ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்


கவர்னர் பதவியை காரணம் காட்டி ஒரு கேலிக்கூத்து மீண்டும் அரங்கேறியுள்ளது.சட்டப்படி தான் செய்தது சரி என்று ஜெயலலிதா சொன்னாலும் ஒரு உரையாடலை இப்படி பயன்படுத்துபவர் நாளை பிறர் தன்னுடன் உரையாடும் போது அதை பதிவு செய்து பயன்படுத்தமாட்டார் என்பது என்ன நிச்சயம்.இந்த அரசு தகவல் பெறும் உரிமையில் அக்கறை காட்டும் அரசா. இல்லை கருத்து சுதந்திரத்தை மதிக்கும் அரசா. உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு ஆளுனர் மாற்றத்தினை தடை செய்யாது என்பது தெரிந்த பின்னும் இதை வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன. இதில் தலைமைச் செயலாளர் எடுத்துள்ள நிலைப்பாடு அ.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் எடுக்கும் நிலைப்பாடு போல் உள்ளது. இ.ஆ.ப வில் உள்ளரவர்கள் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும், இது போன்ற அரசியல் விவகாரங்களில் அல்ல. இது போல் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் நடந்து கொள்ள ஆரம்பித்தால் அதற்கு முடிவே இராது. ஏனெனில் அதிகாரிகள் அரசியல் கட்சி விவகாரங்கள், அரசியல் ரீதியான நியமனங்கள் குறித்தவற்றிலிருந்து விலகி நின்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிர்வாகத்தை செம்மையாக நடத்தவே உதவ வேண்டும். தலைமைச் செயலாளர் என்பவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். நாளை திமுக ஆட்சிக்கு வந்தாலும் அவரது பொறுப்பு ஒன்றுதான். ஆளுனராக யார் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அவரது பணி ஒன்றுதான். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள், உரிய பதவிகள் தரப்படாமல் சிறிது காலம் பணியின்றி காத்திருக்க வைக்கப்படுகிறார்கள். இறையன்பு உட்பட பலர் ஆட்சி மாறிய பின் எப்படி நடத்தப்பட்டார்கள். இதற்கான காரணங்களை இப்போதைய அதிமுக அரசு விளக்கியதுண்டா.

உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு இருந்தாலும் கூட இந்த உரையாடலை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கவனத்திற்கு அதை கொண்டு செல்ல முடியாதா. ராஜீய காரணங்கள் காரணமாக சிலவற்றை பகிரங்கமாக வெளியிட முடியாது, எனினும் இந்த உரையாடலை நீங்கள் கேட்க வேண்டும் என்று நீதிபதிகள் மட்டும் அறியும் வண்னம் அதை அவர்கள் முன் வைத்திருக்க முடியாதா. இங்கு நோக்கம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்வைத்து ஒரு அரசியல் விளையாட்டு நடத்துவது. உயர்நீதி மன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதி மாற்றப்படும் போதெல்லாம் இது மாதிரி ஒரு மனுவை மாநில அரசுகள் தாக்கல் செய்வதில்லை. அப்படி என்ன கவர்னர் மீது அதிமுகவிற்கு அக்கறை, கரிசனம். கவர்னரை நியமிப்பதும், மாற்றுவதும் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவின் பேரில் நடப்பது. Enjoys office at the will and pleasure of the President என்றுதான் உள்ளதே ஒழிய மாநில அரசுகளின் விருப்பு,வெறுப்பிற்கு அங்கு இடமில்லை. இதே பர்னலா 1991 திமுக அரசை கலைக்க உதவும் அறிக்கை தர மறுத்தவர். அவர் இங்கு பொறுப்பேற்கும் முன்னர் அவர் குறித்து ஜெயலலிதா கருத்து தெரிவிப்பதை தவிர்த்திருக்கலாம். அதுதான் அரசியல் நாகரிகம். ஏனெனில் அவரை நியமிப்பவர் குடியரசுத் தலைவர். மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் அவர் அதை செய்தாலும் அப்பதவிக்கு மதிப்பளித்தாவதுஇப்படிப் பேசுவதை தவிர்த்திருக்க வேண்டும். 1991ல் திமுக அரசை கலைக்க வேண்டும் என்று பெரு முயற்சி மேற்கொண்டது யார். அப்போது காங்கிரசும், அதிமுகவும் அரசியல் ரீதியாக ஒரே நிலைப்பாட்டில் இந்த விஷயத்தில் இருந்தன. காலங்கள் மாறின, காட்சியும் மாறியது, மாறாதது கவர்னர் பதவி குறித்தஅணுகுமுறை.
கவர்னர் என்பவர் மத்திய அரசின் கைப்பொம்மை என்று கருதும் படி செய்ததில் காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. 356 வது பிரிவின் படி மாநில அரசுகளை கலைக்கும் உத்தியை பல முறை காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது. 1959 ல் கேரள அரசைக் கலைக்க இதை பயன்படுத்திய போது காங்கிரஸ் தலைவராக இருந்த இந்திரா காந்தி தான் பிரதமராக பதவியேற்ற பின் கவர்னர் என்பவர் மத்திய அரசின் எடுபிடி, அரசுகளை கலைக்க உதவுபவர் என்ற ரீதியிலேயே நடந்து கொண்டார். 1980களில் ஆந்திராவில் என்.டி.ராமாராவ் தலைமையிலான அரசு சட்டபையில் பெரும்பான்மை பெற்றிருந்த போதும் கவர்னர் உதவியுடன் அது முதலில் நீக்கபட்டது, ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றது. கவர்னர்களாக கட்சிக்கார்களை நியமிப்பது அதிகரித்தும், இது போன்றவற்றிற்கும் தொடர்பு உண்டு. கவர்னர் மாளிகை என்பது அரசியல் சதிக்கான இடம் என்று கருதும் வகையில் பல கவர்னர்கள் நடந்து கொண்டனர். கவர்னர் பதவி என்பது கட்சித்தலைமை தரும் நன்கொடை என்றாகிவிட்டது. மாநில அரசியலில் தொடர்ந்து செயல் பட முடியாதவர்கள், முதுமை காரணமாக தீவீர அரசியலில் ஈடுபட முடியாதவர்கள், ஆட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்ட அதிகாரிகள் - இது போன்றவர்களுக்கு தரப்படும் அங்கீகாரமாக அதை மாற்றியது காங்கிரஸ்தான். இந்திரா