இதுவும், அதுவும்: யுனிகோட், திஸ்கி வலைப்பதிவு


இந்த வலைப்பதிவினைப் படிப்பதில் சிரமங்கள் உள்ளதென பின்னூட்டங்களிலிருந்தும்,மின்னஞ்சல்களிலிருந்தும் அறிகிறேன்.எனக்கு தெரிந்ததை வைத்துக் கொண்டு சிலவற்றை செய்து பார்த்தேன், அப்படியும் பிரச்சினைகள் தீரவில்லை.
ஒரு தீர்வாக இனி திஸ்கியிலும் (tscii) வலைப்பதிவதென்று முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு பதிவின் கீழும் திஸ்கி பதிவின்இணைய முகவரியும் இடம் பெறும். தற்போதுள்ள கண்ணோட்டம் என்ற தலைப்பிலுள்ள பதிவுகளில் உள்ளவற்றைதிஸ்கியில் மாற்றி அங்கு பதிவதாக எண்ணம் இல்லை. புதிய பதிவுகள் மட்டுமே அங்கு இடம் பெறும்.
உண்மை, உலக உண்மை, காஞ்சி உண்மை


காஞ்சி மடாதிபதி கைது ஹிந்த்துவ சக்திகளை கலங்க வைத்துள்ளது.கொள்ளிக் கட்டைகளை மிதித்த குரங்குகள் போல் கூச்சல் போடுகின்றன. மக்கள் ஆதரவில்லை என்று தெரிந்தாலும் முன் வைத்த காலை பின் வைக்க முடியாமல் தவிக்கின்றன. பா.ஜ.க போராட்டத்தினை கைவிட்டது.எவ்வளவு நாள்தான் உண்ணாவிரதம் இருக்க முடியும், சாமியார்களுக்குகூட்டம் வருகிறது, தர்ணாவிற்கு அல்ல என்பது புரிந்துவிட்டதால் பா.ஜ.க ஆர்ப்பாட்டங்களை நிறுத்திவிட்டது. அனல் பறக்கும் அறிக்கைகள், பேட்டிகள் தருவது அதை விட எளிதல்லவா.

ஹிந்த்துவ ஆதரவு பத்திரிகையாளர்கள், குருமூர்த்தி போன்றவர்கள் என்னதான் எழுதினாலும் ஊடகங்களில் வேறு செய்திகள், தகவல்கள் வருகின்றன. ஹிந்து வேறு ஜெயல்லிதாவின் முழு அறிக்கையையும், நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட ஆவணங்களையும் இணைய தளத்தில் இட்டு விட்டது. கைதில் மனித உரிமை மீறல், விதிகள் பின்பற்றப்பட்டவில்லை என்ற வாதம் எடுபடவில்லை. பிணை கிடைக்கவில்லை. இப்போது இன்னொரு வழக்கு வேறு.

மட பக்தர்கள், அதாவது காஞ்சி மட பக்தர்கள் தங்கள் பங்கிற்கு உலகிற்கு உண்மைகளைத் தர ஒரு இணைய தளம் அமைத்துள்ளனர். அவர்களது நோக்கம் என்ன என்பதை தெளிவாக இதில் சொல்லிவிட்டதால் இதில் நடுநிலைமை, உண்மை ஆகியவற்றை தேட வேண்டாம். (One last word. The devotees of the Kanchi Mutt put up this site; therefore, it is not an unbiased site. It only presents all the facts and information in favour of our Periyavaal and the Mutt, in a fair manner. If you are looking for anything else more sensational, you have a wide range of media to choose from.) ஹிந்து யுனிட்டி தளம் சங்கராச்சாரியார் தாக்கப்பட்டார், மாமிச உணவினை அவருக்குக் கொடுத்தார்கள் என்றெல்லாம் புரளியைப் பரப்பியது. இந்தத் தளம் அவ்வளவு மோசமாக பொய்களைப் பரப்பாது என்று எதிர்பார்க்கிறேன்.

எது எப்படியோ "எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது"
மதனபள்ளியில் ஜெட் லீ


ஹாங்காங்கிலிருந்து வரும் ஆக்ஷன் படங்கள் தமிழ் நாட்டிலும் பிரபலமானவை. இவற்றிற்கு விநோதமானபெயர்கள் தமிழில் தரப்பட்டு வண்ணக்கலரில் இன்று முதல் என்று ஒட்டப்படும் போஸ்டர்களைப் பார்த்திருக்கிறேன். ஆந்திராவில் இத்திரைப்படங்கள் எப்படி ரசிக்கப்படுகின்றன, இவற்றின் ரசிப்பவர்கள் யார், இவற்றிற்கும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து S.V. ஸ்ரீநிவாஸ் விரிவாக ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியுள்ளார். இது பற்றிய விபரங்களை இங்கே காணலாம்.

