வைத்து சிறுபான்மையினர் மீது குறி வைத்து தாக்கியதை இங்கு நினைவு கூற வேண்டும். ஒரு தேசிய அடையாள அட்டை ஒருவரினை மதம், இனம, மொழிஅடிப்படையில் அடையாளம் காண உதவுமெனில் ஒரு சில சந்தர்ப்பங்களில் அது அதனடிப்படையில் தாக்குதலுக்கும் வழிவகுக்கக் கூடும்.
தென் கொரியாவில் இது போன்ற ஒரு தேசிய அளவிலான எலெக்ட்ரானிக் அடையாள அட்டையைஅரசு 1996ம் ஆண்டு முன் வைத்து, அனைவருக்கும் அடையாள அட்டை தருவதன் மூலம் தேசிய அளவிலான ஒரு திட்டத்தினை அமுல் செய்ய நினைத்தது. இந்த எலெக்ட்ரானிக் அட்டை அமுலில் உள்ள காகித அட்டைகளுக்கு மாற்று அல்ல. இதில் பொதிக்கப்ட்டிருக்கும் ஒருங்கிணைந்த சர்க்யூட் IC மூலம் தகவல்களை அதில் பதிவு செய்வதுடன், அத்தகவல்களை ஒரு தகவல் தொகுப்பில் உள்ளவற்றுடன்தொடர்படுத்தி அறிய முடியும், அத்தகவல் தொகுப்பில் உள்ளவற்றையும் தேவையானபடி மாற்ற முடியும்.அரசு முன்வைத்த திட்டத்தின் படி ரத்த வகை, புகைப்படம், முகவரி உட்பட 42 விதமான தகவல்களைஅவ்வட்டையில் பதிவு செய்ய முடியும்.
இதற்கு அடித்தளமாக 1993ல் தேசிய அளவிலான ஒரு தகவல் தொகுப்பினை அரசு உருவாக்கியிருந்தது.அதில் அனைத்து குடிமக்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் பதிவாயிருந்தன. எனவே புதிய தேசிய அடையாள அட்டைத்திட்டம் நிர்வாத்தினை எளிமையாக்கும், சேவைகளை வழங்குவது திறம்படச் செய்யப்படும், செலவுகளைக் குறைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தகவல் சேகரிப்பின் போதும், பின் தொகுப்பின் போது எழக் கூடிய தனிமைப் பிரச்சினைகள், கண்காணிப்பின் அபாயங்கள், மனித உரிமைஅம்சங்கள் போன்ற பல காரணங்களை முன் வைத்து மனித உரிமை அமைப்புகள். தொழிலாளர் அமைப்புகள், வழக்கறிஞர்களின் சில அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் ஒருங்கிணைந்து இதைஎதிர்த்தன. இந்த எதிர்ப்பின் விளைவாக அரசு சில மாற்றங்களை முன் வைத்தது. இருப்பினும் எதிர்ப்புவலுத்தது. இந்த மாற்ற்ங்களை திட்டத்தினை எதிர்த்த அமைப்புகள் நிராகரித்தன. பலத்த எதிர்ப்புக் காரணமாக 1998ல் இத்திட்டம் இரண்டாண்டுகள் கழித்து நிறைவேற்றப்படும் என்று அரசு அறிவித்தது. பின்னர் 1999ல் இதை முழுமையாகக் கைவிட்டது.
இது இதை எதிர்த்த அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் கடந்த இருபதாண்டுகளாக அரசு தகவல்தொகுப்புகளை அமைப்பதிலும், தொழில் நுட்பங்களை தகவல் சேகரிப்பிலும் திறம்பட பயன்படுத்தியுள்ளது.எனவே இத்திட்டம் கைவிடப்பட்டதால் அரசு முற்றிலுமாக தோற்றுவிட்டது என்று கூற முடியாது. மாறாகஇத்திட்டம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியதாலும், இது முறைகேடாக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாலும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பின் விளைவாக அரசு கண்காணிப்பு குறித்த தன் கருத்தை,செயல்பாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுவிட்டது என்று கருத முடியாது. இது போன்ற ஒரு தேசிய டையாள அட்டை முறை சில நாடுகளில், உதாரணமாக தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர் அமுலில் உள்ளது. சிலவற்றில் இது குறித்த பூர்வாங்க திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே குறிப்பிட்ட பிண்ணியினைக் கணக்கில் கொள்ளாமல் உலகெங்கும் கண்காணிப்பு முறையும், அமைப்பும் ஒன்றேதான் என்று கூற முடியாது. உலகளாவிய கண்கானிப்பு சமூகம் என்று கூறும் போது இந்த வேறுபாடுகளையும் கருத்தில்கொண்டே கூறுகிறோம். அமெரிக்காவில் குற்றம் இழைத்தோரை கண்காணிக்க மின்னணு வளையங்கள் கைகளில் பொருத்தப்படும்.அதிலிருந்து எழும் சமிக்ஞைகள் மூலம் அவர் எவ்வளவு தொலைவிலிருக்கிறார் என்பதை அறிய முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியின் எல்லையை அல்லது குறிப்பிட்ட ஊரின் எல்லையை அவர் தாண்டக் கூடாதுஎன்று நிபந்தனை இருக்கும் போது இவ்வளையங்கள் மூலம் அவரை இப்படிக் கண்காணிக்க முடியும். ஆனால் இதே தொழில் நுட்பம் அமெரிக்கா போல் ஐரோப்பாவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை.இது போன்ற பல உதாரணங்கள் கண்காணிப்பு என்பது ஏன் மாறுபடுகிறது என்பதை புரிந்து கொள்ள உதவுவதுடன் கண்காணிப்பு என்றால் எங்கும் ஒன்றேதான், உலகெங்கும் அமெரிக்க கண்காணிப்பு முறைதான் பயன்படுத்தப்படுகிறது போன்ற கருத்துக்கள் தவறானவை என்பதை அறியவும் உதவுகின்றன.
இந்தக் கண்காணிப்பின் அரசியல் குறித்து, இதன் தத்துவம், கண்காணிப்பு வகைகள் குறித்தும், தற்போதுகண்காணிப்பு சமூகம் என்று கூறப்படும் கருத்தாக்கம் குறித்த விபரங்களையும், விவாதங்களையும் அடுத்த பகுதியில் காண்போம்.

1 மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

Dear Ravi Srinivas,

I read this article in Uyirmmai magazine itself. It was very nice.

Suresh Kannan

6:05 AM  

Post a Comment

<< முகப்பு