வீரப்பன் கொலை, அது குறித்த எதிர்வினைகள் - ஒரு கண்ணோட்டம்

இவை முதற்கட்ட கருத்துக்களே. இறுதிவடிவம் பெற்றவை அல்ல. ஒரு வேளை பின்னர் விரிவாக எழுதக்கூடும், எழுதாமலும் இருக்க வாய்ப்புள்ளது. நான் சன் டி.வி உட்பட இந்திய தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாய்ப்பில்லை, அது போல் இதை எழுதும் போது இது குறித்து வந்திருந்த எல்லாச் செய்திகளையும் படிக்கவில்லை.எனவே தகவல் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

வீரப்பன் ஒரு குற்றவாளி. அவன் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன்.தூக்குதண்டனை கொடுக்கப்பட்டால் கூட அதை சட்டபூர்வமாக செய்யவேண்டும்.மரண தண்டனை சரியா,தவறா என்பது குறித்து இப்போது பேச வேண்டாம். உயிருடன் பிடித்திருக்க முடியாதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது.பி.பி.சி பேட்டியில் ஹென்றி டிபைன் சில கேள்விகளை எழுப்பினார். அவை நியாயமானவை என்றே கருதுகிறேன். இத்தனை ஆண்டுகளாக தலைவலியாக இருந்த வீரப்பன் ஒழிந்தான் என்று சிலர் சந்தோஷப்படலாம், அதை எப்படிச் செய்திருந்தாலும் நியாயமானது என்று சிலர் வாதிடலாம். வீரப்பன் சரணடைந்து சட்டத்தை எதிர் கொண்டிருந்தால் தண்டிக்கப்பட்டிருப்பான். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை சரணடைய வைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயண். பூலன் தேவி ஒரு முன்னாள் கொள்ளைக்காரி. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு மக்களவை உறுப்பினாராகவும் மாறினார். வால்மீகி ஒரு கொள்ளைக்காரார். அவர் எழுதிய நூலை அதற்காக நிராகரிக்கிறோமா. அருணகிரி நாதர், புனித ஜெனெ இவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் பின் எப்படி ஆனார்கள். எனவே எவ்வளவு குற்றங்கள் இழைத்திருந்தாலும் ஒருவர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும், மனம் திருந்தி வாழ இடமிருக்க வேண்டும். இப்படி இல்லாத ஒரு சமூகத்தினை நாகரிகமான சமூகமாக ஏற்பது கடினம். கொலை யார் செய்தாலும் நல்ல தீர்வாகாது.

கர்நாடகத்தில் சுமார் 130 தமிழர்கள் தடாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடியதையும், சிறப்புப்படையினரின் மனித உரிமை மீறல்களை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷன் குறித்தும்பேசாமல் வீரப்பன் விவகாரத்தை பேச முடியாது. இவர்கள் பிரச்சினையை வெளி உலகிற்கு கொண்டு வந்தது யார் - மனித உரிமை அமைப்புகள், தமிழின நலம் விரும்பிகள், ஆர்வலர்கள் சிலர். அவர்கள் யாராக இருந்தாலும் இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களது அரசியல், கொள்கைகள் - இவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுப்பதை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும். வீரப்பன் ஒரு subaltern என்று நான் வாதிட விரும்பவில்லை. அதே சமயம் அவர் ஒருவர்தான் குற்றவாளி என்றும் நான் கருதவில்லை. குற்றத்திற்கும், சமூகத்திற்கும், அரசிற்கும் உள்ள உறவு விசித்திரமானது. இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவருக்கு பாதுகாப்பிருக்கும், பதவியிருக்கும், மக்கள் ஆதரவுமிற்கும் என்பதற்காக அவர் புனிதராகிவிட மாட்டார்.

