சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட


இந்த சுட்டியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும், மற்றும் பல் வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகள், அவைகளின் தேவைகள், தற்போதைய நிலவரம் குறித்த தகவல்கள் உள்ளன. ஒரு வலைப்பதிவு மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், அவர்களின் தொலைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன. உதவ விரும்புவோர் மற்றும் தகவலறிய விரும்புவோர் இதைப் பயன்படுத்திக் கொண்டு உதவ முடியும்.

இரண்டு நாட்கள்

ஆண்டின் இறுதி இரண்டு நாட்களில் செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளதால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் வலைப்பதிகிறேன்.
இங்கு மட்டுமல்ல, அங்கும்


இங்கேதான் சிலர் இயற்கை உற்பாதங்களையும் தர்மம், கடவுள்,பாபம்,பாவிகள் போன்றவற்றையும்தொடர்புபடுத்தி பேசுகிறார்கள் என்றால் அமெரிக்காவில் வலுப்பெற்றுள்ள வலதுசாரி கிறித்துவம்ஏசுவின் வருகை குறித்து பேசுகிறது, சூழல்சீர்கேடு, பஞ்சம் குறித்து விவிலியக் 'கண்ணோட்டத்தில்' விளக்கம் தருகிறது.
நல்ல வேளையாக இந்தியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் இது போல் பேசுவதில்லை.கல்கி அவதாரம்,கலி யுகம், யுகதர்மம் என்றெல்லாம் அவர்கள் காரணம் கூறுவதில்லை.
என்ன செய்யலாம் இவர்களை


ஒரு பேரிடர் வந்துவிட்டதே, இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் தேவை, வெட்டி வேதாந்தமும், முட்டாள்தனமான தர்மோபதசமுமல்ல. ஆனால் இங்கு சிலரால் இத்துயர் கூட வேறு விதமாக அர்த்தப்படுத்தப்படுகிறது.

http://www.dinamalar.com/2004dec29/imp46.asp

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவந்த தினமலர் மாத ராசிமலரில் 21ம் பக்கத்தில், குரு பெயர்ச்சியால் பூகம்பம் ஏற்படுமா? என்ற தலைப்பில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: குருபெயர்ச்சியினால், இந்தியாவின் பொருளாதாரம் உயர்வு பெற்று தனிநபர் வருமானம் திறன் அதிகரிக்கும், என்ற தொடங்கி கடைசி பத்தியில் இத்தனை நன்மைகள் கிடைத்தாலும், இயற்கை சீற்றத்தை தடுக்க இயலாது. பூகம்பம் அல்லது வெள்ளத்தால் இந்தியா உலுக்கப்படலாம். இதற்கு பெருமாள் வழிபாடு ஒன்றே மாற்று வழியாகும். அவரவர் குலதெய்வத்தையும், பெருமாளையும் வழிபட்டு இயற்கை சீற்றத்தில் இருந்து காப்பாற்றும் படி வேண்டிக்கொள்ள வேண்டும். தான தர்மங்கள் செய்ய வேண்டும், தர்மத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது என்று எழுதப்பட்டுள்ளது.
அன்று சொன்னது... இன்று மெய்யாகி விட்டது !

http://www.thatstamil.com/specials/cinema/news/rajini-29.html

உலகில் பாவிகள் அதிகரித்தால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளும் ஏழை மக்களும் தான். நம் அறிவுக்கு எட்டாத ஆண்டவனின் குரூர செயல். அப்பாவி மக்களுக்கு நடந்த கோரத்தை நினைத்தால் நெஞ்சு துடிக்கிறது.
பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மீண்டும் இத்தகைய மிருத்யு தாண்டவம் நடக்கக்கூடாது என்றும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

வைரமுத்துவின் கவிதையோ அபத்தக் களஞ்சியம், இந்நிலையிலும் கூட வரலாற்றுப் அறிவை இப்படிவெளிப்படுத்தும் முட்டாள் கவிஞனை மட்டும் கடல் கொண்டு போனால் நல்லது என்றே நினைக்கிறேன். ஒரு கவிதை எழுதி நாமும் நம் இரங்கலைத் தெரிவித்துவிடலாம். ஏனெனில் மரணம் தனியே வந்தால் அழகுதானே.

தினமலர் செய்வதோ விஷமப் பிரச்சாரம், அன்றே சொன்னார்களாம். ஏன் நேரடியாகவே தர்மம் எதனால், எந்த நடவடிக்கைகளால் கெட்டுப்போனது என்று சொல்லிவிடலாமே.

ரஜனி கூறியிருப்பது மடத்தனத்தின் சிகரம். இனியாவது போலி ஆன்மிகப் பிரச்சாரத்தினை தன் படங்கள், அறிக்கைகள் மூலம் நிறுத்துவாரா இந்த நடிகர். பாவிகள் திடீரென அதிகரித்துவிட்டார்களா, யார்அந்தப் பாவிகள், பாவிகள் அதிகரித்தால் அப்பாவிகளும், ஏழை மக்களும் ஏன் பாதிக்கப்பட வேண்டும். என்ன தர்க்கம் இது. திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு அந்தப் பாவிகளை எதிர்த்துப் போராடுவாரா இவர். தான் சொல்வதை நம்புபவர் என்றால் அவர் இதைச் செய்யட்டும், இந்தப் பாவிகள் யார் யார் என்றுவெளிப்படையாகக் கூறிவிட்டு அவர்களை எதிர்ப்பதாகக் கூறட்டும்.

இவர்கள் இவ்வாறு வேதாந்தமும், தத்துவமும் பேசக் காரணம் என்ன, இவர்கள் இதனால் எந்தவிதத்திலும்பாதிக்கப்பட வில்லை என்பதனாலா இல்லை தங்கள் ஆன்மிக அறிவையும், கவிதைத் திறனையும் வெளிக்காட்டவா.

சுனாமிக்கு நன்றி சொல்லியிருக்கிறார் ஒருவர். அவருக்கு வாழ்க்கைக் குறித்த சில உண்மைகள் இப்போது புரிந்துவிட்டனவாம். எதற்கு நன்றி தன்னையும், தன் குடும்பத்தையும் அழிக்கவில்லை என்பதற்கா. அப்படியானால் மரணமடைந்தவர்கள் மற்றும் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்தவர்கள் குறித்து உங்களுக்குச் சொல்ல ஒன்றுமே இல்லையா. இவருக்கு தான் கடற்கரை அருகே வசிக்கும் ஒரு மீனவராகவோ அல்லது கடலில் சென்று ஒன்றும் செய்ய இயலாத மீனவராகவோ அல்லது தன்னைப் போல் கடன் வாங்கியாவது வசிக்க அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு வாங்க வசதி இல்லாத ஏழையாகவோ தான் இருந்தால் என்ன ஆயிருப்போம் என்று யோசிக்கத் தோன்றவில்லை. உலக இலக்கியங்களில் தேர்ச்சி பெற்று, இலக்கியம் படைத்து இவர் பெற்றது இத்தகைய சிந்தனைகள்தானா.

இவை நோய் கூறு கொண்ட மனநிலைகளின் வெளிப்பாடுகள். என்ன செய்யலாம் இவர்களை.

சூசன் சொண்டாக்- 1933-2004


கட்டுரையாளரும், இலக்கியவாதியுமான சூசன் சொண்டாக் இன்று காலமானார். சர்வதேசஅளவில் புகழ் பெற்ற கட்டுரையாளர், மற்றும் எழுத்தாளர் அவர். அவர் பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம்.விரிவான அஞ்சலி குறிப்பினை விரைவில் எழுத முயல்கிறேன். அவர் கடைசியாக எழுதிய நூல் Regarding the pain of others

சூசன் சொண்டாக் என்றதும் பலருக்கு புகைப்படம் குறித்த அவரது நூல் நினைவிற்க்கு வரும். போர்க்கால புகைப்பட்டங்கள், ஊடகங்களில் போர் குறித்த புகைப்படங்கள், ஒவியத்தில் போர்/ சித்திரவதைக் காட்சிகள் குறித்து அவர் எழுதியுள்ள நூலை சமீபத்தில் படித்தேன்.பிறரின் வலியை, துயரை நாம் உணர இவை உதவுமா , தொடர்ந்து இவை ஊடகங்களில் இடம் பெறுவதால் அவை அதிர்ச்சி கூட தராமல் போய்விடுமா போன்ற கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். விரிவாக இந்நூல் எழுப்பும் கேள்விகள் குறித்து பேச வேண்டும்

Regarding the Pain of Others-Susan Sontag-New York:Farrar,Straus and Giroux-2003

http://www.thinnai.com/pl0710035.html Jul 08 2003
கல்பாக்கம் - உண்மை என்ன


முதலில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதிப்பு ஏதுமில்லை, அணு உலை செயல்படுவது பத்திரமாக நிறுத்தப்பட்டுவிட்டது என்று செய்திகள் கூறின. ஒரு அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதாகவும், கடலோர கிராமங்களில் உயிரிழப்பு ஏற்பட்டது என்றன செய்திகள். ஆனால் இந்தத் செய்தி கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் பகுதிகள் பாதிக்கப்படிருக்கக் கூடும் எனவும், தன் விஜயத்தின் போது பிரதமர் அதனை ஆய்வார் என்று கூறுகிறது.இது புது தில்லியிலுள்ள பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு.

பிரதமர் வருகை ரத்தாகிவிட்டது என்றும் செய்திகள் கூறுகின்றன அப்படியாயின் கல்பாக்கத்தில் உண்மையில் பாதிப்பு ஏற்பட்டதா, என்ன பாதிப்பு, அதன் தாக்கங்கள், விளைவுகள் என்ன என்பது பற்றி செய்தி ஏதுமில்லை. ஹிந்துவில் வெளியான ஒரு புகைப்படம் கல்பாக்கம் அணுமின் குடியிருப்பில் உள்ள ஒரு பாலத்திற்கு ஏற்பட்ட சேதத்தினைக் காட்டுகிறது.
இது தவிர வேறு சேதமே ஏற்படவில்லையா, அங்குள்ள எந்தக் கட்டிடமும் பாதிக்கப்படவில்லையாஎன்பது போன்ற கேள்விகள் எழுவது இயற்கை.

there are reports of some damage to the Kalpakkam nuclear reactor.
There is considerable anxiety to make a precise assessment of the nature and extent of the damage to the nuclear reactor complex. The Prime Minister, again, according to officials, wants to be fully briefed about the situation at Kalpakkam. http://www.hindu.com/2004/12/28/stories/2004122814141100.htm

உண்மை என்ன, அணுமின் நிலையம், மற்றும் அதுசார்ந்த பிற பகுதிகளில் சேதம் ஏதுமில்லையெனில் இப்படி ஒரு செய்திக் குறிப்பினை வெளியிடக் காரணம் என்ன. அப்படி சேதம் ஏற்பட்டிருப்பின் முன்னர் வந்த செய்தி பொய்யா. இது குறித்து மாநில அரசுக்குத் தகவல் தரப்பட்டதா. இனி எதிர்காலத்தில் சுனாமி அலைகளால் பாதிப்பு ஏற்படாது என்று உறுதி கூற முடியுமா

கல்பாக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர் குடியிருப்பு உட்பட பல பகுதிகள் சேதமடைந்துள்ளன என தினமணி,தினமலரில் வெளியான செய்திகள் கூறுகின்றன.கதிரியக்கக் கசிவு இல்லை, அணு உலைகளுக்கு பாதிப்பேதும் இல்லை என அணுசக்தித் துறை மற்றும் அணுமின் உற்பத்தி தொடர்புடைய அமைப்புகள் தெரிவித்துள்ளதாக ஹிந்துவில் செய்தி வெளியாகியுள்ளது. அதே ஹிந்துவில்தான் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள செய்தி, பிரதமரின் பயணம் ஒத்திவைப்பு, வெளியாகியுள்ளது. அணுசக்தி உலைகளுக்கும், அது தொடர்புடைய பிறவற்றிற்கும் பாதிப்பேதுமில்லை என்றால் பிரதமர் அது குறித்து அறிய விரும்புவது எதை, reports of some damage என்பது அதிகாரபூர்வ அறிவிப்பினைக் கேள்விக்குள்ளாகுகிறதே.அதற்கு அடுத்து வரும் வரி வேறு எதையோ சுட்டிக்காட்டுகிறதே.

