ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்


கவர்னர் பதவியை காரணம் காட்டி ஒரு கேலிக்கூத்து மீண்டும் அரங்கேறியுள்ளது.சட்டப்படி தான் செய்தது சரி என்று ஜெயலலிதா சொன்னாலும் ஒரு உரையாடலை இப்படி பயன்படுத்துபவர் நாளை பிறர் தன்னுடன் உரையாடும் போது அதை பதிவு செய்து பயன்படுத்தமாட்டார் என்பது என்ன நிச்சயம்.இந்த அரசு தகவல் பெறும் உரிமையில் அக்கறை காட்டும் அரசா. இல்லை கருத்து சுதந்திரத்தை மதிக்கும் அரசா. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு ஆளுனர் மாற்றத்தினை தடை செய்யாது என்பது தெரிந்த பின்னும் இதை வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன. இதில் தலைமைச் செயலாளர் எடுத்துள்ள நிலைப்பாடு அ.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் எடுக்கும் நிலைப்பாடு போல் உள்ளது. இ.ஆ.ப வில் உள்ளரவர்கள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும், இது போன்ற அரசியல் விவகாரங்களில் அல்ல. இது போல் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் நடந்து கொள்ள ஆரம்பித்தால் அதற்கு முடிவே இராது. ஏனெனில் அதிகாரிகள் அரசியல் கட்சி விவகாரங்கள், அரசியல் ரீதியான நியமனங்கள் குறித்தவற்றிலிருந்து விலகி நின்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிர்வாகத்தை செம்மையாக நடத்தவே உதவ வேண்டும். தலைமைச் செயலாளர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். நாளை திமுக ஆட்சிக்கு வந்தாலும் அவரது பொறுப்பு ஒன்றுதான். ஆளுனராக யார் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அவரது பணி ஒன்றுதான். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள், உரிய பதவிகள் தரப்படாமல் சிறிது காலம் பணியின்றி காத்திருக்க வைக்கப்படுகிறார்கள். இறையன்பு உட்பட பலர் ஆட்சி மாறிய பின் எப்படி நடத்தப்பட்டார்கள். இதற்கான காரணங்களை இப்போதைய அதிமுக அரசு விளக்கியதுண்டா.

உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு இருந்தாலும் கூட இந்த உரையாடலை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கவனத்திற்கு அதை கொண்டு செல்ல முடியாதா. ராஜீய காரணங்கள் காரணமாக சிலவற்றை பகிரங்கமாக வெளியிட முடியாது, எனினும் இந்த உரையாடலை நீங்கள் கேட்க வேண்டும் என்று நீதிபதிகள் மட்டும் அறியும் வண்னம் அதை அவர்கள் முன் வைத்திருக்க முடியாதா. இங்கு நோக்கம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்வைத்து ஒரு அரசியல் விளையாட்டு நடத்துவது. உயர்நீதி மன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி மாற்றப்படும் போதெல்லாம் இது மாதிரி ஒரு மனுவை மாநில அரசுகள் தாக்கல் செய்வதில்லை. அப்படி என்ன கவர்னர் மீது அதிமுகவிற்கு அக்கறை, கரிசனம். கவர்னரை நியமிப்பதும், மாற்றுவதும் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவின் பேரில் நடப்பது. Enjoys office at the will and pleasure of the President என்றுதான் உள்ளதே ஒழிய மாநில அரசுகளின் விருப்பு,வெறுப்பிற்கு அங்கு இடமில்லை. இதே பர்னலா 1991 திமுக அரசை கலைக்க உதவும் அறிக்கை தர மறுத்தவர். அவர் இங்கு பொறுப்பேற்கும் முன்னர் அவர் குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவிப்பதை தவிர்த்திருக்கலாம். அதுதான் அரசியல் நாகரிகம். ஏனெனில் அவரை நியமிப்பவர் குடியரசுத் தலைவர். மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் அவர் அதை செய்தாலும் அப்பதவிக்கு மதிப்பளித்தாவதுஇப்படிப் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும். 1991ல் திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பெரு முயற்சி மேற்கொண்டது யார். அப்போது காங்கிரசும், அதிமுகவும் அரசியல் ரீதியாக ஒரே நிலைப்பாட்டில் இந்த விஷயத்தில் இருந்தன. காலங்கள் மாறின, காட்சியும் மாறியது, மாறாதது கவர்னர் பதவி குறித்தஅணுகுமுறை.
கவர்னர் என்பவர் மத்திய அரசின் கைப்பொம்மை என்று கருதும் படி செய்ததில் காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. 356 வது பிரிவின் படி மாநில அரசுகளை கலைக்கும் உத்தியை பல முறை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது. 1959 ல் கேரள அரசைக் கலைக்க இதை பயன்படுத்திய போது காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி தான் பிரதமராக பதவியேற்ற பின் கவர்னர் என்பவர் மத்திய அரசின் எடுபிடி, அரசுகளை கலைக்க உதவுபவர் என்ற ரீதியிலேயே நடந்து கொண்டார். 1980களில் ஆந்திராவில் என்.டி.ராமாராவ் தலைமையிலான அரசு சட்டபையில் பெரும்பான்மை பெற்றிருந்த போதும் கவர்னர் உதவியுடன் அது முதலில் நீக்கபட்டது, ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றது. கவர்னர்களாக கட்சிக்கார்களை நியமிப்பது அதிகரித்தும், இது போன்றவற்றிற்கும் தொடர்பு உண்டு. கவர்னர் மாளிகை என்பது அரசியல் சதிக்கான இடம் என்று கருதும் வகையில் பல கவர்னர்கள் நடந்து கொண்டனர். கவர்னர் பதவி என்பது கட்சித்தலைமை தரும் நன்கொடை என்றாகிவிட்டது. மாநில அரசியலில் தொடர்ந்து செயல் பட முடியாதவர்கள், முதுமை காரணமாக தீவீர அரசியலில் ஈடுபட முடியாதவர்கள், ஆட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்ட அதிகாரிகள் - இது போன்றவர்களுக்கு தரப்படும் அங்கீகாரமாக அதை மாற்றியது காங்கிரஸ்தான். இந்திரா காந்தி காலத்தில் தொடங்கிய இந்த போக்கினை பின்னர் வந்த அரசுகள் , ஒரிரு விதிவிலக்குகள் தவிர, ஒரு எழுதப்படாத விதியாகவே மாற்றியுள்ளன. பாஜக கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட பலர் ஹிந்த்துவ கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அல்லது பாஜக விற்கு வேண்டியவர்கள் அல்லது முன்னாள் அரசியல் தலைவர்கள். பாஜக கூட்டணி அரசாவது இதில் ஒரு வித்தியாசமான அணுகு முறையினை கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர்களும் இந்திரா விட்டுச் சென்ற பாரம்பரியத்தினையே இதில் கடைப்பிடித்தனர். மதன் லால் குரானா தில்லி அரசியலில் முக்கியமானவர். அவரை ஏன் கவர்னாராக நியமித்தார்கள், இப்போது ஷிண்டே ஏன் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார், ஏன் சென்னா ரெட்டி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர்களெல்லாம் மாநில அல்லது பிரதேச அரசியலிலிருந்து தற்காலிக ஒய்வு பெற உதவவே, உட்கட்சி பிரச்சினைகளுக்கு விடை காணவே கவர்னர் பதவி பயன்படுத்துள்ளது. இதற்கு மாறாக கவர்னர் பதவியில் அரசியல் வாதிகளை நியமிக்க மாட்டோம், நிர்வாகத்திறமை உடைய ஒய்வு பெற்ற அதிகாரிகள், பல்துறை நிபுணர்களை நியமிப்போம், கவர்னர் பதவியை அரசியல் சதுரங்கத்தில் ஒரு காய் போல் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை ஏன் இரண்டு முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் எடுக்க வில்லை. காரணம் ஒன்றுதான் கவர்னர் பதவியை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதில் நிலவும் சொல்லப்படாத கருத்தொற்றுமைதான். சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் தேவையான போது பயன்படுத்தப்படும் காகித துடைப்புகள். இப்படி நியமிக்கப்பட்ட கவர்னர்கள் இப்பதவிக்கு புகழ்த் தேடித்தரவில்லை. மாறாக கவர்னர் என்பவர் இன்னொரு அரசியல்வாதி என்று கருதும் வண்ணமே செயல்பட்டனர். ரொமேஷ் பண்டாரி போன்றோர் நடந்து கொண்ட விதம் கவர்னர் பதிவியின் மீதிருந்த மரியாதை வெகுவாக குறையவே உதவியது. திமுகவும் இந்த விஷயத்தில் ஒரு விதிவிலக்கல்ல. கவர்னர் என்பவர் ஒரு ஒட்டுத்தாடி, தேவையில்லாத போது தூக்கி எறிந்துவிட வேண்டும், தேவையான போது பொருத்தமான தாடி போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் கூறப்படாத கொள்கை. ஆட்டுத்தாடி போன்ற வார்த்தைகள் ஏமாற்று வார்த்தைகள்.
பொம்மை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு முக்கியமானது, அதையும் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு உச்ச நீதி மன்றம் கவர்னர்கள் நியமனம்,மாற்றம், அவர்களது அதிகாரங்கள் போன்றவை குறித்து பின்பற்ற வேண்டிய விதிகளை வகுத்து கொடுத்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டாலொழிய இது போன்ற கேலிக்கூத்துக்கள் தொடரும்.ஏனெனில் இந்த விஷயத்தில் அதிமுக மோசம், காங்கிரஸ் உத்தமம் என்று கூற முடியாது. கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இது இப்போது இன்னொரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இது போன்ற கேலிக்கூத்துக்கள் இன்னும் எத்தனை முறை அரங்கேறுமோ.

2 மறுமொழிகள்:

Blogger PKS மொழிந்தது...

Ravi, I have not yet read all the news surrounding this subject. Yours is a good post. However, I agree that recording a conservation without the consent of the person involved in the conversation has to be condemned. There should be (if not already) laws in India about it. You are aware that, this kind of law is there in USA. What J has done here is pure politics. Politics has lost morals and ethics longtime back and each politician has done something that damaged the values of the society. Exceptions are the leftists who follow really good standards in public life.

I think the solution could be that all governors appointed should not be from any political base. They have to be non-political, non-partisan areas like Intellectuals, scientists, public servants etc. I think a president like Kalam who is concerned about India, should raise his voice whenever political appointments are made to Governors posts. Also, any existing governor who had/has party affiliation should be removed. Governors have to act as statesman and not as politician. We have to make this as a required code and law. Else, every party will misuse the system we have now.

Thanks and regards, PK Sivakumar

8:40 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Thanks PKS.I will post an expanded version soon, most probably by thursday taking into account recent developments and will discuss the recommendations of
Sarkaria commission in that.ravi

3:33 PM  

Post a Comment

<< முகப்பு