வீரப்பன் குறித்து பல்வேறு கருத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை அரசின் கோணத்தில், அல்லது ஊடகங்களின் கோணத்தில் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது.பி.பி.சி தமிழோசை நிகழ்ச்சியில் கூறப்பட்ட கருத்துகள் பலவகையாக இருந்தன.அப்படித்தான் இருக்கும்.யாருக்குத் தெரியும் காலப்போக்கில் வீரப்பனும் ஜம்புலிங்கம், சீவலப்பேரி பாண்டி போல் மக்களால் வீரனாகக் கொண்டாடப்படலாம் . பேராசிரியர் முத்தையா பி.பி.சி பேட்டியில் சில கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தீர்வு சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றேதான் தீர்வு என்று வாதிடுபவர்களிடம் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. மற்றப்படி பெரும்பாலான வலைப்பதிவுகளில் இது கருணாநிதி, ராமதாசை திட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லது கொல்லப்பட்டது நியாயப்படுத்தப்படுள்ளது. மனித உரிமை மீறல்கள்,சதாசிவம் கமிஷன்,கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஒருவர் ஏன் வீரப்பன் மகள் புகைப்படத்தை வெளியிட்டு அவர் வாழ்க்கையை பாதிக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார், வேறு சிலர் இத்துடன் சந்தன மரக்கடத்தல், யானைகள் கொல்லப்படுவது குறைந்துவிடுமா அல்லது நின்றுவிடுமா என்று கேட்டிருந்தார்கள் நியாயமான கேள்விகள். மற்றப்படி தமிழ் வலைப்பதிவாளர்கள் பலர் எத்தகைய பிற்போக்குக் கண்ணோட்டம் உள்ளவர்கள் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகி உள்ளது. வலைப்பதிவாளர்கள் பலருக்கு சிலரைத் திட்டுவதில் இருக்கும் ஆர்வம் தகவல்களை அறிந்து கொள்வதில் அல்லது உண்மைகளை தெரிந்து கொள்வதில் இல்லை என்பது என் கருத்து. பா.ராகவன், காசி போன்றவர்களால் கூட இதை வேறுவிதமாக அணுக முடியவில்லை என்றால் வேறு என்ன சொல்ல. நக்கீரன் கோபாலின் இதழியல் விழுமியங்கள் எனக்கு உடன்பாடில்லாதவை. ஆனால் அவர் வீரப்பன், ஆட்டோ சங்கர் குறித்து எழுதியதில் எத்தனையோ குறைபாடுகள் இருப்பினும் நமக்கு பல தகவல்கள் தெரியவந்தன. ஆட்டோ சங்கர் எழுதிய குறிப்புகளை நூலாக கொண்டுவர உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது. அந்தத் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்துக்கள் முக்கியமானவை. பா.ராவால் மிக மேம்போக்காக, ஒரு flippant attitude கொண்டுதான் வீரப்பன் குறித்து எழுத முடிகிறது. புஷ¤ம், பிளேயரும் ஈராக்கில் சாதாம் பேரழிவினை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருப்பதாக்க் கூறினார்கள்,அது பொய் என்பது இப்போது தெளிவாகிவிட்டதே. மனித உரிமை ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்விகளை புரிந்து கொள்ளக் கூட அவர் முயலவில்லை. உடல் நிலை சரியில்லாத நிலையில் வீரப்பன் இருக்கும் போது சுட்டது யார்,காயமடைந்த போலீஸ்கார்கள் யார், எத்தகைய காயம் ஏற்பட்டது. வீரப்பனுடன் இருந்தது நான்கு பேர். போலீஸ்காரர்கள்எத்தனை பேர். வாகன ஒட்டியும் ஒரு போலிஸ்காரர். இந்நிலையில் வீரப்பனைப் பிடித்திருக்க முடியும், வேண்டுமென்றேசுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று ஒரு வாதம் எழுமானால் அதை பரீசிலிக்காமால் போலிஸ் உயர் அதிகாரி கூறுகிறார்என்பதற்காக அதை ஏன் அப்படியே ஏற்க வேண்டும். தினமலர் பாதிக்கப்பட்ட கர்நாடகத் தமிழர்கள், சதாசிவம் கமிஷன் முன் சாட்சியமளித்தவர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை. வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலை மட்டும் ஏன் வெளியிடுகிறீர்கள் என்றெல்லாம் கேட்பது பலருக்கு உவப்பாக இருக்காது. 1996 தேர்தலில் வீரப்பன் பேட்டியை சன் டி.வி பயன்படுத்தியதைப் பற்றி பேசுபவர்கள் 1984 தேர்தலில்ன் போதுகொலைச் செய்யப்பட்ட இந்திராவின் படம், 1991 தேர்தலில் ராஜிவின் கொலை அனுதாப அலையாக யாருக்குசாதகமாக அமைந்தது என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். சன் டி.வி அந்தப் பேட்டியை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பியது பிரச்சாரம்தான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் கல்கியில் இன்னும் ஏன் கல்கி ஏதோ காலத்தில் எழுதியவற்றைஅவை புத்தகமாக வந்து பல பதிப்புகள் வந்தபின்னும் ஏன் போடுகிறீர்கள்.எத்தனை முறைதான் ஒரே நாவலை தொடர்கதையாகப் போடுவீர்கள் என்று பா.ரா வோ அல்லது பிற வலைப்பதிவாளர்களோ கேட்டதுண்டா. சன் டி.வி செய்வதுபிரச்சாரம், கல்கி செய்வது என்ன என்று யோசித்தாவது பார்த்திருக்கிறீர்களா.