திரைப்படங்களை வெறும் கருத்தியல் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுவதன் குறைபாடுகள் இன்று வெளிப்படை. இப்போது பிரதி வாசிப்பு என்பதுடன் வெகுஜன மக்கள் அப்படங்களை எப்படி அணுகுகிறார்கள், அவர்களுடைய வாசிப்புகள் என்ன, ஒரு கலாச்சாரப் பிண்ணணியில் உருவாக்கப்பட்ட திரைப்படம் வேறொரு கலாச்சாரப் பிண்ணணியில் எப்படி ரசிக்கப்படுகிறது, புரிந்து கொள்ளப்படுகிறது என்பதுடன் அவை எங்குஎவ்வாறு ரசிக்கப்படுகின்றன என்பதும் கருத்தில் கொள்ளப்படுகிறது. சினிமா என்ற கலைவடிவத்தின் சமூகப் பரிமாணத்தினை புரிந்து கொள்ள குறிப்பான ஆய்வுகள் தேவை, வெறும் கோட்பாடுகள் மட்டும் போதாது. ரசிகர் மன்றங்கள், வெகு ஜனக் கலாச்சாரம் குறித்தும் குறிப்பான ஆய்வுகள் தேவை. அத்தகைய ஆய்வுகள் இன்று இந்தியாவில் செய்யப்படுகின்றன. ஸ்ரீநிவாஸின் ஆய்வு இந்த வகையில் முக்கியமானது.

குறிப்பு : S.V. ஸ்ரீநிவாஸ் எனக்கு உறவினர் அல்ல, அவருடன் நான் கூட்டாக செயல்பட்டதில்லை.எனக்கும் அவருக்கும் பொதுவான நண்பர்கள் உண்டு. நான் அவரை அவர் எழுத்துக்கள் மூலமே அறிந்திருக்கிறேன்.
ஒரு நாள் ?


கைது செய்யப்படுவோர் உரிமைகள், மனித உரிமைகள் குறித்து 'கவலைப்படுவோர்' எண்ணிக்கை திடீரெனஅதிகரித்துள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத், மனித உரிமை அமைப்புகள் போல் உண்மைக் கண்டறியும் குழு அமைத்து ஜெயேந்திரர் கைது குறித்து ஒரு அறிக்கை வெளியுட்டள்ளது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இக்கைதில் மனித உரிமை மீறல் இருப்பதாகக் கூறியுள்ளார். தமிழக அரசு ஊழியர் போராட்டத்தின் போது இவர்எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார். இந்த முன்னாள் தொழிற்சங்க வாதிக்கு அவர்களெல்லாம்நண்பர்கள் இல்லை போலும், முப்பதாண்டு கால நண்பரை இப்படி கைது செய்தால் கோபம் வராதா என்ன?.

கொஞ்ச காலம் பொறுங்கள், இவர்களே மரண தண்டனைக்கு எதிராகவும், ஆயுள் தண்டனைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வாய்ப்பு கிடைக்கலாம். இவையெல்லாம் இந்து தர்மத்திற்கும் சாஸ்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் விரோதம் என்று. அன்று ஒரே மேடையில் நாம் சுப்பிரமண்யம் சுவாமி, ஜார்ஜ், தொகாடியா, அத்வானி,ராம கோபாலன்,சோ உட்பட பலர் குரல் கொடுப்பதை கேட்க நேரிடலாம். ஆனால் அதற்குள் பொடா வழக்கில் கைதானவர்களுக்கு நீதி கிடைக்குமா, சதாசிவா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நீதி கிடைக்குமா என்றெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டாம்.
ஒரு சிலர் எப்போதுமே வெகு பலரை விட அதி சமம் என்பதை நினைவில் கொள்க. இதுதான் அவர்களது 'அத்வைதம்' அன்றும் இன்றும் ....
ஷீரின் எபாடியின் பிரச்சினை