இந்தக் கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரியுமா. இல்லை நான்தான் முட்டாள்தனமாக கேள்விகள் கேட்கிறேனா.

இயற்கை உற்பாதங்களும், அவற்றை எதிர்கொள்வதும்

இன்று காலை எழுந்தவுடன் இணையத்தில் நில நடுக்கம், கடலோர பகுதிகளில் பாதிப்பு குறித்த செய்திகளை படிக்கும் போது மனதில் இனம் புரியா உணர்வுகள்.தொலைக்காட்சியில் வரிசையாக வரிசையாக உறங்குவது போல் குழந்தைகள், முதியவர்கள் அருகில் சோகமே உருவாக உறவினர் என்று பரிதாபக் காட்சிகள். இந்த நிலநடுக்கம் எதிர்பாராதுதான். ஆனால் மீட்பு மற்றும் துயர் துடைப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டாலும் இது போன்ற இயற்கை உற்பாதங்களை எதிர் கொள்ள தயார் நிலையில் சமூகம் இல்லை என்பதுதான் உண்மை. இது போன்றவை நிகழ்ந்தவுடன் என்ன செய்ய வேண்டும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் கூறவும், பீதியினை தணிக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதை உடனே எதிர்கொள்ளும் நிலையில் அரசு இயந்திரம் இல்லை. அவசரகால நிலைகளை திறம்பட சமாளிப்பு என்பதில் பயிற்சி தரப்பட வேண்டும்.மாநிலத்தின் எப்பகுதியில் இது போன்ற உற்பாதங்கள் நிகழ்ந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று உடனே முடிவு செய்ய ஒரு குழு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சென்னையில் உள்ள நண்பர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. மதுரையிலிருந்தே சென்னைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அறிந்தேன்.
அமெரிக்காவில் பல மாநிலங்களில் இது போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பு அதிகம்.இருப்பினும் அதிக அளவு உயிர்ச் சேதம் ஏற்படாமல் அதை சமாளிக்கின்றனர். ஒரு சிறு புயல் ஏற்பட்டால் கூட அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துகிறார்கள். கட்டிடங்களில் அபாய எச்சரிக்கை மணிகள், தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்புகள் என்று அப்புயல் அப்பகுதியைக் கடக்கும் வரை தொடர்ந்து எச்சரிக்கைகளும், அறிவுரைகளும் தரப்படுகின்றன. காரோட்டிகளும், பிற பயணிகளுக்கும் தகவல்கள் தரப்படுகின்றன.
இந் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் தொலைக்காட்சி, வானொலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கையும், பீதியைக் குறைக்கும் வகையில் செய்திகளும் தரப்பட்டிருக்க வேண்டும். மேலும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களின் பிரத்தியேக கவனத்திற்காக அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகளும் தரப்பட்டிருக்க வேண்டும். இவை செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இனி வரும ஆண்டுகளில் தட்பவெப்ப நிலையில் அதிகமான மாற்றங்கள் ஏற்படும் என்று கணிக்கப்படுவதால் வெள்ளம், வறட்சி போன்றவை முன்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நாம் எப்படி எதிர் கொள்ளப் போகிறோம்.
மார்க்ஸ், டார்வின் - ஒரு பொய்யும் அது குறித்த கடிதமும்

இந்த வாரத் திண்ணையில் அரவிந்தன் நீலகண்டன் மார்க்ஸ், டார்வின் குறித்து எழுதியிருந்தது குறித்து இரண்டு கடிதங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நான் இன்னொரு கடிதத்தினை மின்னஞ்சலாக அனுப்பினேன்.அது திண்ணைக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை. மீண்டும் அனுப்பியிருக்கிறேன். அதனை இங்கு தருகிறேன். அரவிந்தன் மார்க்சியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காகஎத்தகைய பொய்யினையும் எழுதுவார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,
அரவிந்தன் நீலகண்டன் எழுதுகிறார்:தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்து கொண்டவர் மார்க்ஸ்.எனவே தனது 'மூலதனத்தை'டார்வினுக்கு சமர்பிக்கவும் செய்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க மறுத்துவிட்டார்.http://www.thinnai.com/le1216044.html
இது பொய், முழுப் பொய். ஏனெனில் மார்க்ஸ் மூலதனத்தை டார்வினுக்கு சமர்பிக்கவில்லை.எனவேடார்வின் அதை மறுத்தாரா இல்லையா என்ற கேள்வி எழ எந்த அவசியமுமில்லை. அப்படி ஒரு கருத்துநிலவியது உண்மை. ஆனால் அது பொய் என்று நிரூபிக்கப்பட்டு கால் நூற்றாண்டிற்கு மேலாகிறது.இதற்கு ஆதாரமாக என்னால் இரண்டு சான்றுகளை தர முடியும்.இன்னும் சான்றுகள் தர முடியும்.ரிச்சர்ட் டாகின்ஸ¤ம் இது குறித்து எழுதியிருக்கிறார்.இக்கருத்து பொய் என்றே கூறியிருக்கிறார்,ஒரு விவாதத்தில். என் நினைவிலிருந்து அச்சான்றை குறிப்பிட முடியவில்லை. நூலகத்தில் சென்றுதேட நேரமில்லை.
சான்று 1:
Darwin's Complaint : Raplh Colp,Reply by W.W.Bartley III
Raplh Colp: Bartley claims that Darwin "refused Karl Marx permissionto dedicate Das Kapital to him." This claim—based on an October 12,1880, Darwin letter presumed to have been written to Marx—was firstmade by the Soviet scholar, Professor Ernst Kolman, and published inthe Russian Communist magazine, Under the Banner of Marxism (Jan.-Feb.1931); and then, for about 45 years, it was believed by many Darwinscholars throughout the world. In 1975 there was discovered (in theCambridge University Library) a letter to Darwin, written by EdwardAveling, dated October 11, 1880: this showed that Darwin's presumedMarx letter was, really, an answer to Aveling. There was, thus, noevidence that Marx desired to dedicate Das Kapital (or any of hisworks) to Darwin. This was reported on by Lewis Feuer, P. ThomasCarroll, and myself, in "On the Darwin-Marx Correspondence," Annals ofScience 33 (1976), pages 383-394. Soviet scholars were given copy ofAveling's letter, and a French report was published (Pierre Thuillier,"La Correspondence Darwin-Marx: Une Rectification," La Recherche,April 1977, pages 394-395).
W.W.Bartley : Dr. Colp does the reader a service in calling attentionto the Darwin-Aveling correspondence. This discovery, which waspublished in Annals of Science in July 1976, is still not widelyknown; certainly I did not know of it when I wrote my review of Colp'sbook last May. Readers may be interested to know that the hypothesisthat Darwin's letter of October 12, 1880 was addressed to EdwardAveling rather than to Karl Marx was ventured by Professor Lewis S.Feuer in his article, "Is the 'Darwin-Marx Correspondence' Authentic?"published in Annals of Science in January 1975. Feuer's hypothesis wasconfirmed by the independent discovery, by P. Thomas Carroll and Dr.Colp, of the Aveling letter to Darwin of October 11, 1880. Thus it wasAveling, and not Marx, who sought to dedicate a book to Darwin; andthe book was The Student's Darwin, not Das Kapital!
இக் கடிதங்கள் 1977லேயே வெளியாகிவிட்டன.

சான்று 2
THE FIRST DARWINIAN LEFT: RADICAL AND SOCIALIST RESPONSES TODARWIN, 1859–1914 D.A. Stack HISTORY OF POLITICAL THOUGHT. Vol. XXI.No. 4. Winter 2000 682-710
The myth is that Marx offered to dedicate some volume or edition ofCapital to Darwin. The documentary evidence for this claim was alwaysslender. At some point, a letter to Edward Aveling—the partner ofMarx's daughter Eleanor—got mixed in with a box of Marx'scorrespondence which Eleanor owned in the 1890s. The letter was fromDarwin, politely declining Aveling's offer to dedicate an atheisticpamphlet to him. To one unwitting 1930s Moscow archivist it appearedthat Darwin was declining Marx, and in the hands of the historicalprofession a legend was born.3 3 See, for example, I. Berlin, KarlMarx (London, 1963), pp. 247–8; S. Avineri, 'From Hoax to Dogma — afootnote on Marx and Darwin', Encounter (March 1967), pp. 30–2; B.Ollmann, Alienation: Marx's Conception of Man in Capitalist Society(Cambridge, 1971), p. 53; D. McLellan, Karl Marx: His Life and Thought(London, 1973), p. 424; V. Gerratana, 'Marx and Darwin', New LeftReview, 35 (1974), pp. 60–82.For a flavour of how the myth waseventually disproved see L.S. Feuer, 'Is the "Darwin–MarxCorrespondence" Authentic?', Annals of Science, 32 (1975), pp. 1–12;
http://www.imprint.co.uk/pdf/stack.pdf
1970 களிலேயே இக்கருத்து பொய் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. 1977 ல் கோல்ப்எழுதியுள்ளது இதை உறுதி செய்கிறது.
மார்க்ஸ் டார்வினின் கருத்துக்களை வரவேற்றாலும் அவற்றை விமர்சித்துமுள்ளார். மேலும்மார்க்சியர்களும், இடதுசாரிகளும் டார்வினின் கருத்துக்கள் குறித்து தொடர்ந்துவிவாதித்துள்ளனர்.மார்க்ஸ், ஏங்கெல்ஸ் டார்வினின் கருத்துக்களை குறித்து என்ன கருதினார்கள்,எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்து மேலுமறிய மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரையை (சான்று 2)படித்துத் தெரிந்து கொள்ளலாம். நான் முன் வைத்துள்ள இரண்டு சான்றுகளும் மிகவும் நம்பகமானசான்றுகள். கட்சி அல்லது இயக்கம் சார்ந்த சான்றுகள் அல்ல இவை.அரவிந்தன் எந்த சான்றையும் முன்வைக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
1970 களில் இறுதியிலே நிராகரிக்கப்பட்ட கருத்து ஒன்றை இன்று 2004 டிசம்பரில் ஒருவர் அதுஉண்மை என்று ஏன் முன் வைக்க வேண்டும்.அவரது நோக்கம் மார்க்ஸையும், மார்க்சியதையும்வசை பாட வேண்டும், இகழ வேண்டும், என் போன்றவர்களையும் இகழ வேண்டும் என்பதென்றால்அதற்காக எத்தனை பொய்களைத்தான் அவர் எழுதுவார், திண்ணையும் வெளியிடும்.
ஏற்கனெவே கோவை ஞானி, ஹால்டேன் குறித்து அவர் எழுதிய பொய்கள் திண்ணையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இப்போது இன்னொரு பொய். (இத்துடன் அவர் எழுதியுள்ள பொய்கள், பிறர்கருத்துத் திரிபுகள் பட்டியல் முடியவில்லை. இன்னும் இருக்கிறது)
தனக்கு இது பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது தெரியாது என்று அவர் குறிப்பிட்டால் அவர்கடந்த 30 ஆண்டுகளாக இது குறித்து நடந்த விவாதம் எதையும் அறிந்திருக்கவில்லை என்றுபொருள்.அப்படிப்பட்டவர் ஏன் மீண்டும் மீண்டும் மார்க்சியம், பரிமாணம் குறித்து தான் அனைத்தையும்அறிந்த தொனியில் எழுத வேண்டும்.மேலும் இத்தகைய ஒரு தகவலைத் தருவதற்கு முன்னர் அதுசரிதானா என்று அறிய வேண்டியது அவரது கடமையல்லவா.தான் எழுதுவதில் சந்தேகம் இருந்தால்அதையாவது தெரிவிப்பதுதானே முறை.
எப்படி எழுதினாலும் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள், திண்ணை ஆசிரியர் குழுவினரும்அப்படியே வெளியிட்டுவிடுவார்கள் என்ற தைரியத்தில் அவர் இதை எழுதியிருக்கலாம். ஆனால்எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அவர் இப்போதாவது உணர வேண்டும்.
இது போன்ற பொய்களை தொடர்ந்து திண்ணை வெளியிட்டால் திண்ணையின் நம்பகத்தன்மைதான்பாதிக்கப்படும். திண்ணைக் குழு இது போன்ற மோசடிகளை தவிர்க்க என்ன செய்யப் போகிறது.
K.ரவி ஸ்ரீநிவாஸ்

கட்டுரைகள், புத்தகங்கள் .....