ராஜிவுடன் ஆப்பிள் சாப்பிட்டேன், அப்தூல் கலாமுடன் அடை சாப்பிட்டேன், வாஜ்பாயுடன் வடை சாப்பிட்டேன் என்று வரி பணத்தில் பிரபலங்களுடன் செல்லும் பத்திரிகையாளர்கள் எழுதலாம், அது இதழியல் நாகரிகம். ஆனால் வீரப்பனுடன் தங்கியிருந்த அனுபவத்தை நெடுமாறனோ அல்லது சுகுமாரானோ அல்லது கல்யாணியோ எழுதினால் அது அநாகரிகம்.அதே போல் வீரப்பன் குறித்து சுப்பனோ அல்லது ராக்கயியோ சொன்னால் அது கேலி செய்யப்பட் வேண்டிய ஒன்று.பிரபல நடிகர்களை பேட்டிக் கண்டது குறித்து மகிழ்ச்சியுடன் அருண் வைத்தியநாதன் எழுதினால் அது பாராட்டப்படவேண்டிய ஒன்று. மீண்டும் மீண்டும் நீங்கள் யார், உங்கள் விழுமியங்கள் என்ன என்பதை நீங்கள் நீருபிக்கிறீர்கள். உங்களுக்கு மனித உரிமை குறித்து அக்கறை இல்லை, சாதாரண குடிமக்கள் பொருட்டில்லை, உங்களைப் பொறுத்தவரை தமிழ்ப் பற்றாளர்கள் கேலிக்குரியவர்கள் என்பதை இந்தப் பதிவுகள் மூலம் காட்டியுள்ளீர்கள்.அதற்காக என் நன்றிகள்.

எனக்கு இதில் அதாவது வீரப்பன் இப்படி மரணமடைந்ததில் மகிழ்ச்சியுமில்லை, வருத்தமுமில்லை. ஏனெனில் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பில்லாதபடி ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. எங்கே வீரப்பன் ஒரு நாள் உண்மைகளைக் கூறி நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று அஞ்சியவர்கள் நிம்மதியாக இருக்கலாம்.

16 மறுமொழிகள்:

Blogger rajkumar மொழிந்தது...

என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

5:55 AM  
Blogger icarus prakash மொழிந்தது...

வீரப்பன் விவகாரத்திலே நான் படித்த உருப்படியான பதிவு இது. நன்றி ரவி.

6:13 AM  
Blogger Balaji-Paari மொழிந்தது...

நன்றிகள் ரவி.
இருக்கும் பதிவுகளில் மிக தொளிவானது இதுதான்.

6:42 AM  
Blogger சுந்தரவடிவேல் மொழிந்தது...

நான் இது குறித்த பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. ஆனாலும் எந்தெந்த குறுக்கு மூளைகள் எப்படியெப்படியெல்லாம் எழுதியிருக்கும் என ஊகிக்க முடிகிறது. இதை வைத்துக் கொண்டு எப்படி தமிழனை நாலு அடி அடிக்கலாம் என்று யோசிக்கும். இவர்களுக்கு கீதையும் ஒன்றுதான் வீரப்பன் கதையும் ஒன்றுதான். எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு அரசியலாட்டம் ஆட மட்டுந்தான் தெரியும்.