ஷீரின் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் தன் நினைவுக் குறிப்புகளை ஒரு நூலாக எழுத விரும்பினார்.ஆனால் அதை அமெரிக்காவில் வெளியிடுவதில்பிரச்சினை. என்ன பிரச்சினை - அவரது கட்டுரையைப் படியுங்கள். நம்ப முடியாதது போல்தோன்றும் ஆனால் அதுதான் உண்மை.ஜெயேந்திரர் கைது - சில குறிப்புகள், கருத்துக்கள்

1,சாட்டப்பட்டுள்ள குற்றம் கடுமையானது. இதில் இ.பி.கோ 302 ஐ திரைப்படங்களில் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். குற்றம் நீருபிக்கப்பட்டால் இதற்கு அதிகபட்ச தண்டனை மரண தண்டனை. பிறபிரிவுகளும் கடுமையான தண்டனைக்கு இடமளிக்கும் பிரிவுகளே. அதே சமயம் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கிடமின்றி ஒருவர் கொலைச் செய்யத் தூண்டினார், கூட்டாக திட்டமிட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் சந்தேகத்தின் பயன் குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கிடைக்கும். போதுமான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லாமல் இது போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் ஒருவரை தண்டிப்பதுகடினம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் போதுதான் எந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்பது தெரிய வரும்.

2, இந்த பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் பெயில் கிடைப்பது கடினம்.அப்படியே கிடைத்தாலும் அது நிபந்தனைகளுடனான பெயிலாகவே இருக்க வாய்ப்புள்ளது.பொதுவாக இத்தகைய வழக்குகளில்பெயில் கொடுப்பதை அரசு தரப்பு எதிர்க்கும்.ஏனெனில் முதலில் கைது செய்வது ஒருவரை போலிஸ் காவலில் விசாரிக்க, சாட்சிகளை கலைத்து விடாமலிருக்க, ஆதாரங்களை அழித்து விடாமலிருக்க. கைதான உடனே நிபந்தனையற்ற பெயில் தரப்பட்டால் கைது செய்த நோக்கம் நிறைவேறாது. அழகிரிக்கு பெயில்கிடைக்க எவ்வளவு காலமானது என்பதை நினைவு கூர்ந்தால் நான் சொல்வது எளிதில் விளங்கும்.

3,பெயில் கிடைக்காத போது கைதியாக உள்ள ஒருவர் ஒரு மடத்தலைவராக நீடிக்க முடியுமா, அப்படியெனில் எவ்வளவு காலம் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. மடாதிபதியாக நீடிக்க முடியாத போது அவர் ஒரு துறவிதான்.ஒரு வேளை வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் இறுதியில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்ட்டால் மீண்டும் மடாதிபதியாக முடியுமா, இல்லை வெறும் துறவியாகவே இருக்க வேண்டியதுதானா - இது போல் பல கேள்விகள் உள்ளன.

4, வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தக் கைதினை செய்திராவிட்டால்திமுக இந்த வழக்கினை ஒரு பிரச்சினையாக்கி, சட்ட ரீதியாக அணுக முயலும் என்பதால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தோன்றுகிறது. திமுக தரப்பில் வலுவான ஆதாரம் அல்லது ஆவணம் இருந்தால் இதில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, முக்கிய குற்றவாளி என்று சந்தேகிக்கப்படுபவரை பாதுகாக்கிறது எனவே இதை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோரும் வாய்ப்பிருக்கிறது. மேலும் செப்டம்பரில் நடந்த கொலைக்கு கிட்டதட்ட 8 வாரம் கழிந்த பின்னர் கைது செய்துள்ளதால் அதற்கு வலுவான காரணங்கள் இருக்ககூடும். வெறும் யூகங்கள், அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக இக்கைது செய்யப்படவில்லை. ரீடிப்பில் சோவின் பேட்டியும் ஆதாரம் உள்ளது என்ற வாதத்திற்கே வலுச் சேர்க்கிறது. காவல் துறை அவரிடம் மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
5, அவர் சார்பில் வாதடிய வழக்கறிஞர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலரிடமிருந்த வந்த தொலைபேசி கால்கள் மடத்து நிர்வாகியின் பெயரில் இருந்த செல்போன்களுக்கு வந்துள்ளதாக கூறியிருக்கிறார். அப்படியானால் அவர்களுக்கும் மடத்தும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்றுதானே பொருள் கொள்ள முடியும். அது எத்தகைய தொடர்பு என்பதே கேள்வி. Contesting the claims made by the PP, the counsel said all the cellphones on which the calls were received from the accused were not in the name of Sankaracharya but in the name of the Manager of the Mutt மேலும் செல்போன் யார் பெயரில் இருக்கிறது என்பதை விட யார் அதில் யாருடன் பேசியிருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
6, கைது செய்ய போதுமான காரணங்கள் இருந்ததாலே கைதாகியுள்ளார் என்றே கூற முடியும். மேலும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளவையும்,கடலூர் எஸ்.பி. பிரேம் குமார் கூறியுள்ளவையும் அவரை இக்கொலையில் தொடர்புபடுத்த ஆதாரங்கள் இருக்கின்றன என்ற எண்ணத்தினையே ஏற்படுத்துகின்றன. அரசு வழக்கறிஞர் பயன்படுத்தியுள்ள சில வார்த்தைகள் மிக கடுமையானவை, இவற்றை முன்யோசனையின்றி பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. மாறாக பீடம் மரியாதைக்குரியது நபர் அல்ல என்பன மூலம்அவருக்கு சிறப்பு சலுகையோ மரியாதையோ தரப்படவேண்டியதில்லை, குற்றம் சாட்டப்பட்டுள்ள பிறர் போலவே அவரும் கருதப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் என்றே இதைப் புரிந்து கொள்ள முடியும்.
7, ஹிந்து முன்பு ராதாகிருஷ்ணன் என்பவர் மீதான கொலை முயற்சியைக் குறித்தும், அதில் குற்றவாளிகள்இன்னும் பிடிபடாதது குறித்தும், இவ்வழக்கில் பத்திரிகைகள், குறிப்பாக நக்கீரன் தகவல்களை வெளிக்கொணர்ந்தது குறித்தும் குறிப்பிடுகிறது. நான் நக்கீரன் படிப்பதில்லை. ஆனால் ஜூ.வி யும், ரிப்போர்ட்டரும் இதில் அதிக அக்கறை காட்டவில்லை, ஜெயலட்சுமி, செரீனா, சரவணபவன் ராஜகோபால் போன்றவர்கள்குறித்த வழக்குகள்,குற்றசாட்டுகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சங்கர் ராமன் கொலை விவகாரத்திற்குதரவில்லை. இனி மேல் நிலைமை மாறும், தொடர்ந்து இது குறித்து இரண்டும் எழுதும். ஏனெனில் வேறு வழியில்லை, பிழைப்பு நடக்க வேணுமே, வியாபாரம் செழிக்க வேணுமே.
8, இதனால் காஞ்சி மடத்தின் புகழ் குன்றும், இருக்கும் மரியாதைக்கும் பங்கம் வரும். இந்து மதம் ஒரு மடத்தை துறவியைச் சார்ந்து இல்லை. இதனால் இந்து மதத்திற்கு பாதிப்பில்லை. மேலும் இந்துக்களின் ஒரு பிரிவினருக்கே காஞ்சி சங்கர மடம் குரு மடம் அல்லது பீடம். அவருக்கு ஏராளமானபக்தர்கள் இருக்கலாம். அவர்கள் எல்லோருக்கும் இம்மடம் குரு பீடம் அல்ல. ஜகத் குரு என்றுசொல்லிக் கொள்ளலாம் , ஆனால் முன்பு கல்கி எழுதியது போல் அவர் ஒரு பிரிவினருக்கு, தமிழ் பேசும்ஸ்மார்த்த பிரமாணர்களுக்கு என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், அவர் தலைவர் அல்லது குரு.இது தவிர பிற பீடங்கள் சங்கரர் நிறுவியவை இருக்கினறன. எனவே இந்து மதத்திற்கே இக்கைதினால்ஆபத்து, களங்கம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மாறாக இது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட உதவினால்நல்லது.
அட சங்கரா !

ஒரு கொலைவழக்கில் சங்கராச்சாரியார் கைதான உடன் பா.ஜ.க சார்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களைப் படிக்கும் போது சிரிப்புதான் வருகிறது. பொடாவைக் கொண்டு வந்தவர்கள் இப்படியெல்லாம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. எந்தக் காரணமும் காட்ட வேண்டியதில்லை, குற்றப்பத்திரிகையைக் கூட 90 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டியதில்லை, பெயில் கிடைப்பது மிகக் கடினம் என்பது போன்ற விதிகளைக் கொண்ட சட்டத்தினை அது தவறாகப் பயன்படுத்தக்கூடிய எல்லா வழிகளை வைத்துவிட்டு அன்று தேசப் பாதுக்காப்பு, தீவிரவாதம் என்று சொல்லி அதை நியாயப்படுத்தியவர்கள் ஜெயந்திரர் கைது என்ற உடன் வேறு விதமாக கைது தேவைதானா என்றெல்லாம் பேசுவது ஏன்.
கொஞ்சம் முன் யோசனையுடன் அன்றே மடாதிபதிகள் குற்றங்கள் செய்தால் அவர்களைத் தண்டிக்க தனிச் சட்டம் கொண்டு வந்திருக்கலாம். அதில் அவர்களை போலிஸ் கைது செய்யக் கூடாது, சிறைக்காவல் கூடாது, ஆர்.எஸ்.எஸ் பொறுப்பில் விட வேண்டும், நரேந்திர மோதிதான் நீதிபதி என்றெல்லாம் விதிகளை வகுத்திருக்கலாம். என்ன செய்வது என்றும் ஆளப்போவது நாம் என்ற இறுமாப்பில் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அத்தகைய சட்டம் செல்லுபடியாகுமா என்பது வேறு விஷயம்.

பொடாவில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நக்சலைட்கள் இதுவரை விசாரணையை எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கு பெயிலும் கிடைக்கவில்லை. அருண் ஜெய்ட்லி இது குறித்து வாய் திறந்ததுண்டா. அவர்களுக்காக, நக்சலைட்களுக்காக வாதிடும் சந்துரு ஹிந்துவில் இது குறித்து கூறியுள்ளதையும் படியுங்கள். ஜெயந்திரேர் ஒரு மடத்தின் தலைவராக இருக்கலாம். சட்டத்தின் முன் அவரும் ஒரு சாதாரண குடிமகன்தான். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பிறர் போல்தான் அவரையும் நடத்த வேண்டும்.எது எப்படியோ காஞ்சி மடம் குறித்த உண்மை தெரிய இது ஒரு வாய்ப்பு. ஊடகங்கள் மூலம் ஏற்பட்டிருந்த பிரமைகள் இனிக் கலைந்து விடும். அது ஊடகங்கள் மூலமே நடப்பது விதியின் விளையாட்டு என்று சொல்லலாம்.

நாளிதழ்களுக்கு, மற்றும் பிற இதழ்களுக்கு அதிக வேலை.ஏகக் காலத்தில் இரண்டு சாமியார்கள் இப்படி கைதாகி பரபரப்பூட்டினால் இதற்காக தினசரி தனி இணைப்பா கொண்டு வரமுடியும். எனவே இந்த பரபரப்பு அடங்கும் வரை பிற சாமியார்கள் பொறுமை காக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். கொலை, ஆள் கடத்தல் போன்றவற்றை சிறிது காலம் ஒத்திப் போடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு சாமியார் என்பது அனைத்து மத மற்றும் மதம் சாரா சாமியார்களுக்கும் பொருந்தும்.
ஹெமிங்வேயின் கியுபா இல்லம்.... ?


புகழ் பெற்ற எழுத்தாளர் ஹெமிங்வேயின் கியுபா இல்லம், சிதிலமடைந்து போய் விடுமா, பல ஆவணங்களும்.புகைப்படங்களும் அழிந்துவிடுமா. அறியப் படியுங்கள் இதை
தீபாவளி - பா.ஜ.க ஸ்டைல்

ஒலை வெடியைக் கொளுத்தியவர் உமா பாரதி
அதை எதிர்த்து அத்வானி போட்ட வெடி
அவர் மீதே விழுந்து வெடித்தது
அதை உலகமே பார்த்தது
சிறிய வெடிகள் வெடித்தன
பெரிய வெடி வெளியேறியது
ஒரு ஆயிரம்வாலா தற்காலிகமாக
அமைதியாயிருக்கிறது
அது என்று வெடிக்குமோ
அதனுடன் வேறு எந்த வெடியெல்லாம்
வெடிக்குமோ
கட்சித் தலைமை மேல்
இடி போல் விழுமோ

ஆட்சி போயே போச்சு
மகராஷ்டிராவில் மண்ணைக் கவ்வியாயிற்று
கூட்டணி கட்சிகள் பயமுறுத்துகின்றன
ஆர்.எஸ்.எஸ் சமயம் தெரியாமல் மிரட்டுகிறது
விஸ்வ ஹிந்து பரிஷத் வம்பு செய்கிறது
பா.ஜ.க விற்கு மகிழ்ச்சியான
தீபாவளி இல்லை

விரைவில் உலகத் தொலைக்காட்சிகளில்
பா.ஜ.க வின் அடுத்தவெடித்திருவிழா-
அனல் பறக்கும் காட்சிகள்-
விறுவிறுப்பான திருப்பங்கள்-
எதிர்பார்த்திருக்கவே முடியாத
நிகழ்வுகள்
காணத்தவறாதீர்கள் -
நடப்பதை அப்படியே காட்டுகிறோம்
உங்கள் வீட்டுக் கூடத்திலிருந்தே
காணலாம்
பா.ஜ.க ஒளிர்வதை


ராஜ் டி.வி - உயர்நீதி மன்றத் தீர்ப்பு


இவ்வழக்கில் உயர்நீதி மன்றம் தந்துள்ள தீர்ப்பு நான் எதிர்பார்த்தபடி உள்ளது. மேல் முறையீடு செய்ய,அதாவது இத்தீர்ப்பினை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வழியுள்ளதா என்பது தெரியவில்லை.ராஜ் டி.வி லைசென்ஸ் ரத்து விவகாரம் குறித்து நான் பத்ரி, அருண் இருவரின் வலைப்பதிவுகளிலும் என் கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். அதையும் படித்தால் என் வாதம் எதுவென்பதைப் புரிந்து கொள்ளலாம்.இத் தீர்ப்பு குறித்து எனக்கு வருத்தமோ மகிழ்ச்சியோ இல்லை. விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளவனா, அவ்வாறில்லையெனில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டபூர்வமாக செல்லுபடியாகக் கூடியாதா - இந்தக் கேள்விகள் சட்ட ரீதியாகவே அணுகப்பட வேண்டும் என்பதே அன்றும், இன்றும் என் கருத்து.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளும், பின்னரும்


புஷ் வெற்றி பெற்றது குறித்து கடந்த நான்கு அல்லது ஐந்து தினங்களக இணையத்திலும், நாளிதழ்களிலும்தொடர்ந்து பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பல தொடர்ந்து செயல்பட வேண்டியதன் தேவை¨யும்,இத்தேர்தல் மூலம் திரட்டிய ஆதரவை தக்க வைத்துக் கொண்டு ஆதரவினை விரிவுபடுத்துவது குறித்தும் குறிப்பிடுகின்றன. சில ஜனநாயகக் கட்சி தன் கொள்கைகளை மறுபரீசலனை செய்ய வேண்டும் என்றும் தேர்தலின் போது அவை எதிர்பார்த்த ஆதரவு பெருமளவிற்கு கிட்டிய போதும் அவை முழுவதும் ஆதரவான ஒட்டுகளக மாறவில்லை என்பதற்கான காரணங்களை ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்துக்கின்றன. இத்தேர்தல் ஐரோப்பா-அமெரிக்க உறவில் எத்தகைய மாற்றத்தினைக் கொண்டு வரும் என்பது குறித்து ஐரோப்பாவிலிருந்து வெளியாகும் நாளிதழ்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளைப் பார்க்கிறேன். மேலும் இத்தேர்தலில் ஐயோவாவில் புஷ் ஏன் வெற்றிப் பெற்றார், கிறிஸ்துவ மதஅடிப்படைவாதிகள் எப்படி தங்கள் பலத்தினை ஒட்டின் மூலம் காட்ட முயற்சி செய்தனர் என்பது குறித்தும், இத்தேர்தல் அமெரிக்க சமூகம் இரண்டாக பிளவுபட்டுள்ளதைக் காட்டுகிறாதா என்பது குறித்த விவாதங்களையும் கட்டுரைகள் முன் வைக்கின்றன.
தேர்தலில் கிட்டதட்ட 40 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களில் 51 அல்லது 52 சத்ம் பேரே,after rounding off, புஷ்ஷிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். வேறுவார்த்தைகளில் சொன்னால் புஷ்ஷிற்கு ஆதரவாக ஒட்டளித்தவர்கள் 33 சதவீதத்திற்கும் குறைவானோரே. 40 சதவீத மக்கள் ஏன் வாக்களிக்கவில்லை. அவர்களது அலட்சியத்திற்கு என்ன காரணம். இது போல் கேள்விகள் எழுகின்றன.

