இருளிலிருந்து பேரிருளுக்கு-2

திண்ணையில் வெளியானது 22 அக்டோபர் 2004

அதே பயிலரங்கில் ரிச்சர்ட் ஸ்டால்மென் உட்பட தத்தம் துறைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று கருதப்படும் சிலரை சந்தித்தேன். இவர்களிடம் நான் யார் தெரியுமா, நான் எத்தனை விருதுகள் பெற்றிருக்கிறேன் தெரியுமா என்ற தொனியில்லை. கடந்த ஆண்டு என் மனைவி தான் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய நோபல் பரிசு பெற்ற ஒரு அறிவியலாளரைப் பற்றிக் குறிப்பிட்டார். கருத்தரங்கு நடந்த இடம் ஒரு கல்லூரி - மிக சாதாரண வசதிகள் கொண்டது ஐந்து நட்சத்திர வசதிகளோ அல்லது கருத்தரங்குகள், மாநாடுகள் நடைபெறும் பிரத்தியேக இடமோ அல்ல. அந்த அறிவியலாளர் எளிமையாக பழகியது குறித்தும். உரையாற்றிய அல்லது போஸ்டர் சமர்ப்பித்திருந்த பலரை அவராகவே சந்தித்து பேசியதையும், அவர்கள் செய்யும் ஆய்வுகள் குறித்தும் விசாரித்ததையும் என் மனைவி குறிப்பிட்டார். இவை விதிவிலக்குகள் அல்ல. தன் பெட்டியை தானே தூக்கிக் கொண்டு அல்லது ஒரு மாணவருடன் காபி குடித்துக் கொண்டு மிக சகஜமாகப் பழகும் பல சாதனையாளர்களை, உலகெங்கும் மதிக்கப்படுபவர்களை பல்கலைகழகங்களில், ஆய்வுக்கூடங்களில், கருத்தரங்குகளில், பயிலரங்குகளில் சந்திக்க முடியும். இவர்களில் பலர் தாங்கள் பெற்ற பரிசுகள் குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நாம் பாரட்டினால் கூட நன்றி கூறிவிட்டு அடுத்து வேறு எதையாவது பற்றி பேசத்துவங்கி விடுவார்கள். அவர்கள் எழுதியதை விமர்சித்து எழுதினால் நான் யார் தெரியுமா, என்னை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை உண்டு என்றெல்லாம் எழுதமாட்டார்கள். தான் பெரிதும் மதிக்கும் ஒரு பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் முன்வைத்திருந்த நிலைப்பாடுகளை விமர்சித்து எழுதிய கட்டுரையை ஒரு வார்த்தைக் கூட நீக்காமல் அல்லது மாற்றாமல் பிரசுரித்தது EPW. அது உன் கருத்து , கருத்து முரண்பாட்டில் வியப்பில்லை என்றுதான் இவை எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் ஒருவர் தன் கருத்துக்களை நிராகரிக்கிறார், விமர்சிக்கிறார் என்பதைக் கூட ஏற்க இயலாமல் கூசாமல் பொய் சொல்லும் ஜெயமோகன் போன்றவர்கள்தான் தார்மீகம், அறம் பற்றியெல்லாம் பேசும் அவல நிலைதான் இங்குள்ளது.

"ரவி சீனிவாஸ் என் கருத்துக்களையோ தரப்பையோ மறுக்கவில்லை, நான் ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே என நிறுவ ஒயாது முயல்கிறார்" http://www.maraththadi.com/article.asp?id=1082

சொல் புதிதில் ஜெயமோகன் எழுதியதை விமர்சித்து எத்தனை கட்டுரைகள், கடிதங்கள் வந்துள்ளன என்பதை வெ.சா கண்டறிந்து சொல்வாரா.
எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியரிடம் உங்கள் பெயர் நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதாமே என்று சில மாணவர்கள் கேட்ட போது அப்படித்தான் சொல்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லிவிட்டார். அதற்கு மேல் அது குறித்து அவர் பேச விரும்பவில்லை.ஏனெனில் அவரது அக்கறை அதுவல்ல. பரிசு தரப்படலாம், தரப்படாமலும் போகலாம், அதற்காக அவர் லாபி செய்ய மாட்டார். எல்லாத்துறைகளிலும் ஆளுமைகள் சார்ந்த மோதல்கள், சர்ச்சைகள், குழு அரசியல்கள் உண்டு.அவை விதிவிலக்குகள் என்றுதான் கருதப்பட வேண்டும். தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் அவைதான் விதிகளாக, ஜீவித நியாயங்களாக உள்ளன.இங்கு நிலவும் அறிவார்ந்த வறுமையின் ஒரு வெளிப்பாடு இது.
இத்தகையவர்களையும் தமிழ்ச் சூழலில் நடக்கும் விவாதங்களையும் ஒப்பிட்டால் ஒன்று புலனாகிறது. இங்கு விருதுகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் தேவையற்றது. இங்கு நிலவும் சீரழிந்த நெறிகள், விழுமியங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஆளுமை சார்ந்த அரசியலுக்கு உதாரணமாகவே இவற்றைக் கொள்ள முடியும். இருளிலிருந்து பேரிருளுக்கு செல்லும் பயணத்தின் வெளிப்பாடு இது. வெ.சா முன்பு ஒரு கட்டுரை எழுதினார் - அதன் தலைப்பு தர்சனமற்ற பயணத்தின் அழியும் சுவடுகள் (இதை என் நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன்). அது இப்போது அவர்எழுதியுள்ளதற்கும், அவருக்கு ஆதரவாக ஜெயமோகன் எழுதியுள்ளதற்கும் நன்றாகப் பொருந்தும்.வாசகர்கள் இந்த கீழ்த்தரமான இலக்கிய அரசியலை, ஆளுமை சார்ந்த அரசியலை எதிர்த்துக் குரல் கொடுக்காதவரை, இப்படியே நீங்கள் செயல்பட்டால் உங்களை நிராகரிப்போம் என்று கூறாதவரை இவை தொடரும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு