நீதாம், பாரம்பரிய அறிவு - ஒரு குறிப்பு

புதுவை ஞானம் கட்டுரையில் ஜோசப் நீதாம் குறித்து தமிழில் யாரும் குறிப்பிட்டதில்லை என்று எழுதியுள்ளார். அது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் நீதாம் குறித்து கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன் ஆகியோரிடம் நான் விவாதித்திருக்கிறேன். அவரது அனைத்து நூல்களும் படிக்க கிடைக்காத நிலையில் ஒரு சில படிக்க கிடைத்தன. ஒரு சில கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். பிலாசபி அண்ட் சோசியல் ஆக்ஷன் என்ற பத்திரிகையில் அறிவியலும், விழுமியங்களும் குறித்து அவர் எழுதிய கட்டுரையை நானே பல நண்பர்களுக்கு பரிந்துரைத்து, பிரதி எடுத்தும் கொடுத்திருக்கிறேன். சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அவர் எழுதிய ஒரு சில நூல்கள் உள்ளன என நினைக்கிறேன். ஒரு நூலை அங்கு எடுத்து படித்திருக்கிறேன். கார்ல் மார்க்ஸ் நூலக கண்ணனிடம் சில இருக்க வாய்ப்புள்ளது. பிரக்ஞை, பரிமாணம், படிகள், மார்க்சியம் இன்று போன்றவற்றில் ஒரிரு கட்டுரைகளும் வெளியாகியிருக்ககூடும். உறுதியாக கூறவியலாது. மற்றபடி நீதாம் பரவலாக அறியப்பட்டவர்தான். இடதுசாரி அறிஞர்கள் பலர் அவரை மேற்கோள் காட்டியுள்ளனர்.அறிவியலின் தத்துவம், வரலாறு போன்றவற்றில் இடதுசாரிகள் ஆரம்ப முதலே அக்கறைக் காட்டி வந்துள்ளனர். அறிவியலாளர்களாகவும் விளங்கி இவற்றிலும் குறிப்பிட்ட பங்களிப்புச் செய்தவர்களை பட்டியலிட முடியும், அதில் நீதாமிற்கு முக்கியமான இடமுண்டு.

பாரம்பரிய அறிவியல், தொழில்நுட்பம் குறித்து பல நூல்கள், ஆய்வுகள் உள்ளன. PPST குழு 80களில் இது குறித்து தீவிரமாக இயங்கிய குழுக்களில் ஒன்று.இன்று இவர்களுடன் எனக்கு தொடர்பில்லை, எனவே இன்று என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது. Centre For Indigenous Knowledge Systems என்ற அமைப்பு சென்னையை தலைமையகமாகக் கொண்டு பாரம்பரிய விவசாயம் உட்பட பலவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. இது போல் வேறு பல அமைப்புகள் உள்ளன. பல முக்கியமான நூல்கள், கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன.துரதிருஷ்டவசமாக இவற்றில் பெரும்பான்மையானவை சாதாரண வாசகர்களுக்காக எழுதப்படுவதில்லை. அல்லது ஜர்னல்களில் வெளியாகும் கட்டுரைகளாக இருக்கின்றன. இவை எளிதில் கிடைப்பதில்லை. உதாரணமாக ஆயுர்வேதம் ஒரு அறிவியல்பூர்வமான மருத்துவமுறையா என்ற பொருளில் ஒரு கட்டுரையை ஒரு ஜர்னலில் படித்தேன்#. இது போன்ற ஜர்னல்கள் ஒரு சில பல்கலைகழக நூலகங்கள் அல்லது National Institute For Science, Technology and Development Studies NISTADS போன்ற ஆய்வு நூலகங்களில்தான் கிடைக்கும். இன்னொரு பிரச்சினை பல ஆய்வுகள் பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளில் உள்ளன.
ethnosciences என்ற பெயரில் மேற்கத்திய அறிவியல் தவிர பிறவற்றைக் குறிப்பிடும் பழக்கம் இருக்கிறது. ethnoecology, ethnopharmacology,ethnovetneiry medicine, ethnoagriculture என்று பலவற்றில் ஆய்வுகள் ஏராளமாக உள்ளன. எனவே தமிழர்களின் பாரம்பரிய அறிவியல்,தொழில்நுட்பம் குறித்து ஒரு தகவல்தொகுப்பு ஒன்று இருந்தால்தான் என்னனென்ன ஆய்வுகள் வெளியாகியுள்ளன என்பதினை ஒரளவு அறிந்து கொள்ள முடியும். அத்தகைய ஒரு தொகுப்பு இருக்கிறதா, நானறிந்த வரையில் இல்லை. எங்காவது இருக்கலாம்.

மேலும் மேற்கில் அறிவியலின் வரலாறு, அறிவியலின் தத்துவம் குறித்து கவனம் செலுத்துகிறார்கள். நாம் அந்த அளவு கவனம் செலுத்துவதில்லை. பல பல்கலைகழகங்களில் இவைகளுக்காக துறைகளும்,ஆய்வு மையங்களும் உள்ளன.தமிழ் நாட்டில் எத்தனை பல்கலைகழகங்களில் இவை குறித்து ஆய்வுகள்மேற்கொள்ளப்படுகின்றன அல்லது தனித்துறைகள் உள்ளன. கருத்துகளின் வரலாறு குறித்தும் மேற்கில் தனிக்கவனம் செலுத்துகிறார்கள்.
அது மட்டுமல்ல history of recent science என்பதும் கவனம் பெறுகிறது.எனவே கடந்த 50 ஆண்டுகளில் தோன்றியுள்ள புதிய அறிவியல் துறைகள், கோட்பாடுகள் குறித்து பல ஆய்வு நூல்கள், கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின்றன. இணையத்தின் வரலாறு குறித்த நூல்களையும்,கணினித் துறையின் வரலாறு குறித்த நூல்கள் வெறும் வரலாற்று நூல்களாக பல சமயங்களில் இருப்பதல்லை.உ-ம் The Closed World நாம் மேற்கிடமிருந்து இதிலெல்லாம் கற்க ஏராளாமாக உள்ளன. இந்த நூலினைப் படித்தால் நான் சொல்வது விளங்கும்.
ஒரு புறம் ராமாயணக் காலத்தில் ஆகாயவிமானம், ராக்கெட் இருந்தது, தமிழர்களுக்கு விமானம் பற்றித் தெரியும், இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன என்பது போன்ற வாதங்கள்.இன்னொரு புறம் இங்கு இருந்ததெல்லாம் ஒன்றும் உதவாத குப்பை என்ற கண்னோட்டம். அக்கறையின்மைக்கு ஒரு காரணம் மேற்கத்திய அறிவியல் ஒன்றே அறிவியல், வேறு அறிவியல் அல்லது அறிவு அமைப்பே இல்லை என்ற கண்ணோட்டம், இன்னொன்று நவீன அறிவியல், தொழில் நுட்பமே தீர்வுகளைத் தரும் என்ற கருத்து.
1980 களில் பல்வேறு காரணங்களால் பாரம்பரிய அல்லது மேற்கத்திய அல்லாத அறிவியல்,தொழில்நுட்பங்கள் குறித்த கண்ணோட்டங்களில் மாறுதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவினை இன்றுICSU போன்ற அமைப்புகளின் வெளியீடுகளில் காணலாம். இந்த மாறுதல்கள், அதற்கான காரணங்கள் குறித்து விளக்க ஒரு நீண்ட கட்டுரை தேவைப்படும்.
ஆனால் நம் சூழலில் இவை குறித்து ஒரு புரிதலோ விவாதமோ இல்லை. உதாரணமாக அருண் அக்ராவல் எழுதியது குறித்தோ அல்லது டேவிட் டர்ன்புல் எழுதியது குறித்தோ குறிப்பிட்டால் அவற்றைப் படித்து விவாதிக்கக் கூட இங்கு கிட்டத்ட்ட யாரும் தயாரில்லை என்பதுதான் உண்மை.இவ்வளவிற்கும் டர்ன்புல் கட்டுரையும், நூலும். அக்ராவல் கட்டுரையும்,பிறவும் பல மேல்நாட்டுப் பல்கலைகழக நூலகங்களில் எளிதில் கிடைப்பவை. இந்தியாவிலும் கிடைக்கக்கூடும், முயற்சி எடுத்துத் தேடினால்.ராயர் காப்பி கிளப்பில் இது குறித்து எழுதியிருக்கிறேன். ஒரு விவாதம் நடைபெறவில்லை, நடைபெறும் சூழலும் இல்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் விவாதம் எதைப் பற்றி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல் இல்லை. முன்னர் குறிப்பிட்ட இரண்டு நிலைப்பாடுகளிலிருந்தே விவாதிக்க விரும்புவதால் எழும் பிரச்சினை இது. இந்த நிலை மாறாத வரை நம்மால் பாரம்பரிய அறிவு குறித்த ஒரு அறிவார்ந்த கண்ணோட்டத்தினைப் பெறமுடியாது.
தமிழில் பழைய ஒலைச்சுவடிகளைப் பதிப்பித்தால் மட்டும் போதாது. தமிழரின் கணிதம் குறித்த கோட்பாடுகள் குறித்து ஒப்பீட்டு ஆய்வுகள் தேவை. மேலும் தமிழில் இது குறித்து உள்ள வேறு நூல்கள் , அந்த நூலுக்கு முற்பட்டவை, பின்னர் எழதப்பட்டவை என்ன கூறுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு அறிமுகமாக இந்நூல் எழுதப்பட்டது என்று ஊகிக்கப்படும் அல்லது கருதப்படும் காலத்தில் கணித துறை எப்படி இருந்தது, குறிப்பாக இந்தியாவில் என்பதுடன் ஒரு ஒப்பீட்டு ரீதியானஅலசலையும் , உதாரணமாக அப்போது ஐரோப்பாவில் கணிதம் இருந்த நிலை, இந் நூலின் சிறப்பு என்னஎன்பதையும் தர வேண்டும்.இதற்கு தமிழ்ப் புலமை மட்டும் போதாது. அப்படிப்பட்ட ஒரு பார்வை இல்லையெனில் ஏதோ ஒரு பழைய ஒலைச்சுவடியை படிக்கிறோம். அந்தக்காலத்திலும் இங்கு இதையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணமே ஏற்படும். குறைந்தபட்சம் The Crest of thePeacock The Non-European Roots of Mathematics by George Gheverghese Joseph போன்ற நூல்களாவது தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நம்மால் நம் பாரம்பரியத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.
ஞானம் அவர் குறிப்பிடும் நூல்களை அறிமுகம் செய்து விரிவாக எழுத வேண்டும். எழுதுவார் என்று நம்புகிறேன்.

1 மறுமொழிகள்:

Blogger Thangamani மொழிந்தது...

நல்ல பதிவு ரவி.

//மேற்கத்திய அறிவியல் ஒன்றே அறிவியல், வேறு அறிவியல் அல்லது அறிவு அமைப்பே இல்லை என்ற கண்ணோட்டம்//
இப்படி எல்லாவற்றிலும் ஒற்றைப் பார்வையையே வைத்திருப்பது ஒரு ஒழுங்காகிவிட்டது. அதுவும் இத்தன்மை நவீன கல்வியை பயின்றவர்களிடம் மிகுந்திருப்பது ஆச்சர்யமானது. மூட நம்பிக்கை என்றுதான் இதையும் சொல்லவேண்டும். ஆனால் அப்படி இருப்பது அறிவியல் என்ற வழிக்கே எதிரானது என்பதை அறிவியல் துறை சார்ந்தவர்களே உணருவதில்லை.

2:07 AM  

Post a Comment

<< முகப்பு