ஆண்டு முடிவுக்கு வருகிறது.இன்னும் பத்து நாட்களுக்குள் செய்ய வேண்டியவை பல.ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக படிக்க ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.அல்லது முக்கியமான கட்டுரைகள், தகவல்கள் கிடைக்கின்றன.கைக்கு கிடைத்த உடன் அச்சிட்டு பின்னர் படிப்பதற்காக வைத்திருப்பவை,பாதி படித்திருக்கும் புத்தகங்கள், படித்து விட்டு கருத்து சொல்கிறேன் என்று கூறி விட்டு இன்னும் படிக்காதிருக்கும் கட்டுரைகள்,மதிப்புரைக்கான புத்தகங்கள் என்று ஒரு குவியலே இருக்கிறது.இந்தப் பத்து நாட்களுக்குள் இக்குவியலின் அளவை கொஞ்சமாவது குறைக்க வேண்டும்.
அண்மையில் Hacking Cyberspace என்ற நூலிற்கு மதிப்புரை எழுதினேன். ஒரு சுவாரசியமான நூல், ஆனால் சாதாரண வாசகர்கள் படிப்பதற்கு எளிய நூல் அல்ல. அதில் உள்ள கட்டுரைகள் சிலவற்றை முன்பே படித்திருந்தேன்.2005ல் இம்மதிப்புரை வெளியாகும். தமிழில் இந் நூல் பற்றி பின்னர் எழுதக்கூடும்.
ஆண்டு முடியும் முன் இரண்டு புத்தகங்களையாவது படித்து விடலாமென்றிருக்கிறேன். இன்று மாலைஎதையோ தேடியதில் ஒரு கட்டுரை கிடைத்தது. கிடைத்த சூட்டில் அதைப் படித்து ஒரு பேராசிரியருக்கு அதை குறிப்பிட்டு எழுதி படித்த சூட்டில் சுருக்கமாக என் கருத்துக்களை கட்டுரையாசிரியருக்கும் எழுதி விட்டேன். பல சமயங்களில் படித்துக்கொண்டிருக்கும் கட்டுரையில் சான்று காட்டப்படும் கட்டுரைகளை உடனே தேடி அதையும் அச்சிடுவதுண்டு.அப்படி இப்படியென்று கட்டுரைகள் குவிந்து விடுகின்றன. அலுவலகத்தில் மின்னஞ்சல் மூலம் கட்டுரைகள் குறித்து என் கருத்துக்களை குறிப்பிடுவதுண்டு, பல கட்டுரைகளை பிறர் கவனத்திற்குக் கொண்டு வருவதுண்டு.யாராவது ஒரு கட்டுரையைப் பற்றி கருத்துச் சொல்லியிருந்தால் அதையும், கட்டுரையையும் படித்து விட்டு மின்னஞ்சலில் கருத்து கூறுவதுமுண்டு வரும் ஆண்டில் இதைக் கொஞ்சம் முறையாகக் செய்யவிருக்கிறேன். வாரம் ஒரு கட்டுரை அல்லது நூல் குறித்து என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியுள்ளேன்.
அண்மையில் தமிழில் படித்த பல கட்டுரைகள் ஏமாற்றத்தையே தருகின்றன. ராஜ் டி.வி, எம்.எஸ். சுப்புலஷ்மி குறித்து ஞாநி எழுதியவை, தீராநதியில் சுந்தர ராமசாமியின் கட்டுரை இவை சலுப்பூட்டின. இவற்றிற்கு எதிர்வினை கூறுவதும் வீண் என்ற தரத்தில் இருக்கின்றன. தமிழ் வார ஏடுகளில் வரும் கட்டுரைகள் குறித்து கேட்கவே வேண்டாம்.தினமணியில் வெளியாகும் கட்டுரைகளை நான் தினசரி படிப்பதில்லை, எனினும் பல சமயங்களில் மிகவும் சாதாரணமான கட்டுரைகளே தினமணியில் வெளியாகின்றன. இவற்றுடன் ஒப்பிடுகையில் வலைப்பதிவுகள் பரவாயில்லை. கலைச்சொற்கள் குறித்த வலைப்பதிவு முக்கியமான கேள்விகளைஎழுப்புகிறது. பின்னர் விரிவாக இது குறித்து எழுதுகிறேன்.
முன்பெல்லாம் எக்னாமிக் அண்ட பொலிடிகல் வீக்லியை அச்சில் படித்துக் கொண்டிருந்தேன்.எனவேஒரு இதழில் வெளியாகும் எல்லாக் கட்டுரைகளையும் முடிந்த அளவு படித்துவிடுவேன்.இப்போது இணையத்தில் படிக்கும் போது அவ்வாறு செய்ய முடிவதில்லை. ஆனால் என்ன வெளியாகிறதுஎன்பதை கவனித்துக் கொண்டிருப்பேன்.மேலும் தேர்ந்தெடுத்து படிப்பதால் தேர்ந்தெடுப்பதில் நேரம்செலவாகிறது. நான் வழக்கமாக செல்லும் இணையதளங்கள், தினசரி படிப்பவை அல்லதுமேலோட்டமாகப் பார்க்கும் தினசரிகள் என்று ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். இது தவிரமின்னஞ்சல் மூலம் வரும் தகவல்களின் அடிப்படையில் படிக்க வேண்டியதை தேர்வு செய்கிறேன்.புத்தக மதிப்புரைகள், பிறர் தரும் பரிந்துரைகள் என்று பல வழிகளில் கிடைக்கும் தகவல்கள்,கருத்துக்களின் அடிப்படையில் புத்தகங்கள் குறித்து அறிய முயல்கிறேன். இப்படியெல்லாம்செய்தாலும் சமயங்களில் மிக முக்கியமான புத்தகங்கள் என் கவனத்திற்கு வராமல் போவதுண்டு.அதே சமயம் நான் விரும்பும் புத்தகங்கள் எதிர்பாராதவிதமாக கிடைத்துவிடுவதுமுண்டு.
இப்போது படிப்பவற்றில் பெரும்பான்மையானவை செய்யும் ஆய்வுகளுடன் தொடர்புடையவாகஇருப்பதால் வேறு சில துறைகளில் முன்பு போல் படிக்க முடிவதில்லை. இது தவிர்க்க முடியாதது.ஆனால் தொடர்புகள், ஆர்வம் காரணமாக அத்துறைகளிலுள்ள புத்தகங்கள், கட்டுரைகள் கிடைக்கும் அல்லது கவனத்திற்கு வரும். அவையும் குவிய ஆரம்பித்துவிடும்.இது தவிர தமிழில் எழுத உதவும் என்று சேர்க்கும் கட்டுரைகள், நூல்கள் சேர்ந்துவிடும், தமிழ்க் கட்டுரைதான் ஒத்திவைக்கப்பட்டு, பின் கைவிடப்படும்.நல்லவேளையாக இப்படி திரட்டுவதையெல்லாம் அச்சிடுவதில்லை. அவை கணினியில் கண்ணுறங்கிக் கொண்டிருக்கும்.
இப்படியாக இருக்கிறது புத்தகங்கள், கட்டுரைகளுடான என் வாழ்வு.
கட்டுரைகள் குறித்த எதிர்பார்ப்புகளும், யதார்த்தமும்