காந்தி காலத்தில் தொடங்கிய இந்த போக்கினை பின்னர் வந்த அரசுகள் , ஒரிரு விதிவிலக்குகள் தவிர, ஒரு எழுதப்படாத விதியாகவே மாற்றியுள்ளன. பாஜக கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட பலர் ஹிந்த்துவ கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அல்லது பாஜக விற்கு வேண்டியவர்கள் அல்லது முன்னாள் அரசியல் தலைவர்கள். பாஜக கூட்டணி அரசாவது இதில் ஒரு வித்தியாசமான அணுகு முறையினை கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அவர்களும் இந்திரா விட்டுச் சென்ற பாரம்பரியத்தினையே இதில் கடைப்பிடித்தனர். மதன் லால் குரானா தில்லி அரசியலில் முக்கியமானவர். அவரை ஏன் கவர்னாராக நியமித்தார்கள், இப்போது ஷிண்டே ஏன் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார், ஏன் சென்னா ரெட்டி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர்களெல்லாம் மாநில அல்லது பிரதேச அரசியலிலிருந்து தற்காலிக ஒய்வு பெற உதவவே, உட்கட்சி பிரச்சினைகளுக்கு விடை காணவே கவர்னர் பதவி பயன்படுத்துள்ளது. இதற்கு மாறாக கவர்னர் பதவியில் அரசியல் வாதிகளை நியமிக்க மாட்டோம், நிர்வாகத்திறமை உடைய ஒய்வு பெற்ற அதிகாரிகள், பல்துறை நிபுணர்களை நியமிப்போம், கவர்னர் பதவியை அரசியல் சதுரங்கத்தில் ஒரு காய் போல் பயன்படுத்த மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை ஏன் இரண்டு முக்கிய கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் எடுக்க வில்லை. காரணம் ஒன்றுதான் கவர்னர் பதவியை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவதில் நிலவும் சொல்லப்படாத கருத்தொற்றுமைதான். சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் தேவையான போது பயன்படுத்தப்படும் காகித துடைப்புகள். இப்படி நியமிக்கப்பட்ட கவர்னர்கள் இப்பதவிக்கு புகழ்த் தேடித்தரவில்லை. மாறாக கவர்னர் என்பவர் இன்னொரு அரசியல்வாதி என்று கருதும் வண்ணமே செயல்பட்டனர். ரொமேஷ் பண்டாரி போன்றோர் நடந்து கொண்ட விதம் கவர்னர் பதிவியின் மீதிருந்த மரியாதை வெகுவாக குறையவே உதவியது. திமுகவும் இந்த விஷயத்தில் ஒரு விதிவிலக்கல்ல. கவர்னர் என்பவர் ஒரு ஒட்டுத்தாடி, தேவையில்லாத போது தூக்கி எறிந்துவிட வேண்டும், தேவையான போது பொருத்தமான தாடி போல் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுதான் கூறப்படாத கொள்கை. ஆட்டுத்தாடி போன்ற வார்த்தைகள் ஏமாற்று வார்த்தைகள்.
பொம்மை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு முக்கியமானது, அதையும் சர்க்காரியா கமிஷன் பரிந்துரைகள் போன்றவற்றையும் கருத்தில் கொண்டு உச்ச நீதி மன்றம் கவர்னர்கள் நியமனம்,மாற்றம், அவர்களது அதிகாரங்கள் போன்றவை குறித்து பின்பற்ற வேண்டிய விதிகளை வகுத்து கொடுத்து, அதைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டாலொழிய இது போன்ற கேலிக்கூத்துக்கள் தொடரும்.ஏனெனில் இந்த விஷயத்தில் அதிமுக மோசம், காங்கிரஸ் உத்தமம் என்று கூற முடியாது. கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இது இப்போது இன்னொரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. இது போன்ற கேலிக்கூத்துக்கள் இன்னும் எத்தனை முறை அரங்கேறுமோ.
புஷ்ஷிற்கு எதிராக ஒரு பெரும் பணக்காரர்