இக்கட்டுரைகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை தொகுத்து வகைப்படுத்தி எழுதினால் சில விஷயங்கள் குறித்து தெளிவு கிடைக்கும் என நினைக்கிறேன். இதைச் செய்ய எனக்கு நேரமில்லை. யாராவது கட்டுரைகள், இணையதளங்கள் குறித்து விப்ரங்கள் கேட்டால் தர இயலும். அப்படி ஒரு கட்டுரையை உடனே எழுத வேண்டும்என்பதில்லை, இன்னும் ஒரிரு மாதங்கள் கழித்துக் கூட எழுதலாம். அதற்குள் புஷ் செல்லும் பாதை என்ன என்பது குறித்து ஒரளவெனும் முடிவிற்கு வர முடியும்.
கவிதை,உடல்,போர்,நாடு - இஸ்ரேலிலிருந்து ஒரு குரல்


இதைப் படித்துப் பாருங்கள். தற்போதைக்கு என்னால் இந்த ஒரு வரிதான் இதைப் படித்த பின் எழுதமுடிகிறது.
http://www.counterpunch.org/zonsheine11052004.html
ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு


ஆசார கீனனின் உண்மையான அக்கறை என்ன என்பது எனக்குப் புரியவில்லை. இடதுசாரிகளையும்,ஹிந்துவையும் விமர்சிப்பது என்றால் அதை தெளிவாகவே அவர் சொல்லிவிடலாம், அதற்கு முஸ்லிம்பெண்களை ஒரு சாக்காக பயன்படுத்ததேவையில்லை. ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தைப் பற்றி ஹிந்து எழுதவில்லை என்பதைக் குறிப்பிடும் அவர் ஹிந்துவில் அம்பை உட்பட பலர் முஸ்லீம் பெண்களின் நிலை குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெண்ணுரிமை விரோதப் போக்கினை விமர்சித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதை ஏன் குறிப்பிட மறுக்கிறார். அஸ்கார் அலி இன்ஜியர் உட்பட பலர் ஹிந்துவில் பெண்ணுரிமைக்கு ஆதரவாக எழுதியிருக்கிறார்கள். இந்த விதத்தில் ஹிந்துவை ஒரு லிபரல் பத்திரிகை என்றே நான் கருதுகிறேன். எல்லா ஏடுகளும் எல்லாச் செய்திகளையும் வெளியிடுவதில்லை.ஆனால் ஒரு ஏடு தொடர்ந்து எத்தகைய கருத்துகளை வெளியிடுகிறது, எவற்றை ஆதரிக்கிறது என்பதை வைத்து அதன் நிலைப்பாட்டை நாம் அறியமுடியும். மனுஷி பெண்களும், சமூகமும் குறித்த ஒரு ஏடுதான். ஆனால் அதில்ஏன் பெண்கள் இயக்கங்கள் தரும் அறிக்கைகள், கையெழுத்து இயக்கங்கள், உட்பட பலவற்றைப் பற்றிசெய்திகள், குறிப்புகள் வருவதில்லை என்றே கேள்விக்கு, மது கிஷ்வார் கூறிய பதில் இங்கு நினைவுக் கூறத்தக்கது. மனுஷி ஒரு ஏடு, நாங்கள் எங்களுக்கு கிடைப்பதையெல்லாம் பிரதி எடுத்து விநியோகிக்கமனுஷியை கொண்டு வரவில்லை. ஒரு ஏடு என்ற முறையில் மனுஷி ஒரு விவாதக்களம், கட்டுரைகள்,பேட்டிகள், கடிதங்கள், கவிதைகள், கதைகளுக்கு இடமுண்டு. நாங்கள் முக்கியமானவை என்று கருதும்விஷயங்களுக்கு நாங்கள் முன்னுரிமை தருவோம், இதன் பொருள் நாங்கள் வெளியிடாத அறிக்கைகளுக்குநாங்கள் விரோதிகள் என்பதல்ல. ஒரு ஏட்டில் பெண்கள் குறித்த எல்லாப் பிரச்சினைகளுக்கும், இயக்கங்களின் போராட்டங்கள் குறித்த எல்லாத் தகவல்களுக்கும் இடம் அளிப்பது சாத்தியமில்லை. மனுஷி போஸ்டர் ஒட்டப்படும் சுவர் அல்ல.
