மதனபள்ளியில் ஜெட் லீ


ஹாங்காங்கிலிருந்து வரும் ஆக்ஷன் படங்கள் தமிழ் நாட்டிலும் பிரபலமானவை. இவற்றிற்கு விநோதமானபெயர்கள் தமிழில் தரப்பட்டு வண்ணக்கலரில் இன்று முதல் என்று ஒட்டப்படும் போஸ்டர்களைப் பார்த்திருக்கிறேன். ஆந்திராவில் இத்திரைப்படங்கள் எப்படி ரசிக்கப்படுகின்றன, இவற்றின் ரசிப்பவர்கள் யார், இவற்றிற்கும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து S.V. ஸ்ரீநிவாஸ் விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். இது பற்றிய விபரங்களை இங்கே காணலாம்.

திரைப்படங்களை வெறும் கருத்தியல் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுவதன் குறைபாடுகள் இன்று வெளிப்படை. இப்போது பிரதி வாசிப்பு என்பதுடன் வெகுஜன மக்கள் அப்படங்களை எப்படி அணுகுகிறார்கள், அவர்களுடைய வாசிப்புகள் என்ன, ஒரு கலாச்சாரப் பிண்ணணியில் உருவாக்கப்பட்ட திரைப்படம் வேறொரு கலாச்சாரப் பிண்ணணியில் எப்படி ரசிக்கப்படுகிறது, புரிந்து கொள்ளப்படுகிறது என்பதுடன் அவை எங்குஎவ்வாறு ரசிக்கப்படுகின்றன என்பதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. சினிமா என்ற கலைவடிவத்தின் சமூகப் பரிமாணத்தினை புரிந்து கொள்ள குறிப்பான ஆய்வுகள் தேவை, வெறும் கோட்பாடுகள் மட்டும் போதாது. ரசிகர் மன்றங்கள், வெகு ஜனக் கலாச்சாரம் குறித்தும் குறிப்பான ஆய்வுகள் தேவை. அத்தகைய ஆய்வுகள் இன்று இந்தியாவில் செய்யப்படுகின்றன. ஸ்ரீநிவாஸின் ஆய்வு இந்த வகையில் முக்கியமானது.

குறிப்பு : S.V. ஸ்ரீநிவாஸ் எனக்கு உறவினர் அல்ல, அவருடன் நான் கூட்டாக செயல்பட்டதில்லை.எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர்கள் உண்டு. நான் அவரை அவர் எழுத்துக்கள் மூலமே அறிந்திருக்கிறேன்.

1 மறுமொழிகள்:

Blogger சன்னாசி மொழிந்தது...

ஹாங்காங் படங்களை நான் எனது 9வது வயதிலிருந்து பார்த்துவந்திருக்கிறேன். பள்ளி ஹாஸ்டலில் வீடியோ ஷோ போடும்போதெல்லாம் ஒரு ஹாங்காங் ஆக்ஷன் படமும் ஒரு ஹாலிவுட் படமும், சில தமிழ்ப் படங்களும் கட்டாயப் பிரதிநிதிகள். தமிழ் மற்றும் தெலுங்கில் ஆங்கிலப் படங்கள் அதிகளவு டப் ஆகத்தொடங்கியது ஜூராஸிக் பார்க்கின் பெரும் வெற்றிக்கடுத்துத்தானென்று நினைக்கிறேன். மிக அற்புதமான படமான Ballad of Narayama கூடக் கிட்டத்தட்ட செக்ஸ் படம் ரேஞ்சுக்கு மார்க்கெட் செய்யப்பட்டது. அது நமது கலாச்சாரத்தில் மட்டுமல்ல, தற்போதைய 30-40 வயதுள்ள அமெரிக்கர்களில் பெரும்பாலானோர்கூட ஹாங்காங் குங்-ஃபு படங்களையும் ப்ரூஸ் லீ படங்களையும் பார்த்து வளர்ந்தவர்கள்தான். டப் செய்யப்படாத காலங்களில்கூட ஜாக்கி சானின் பல படங்கள் பெரும் ஓட்டம் ஓடியிருக்கின்றன (குறைந்தபட்சம் நகர்ப்புறப் பகுதிகளில்). ராஜபாளையம் போன்ற semi-rural நகரங்களில்கூட மகாலட்சுமி என்று ஒரு தியேட்டர் பெரும்பாலும் ஆங்கிலப் படங்களை ஆங்கிலத்திலேயே ஓட்டிக்கொண்டிருந்தது. ஆனால், அவை அனைத்தும் ஆக்ஷன் படங்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம், ஹாலிவுட் ஆக்ஷன் என்றால் இயந்திரத்துப்பாக்கி, ஹாங்காங் ஆக்ஷன் என்றால் குங்-ஃபு, டோன்ஃபாக் கட்டைகள், double stick, ஜப்பானிய ஆக்ஷன் என்றால் சாமுராய் வாள்கள் போன்று இந்தியப் படங்களில் ஒரு action symbol இல்லாததும், மேலும் பெரும்பாலும் நமது படங்கள் அடிதடிப் படங்களாக இல்லாததாலும், அவை அனைத்தையும் ஆர்வத்துடன் பார்க்கிறோமென்று நினைக்கிறேன். இப்போது வந்த Kill Bill, ஹாங்காங், ஜப்பானிய B-grade குங்-ஃபு மற்றும் யக்கூஸா (Yakuza gangster movies) படங்களுக்கான ஒரு துதிபாடலே! படத் தலைப்பெழுத்துக்களிலேயே Tohoscope என்றிருப்பதைவைத்துப் பார்த்துக்கொள்ளலாம். சுவாரஸ்யமான விஷயம்தான். திரைப்பட ரசனையை சமூகவியல் பார்வையில் ஆவணப்படுத்துவது மிகவும் இன்றியமையாத ஒன்றே.

3:41 PM  

Post a Comment

<< முகப்பு