7:25 AM  
Blogger Christopher மொழிந்தது...

நன்றாக அலசி எழுதியுள்ளீர்கள்...பாராட்டுக்கள்!

எந்த சம்பவத்தையும் குறைந்தது இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கவேண்டும். வீரப்பன் பற்றிய பதிவுகள், பெரும்பாலும் ஒரே கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை.

7:40 AM  
Blogger Thangamani மொழிந்தது...

விழுமியங்களில் இருக்கும் இரட்டைத் தன்மை பற்றிய பிரக்ஞையினை ஒருவர் கண்டுகொண்டபிறகே நேர்கொண்ட பார்வை சாத்தியம். இப்பிரக்ஞை வருவதற்கு ஒருவர் கற்பிக்கப்பட்ட விழுமியங்களில் இருந்து தன்னை விடுவித்துகொண்டு, தனிப்பட நிற்கும் தைரியமும் , விருப்பமும், தேவையும் கொண்டவராக இருக்கவேண்டும். இதற்கு உண்மையின் பேரிலான அடங்கா பெருவிருப்பம் அவசியம். இப்பெருவிருப்பம் பெருகப் பெருக தனியனாய் ஆனால் அனைத்துடனும் இருக்கும் தன்மை வளரும். தன்னையே சத்தியமும், வழியும், அதை அடையும் நபராகவும் காணமுடியும். இதற்கு வெறும் சப்பை நீதி பயன்படாது. ஆனால் பலருக்கு அதுவே போதுமானதாகவும், பலனளிப்பதாகவும் இருக்கும். இந்த உண்மையின் பேரிலான பெருவிருப்பத்தை வளர்க்கும் வழிகளாகத்தான் கலை, எழுத்து, கவிதை, கல்வி எல்லாம் மரியாதை பெறுகின்றன. ஆனால் அதுவும் தேவையைப் பொருத்துத்தானே!

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ரவி. நன்றி.

உங்கள் கட்டுரையின் கீழ்க்கண்ட பகுதிகளை நான் ரசித்துப் படித்தேன்.

//ராஜிவுடன் ஆப்பிள் சாப்பிட்டேன், அப்தூல் கலாமுடன் அடை சாப்பிட்டேன், வாஜ்பாயுடன் வடை சாப்பிட்டேன் என்று வரி பணத்தில் பிரபலங்களுடன் செல்லும் பத்திரிகையாளர்கள் எழுதலாம், அது இதழியல் நாகரிகம். ஆனால் வீரப்பனுடன் தங்கியிருந்த அனுபவத்தை நெடுமாறனோ அல்லது சுகுமாரானோ அல்லது கல்யாணியோ எழுதினால் அது அநாகரிகம்.அதே போல் வீரப்பன் குறித்து சுப்பனோ அல்லது ராக்கயியோ சொன்னால் அது கேலி செய்யப்பட் வேண்டிய ஒன்று.//

//1996 தேர்தலில் வீரப்பன் பேட்டியை சன் டி.வி பயன்படுத்தியதைப் பற்றி பேசுபவர்கள் 1984 தேர்தலின் போதுகொலைச் செய்யப்பட்ட இந்திராவின் படம், 1991 தேர்தலில் ராஜிவின் கொலை அனுதாப அலையாக யாருக்குசாதகமாக அமைந்தது என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.//

//மீண்டும் மீண்டும் நீங்கள் யார், உங்கள் விழுமியங்கள் என்ன என்பதை நீங்கள் நீருபிக்கிறீர்கள். உங்களுக்கு மனித உரிமை குறித்து அக்கறை இல்லை, சாதாரண குடிமக்கள் பொருட்டில்லை, உங்களைப் பொறுத்தவரை தமிழ்ப் பற்றாளர்கள் கேலிக்குரியவர்கள் என்பதை இந்தப் பதிவுகள் மூலம் காட்டியுள்ளீர்கள்.அதற்காக என் நன்றிகள்.//

9:12 AM  
Blogger -/பெயரிலி. மொழிந்தது...

ரவி ஸ்ரீனிவாஸ், வீரப்பன்மீது கண்டதிலே தேறும் பதிவு இதுதான்.