இந்தத் தேர்தலில் புஷ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒரு பெரும் பணக்காரர், பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளவர் தன் பணத்தையும், நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறார்.புஷ் எதிர்ப்பு இணயதளங்கள் உட்பட புஷ் எதிர்ப்பு இயக்கதிற்கு நன்கொடைகள் கொடுத்துள்ளார். தான் நிறுவியுள்ள அமைப்புகள் மூலம் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா உட்பட உலகின் பல பகுதிகளில் மனித உரிமைகள், சிறைக் கொடுமைகளை தடுத்தல், கல்வி, பண்பாடுஎன பலவற்றில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். தத்துவ அறிஞரும், அறிவியலின் தத்துவம் குறித்து எழுதியவருமான கார்ல் பாப்பரின் சிந்தனைகளின் தாக்கத்தினை இவர் செயல்பாட்டில் காணலாம். பாப்பர் முன்வைத்த ஒரு முக்கியமான கருத்து ஒபன் சொசைட்டி.

இவர் ஒரு தாராளவாதி, முதலாளித்துவத்தை ஆதரிப்பவர், அதே சமயம் சந்தைப் பொருளாதார அமைப்பின் குறைபாடுகள், உலகமயமாதலினால் ஏற்படும் பாதங்கள் குறித்து எழுதியிருக்கிறார்.இன்றைய உலகில் அமெரிக்கா எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் குறித்தும் எழுதியிருக்கிறார். கவனிக்கப்பட வேண்டியவர் இவர் என்பதில் ஐயமில்லை. இவர் குறித்து மேலும் தகவல்களை இந்த இணையதளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரபஞ்சன் கேள்வி பதில்கள் - சில கருத்துக்கள்


எழுத்தாளர் பிரபஞ்சன் மரத்தடியில் வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். இது குறித்து என்னுடைய கருத்துக்கள், சுருக்கமாக :

1, காஷ்மீரை முழுதாகவோ அல்லது அதன் ஒரு பகுதியையோ பாகிஸ்தானுக்குக் கொடுப்பது என்பதுதலையை கொள்ளிக்கடையால் செஈறிந்து கொள்வது போன்றது.பாகிஸ்தான் எல்லைகடந்த தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்காதவரை அதன் வார்த்தைகளை நம்ப வேண்டியதில்லை.காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும், காஷ்மீரை விட்டுக்கொடுத்தல்ல.பாக் வசம் காஷ்மீரின் ஒரு பகுதி உள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமித்த பகுதி அது. ஒரு புறம் சீனா, இன்னொருபுறம் பாகிஸ்தான் என இரு ஆபத்தான நாடுகள் இருக்கும் போது இந்தியா காஷ்மீரை விட்டுக் கொடுக்கவேண்டும் என்று கூறுவது முட்டாள்த்தனம்.
மேலும் இந்த இரு நாடுகளும் காஷ்மீர் மக்களுக்கு சுயாட்சி வழங்குமென்றோ அல்லது காஷ்மீர் மக்களின் உரிமைகளை மதிக்கும்மென்றோ எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். திபெத்தின் கதி என்ன ? பிரபஞ்சன் இப்படி உளறுவதை நிறுத்திக் கொள்வது அவருக்கு நல்லது. இந்தியாவின் ராணுவச் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒருவர் யோசனைக் கூறினால் அவருக்கு புத்தி குழம்பிவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றும். தெற்காசியாவில் இந்தியா ஒரு முக்கிய சக்தியாக இருக்க வேண்டும் அதுதான் இந்தியாவிற்கு நல்லது. பாகிஸ்தானில் உள்ள ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலத்திற்க்காக காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க விரும்ப மாட்டார்கள். இந்நிலையில் இந்தியா மட்டும் தன் நலன்களையும், இறையாண்மையையும், பிரதேச ஒருமையையும் விட்டுக் கொடுக்க வேண்டுமா என்ன?.
2, மொழிப் பிரச்சினையில் அவர் பதில்கள் உணர்ச்சி பூர்வமாகவே பெரும்பாலும் உள்ளன. தமிழ் நாட்டில்மத்திய அரசுப் பள்ளிகளிலும், சி.பி.எஸ்.சி பாணியை பின்பற்றும் பள்ளிகளில் படிப்பவர்கள் பிளஸ் 2 படிக்கமாநில பாணி, குறிப்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் +2 வில் அதிகமார்க் எடுத்தால்தான் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் இடம் கிடைக்கும் என்பதால். இவர்களில் சிலர் +2 விற்கு முன்பு ஆங்கிலம் தவிர வேறு மொழிகளை மொழிப்பாடமாக படித்திருப்பார்கள்.இவர்கள் தெரிவு செய்ய +2ல் ஹிந்தி, பிரெஞ்ச் போன்றவை மொழிப்பாடங்களாக உள்ளன. இது போல்பட்டப் படிப்பில் இருப்பதில் வியப்பில்லை. ஏனெனில் பிற மாநிலங்களில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, தமிழ் படிக்காமல் , கல்லூரியில் படிப்பினை தொடர வகை செய்யாவிடில் அவர்கள்பாதிப்புக்குள்ளாவர். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் பிரபஞ்சன் பதில் கூறியிருக்கிறார்.
3,கல்வி என்பது மொழி மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல.இந்தப் புரிதல் பிரபஞ்சனுக்கு இல்லை.தாய் மொழியையோ அல்லது வேறு எந்த மொழியையோ கட்டாயமாக்குவது என்பதை ஒற்றைத்தீர்வாக வைக்கமுடியாது. மகாரஷ்டிரத்தில் மராட்டியை கட்டாயமாக்குவது சரிதான் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பு குறித்து எனக்கு விமர்சனம் உண்டு, அதை பதிவு செய்திருக்கிறேன். தமிழ் நாட்டில்தமிழ் படித்தால் மட்டும் வேலை உத்தரவாதம் உண்டா, அப்படியே படித்தாலும் இங்குள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கை முற்பட்ட ஜாதியினர் என்று அரசால் நிர்ணயக்கப்பட்டோருக்கு எதிராக உள்ளதே,என்பது போல் பல நியாயமான கேள்விகள் உள்ளன. இவற்றை எதிர்கொள்ளாமல் ஒரு தீர்வினைமுன் வைக்கமுடியாது.
4, கல்வி என்பதை ஒரு பரந்த பொருளில் காண வேண்டும். கல்வி குறித்த தத்துவங்கள், காந்தி, தாகூர்போன்றோர் முன்வைத்த கல்வி குறித்த கோட்பாடுகள், கோத்தாரி கமிஷன் அறிக்கை, மற்றும் கல்வியில்அரசின் பங்கு, பொறுப்பு என்ன என்பன போன்றவற்றை விவாதிக்காமல் கல்வியை மொழிப்பிரச்சினையாகப்பார்க்கும் போக்கு முட்டாள்தனமானது. மேலும் education as public good, higher education as meritgood, education as a fundamental right இது குறித்த விவாதங்கள், ஆய்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும். பிரபஞ்சனுக்கு இவையெல்லாம் முக்கியமற்றவை என்று தோன்றலாம். ஆனால் இவை மிகவும்முக்கியமானவை.
5,இந்திய ஆட்சி/நிர்வாகப் பணி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. தமிழ் தெரியாதஅதிகாரிகள் தமிழைக் கற்பது கட்டாயம். அது போல் இந்தியாவின் பல மாநிலங்களில் தமிழினைத்தாய்மொழியாகக் கொண்டவர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர், பணியாற்றுகிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அதிகாரிகளால்தான் தமிழுக்குக் கேடு வருகிறது என்பது கற்பனை. பிரபஞ்சனின்குறுகிய கண்ணோட்டத்தினையே அவரது பதில் காட்டுகிறது.