P.K.சிவகுமார் தன் வலைப்பதிவில் சில கருத்துக்களை முன் வைத்திருந்தார்.அவருக்கு என் நன்றிகள்.அவர் கூறியுள்ள சில ஆலோசனைகளை கருத்தில் கொள்கிறேன்.அவர் குறிப்பிட்டுள்ளது போல் குறிப்புகள் தரலாம்.இனி எழுதும் கட்டுரைகளில் தர முயல்கிறேன். தமிழில் எழுதும் போது கட்டுரையைப் படிக்கும் வாசகர் குறித்து யூகிப்பது கடினம். ஏனெனில் பல ஆண்டுகள் சிறு பத்திரிகைகள் படிப்பவர்கள், அவற்றில் எழுதுபவர்கள் முதல் சமீப காலமாகத்தான் இது போன்ற கட்டுரைகளை படிக்கத் துவங்கியிருப்பவர்கள் என்று பலதரப்பட்ட வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டு கட்டுரை எழுத வேண்டியுள்ளது. எனவே கட்டுரையின் சில பகுதிகளை ஆரம்ப நிலை வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதினாலும் முழுக்கட்டுரையும் அவ்வாறு இருக்கத் தேவையில்லை. மேலும் கட்டுரை எழுதும் போது அது மிகவும் நீண்டு விடாமலும் அதே சமயம் நாம் சொல்ல நினைத்தவற்றை முடிந்த அளவு சொல்லிவிட வேண்டிய தேவையுமிருக்கிறது. ஏனெனில் அதே பொருளில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகும் என்று கூற முடியாத சூழல்தான் இங்குள்ளது.
எனவே தேவையான அளவு சான்றுகளையும், மேலும் அறிந்து கொள்ள நூல் பட்டியல், இணைய முகவரிகள்போன்றவற்றை தர வேண்டியுள்ளது. படிப்பவர்களில் 2 அல்லது 3 சதவீதத்தினர் இவற்றால் பயன் பெற்றால் கூட அது அவர்களுக்கு மேலும் அறிய உதவும் என்பதால் அவ்வாறு தர வேண்டியுள்ளது. இது தவிரஒரு கட்டுரையில் தகவல்கள், கருத்துகள், விவாதங்கள் என பலவற்றை குறிப்பிட வேண்டியுள்ள நிலையில்கட்டுரையாளர் எல்லாவற்றையும் குறிப்புகள் கொடுத்து விளக்குவது கடினம். அதிக பட்சம் ஒரு கட்டுரை 10 முதல் 12 பக்கங்கள் வரை இருக்கலாம் என்ற நிலையில் கட்டுரையாளர் , இதழாசிரியர் ஒரு கட்டுரைக்கு அதிகபட்சம் எவ்வளவு பக்கம் ஒதுக்குவார் என்பதனையும் கருத்தில் கொண்டே எழுத வேண்டியுள்ளது.
தமிழ் சிறுபத்திரிகை சூழலில் பூக்கோ என்ற பெயரும், பான் ஆப்டிகன் என்ற கருத்தும் பேசப்பட்டுள்ளது.எனவே அது குறித்து ஒரு விளக்கத்தினை தரவில்லை. ஆனால் ஆர்வெல், அவர் எழுதிய 1984 என்ற நாவலும் மிகப் பிரபலமானவை. இதற்கும் குறிப்பு தேவைப்படும் என்று நான் நினைக்கவில்லை. கட்டுரையில்குறிப்பிடப்படும் ஒவ்வொரு சிந்தனையாளர், ஆசிரியர் குறித்து குறிப்புகள் தரலாம். அதே சமயம் கட்டுரையின் நீளத்தினையும் நான் கருத்தில் கொள்ள வேண்டும். பத்து சிந்தனையாளர்கள், பத்து கருத்துகள் குறித்துகுறிப்புகள் தர வேண்டுமெனில் சுமார் 200 வாக்கியங்கள் எழுத வேண்டும். இது செறிவுள்ளதாகவும் இருக்க வேண்டும். இவை கட்டுரையின் நீளத்தினை இன்னும் அதிகமாக்கும்.
ஆங்கிலத்தில் இத்தகைய கேள்விகள், பிரச்சினைகள் இல்லை. எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லியின்சராசரி வாசகர், தமிழ் சிறுபத்திரிகைகளின் சராசரி வாசகரிலிருந்து பல விதங்களில் வேறுபட்டவர். அங்குஎழுதும் போது 2000 வார்த்தைகளில் செறிவுள்ள கட்டுரையினை எழுதிவிட முடியும். (கலைக்களஞ்சியங்களுக்கு எழுதும் போது 7000 அல்லது 8000 வார்த்தைகளில் மிகச் செறிவுள்ள ஒரு கட்டுரையினைஎழுத முடியும்) அதனையே, 2000 வார்த்தைக் கட்டுரையினை தமிழில் எழுதுவதென்றால் 10,000 வார்த்தைகளில் விரிவாக, தேவையான அறிமுகங்கள் கொடுத்து எழுதினால்தான் ஒரளவேனும் அது வாசகர்களை எட்டும். மேலும் ஆங்கிலத்தில் அடிக்குறிப்புகள், மேற்கொள் காட்டப்படும் சான்றுகள் மூலம் பலவற்றை விவரிக்காமல் சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லிவிட முடியும். ஆங்கிலத்தில் பான் ஆப்டிக்கன் என்று எழுதினால் அது குறித்து ஒரு நீண்ட விளக்கம் தேவையில்லை. தமிழில் அது தேவையாகிறது. இது தவிர ஆங்கிலத்தில் எழுதும் போது கலைச்சொற்கள் ஒரு பிரச்சினையேயில்லை. தமிழில் அது ஒரு முக்கியமான பிரச்சினை. சமயங்களில் கட்டுரையாளர் புதிய கலைச்சொல்லை உருவாக்கி அதை அறிமுகம் செய்து விளக்க வேறு செய்ய வேண்டும் என்ற நிலைதான் இங்கு உள்ளது. இது போன்ற பல காரணங்களால் ஆங்கிலத்தில் எழுதுவது எளிதாக உள்ளது, நேர ரீதியாகவும் வசதியாக உள்ளது. தமிழில் ஒரு கட்டுரை, உதாரணமாக கண்காணிப்பு சமூகம், எழுதி அதை மீண்டும் ஒரிரு முறை படித்து, குறிப்புகள் சேர்த்து, முழுமை பெறச் செய்ய 4 அல்லது 5 மணி நேரம் ஆகிறது. இது தவிர முன் உழைப்பாக படிக்க வேண்டிய நேரம் வேறு. ஆங்கிலத்திலிருந்து ஒரு கட்டுரையினை மொழிபெயர்த்துத் தரலாம் என்றாலும் கூட, மொழிபெயர்ப்பாளர் பொருத்தமான கலைச்சொற்கள், குறிப்புகள் போன்றவற்றிற்கு கணிசமான அளவில் நேரம் செலவழித்தால்தான் மொழிபெயர்ப்பு படிப்பதற்கு வசதியாக இருக்கும். அவ்வாறின்றி வெறுமனே ஒரு மொழிபெயர்ப்பினைக் கொடுத்தால் அது நோக்கத்தினை பூர்த்தி செய்யாது.
நான் தமிழில் எழுதும் போது எவ்வளவு எளிய தமிழில் எழுத முடியுமோ அவ்வளவு எளிய தமிழில் எழுதுகிறேன். நடையினை விட கூறும் பொருளில் அதிக கவனம் செலுத்துகிறேன். பல காரணங்களால் தமிழில்மிகக் குறைவாகவே எழுதுகிறேன். இன்னும் சொல்லப் போனால் தமிழில் எழுதுவது, படிப்பதை விடஆங்கிலத்தில் எழுதுவதிலும், படிப்பதிலும் நான் கவனம் செலுத்தினால் தொழில் ரீதியாகவும், வேறு வகைகளில் எனக்கு அது மிக பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் என் தாய் மொழியில் சில புதியவிஷயங்களை சொல்ல வேண்டும், இயன்ற அளவு அதை வளப்படுத்த உதவ வேண்டும் போன்ற காரணங்களுக்காக தமிழில் எழுதுகிறேன். இதை இன்னும் சிறப்பாக செய்ய உதவிடும் வகையில் உங்கள்கருத்துக்களை தந்து உதவலாம்.