இண்டர் நேஷனல் ஹெரால்ட் டிரிபியுனுக்கு கீரிப்பட்டியும், பாப்பாரபட்டியும் முக்கிய செய்திகளாக இருக்காது. பினான்ஷியல் டைம்ஸ் காவிரி பிரச்சினைக்கு தொடர்ந்து இடம் தராது. இதற்காக டிரிபியுன் தலித் விரோதி என்று சொல்ல முடியுமா. ஏன் இதே ஆசார கீனன் இந்தியாவில் விவரணப்படங்கள் தணிக்கை குறித்த சர்ச்சை குறித்து ஒன்றும் எழுதவில்லை, எனவே அவர் கருத்துத் சுதந்திரத்திற்கு விரோதி என்று எழுதினால் அது ஏற்புடையதா. இரண்டு அடிப்படைவாதங்கள் - ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதம், இன்னொன்று நவ நாசிசத்துடன் தொடர்புடைய, குடியேரியவர்களை, குறிப்பாக முஸ்லீம்களை எதிர்மறையாக சித்தரித்து அவர்களை ஆபத்தானவர்கள் என்று முத்திரையிட்டு அவர்களது கலாச்சார உரிமைகளை குறைக்க முயலும் அடிப்படைவாதம், இது வலதுசாரி அடிப்படைவாதம்.
இரண்டும் லிபரல் கண்ணோட்டங்களுக்கு எதிரானவை. இரண்டையும் எதிர்க்க வேண்டும், இதுதான் என்நிலைப்பாடு. இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிக ஆபத்தானது என்று கூறி இன்னொரு அடிப்படைவாதத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்க முடியாது.
இப்படி இல்லாமல் ,இஸ்லாமிய பெண்களின் பிரச்சினை, அவர்களது உரிமைகள் குறித்து விவாதிக்க முடியும், ஒரு லிபரல் கண்ணோட்டத்திலிருந்து. இஸ்லாமிய பெண்களின் இயக்கங்கள், முஸ்லீம் லிபரல் சிந்தனையாளர்கள் குறித்தும் பேச வேண்டும். இத்துடன் multi culturalism,cultural rights குறித்தும் விவாதிக்க வேண்டும். இவை குறித்து பல நூல்கள், கட்டுரைகள் உள்ளன. சிலவற்றை நான் திண்ணையில் குறிப்பிட்டுள்ளேன். இந்தியாவிலும் இவை குறித்து விவாதம் நடைபெற்றுள்ளது, நடைபெறுகிறது. உதாரணமாகபிரான்சில் மாணவிகள் head scarf அணிவது குறித்த தடை பற்றி நளினி ராஜன் எழுதியிருக்கிறார். இவற்றைப் படித்து, புரிந்து கொண்டு சில கருத்துக்களை முன்னிறுத்துவது கடின உழைப்பையும், தொடர்ந்த அக்கறையையும் கோருவது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதிவிட முடியாத விஷயங்கள் இவை.
ஒரு புரிதலுக்காக நூல்களை, நீண்ட கட்டுரைகளை படிப்பதை விட, அதன் அடிப்படையில் ஒரு விரிவான விவாதத்திற்கு இடமளிக்கும் வகையில் எழுதுவதை விட, செய்திகளின், சில சான்றுகளின் அடிப்படையில் ஒரு சில வெறுப்புகளை முன்னிறுத்துவதும், அதை வெளிப்படையாகக் கூறாமல் சிலவற்றை காரணம் காட்டுவதும் எளிது. ஆசாரகீனன் தொடர்ந்து அதைத்தான் திண்ணையில் செய்துவருகிறார்.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்

உலகம் இன்னும் நான்கு வருடங்கள் புஷ்ஷை சகித்துக் கொள்ள வேண்டும். புஷ் தன் போக்கினை மாற்றிக் கொண்டால் நல்லது. ஆனால் இந்த வெற்றி வேறுவிதமாக எடுத்துக்கொள்ளப்பட்டால் வட கொரியா, ஈரான் என்று அடுத்தக் கட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா தயராகலாம். இது கடவுள் தந்த பரிசு, தீமையை ஒழிக்க இன்னொரு வாய்ப்பு என்று அவர் கருதினால் அதன் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். பின் லாடென் என்ன நினைக்கிறாரோ, புஷ் வெற்றியை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என்றே தோன்றுகிறது. Double bind என்ற நிலையில் அமெரிக்காவும், அது எதிரிகளாக அறிவித்த இயக்கங்களும், உள்ளன. இது எங்கு போய் முடியுமோ.