மற்றப்படி பதில்கள் சிறப்பானவை என்று சொல்ல முடியாது. பிரபஞ்சனின் புனைவற்ற எழுத்துக்கள் பலவற்றைபடித்திருக்கிறேன். அவை மிகை உணர்ச்சி கொண்டவை, எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரங்களை, கோஷங்களை முன் வைப்பவை. இந்தப் பதில்களிலும் அதே போக்குதான் உள்ளது. பொதுவாகக் சொன்னால்இலக்கியம் தவிர்த்து பிற குறித்து அவர் கூறியுள்ள பதில்களில் இக்குறைபாடுகள் மிக அதிகம். பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் இலக்கியம் தவிர்த்த பிற துறைகள் குறித்து எழுதும் போது அவர்கள் எழுதுவது மிகச் சாதரணமாக இருக்கும் அல்லது மிக அபத்தமாக இருக்கும் (உ-ம்: ஜெயமோகன்). இதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும்.பிரபஞ்சனும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதையே இப்பதில்கள்காட்டுகின்றன.
ஜோனாதன் ஷெல் கட்டுரை

அவுட் லூக் வார இதழ் அச்சில் வெளியாவதை தவிர இணைய தளத்திலும் பல கட்டுரைகளை வெளியிடுகிறது. இக்கட்டுரைகள் இணையதளத்தில் மட்டுமேஇடம் பெறுகின்றன, அச்சில் அவுட் லுக்கில் இடம் பெறுவதில்லை. இந்த வாரம்வெளியாகியுள்ள ஜோனாதன் ஷெல் கட்டுரை மிகவும் நல்ல கட்டுரையாக உள்ளது.இவரது நூல்கள் சிலவற்றையும், பல கட்டுரைகளையும் படித்துள்ளேன்.