கண்காணிப்பு சமுதாயம் - 2

(உயிர்மை டிசம்பர் இதழில் வெளியான கட்டுரை, வலைப்பதிவில் இரண்டு பகுதிகளாக தரப்படுகிறது.இதனை வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு என் நன்றிகள்.உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்)
4
ஜான் பெந்தம் முன் வைத்த பான் ஆப்டிகன் என்ற முன்மாதிரி கண்காணிப்பு குறித்த விவாதங்களில் முக்கிய மானது. இதில் ஒரு கண்காணிப்பு கோபுரத்திலிருந்து கைதிகளை அவர்கள் அறியா வண்ணம் கண்காணிக்க முடியும். இப்படி பிறரை அவர்கள் அறியா வண்ணம் பார்ப்பதும், அதற்கு தகுந்தவாறு சிறைச்சாலை, கண்காணிப்பிற்குள்ளாக்க வேண்டிய இடத்தினை அமைப்பதும் ஒரு ஒழுங்குபடுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் நடவடிக்கை அல்லது முறையின் ஒரு பகுதி. இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது சிறை வடிவமைப்பு இதை சாத்தியமாக்கும் விதம். கண்காணிப்பு கோபுரத்திலிருந்து பார்க்க முடியும், ஆனால் கைதி தன் அறையிலிருந்து தன்னைக் கண்காணிப்பதை உணர முடியாது, அதே சமயம் சிறைச்ச்சலை வடிவமைப்பு, ஒளி அமைப்பு, வளைவுகள் போன்றது ஒரு முழுமையான கண்காணிப்பு நிலவும் சூழலை உருவாக்குகின்றன. இங்கு தனிமைப்படுத்தி உடல் கண்காணிக்கப்படுகிறது. இந்த உருவகத்தை வேறுவிதமாக பயன்படுத்தி தன்னிலை என்பதன் உருவாக்கத்தையும், நவீன சமுதாயத்தில் கட்டுப்பாடு என்பது ஒருவர் தனக்குள் தானே மேற்கொள்ளும் கண்காணிப்பு என்பதுடன் தொடர்புபடுத்தி விரிவாக நவீன சமுதாயம், தன்னிலை, கட்டுப்படுத்தல் குறித்து பூகோ எழுதினார்.
வேறொரு கோணத்தில் பூகோவின் கருத்துக்களை ஆஸ்கர் காண்டி, மார்க் போஸ்டர் போன்றோர் முன்னெடுத்துச் சென்றுள்ளனர். தனி நபர் குறித்த தகவல் சேகரிப்பு, தொகுப்பு, வகைப்படுத்தல் போன்றவை ஒருவிதமான பான் ஆப்டிக் பார்வைதான் என்று கருதும் காண்டி இந்த வகைப்படுத்துதல் மனிதர்களின் பயன்பாடு குறித்த ஒன்று என்கிறார். உதாரணமாக ஒருவரின் வருமானம், செலவுகள் குறித்த விரங்கள், கடனளவு போன்றவற்றை பொருத்து நுகர்வோரை பல வகையாகப் பிரிக்க முடியும்.பின்னர் இதன் அடிப்படையில் அவர்களை பொருட்களை அறிமுகப்படுத்த, விற்க அணுக முடியும். ஒருவரின் வாங்கும் சக்தியைப் பொருத்து அவருக்கு எந்த சேவைகளை வளங்கலாம், எவற்றை விற்க முடியும் என்பதை ஒரளவேனும் தீர்மானிக்க முடியும் என்பதால் தகவல் தொகுப்புகளிலிருந்து குடும்பங்களையும், தனி நபர்களையும் வகைப்படுத்தி குறி வைக்க முடியும். இங்கு சந்தைப் பொருளாதாரத்தின் தர்க்கமும், கண்காணிப்பின் தத்துவமும் இணைகின்றன. இதன் விளைவு ஒரு சிலர் எதற்கும் தகுதியற்றவர்களாக கருதப்பட்டு நிராகரிக்கப்படுவார்கள், ஒரு சிலருக்கு சேவைகளை வழங்க, பொருட்களை விற்க ஒரு போட்டியே நடக்கும். தகவல் தொழில் நுட்பம், சமூகம் குறித்தும், தகவல் சமூகம் குறித்தும் முக்கியமான கேவின் ராபின்ஸ், பிராங்க் வெப்ஸ்டர் சமூக முழுமையும் இன்று பான் ஆப்டிக் எந்திரத்தின் பார்வையில் உள்ளது என்பதுடன், முன்பு சிறைச்சாலை, தொழிற்ச்சாலை ஆகியவைதான் கண்காணிக்கப்பட்டன, இன்று சமூகம் முழுதும் கண்காணிப்பிற்கு உள்ளாகியுள்ளது என்று குறிப்பிடுகிறார்கள். மார்க் போஸ்டர் இன்று கண்காணிக்க சுவரோ, கோபுரமோ, காவலாளியோ தேவையில்லை என்பதுடன் புதிய தொழில் நுட்பங்கள் கண்காணிப்பினை விரிவாக செய்ய உதவுகின்றன என்கிறார்.
இவ்விவாதங்களில் தனிமை என்றால் என்ன, இந்தத் தொழில் நுட்ப சமூகத்தில் தனிமை என்பதன் பொருள் என்ன, முற்றிலுமான தனிமை சாத்தியமா என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. பொதுவாக தனிமை என்பது பிறர் தலையீடு, குறுக்கீடு இன்றி ஒருவர் இருப்பது என்பதுடன், ஒருவரது தனிப்பட்ட விவகாரங்களில் இன்னொருவர் தலையிடாமல் இருப்பது என்பதாகும். ஆனால் இன்று இத்துடன் நம்மைப் பற்றிய தகவல்கள் மீதான நம் கட்டுப்பாடு என்பதையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு புறம் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, தொகுக்கப்படுவதும், அவை பயன்படுத்தப்படுவதும் நமக்கு நன்மை பயக்கின்றன. உதாரணமாக மருத்துவமனையில் ஒரு நோயாளி குறித்த சரியான தகவல்கள் இருப்பது சிகிச்சைக்கு மிகவும் அவசியமாகிறது. இவை இல்லாமல் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல் நல காப்பீட்டு திட்டங்களுக்கும் இத்தகைய தகவல்கள் தேவை. ஆனால் இத்தகவல்களை யார் அறிந்து கொள்ள வேண்டும், யார் அறிந்து கொள்ளக் கூடாது, யார் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விதிகளும் தேவையாகின்றன. இவை யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் என்றிருந்தால் பலவிரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும். உதாரணமாக இத்தகவல்கள் கடன் வழங்கும் நிறுவனங்கள் வசம் கிடைத்தால் அவை அதை வேறுவிதமாக பயன்படுத்தலாம், ஒரு சில வியாதியுள்ளவர்களுக்கு கடன் வழங்க மறுக்கலாம் அல்லது அதிக வட்டிக் கோரலாம். எனவே இன்று தகவல்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதும் ஒருவரின் தனிமை என்பதுடன் தொடர்புடையதாகிறது. முன்பு இருந்தது போல் முற்றிலுமான தனிமை என்பது இன்று சாத்தியமில்லை, தகவல் யுகத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ தகவல் சேகரிப்பும், வ்கைப்படுத்துதலும், அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்க இயலாதது என்பதால் ஒருவர் தன்னைக் குறித்த தகவல்களை பயன்படுத்துவதை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொண்டுதான் தனிமையின் எல்லைகளை வரையறை செய்ய முடியும்.
ஆனால் இன்று வலைப்பின்னல் உலகில் தகவல்கள் நொடிப்பொழுதில் நாடு விட்டு நாட்டிற்கு அனுப்ப இயலும் போது தனி நபர் எந்த அளவிற்கு இதைக் கட்டுப்படுத்த முடியும், எந்த அளவிற்கு கண்காணிப்பினை புரிந்து கொண்டு செயல்பட முடியும், அல்லது தன் தனிமை குறித்த ஆபத்துக்களை குறைக்க முடியும் - இது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடைகள் இல்லை. இதற்கு ஒரு முக்கிய காரணம் தனி நபர் தகவல்கள், தகவல் தொகுப்புகளை கையாளுதல் போன்றவை குறித்த சட்டங்களும், விதிகளும் நாட்டிற்கு நாடு மாறுகின்றன. அமெரிக்காவில் தொலைபேசி மூலம் பொருட்களை, சேவைகளை விற்பது, அறிமுகப்படுத்துவது ஒரு தொழிலாக உருவெடுத்து பல ஆண்டுகளான பின்னே நுகர்வோர் தங்களை தொலைபேசி மூலம் பொருட்களை விற்க போன்றவற்றிருக்கு தொடர்பு கொள்ள வேண்டாம் என்று பதிவு செய்து கொள்ள சட்டபூர்வமாக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஒரு ஒப்பீட்டு நோக்கில் அமெரிக்காவை விட இது போன்றவற்றில் ஐரோப்பாவில் சட்டங்கள் வலுவாக உள்ளன. தனி நபர் தகவல்களைப் பாதுக்காப்பதில், தனிமையைப் பேணுவதில் ஐரோப்பாவில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
தகவல் தொகுப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் எவை அந்தரகத்தகவல்கள், எவை அந்தரங்கத்தகவல்கள் இல்லை என்ற பாகுபாட்டை நீக்கி விட்டன என்றே சொல்ல வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு மன உளைச்சல் அல்லது மனச் சோர்வு ஏற்பட்டு அவர் அதற்காக தினசரி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நெருங்கிய நண்பருடன் பகிர்ந்து கொள்ளத் தயங்கலாம அல்லது தவிர்க்கலாம். ஆனால் அவர் அதை கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கியிருப்பார் எனில் அவர் அறியாவண்னம் அத்தகவலைப் பயன்படுத்தி மனச் சோர்விற்கு ஒரு புதிய மாத்திரையை அல்லது மருந்தினை விற்க முயலும் நிறுவனம் அவர் முகவரிக்கு தகவல் அனுப்ப முடியும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் தகவல்கள் மூலம் ஒரளவிற்கேனும் அவர் எதை வாங்குவார் என்பதை யூகிக்க முடியும். எனவே அந்தரங்கள் என்பதன் எல்லைகளை சுருக்கக் கூடிய தொழில் நுட்ப யுகத்தில் நாம் வாழும் போது தனிமை குறித்த கருத்துக்களும், வரையரைகளும் மாற்றமடைவதில் வியப்பில்லை.
1980 களில் கண்காணிப்பு குறித்த ஆய்வுகளும், விவாதங்களும் ஒரு புதிய கட்டத்தினை எட்டின. அதற்கு ஒரு முக்கிய காரணம் கணினி தொழில் நுட்பம் சிலவற்றை சாத்தியமாக்கியதும், எதிர்க்காலத்தில் இது எப்படி கண்காணிப்பிற்கு உதவும் என்பது குறித்த ஊகங்களும். அப்போது தகவல் யுகம் குறித்தும் விவாதம் எழுந்தது.கணிணி யுகத்தின் பயன்கள் குறித்து பலர் எழுதிய போது சிலர் இதன் கண்காணிப்பு, கட்டுபட்டுத்தும் பரிமாணங்கள் குறித்து ஆய்ந்தனர். இடதுசாரி ஆய்வாளர்கள் பலர் தகவல் யுகத்தில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் எப்படி இருக்கும், தொழில் நுட்ப மாற்றம் என்பது எப்படி தொழிலாளரைக் கட்டுப்படுத்தவும், அவர்கள் திறனை மட்டுப்படுத்தவும், அவர்கள் மீதான கண்காணிப்பினை அதிகரிக்கவும் உதவும் என்பது குறித்து விவாதித்தனர்.
1985 ல் காரி மார்க்ஸ் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையில் புதிய கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள். முந்தயைய வழக்கமான தொழில் நுட்பங்களிலிருந்து ஒன்பது விதங்களில் மாறுபடுவதைச் சுட்டிக்காட்டினார். இவை கண்ணுக்கு புலனாகதவித்ததில் இருப்பதையும்,கண்காணிப்பு என்பது புதிய பகுதிகளுக்கும், அம்சங்களுக்கும் விரிந்திருப்பதையும், அது உடல் குறித்த கண்காணிப்பாக மட்டும் இல்லாமல் ஆளுமை, சுயம் குறித்த கண்காணிப்பாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார். பின்னர் அவரது ஆய்வில் இந்தக் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் எப்படி நியாயப்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டார். பில் ஆக்ரே1990 களின் மத்தியில் தனிமை, கண்காணிப்பு குறித்து ஆராய்ந்தார். அவர் பழைய கண்காணிப்பு முறையையும், புதிய தொழில் நுட்பங்களால் சாத்தியமான கைப்பற்றுதல் (capture) முறையையும் வேறுபடுத்தி பின்னது இன்று முதன்மை பெற்றுள்ளதைக் குறிப்பிட்டார். இப்போது கைப்பற்றுதல் முறையின் கீழ் தகவல் தொகுப்பென்பது ஒரு மையத்தில் மற்றும் இருக்க வேண்டியதில்லை. பல்வேறு தகவல் தொகுப்புகளிலிருந்து தகவல் மூலம் கண்காணிப்பு சாத்தியம். ஒருவர் பயன்படுத்தும் கருவிகள், தொலதொடர்பு சாதனங்கள் கொண்டு அவர் அறியா வண்னம் அவரது உரையாடல்கள், மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்படலாம். மேலும் ஒருவர் இருப்பிடத்தை அறிய அவரது செல் போன் போதும் என்ற அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. டேவிட் லயான் கண்காணிப்பு என்பது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றதுடன் கண்காணிப்பு சமூகம் குறித்து விரிவாக எழுதினார், எழுதி வருகிறார். இன்று கண்காணிப்பு சமூகம் குறித்த விவாதங்களில் டிஜிடல் ஆளுமை DIGITAL PERSONALITY குறித்து பேசப்படுகிறது. நாம் விரும்பியோ விரும்பாமலோ அறிந்தோ அறியாமலோ தகவல்கள் மூலம் நம்மைப் பற்றிய ஒரு ஆளுமையை உருவாக்க முடியும். கண்கானிப்பு என்பது அனைத்து நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம்குறித்த ஒன்றாக இருக்கும் போது தனிமை என்பதன் பொருளும், தனி, பொது என்பதன் வரையரைகளும் மாறுகின்றன.
இதற்கு உதாரணமாக கண்காணிக்க உதவும் டெலிவிஷ்ன பெட்டிகள் பரவலாக இருப்பதை குறிப்பிடலாம்.1990 களில் பிரிட்டனில் இவை மிகப் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டன. சில குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க இவை உதவின. அப்போது பிரிட்டனில் IRA திவீரவாதம் குறித்து ஒரு அச்சம் நிலவியது. குண்டு வெடிப்புகள் போன்றவற்றை தவிர்க்க, தீவிரவாதம், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த இவை உதவுவதால் இந்தக் கண்காணிப்பினை ஏற்கலாம என்ற மனோபாவம் வலுப்பெற்றது. இதன் விளைவாக இன்று உலகின் வேறெந்த நாட்டையும் விட பிரிட்டனில் பொது இடங்களில் இப்படித் தொலைக்காட்சி மூலம் கண்காணிப்பது அதிகமாக உள்ளது. தீவிரவாதத்தினால் ஏற்படும் ஆபத்து, பாதுகாப்பு என்ற பெயரில் இன்று இத்தகைய கண்காணிப்பு விரிவாக்ப்பட்டுள்ளதால் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை அல்லது கடை வீதிகள், பல் பொருள் அங்காடிகள் போன்றவற்றில் இவை இருப்பது சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. 5ஆய்வாளர்கள் தவிர சிவில் உரிமை அமைப்புகள், நுகர்வோர் அமைப்புகள், கணினி,எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் குறித்து ஆயும் அமைப்புகளும் கண்காணிப்பு, தனிமை குறித்து அக்கறை காட்டுவதுடன் இது குறித்த விதி முறைகள், சட்டங்கள் குறித்தும் செயல்பட்டு வருகின்றன. உலகெங்கும் ஒரே மாதிரியான கண்காணிப்பு இல்லை என்ற போதும், தனி நபர் தகவல்கள் பாதுகாக்கப்படுவது, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, தனி நபர் உரிமைகள் மதிக்கப்படுவது போன்றவை குறித்து உலகளாவிய அளவில் குறைந்தபட்சமாக பொதுவிதிகள் வகுப்பட வேண்டும் என்று இவை கோருகின்றன.
கண்காணிப்பு இப்படி பரவலாக உள்ள நிலையில் ஒருவர் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. சில வழிகள் மூலம் கண்காணிப்பினால் ஏற்படும் தாக்கத்தினைக் குறைக்க முடியும். முதலில் தேவையற்ற தகவல்களை கொடுப்பதைத் தவிர்க்கலாம். ஒரு விண்ணப்ப படிவத்தில் கட்டாயம் என்று குறிப்பிடப்படும் தகவல்களை மட்டும் கொடுத்துவிட்டு பிறவற்றை தவிர்க்கலாம். மேலும் நாம் கொடுக்கும் தகவல் எப்படிக் கையாளப்படுகிறது, அந்த நிறுவனத்தின் privacy policy என்ன, நாம் கொடுத்த தகவலை நாமறியாமல் பகிர்ந்து கொள்வதை நாம் தடுக்க முடியுமா, அப்படியாயின் இது குறித்த சட்ட விதிகள் என்ன - இப்படி பலவற்றை நாம் விழிப்புடன் அறிய வேண்டும். மேலும் நாம் தகவல்களை எதற்குத் தருகிறோம் அதன் பயன், விளைவு என்ன என்பதினை யோசிக்க வேண்டும். கூடுமான வரை முகவரி, குடும்ப தகவல்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், புகைப்படங்கள் போன்றவற்றை தருவதை தவிர்க்க வேண்டும். இன்னும் எச்சரிக்கையாக இருக்க விரும்புபவர்கள் மின்னஞ்சல்களை encrypt செய்து அனுப்பலாம்.
கண்காணிப்பு, கண்காணிப்பு சமூகம் என்பதை பல கோணங்களிலிருந்து அணுகலாம். தனிமை குறித்த சட்டங்கள்,தகவல் சேகரிப்பு, பகிர்வு குறித்த சட்டங்கள், வழக்குகள், தீர்ப்புகள் என்ற கோணத்தில் இதை அணுகலாம். அமெரிக்காவில் நுழைய வெளி நாட்டவர் கைரேகை பதிவினை அமெரிக்க அரசு கட்டாயமாக்கிய போது அகெம்பன் என்ற இத்தாலிய தத்துவ அறிஞர் அதை எதிர்த்தார். நவீன சமூகம் ஏதென்ஸ் போலில்லை, நாஜிகள் யூதர்களை அடைத்து கண்காணித்த அஸ்ட்விட்ஸ் போலாகிக் கொண்டிருக்கிறது என்கிறார். இந்தக் கோணத்திலிருந்து, நாஜிக்கள் உடல்களை கண்காணித்த விதம், இன்றைய உலகளாவிய கண்காணிப்பு குறித்து விவாதிக்கலாம். வேறொரு கோணத்தில் உலக மயமதால், தகவல் யுக முதலாளித்துவம், மனித உரிமைகள், கண்காணிப்பு குறித்து பேச முடியும். இக்கட்டுரை ஒரு அறிமுகக் கட்டுரை என்பதால் பல்வேறு கோணங்களிலிருந்து இதை விவாதிக்கவில்லை. மேலும் விரிவஞ்சியும், வேறு சில காரனங்களாலும் கருத்துக்கள் முடிந்த அளவு எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளன. தனிமை குறித்த விரிவானஒரு அலசலை இக்கட்டுரையில் தரவில்லை. அதற்கு ஒரு காரணம். அது குறித்த கலைச் சொற்கள் நானறிந்த வரை தமிழில் இல்லை. இக்கட்டுரைக்கு உதவிய, மற்றும் மேலும் அறிய படிப்பதற்கான ஒரு கட்டுரை, நூல் பட்டியல் தரப்பட்டுள்ளது. அதை வாசகர்கள் பயன்படுத்திக் கொண்டு கண்காணிப்பு சமூகத்தின் பன்முக பரிமாணங்களை அறிந்து கொள்ளலாம்.