10:01 AM  
Blogger Mookku Sundar மொழிந்தது...

ரவி,

எல்லாத் தரப்பிலும் இருக்கும் நியாயங்களை பார்க்க வேண்டும் என்று எழுதுகிறீர்கள். அது சரிதான். பரந்து பட்ட பார்வை அவசியம் தான். ஆனால்,

// உங்களைப் பொறுத்தவரை தமிழ்ப் பற்றாளர்கள் கேலிக்குரியவர்கள் என்பதை இந்தப் பதிவுகள் மூலம் காட்டியுள்ளீர்கள்.அதற்காக என் நன்றிகள்.//

வீரப்பனை கொன்றது சரி என்று சொன்னால், தமிழ்ப்பற்று இல்லை என்று அர்த்தமா..?? ஏன் ..?? அவன் தமிழன் என்பதாலா..?? அவனை தேடும் வேட்டையில் கர்நாடக சிறையில் அவதிக்குள்ளான தமிழர்களைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கு **அந்த** நடவடிக்கைக்கு காரணமான அரசுகளை கேட்போம்.

அது சரி...கல்கி எழுத்துக்களை 'கல்கி' பத்திரிக்கை வெளியிடுவதும், தன் தலைவர்கள் படத்தை காங்கிரஸ் தேர்தலில் உபயோகப்படுத்தியதும், வீரப்பன் பேட்டியை சன் டீவி பயன்படுத்தியதும் ஒன்றா..?? !!!!! வீரப்பன் திமுக தலைவரா..இல்லை சன் டீவி ஸ்தாபகரா..??

எனக்குப் புரியவில்லை :-(

10:26 AM  
Blogger Boston Bala மொழிந்தது...

Thanks for the thoughtful, concise, no-nonsense analysis.

10:30 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

Dear Ravi Srinivas,

I agree with what you have written in the blog.

We would be in civilizational darkness if the human
rights are applicable only to the "mass media approved
good guys". Human rights and the rule of law is a
thing that we have instituted to save ourselves,
rather than the "culprits". Even if it allows even the
notorious criminals to escape, we have no other option
other than to stand by the rule of law and accepted
procedures for meting out the punishment to the
guilty. Thangamani's comment is also important in this
regard. You two have made the issue very clear, taking
the veerappan out of the issue and showing the issue
of mass hysteria. The creation of black and white is
what we need to be cautious abt.

Your blog does not allow anonymous comments. If it
does, I would have posted there. You can post this
comment there if you want.

With Kind regards
Chinnakaruppan

Received via email and posted here.

11:00 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி. மூக்கன் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விரைவில் பதிலிடுகிறேன்

11:02 AM  
Blogger ravi srinivas மொழிந்தது...

This comment has been removed by a blog administrator.

12:05 PM  
Blogger அன்பு மொழிந்தது...

மிக நல்ல அலசல். நன்றி ரவி.

11:07 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) மொழிந்தது...

நன்றி ரவி வீரப்பன் பற்றி ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்வதையிட்டு ஏதாவது தேறுமா என சிக்கெடுத்துக் கொண்டிருந்த போது கிடைத்த நல்லதொரு பதிவு இது.

வீரப்பன் நல்லவனோ கெட்டவனோ அது அவனைச் சூழ வாழ்ந்திருந்த மக்கள்தான் சொல்லவேண்டும் ஆனால் இதனை வைத்து பலரும் தங்கள் அடிமனதுகளை வெளிப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது

12:40 AM  
Anonymous Anonymous மொழிந்தது...

Well, what are you trying to say?

You are such an hypocrite. You talk about the human rights. Did you consider the people who were killed by Verrappan while on duty? Why you never mention them anywhere? Have you written something about it earlier somewhere?

Well, I agree that we may not know others who were involved in this with Veerappan. But is that an excuse to keep him alive and let him kill & kidnap more people. What purpose does it serves?

Please stop calling names.

10:51 AM  
Blogger Moorthi மொழிந்தது...

திருமலை அண்ணாவுக்குப் பிறகு மிகவும் ஆழமான கட்டுரை!

12:20 AM  

Post a Comment

<< முகப்பு