இருளிலிருந்து பேரிருளுக்கு-2

திண்ணையில் வெளியானது 22 அக்டோபர் 2004

அதே பயிலரங்கில் ரிச்சர்ட் ஸ்டால்மென் உட்பட தத்தம் துறைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் என்று கருதப்படும் சிலரை சந்தித்தேன். இவர்களிடம் நான் யார் தெரியுமா, நான் எத்தனை விருதுகள் பெற்றிருக்கிறேன் தெரியுமா என்ற தொனியில்லை. கடந்த ஆண்டு என் மனைவி தான் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய நோபல் பரிசு பெற்ற ஒரு அறிவியலாளரைப் பற்றிக் குறிப்பிட்டார். கருத்தரங்கு நடந்த இடம் ஒரு கல்லூரி - மிக சாதாரண வசதிகள் கொண்டது ஐந்து நட்சத்திர வசதிகளோ அல்லது கருத்தரங்குகள், மாநாடுகள் நடைபெறும் பிரத்தியேக இடமோ அல்ல. அந்த அறிவியலாளர் எளிமையாக பழகியது குறித்தும். உரையாற்றிய அல்லது போஸ்டர் சமர்ப்பித்திருந்த பலரை அவராகவே சந்தித்து பேசியதையும், அவர்கள் செய்யும் ஆய்வுகள் குறித்தும் விசாரித்ததையும் என் மனைவி குறிப்பிட்டார். இவை விதிவிலக்குகள் அல்ல. தன் பெட்டியை தானே தூக்கிக் கொண்டு அல்லது ஒரு மாணவருடன் காபி குடித்துக் கொண்டு மிக சகஜமாகப் பழகும் பல சாதனையாளர்களை, உலகெங்கும் மதிக்கப்படுபவர்களை பல்கலைகழகங்களில், ஆய்வுக்கூடங்களில், கருத்தரங்குகளில், பயிலரங்குகளில் சந்திக்க முடியும். இவர்களில் பலர் தாங்கள் பெற்ற பரிசுகள் குறித்து தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நாம் பாரட்டினால் கூட நன்றி கூறிவிட்டு அடுத்து வேறு எதையாவது பற்றி பேசத்துவங்கி விடுவார்கள். அவர்கள் எழுதியதை விமர்சித்து எழுதினால் நான் யார் தெரியுமா, என்னை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை உண்டு என்றெல்லாம் எழுதமாட்டார்கள். தான் பெரிதும் மதிக்கும் ஒரு பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் முன்வைத்திருந்த நிலைப்பாடுகளை விமர்சித்து எழுதிய கட்டுரையை ஒரு வார்த்தைக் கூட நீக்காமல் அல்லது மாற்றாமல் பிரசுரித்தது EPW. அது உன் கருத்து , கருத்து முரண்பாட்டில் வியப்பில்லை என்றுதான் இவை எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் ஒருவர் தன் கருத்துக்களை நிராகரிக்கிறார், விமர்சிக்கிறார் என்பதைக் கூட ஏற்க இயலாமல் கூசாமல் பொய் சொல்லும் ஜெயமோகன் போன்றவர்கள்தான் தார்மீகம், அறம் பற்றியெல்லாம் பேசும் அவல நிலைதான் இங்குள்ளது.

"ரவி சீனிவாஸ் என் கருத்துக்களையோ தரப்பையோ மறுக்கவில்லை, நான் ஒரு வடிகட்டிய முட்டாள் மட்டுமே என நிறுவ ஒயாது முயல்கிறார்" http://www.maraththadi.com/article.asp?id=1082