Agre,P., Rothenberg,m (eds) Technology & Privacy MIT Press 1997
Agre, P.E Suveillance and Capture The Information Society 10: 101- 27, 1994
Beniger, J The Control Revolution Harvard University Press 1986
Castells, M The Rise of Network Society Blackwell 1996
Foucalut, M Discipline & Punish Allen Lane 1975
Gandy,Oscar The Panoptic Sort Westview Press 1993
Green. S A Plague on the Panoptican . Information,
Communication, and Society Vol 2 No 1, 26-44
Lyon, David The Electronic Eye Polity Press 1994
Lyon, David The Surveillance Society Polity Press 2001
Lyon, David Globalising Surveillance International Sociology
Vol 19 No2, June 2004, 135-149
Marx, Gary "I'll be Watching You" Dissent Vol 31 No 1 1985
Poster, mark The Mode of Information University of Chicago Press 1990
Kim,Mun-Cho Surveillance, Technology and Social Control International Sociology
Vol 19 No2, June 2004, 193-213
www.ssrc.org/september11/essays/bigo.htm
http://www.surveillance-and-society.org/
http://www.wired.com/wired/archive/9.12/surveillance.html
http://www.aclu.org/Privacy/Privacy.cfm?ID=11573&c=39
www.eff.org
http://www.epic.org/
http://www.privcom.gc.ca/information/ar/200304/200304_e.asp
கண்காணிப்பு சமுதாயம் - 1


(உயிர்மை டிசம்பர் இதழில் வெளியான கட்டுரை, வலைப்பதிவில் இரண்டு பகுதிகளாக தரப்படுகிறது.இதனை வெளியிட்ட மனுஷ்யபுத்திரனுக்கு என் நன்றிகள்)
1
இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும்காலகட்டமாகவும் இருக்கிறது. கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984,மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம். ஆனால் இன்று கண்காணிப்பு என்பது தொழில் நுட்பத்தால் முன்னெப்போதயும் விட பரவலாகவும்,எளிதாக மேற்கொள்ளப்படுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதை அதிகம் பொருட்படுத்துவதில்லை அல்லது அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக இன்று பெரிய அங்காடிகளில், விமான நிலையங்களில், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பரபரப்பான சாலைகளில் Closed Circuit Television மூலம் தொடர்ந்து கண்காணிப்பது பரவலாக உள்ளது. இது அதிகரித்தும் வருகிறது. ஐரோப்பாவில் சில நாடுகளில் கண்ணுக்குத் தெரியாத விடியோ காமிரா மூலம் சில சாலைகளில் செல்லும் வாகனங்களைக் கண்காணிப்பது நடைமுறையில் இருக்கிறது. இந்த இடத்தில் இந்த நேரத்தில் இந்தத் தேதியில் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறினீர்கள், அதற்கான அபராதம் இவ்வளவு என்று ஒரு அறிவிப்பு தபாலில் வரும் போதுதான் அங்கு வீடியோ காமிரா இருந்தது என்பதே தெரியவரும்.
இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் பெரும் வணிக நிறுவனங்கள் அக்கறைக் காட்டும் ஒரு தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசை அடையாளம் காட்டும் தொழில் நுட்பம் , RFID, Radio Frequency Identification Devices. இதன் மூலம் ஒரு சிறிய சில்லை ஒரு பொருளில் வைத்துவிட்டால் அந்த சில்லிருந்து வெளிப்படும் அலைவரிசை மூலம் அது எங்கு உள்ளது என்பதை கண்காணிக்க முடியும். இது பொருட்களின் நடமாட்டத்தினை, அவை உற்பத்தியாகும் இடத்திலிருந்து நுகர்வோரைச் சென்றடையும் வரைஎங்கெங்கு கையாளப்படுகின்றன என்பதை, அதற்கான காலத்தினையும் அறிய முடியும். இந்த ரேடியோ அலைவரிசையை உணரக்கூடிய அல்லது பதிவு செய்யக்கூடிய சிறு கருவிகள் மூலம் ஒரு பொருள் எங்கிருக்கிறது என்பதை அறிய முடியும். அடிப்படையில் இது பொருட்களுக்கென்றாலும், இதன் மூலம் மனிதர்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க முடியும். இந்த சில்லுகள் மிகச்சிறிய அளவில் இருப்பதால் அவற்¨றை சட்டை, கைப்பை, ஏன் பாட்ஜ்களில் கூட சந்தேகம் எழா வண்ணம் பொதிக்க முடியும். ஒவ்வொரு பொருளின் மீது பதிக்கப்பட்டுள்ள எண்ணை எப்படி கடைகளில் உள்ள ஸ்கானர்கள் கண்டறிகின்றனவோ அது போல் இந்த சில்லுகளிலிருந்து வெளிப்படும் ரேடியோ அலைவரிசைகளை அறியும் கருவிகளை பல இடங்களில் வைத்தால் அதன் மூலம் அந்த சில்லு எங்கிருக்கிறது என்பதை அறியமுடியும்.
உதாரணமாக ஒருவரின் பாட்ஜில் பொதிக்கப்பட்டுள்ள சில்லிருந்து வெளிப்படும் ரேடியோ அலை, அந்த சில்லுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரத்தியேக எண் இவற்றை கண்டறியும் கருவிகள் எங்கெல்லாம் உள்ளனவோ அங்கிருந்து அவை தரும் தகவல்களிலிருந்து இந்த எண் தரப்பட்டுள்ள சில் பதிக்கப்பட்டுள்ளபாட்ஜ் அணிந்திருப்பவர் எங்கிருக்கிறார் என்பதை அறிய கண்டறியும் கருவிகளை நிறுவினால் போதும்.பின் தொடர ஒரு ஒற்றர் தேவையில்லை. இது போன்ற தொழில் நுட்பங்கள் கண்காணிப்பினை பரவலாக்குவதுடன், கண்காணிக்கப்படுகிறோம் என்ற உண்ர்வினையும் எழுப்புவதில்லை. இது இன்னும் மிகப்பரவலாக ஆகவில்லை, காரணம் ஒரு சில்லினைத் தயாரிக்க ஆகும் செலவுதான். இது குறையக் கூடும் என்பதால்நிறுவனங்கள் இதில் இப்போது ஆர்வம் காட்டினாலும், மிகக் குறைந்த அளவிலேயே இதைப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக ஒரு பொருளைக் கண்காணிக்க ஆகும் செலவு 25 ரூபாய் என்றால் அதைச் செலவுசெய்யுமளவிற்கு அது விலை உயர்ந்ததா, முக்கியமானாதா என்று யோசிக்கிறார்கள்.
2
ஒற்றர்கள், உளவு பார்த்தல் போன்றவை மிகப் பழையவை. ஆனால் கண்காணிப்பு என்பதை நாம் இங்கு ஒரு பரந்த பொருளில் குறிப்பிடுகிறோம். கண்காணிப்பு சமுதாயத்தில் கண்காணிப்பு என்பது அரசு மட்டுமே செய்கிற ஒன்றல்ல. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கண்காணிப்பது, சக போட்டி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது என்பதையும் சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறோம். உதாரணமாக பல நிறுவனங்களில் ஊழியர்கள் கணிணிகளைப் பயன்படுத்துவது, மின்ஞ்சலைப் பயன்படுத்துவது, இணையத்தில் பார்க்கும் தளங்கள் உட்பட பல கண்காணிக்கப்படுகின்றன. இது தவிர கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் பரவலாக உள்ள ஒரு காலகட்டம் இது. எனவே கண்காணிப்பு என்பது புதிதல்ல என்றாலும் கண்காணிக்கும் முறைகள், அதன் பின்னுள்ள தத்துவம், அரசியல் இவை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். மேலும்உலகமயமாதலின் ஒரு விளைவு கண்காணிப்பு என்பது இன்று உலகளாவிய அளவில் சாத்தியமாகியுள்ளது.தகவல்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நாம் மேற்கொள்ளும் செயல்கள் குறித்த தகவல்கள், ஒருவரின் உடல் நலம், மருந்துகள் குறித்த தகவல்கள்,வேறு பல முக்கிய தகவல்கள், உதாரணமாக பாஸ்போர்ட் குறித்த தகவல்கள், தகவல்தொகுப்புகளில் தொடர்ந்து பதிவாகிக்கொண்டிருக்கின்றன. இவற்றை வைத்து ஒருவரை பின் தொடராமலே, நேரில் சந்திக்காமலே அவர் குறித்த மிக முக்கியமான தகவல்களை அறிய முடியும். இவற்றிலிருந்து அவரது ஆளுமை, தெரிவுகள் குறித்து யூகிக்க முடியும். நூலகங்களில் யார் யார் என்னென்ன நூல்கள், பத்திரிகைகளை இரவல் பெறுகிறார்கள் என்பதைக் கொண்டு சிலவற்றை யூகிக்க முடியும். இப்படி பல்வேறு தகவல் தொகுப்புகளிலிருந்து ஒருவரைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பெறுவதுடன் அதன் அடிப்படையில் அவரை வகைப்படுத்த முடியும்.
கண்காணிப்பின் ஒரு முக்கிய நோக்கம் இப்படி வகைப்படுத்த உதவுவதே. இதனடிப்படையில் ஒருவரை ஆபத்தானவர்,ஆபத்தற்றவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியவர், இவரது சில நடத்தைகள்,செயல்பாடுகள் குறிப்பாக கண்காணிக்கப்பட வேண்டியவை என்ற வகைப்பாடுகளில் எதில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவெடுக்க கண்காணிப்பு உதவுகிறது. எனவே கண்காணிப்பு என்பது ஒருவரது நடமாட்டத்தைம் மட்டும் அறிவதல்ல. மாறாக அவரது நடமாட்டம், செய்கைகள் இவற்றுடன் வேறு பலவற்றையும் தொடர்புபடுத்தி அலசி ஆராய்வதுமாகும்.
செப்டம்பர் 11,2001க் குப்பின் அமெரிக்க அரசு பயங்கரவாதத்தினை ஒழிப்பது என்ற பெயரில் நிறைவேற்றிய Patriot சட்டம் முன்னெப்போதும் இருந்திராத வகையில் தனிப்பட்ட நபர்களை, அமைப்புகளை அரசும்,அரசின் அமைப்புகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்காணிக்க வழி செய்தது. இதன் பின் இன்னும் அதிக அதிகாரங்களையும், மேலும் பரவலான,விரிவான கண்காணிப்பு வகை செய்யும் திட்டம் ஒன்று எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. அதே சமயம் சில உரிமைகளை விட்டுக்கொடுப்பது நம் பாதுகாப்பிற்காக, நாட்டுப்பாதுகாப்பிற்காக, எனவே அரசை சந்தேகிக்க வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு பயங்கரவாதம் ஒரு பெரும் ஆபத்தாக சித்தரிக்கப்பட்டது. மக்களிடையே நிலவிய அச்சமும், ஆபத்து குறித்த பயயுணர்வும் இப்படி கண்காணிப்பினை அதிகரிக்க உதவின. இப்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் கண்காணிப்பும், சிவில் உரிமைகளை பாதிக்கும் சட்டங்களை நிறைவேற்றுவதும் அரசுகளுக்குஎளிதாகிவிட்டது. இவ்வளவிற்கும் அரசுகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டே வந்துள்ளன. அமெரிக்காவில் FBI தொடர்ந்து தனி நபர்களையும், அமைப்புகளையும் கண்காணித்தே வந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், பனிப் போர் நிலவிய போது பெரிய அளவிலான கண்காணிப்பு அமைப்புகள்செயல்பட்டே வந்துள்ளன. இவை தொலைபேசி உரையாடல்கள், தந்திகள் உட்பட பலவற்றை தொடர்ந்து பதிவு செய்தோ அல்லது வேறு விதமாகவோ கண்காணித்து வந்துள்ளன. நாடுகள் கண்காணிப்பின் அடிப்படையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதும் பெரிய அளவில் நடந்துள்ளது. இவற்றின் பரிணாம வளர்ச்சியாகவே இப்போதுள்ள கண்காணிப்பு அமைப்புகளையும், முறைகளையும் காண முடியும். மேலும்கண்காணிக்கப்படுவோர் என்பது முன்பு சிலர் என்பதலிருந்து இப்போது கிட்டதட்ட அனைவருமே என்றநிலை உண்டாகியுள்ளது. முன்பு அரசுகள் தங்களுக்கு எதிரானவர்கள், கலகக்காரர்கள் போன்றவர்களைகண்காணித்தன, அமைப்புகளும், நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை கண்காணித்தன. இன்று நுகர்வோர்,பயணிகள் உட்பட பல்வேறு பிரிவினரும் கண்காணிக்கப்படுகின்றனர். ஒருவரின் முந்தைய பயண விபரங்களைக் கூட தகவல் தொகுப்புகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியுமென்பதால் ஒருவர் முன்பதிவுசெய்துவிட்டு ஒரிரு முறை பயணம் செல்லாமலிருந்தாலும் அது கருத்தில் கொள்ளப்பட்டு அவர் மீதுஅதிக கண்காணிப்பு செலுத்துவது, அவர் அறியாமலே, இன்று சாத்தியமாகியுள்ளது.
மேலும் இப்போது ஒருவரது ரேகைகள் தவிர, விழிகள், முகத்தின் புகைப்படம் அல்லது பதிவு ஆகியவையும்கண்காணிக்க பயன்படுத்தப்படுவது சாத்தியமாகியுள்ளது. இப்படி ஒருவரின் உடல் அடையாளங்களைக் கொண்டு கண்காணிக்கப்படுவதன் மூலம் ஒருவரின் நடவடிக்கைகள் எளிதில் வேவு பார்க்கப்படும். எனினும் புதிய தொழில்நுட்பங்கள் காரணமாகவே கண்காணிப்பு அதிகரித்துள்ளது என்பதை விட கண்காணிப்பிற்கு புதியதொழில் நுட்பங்கள் அதிகமாக பயன்படுகிறதே பொருத்தமானது. ஏனெனில் கண்காணிப்பினை தொழில் நுட்பங்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக அரசின் அல்லது கண்காணிக்கும் அமைப்புகள் கொள்கைகள், கண்காணிப்பு குறித்த வரையரைகள், தனிமை குறித்த விதிமுறைகள் போன்றவை கண்காணிப்பினை தீர்மானிப்பதிலும், செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால் அனைத்து தொழில் நுட்ப சாத்தியப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவசியமில்லை. எவையெவைநடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதினை தீர்மானிக்கும் காரணிகள் பல. இக்காரணிகள் பலவித தாக்கங்களுக்குள்ளாபவை என்பதால் கண்காணிப்பு என்பதும் நாட்டிற்கு நாடு, சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது.இதன் விளைவாக தொழில் நுட்ப ரீதியாக சாத்தியமாகக்கூடியவை கண்காணிப்பின் ஒரு பகுதியாக மாறுவதென்பது தற்செயல்லல்ல.
3
தேசிய குடிமக்கள் அடையாள அட்டை என்பது இன்று சில நாடுகளில் அமுலில் உள்ளது. தொழில் நுட்ப ரீதியாக இது சாத்தியமாகக் கூடிய எல்லா நாடுகளிலும் இது அமுலில் இல்லை. ஆனால் இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் முந்தைய அரசு பெரும் ஆர்வம் காட்டியது. இத்தகைய அடையாள அட்டை இல்லாதவர்கள் குடிமக்கள் அல்ல என்று கண்டறிய முடியும். அதே சமயம் பொது விநியோக அட்டை, வாக்களார அடையாள அட்டை போன்றவற்றைக் கூட இந்தியாவில் குழப்பங்களின்றி,குழறுபடிகளின்றி விநியோகிக்க முடியாத போது நடைமுறையில் குடிமக்கள் அடையாள அட்டை என்பதுஎந்த அளவு சாத்தியம். இதில் ஏன் இவ்வளவு அக்கறை. வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாககுடியேறிவர்கள் போன்றவர்களை அடையாளம் காட்ட இந்த அட்டை முறை பயன்படும் என்பதே இது குறித்த அதீத அக்கறைக்கான காரணம் என்பது என் ஊகம். இதை திறம்பட பயன்படுத்தும் அளவிற்கு இங்கு அனைத்தும் இன்னும் கணினிமயமாகவில்லை. இருப்பினும் இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்துவதன் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா சாதனை படைத்துள்ளது என்றும் கூறிக்கொள்ள முடியும், வெளியே கூற முடியாத அரசியல் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும். குஜராத் இனக்கலவரத்தின் போது இருக்கின்ற தகவல்களை வைத்து சிறுபான்மையினர் மீது குறி வைத்து தாக்கியதை இங்கு நினைவு கூற வேண்டும். ஒரு தேசிய அடையாள அட்டை ஒருவரினை மதம், இனம, மொழிஅடிப்படையில் அடையாளம் காண உதவுமெனில் ஒரு சில சந்தர்ப்பங்களில் அது அதனடிப்படையில் தாக்குதலுக்கும் வழிவகுக்கக் கூடும்.
தென் கொரியாவில் இது போன்ற ஒரு தேசிய அளவிலான எலெக்ட்ரானிக் அடையாள அட்டையைஅரசு 1996ம் ஆண்டு முன் வைத்து, அனைவருக்கும் அடையாள அட்டை தருவதன் மூலம் தேசிய அளவிலான ஒரு திட்டத்தினை அமுல் செய்ய நினைத்தது. இந்த எலெக்ட்ரானிக் அட்டை அமுலில் உள்ள காகித அட்டைகளுக்கு மாற்று அல்ல. இதில் பொதிக்கப்ட்டிருக்கும் ஒருங்கிணைந்த சர்க்யூட் IC மூலம் தகவல்களை அதில் பதிவு செய்வதுடன், அத்தகவல்களை ஒரு தகவல் தொகுப்பில் உள்ளவற்றுடன்தொடர்படுத்தி அறிய முடியும், அத்தகவல் தொகுப்பில் உள்ளவற்றையும் தேவையானபடி மாற்ற முடியும்.அரசு முன்வைத்த திட்டத்தின் படி ரத்த வகை, புகைப்படம், முகவரி உட்பட 42 விதமான தகவல்களைஅவ்வட்டையில் பதிவு செய்ய முடியும்.
இதற்கு அடித்தளமாக 1993ல் தேசிய அளவிலான ஒரு தகவல் தொகுப்பினை அரசு உருவாக்கியிருந்தது.அதில் அனைத்து குடிமக்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் பதிவாயிருந்தன. எனவே புதிய தேசிய அடையாள அட்டைத்திட்டம் நிர்வாத்தினை எளிமையாக்கும், சேவைகளை வழங்குவது திறம்படச் செய்யப்படும், செலவுகளைக் குறைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தகவல் சேகரிப்பின் போதும், பின் தொகுப்பின் போது எழக் கூடிய தனிமைப் பிரச்சினைகள், கண்காணிப்பின் அபாயங்கள், மனித உரிமைஅம்சங்கள் போன்ற பல காரணங்களை முன் வைத்து மனித உரிமை அமைப்புகள். தொழிலாளர் அமைப்புகள், வழக்கறிஞர்களின் சில அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் ஒருங்கிணைந்து இதைஎதிர்த்தன. இந்த எதிர்ப்பின் விளைவாக அரசு சில மாற்றங்களை முன் வைத்தது. இருப்பினும் எதிர்ப்புவலுத்தது. இந்த மாற்ற்ங்களை திட்டத்தினை எதிர்த்த அமைப்புகள் நிராகரித்தன. பலத்த எதிர்ப்புக் காரணமாக 1998ல் இத்திட்டம் இரண்டாண்டுகள் கழித்து நிறைவேற்றப்படும் என்று அரசு அறிவித்தது. பின்னர் 1999ல் இதை முழுமையாகக் கைவிட்டது.
இது இதை எதிர்த்த அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றி. ஆனால் கடந்த இருபதாண்டுகளாக அரசு தகவல்தொகுப்புகளை அமைப்பதிலும், தொழில் நுட்பங்களை தகவல் சேகரிப்பிலும் திறம்பட பயன்படுத்தியுள்ளது.எனவே இத்திட்டம் கைவிடப்பட்டதால் அரசு முற்றிலுமாக தோற்றுவிட்டது என்று கூற முடியாது. மாறாகஇத்திட்டம் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியதாலும், இது முறைகேடாக பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாலும் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பின் விளைவாக அரசு கண்காணிப்பு குறித்த தன் கருத்தை,செயல்பாட்டை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுவிட்டது என்று கருத முடியாது. இது போன்ற ஒரு தேசிய டையாள அட்டை முறை சில நாடுகளில், உதாரணமாக தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர் அமுலில் உள்ளது. சிலவற்றில் இது குறித்த பூர்வாங்க திட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. எனவே குறிப்பிட்ட பிண்ணியினைக் கணக்கில் கொள்ளாமல் உலகெங்கும் கண்காணிப்பு முறையும், அமைப்பும் ஒன்றேதான் என்று கூற முடியாது. உலகளாவிய கண்கானிப்பு சமூகம் என்று கூறும் போது இந்த வேறுபாடுகளையும் கருத்தில்கொண்டே கூறுகிறோம். அமெரிக்காவில் குற்றம் இழைத்தோரை கண்காணிக்க மின்னணு வளையங்கள் கைகளில் பொருத்தப்படும்.அதிலிருந்து எழும் சமிக்ஞைகள் மூலம் அவர் எவ்வளவு தொலைவிலிருக்கிறார் என்பதை அறிய முடியும். ஒரு குறிப்பிட்ட பகுதியின் எல்லையை அல்லது குறிப்பிட்ட ஊரின் எல்லையை அவர் தாண்டக் கூடாதுஎன்று நிபந்தனை இருக்கும் போது இவ்வளையங்கள் மூலம் அவரை இப்படிக் கண்காணிக்க முடியும். ஆனால் இதே தொழில் நுட்பம் அமெரிக்கா போல் ஐரோப்பாவில் அதிக அளவு பயன்படுத்தப்படுவதில்லை.இது போன்ற பல உதாரணங்கள் கண்காணிப்பு என்பது ஏன் மாறுபடுகிறது என்பதை புரிந்து கொள்ள உதவுவதுடன் கண்காணிப்பு என்றால் எங்கும் ஒன்றேதான், உலகெங்கும் அமெரிக்க கண்காணிப்பு முறைதான் பயன்படுத்தப்படுகிறது போன்ற கருத்துக்கள் தவறானவை என்பதை அறியவும் உதவுகின்றன.
இந்தக் கண்காணிப்பின் அரசியல் குறித்து, இதன் தத்துவம், கண்காணிப்பு வகைகள் குறித்தும், தற்போதுகண்காணிப்பு சமூகம் என்று கூறப்படும் கருத்தாக்கம் குறித்த விபரங்களையும், விவாதங்களையும் அடுத்த பகுதியில் காண்போம்.
லா.சா.ராவும் காலமும்


அண்மையில் ஒரு மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், மாநாட்டு அரங்குகள் குறித்து படித்த போது இந்தக் கட்டுரை சுருக்கத்தையும் படித்தேன். லா.சா.ரா குறித்து இவர் கூறுவது சுவாரசியமாக உள்ளது.நான் லா.சா.ரா வின் எல்லாப் படைப்புகளையும் படித்ததில்லை, பலவற்றை முன்னர் படித்திருக்கிறேன். யாராவது இந்தக் கட்டுரையின் பிரதியினைப் பெற்று தமிழில் மொழிபெயர்த்து ஏதாவது சிறு பத்திரிகையிலோ அல்லது இணைய இதழிலோ வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது போன்ற மாநாட்டுக் கட்டுரைகள், ஜர்னல்களில் வெளியாகும் கட்டுரைகளை கவனித்து தமிழில் உடனுக்குடன் சுருக்கமாகவேனும் அறிமுகம் செய்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
வேதம் ஒதும் சாத்தான்கள்

காஞ்சி மடாதிபதி தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் காவல் துறை குழுவின் தலைவராக உள்ள பிரேம் குமார் மீது நீதிமன்றங்கள் சில வழக்குகளில் கூறியுள்ளவை, மற்றும் அவர் மீதான வழக்குகள் குறித்து விரிவான ஒரு செய்தியினை எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
அசோக் சிங்கால் பத்திரிகையாளர்களிடம் சிலவற்றைக் கூறினார்.இது வேறு சில தகவல்களைத் தருகிறது. வழக்கம் போல் இதை வைத்துக் கொண்டு விஷமப் பிரச்சாரத்தில் ஹிந்த்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்தத் தகவல்களை அவர் காஞ்சிபுரத்தில் பணியாற்றிய போதோ அல்லது மாறுதலாகி கடலூர் போன போதோ எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளதா. இப்படிப்பட்டவர் சில வழக்குகளை விசாரிக்கும் போது இதை வெளியிடுவதன் மூலம் ஜெயேந்திரர் மீதான வழக்கு வலுவிழந்துவிடாது. இந்த விசாரணைக் குழவில் வேறு பல அதிகாரிகளும் உள்ளனர். பிரேம் குமார் குறித்த இது போன்ற விபரங்கள் தமிழ் இதழ்களில் முன்பே வெளியாகியுள்ளன. கடலூரில் இவருக்கும், பா.ம.க வினருக்கும் ஏற்பட்ட தகராறு குறித்தும் அவை எழுதியுள்ளன. அது போல் மனித உரிமைக் குழுக்கள் ஒழுங்கு செய்த கூட்டம் குறித்த பிரச்சினையில் இவர் பங்கு குறித்தும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இதில் பெரிதாக புதிது ஒன்றும் இல்லை.

இப்படிப்பட்டவர் ஜெயேந்திரர் வழக்கை விசாரிக்கலாமா என்றால் சட்ட ரீதியாக அதில் தடை இல்லாத போது ஏன் விசாரிக்கக் கூடாது. பிற வழக்குகளை அவர் விசாரிப்பது போன்றது போல்தான் இதுவும். இப்படிப்பட்டவர்கள் காவல் துறையில் இருக்கக் கூடாது என்ற வாதத்தினை எக்ஸ்பிரஸ் முன் வைக்கவில்லை. இவர் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதுதான் இங்கு பிரச்சினை. அவர் சங்காரச்சாரியார் மீதான வழக்குகளை விசாரிப்பதை விட அந்த வழக்குகளே இவர்களுக்கு பிரச்சினை. இக்குழுவில் வேறு அதிகாரிகளும் உள்ளதால் அக்குழுவினை குறை சொல்ல முடியாத நிலையில் வழக்கினைப் பற்றி இப்படித்தான் எக்ஸ்பிரஸால் எழுத முடிகிறது.பிரேம் குமார் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மை என்று ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் அது ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வலுவற்றதாக்கி விடாது.
இப்படிப்பட்ட ஒருவர் நிராபராதி என்று நீருபிக்கப்படும் வரை அவருக்கு காவல்துறையில் பொறுப்புகள் தரக்கூடாது என்று வாதிடலாம். அப்படி வாதிட்டால் என் நிலைப்பாடு இதுதான் : சட்ட ரீதியாக இது சரி என்றால் நீதிமன்றங்களையோ அல்லது அரசையோ அணுகலாமே. வேறு வழக்குகளை இவர் விசாரிக்கும் போது எழாத இக்கேள்விகள் இப்பொழுது ஏன் எழுகின்றன.
பிரேம் குமாருக்கு பதிலாக இன்னொருவர் இதே பொறுப்பில் இருந்தாலும் வழக்குகள் நிலையில் மாற்றம் வராது. ஏனெனில் தனி நபர்கள் இருவருக்கிடையே உள்ள வழக்கல்ல இது. பிரேம் குமார் மீது சட்டரீதியான, துறைரீதியான நடவடிக்கைகளுக்கும் இந்த வழக்கிற்கும் என்னதொடர்பு - ஒன்றுமில்லை. இந்த வழக்கில் அவர் மீது சித்திரவதை, மனித உரிமை மீறல் புகார்கள் இல்லை. எனவேஇந்த வழக்கில் அவர் தொடர்ந்து செயல்படுவதற்கு எதிராக காரணங்கள் ஏதுமில்லை.
இந்தப் புகாரை எழுப்பிய சிங்கால் மோதி பதவி விலக வேண்டுமென்று கோரியதுண்டா. இன்றும் சங்க பரிவாரங்கள்குஜராத் இனபடுகொலையினை மேற்பார்வையிட்ட மோதியை புகழத்தானே செய்கின்றன. அந்த வன்முறைகளைஏதோ ஒருவிதத்தில் நியாயப்ப்டுத்துகின்றனவே. மேலும் மனித உரிமைகள் குறித்து பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் எந்த அளவுஅக்கறை காட்டின என்பது எல்லோருக்கும் தெரியும். ஹிந்துயுனிட்டி போன்ற தளங்கள் கோட்ஸேயின் படத்தினைதளத்தில் வைத்துள்ளதுடன், வன்முறைக்கு ஆதரவாகவே உள்ளன. இப்படிப்பட்ட இவர்கள் பிரேம் குமார் குறித்து பேசுவது கபட நாடகம்.
இப்படி சாத்தான்கள் வேதம் ஓதினாலும், கூக்குரலிட்டாலும் ஒரு பயனுமில்லை. ஏனெனில் வெகுஜன ஆதரவு அவர்களுக்கு இல்லை. மேலும் அவர்கள் எதிர்பார்த்தது போல் இதை ஒரு பெரிய விஷயமாக்க முடியவில்லை. ஏற்கனவே நான் எழுதியது போல், ஒரு நாள் இவர்கள் தூக்குதண்டனைக்கு எதிராகவும், ஆயுள் தண்டனைக்கு எதிராகவும் பேசும் நாள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்
வலைப்பதிவில் மாற்றம்


இந்த வலைப்பதிவினைப் படிப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும், வின்டோஸ் 98 இயங்குதளத்தில் படிக்கஇயலவில்லையென்றும், பையர்பாக்ஸ் இணைய உலாவி கொண்டு படிக்க இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டதால் இதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளேன். இப்பிரச்சினைகளை தெரிவித்த அன்பர்களுக்கும்,தீர்க்க உதவிய திரு.Montresorr, மற்றும் திரு.பி.கே.சிவக்குமாருக்கு என் நன்றிகள். சிவக்குமார் அனுப்பிய வலைப்பதிவு மாதிரியினைப் பயன்படுத்தியிருக்கிறேன். இப்போது இதைப் படிப்பதில் பிரச்சினைகள் இராது என்று நம்புகிறேன். இதே மாற்றம் சிந்தனை வலைப்பதிவிலும் செய்யப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து ?


பா.ம.க தலைவர ராமதாஸ் இட ஒதுக்கிட்டிற்கு ஆபத்து என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில்உச்ச நீதிமன்றம் தந்துள்ள தீர்ப்புகள் பொறியியல் கல்லூரிகள் உட்பட தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் எந்த அளவு தலையிட முடியும் என்பதை தெளிவு படுத்தியுள்ளன. இருப்பினும் இதில் குழப்பம் நிலவுகிறது, குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில். இந்த தீர்ப்புகள் வெளிவந்த போது மத்தியில் அரசாண்ட தே.ஜ.கூ வில் உறுப்பினராக இருந்த பா.ம.க இத்தீர்ப்புகளின் விளைவு குறித்து கவலைப்பட்டதாகவோ அல்லது இட ஒதுக்கீட்டிற்கு இடையூறு வரா வண்ணம் அரசுஎன்ன செய்ய வேண்டுமென்பது குறித்து அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. பா.ம.க மட்டுமல்ல பிறகட்சிகள், இடதுசாரிகட்சிகள் நீங்கலாக, கல்வியில் தனியார்மயத்தினை ஒரு பிரச்சினையாகவே கருதியதில்லை. பா.ம.க, தி.க அவ்வப்போது இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று அறிக்கை விடுவார்கள், கூட்டம், மாநாடு நடத்துவார்கள்.இவர்கள் யாரும் உயர்கல்வியில் தனியார்மயத்தின் விளைவுகள் குறித்து அக்கறை காட்டியதில்லை. இடதுசாரிகள் ஒரளவிற்கு இதில் அக்கறை காட்டியதுடன், கேரளாவில் ஆட்சியில் இருக்கும் வரை தனியார்மயத்தினை எதிர்த்தே செயல்பட்டனர்.
உச்ச நீதிமன்றம் உன்னிகிருஷ்ணன் வழக்கில் கொடுத்த தீர்ப்பினை நிராகரித்து கொடுத்த தீர்ப்பில்தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு தலையீடு குறித்து சிலவற்றை தெளிவுபடுத்தியது.
அது போல்சிறுபான்மையோர் நடத்தும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் அரசின் பங்கு எது என்பதையும்தெளிவுபடுத்தியது. இப்போது தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலைப்பாடு உச்ச நீதிமன்றம்கொடுத்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே உள்ளது. மேலும் அரசு நிதி உதவி அல்லது மான்யம் அல்லது வேறு உதவி தராத போது முழுக்க முழுக்க தனியார் முதலீட்டில் நிறுவப்படும் கல்வி நிலையங்கள் பிற வணிக,தொழிற்சாலைகள் போன்றவைதான். மாணவர் சேர்க்கை, பல்கலைகழக அங்கீகாரம் போன்றவை குறித்து அரசு சில விதிகளை வகுக்ககலாம். ஆனால் இட ஒதுக்கீட்டினை நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என்று வலியுறுத்த முடியாது.
எனவே ராமதாஸ் இப்படி கூறியிருப்பது இன்னொரு அரசியல் ஸ்டண்ட் என்றுதான் சொல்வேன்.