சொல் புதிதில் ஜெயமோகன் எழுதியதை விமர்சித்து எத்தனை கட்டுரைகள், கடிதங்கள் வந்துள்ளன என்பதை வெ.சா கண்டறிந்து சொல்வாரா.
எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியரிடம் உங்கள் பெயர் நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறதாமே என்று சில மாணவர்கள் கேட்ட போது அப்படித்தான் சொல்கிறார்கள் என்று சிரித்துக் கொண்டே பதில் சொல்லிவிட்டார். அதற்கு மேல் அது குறித்து அவர் பேச விரும்பவில்லை.ஏனெனில் அவரது அக்கறை அதுவல்ல. பரிசு தரப்படலாம், தரப்படாமலும் போகலாம், அதற்காக அவர் லாபி செய்ய மாட்டார். எல்லாத்துறைகளிலும் ஆளுமைகள் சார்ந்த மோதல்கள், சர்ச்சைகள், குழு அரசியல்கள் உண்டு.அவை விதிவிலக்குகள் என்றுதான் கருதப்பட வேண்டும். தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் அவைதான் விதிகளாக, ஜீவித நியாயங்களாக உள்ளன.இங்கு நிலவும் அறிவார்ந்த வறுமையின் ஒரு வெளிப்பாடு இது.
இத்தகையவர்களையும் தமிழ்ச் சூழலில் நடக்கும் விவாதங்களையும் ஒப்பிட்டால் ஒன்று புலனாகிறது. இங்கு விருதுகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் தேவையற்றது. இங்கு நிலவும் சீரழிந்த நெறிகள், விழுமியங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஆளுமை சார்ந்த அரசியலுக்கு உதாரணமாகவே இவற்றைக் கொள்ள முடியும். இருளிலிருந்து பேரிருளுக்கு செல்லும் பயணத்தின் வெளிப்பாடு இது. வெ.சா முன்பு ஒரு கட்டுரை எழுதினார் - அதன் தலைப்பு தர்சனமற்ற பயணத்தின் அழியும் சுவடுகள் (இதை என் நினைவிலிருந்து குறிப்பிடுகிறேன்). அது இப்போது அவர்எழுதியுள்ளதற்கும், அவருக்கு ஆதரவாக ஜெயமோகன் எழுதியுள்ளதற்கும் நன்றாகப் பொருந்தும்.வாசகர்கள் இந்த கீழ்த்தரமான இலக்கிய அரசியலை, ஆளுமை சார்ந்த அரசியலை எதிர்த்துக் குரல் கொடுக்காதவரை, இப்படியே நீங்கள் செயல்பட்டால் உங்களை நிராகரிப்போம் என்று கூறாதவரை இவை தொடரும்.

இருளிலிருந்து பேரிருளுக்கு - 1

திண்ணையில் வெளியானது 22 அக்டோபர் 2004
posted in two parts in the blog
தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் பரிசுகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தின் ஒரு வெளிப்பாடுதான் வெ.சாகடிதமும், அதன் மீதான எதிர்வினையும். காலச்சுவடு இதழில் பரிசுகள் பெற லாபி செய்வது குறித்து கண்ணன் குறிப்பிடுவது இங்கு நிலவும் விழுமியங்கள், மதிப்பீடுகள் எத்தகையவை என்பதை தெளிவாக்குகின்றன. பல பரிசுகளில் பரிந்துரைத்தவர்(கள்) பெயர் கூட வெளியிடப்படுவதில்லை என்பதும், பரிசு பெற்றவருக்கு யார் யார் அவர் பெயரைசிபாரிசு செய்தார்கள் என்பது கூட சொல்லப்படுவதில்லை என்பதையெல்லாம் அவருக்குத் தெரியாது போதும். பலசமயங்களில் ஒருவர் பரிந்துரைப்பதைக் வெளியில் கூறக் கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. லாபிசெய்வதை அவர் நியாயப்படுத்துவது லஞ்சம் வாங்குவதை, கொடுப்பதை நியாயப்படுத்துவதற்கு ஒப்பானது.லாபி செய்வது எதிர்மறையாக, கேவலமான ஒரு செயலாகத்தான் கருதப்படுகிறது, கருதப்படவேண்டும். பல அறக்கட்டளைகள் தாங்கள் வழங்கும் ஆராய்ச்சி தொகைகள், விருதுகள் போன்றவற்றிற்கு "lobbying or trying to influence the selection process in any way will be a disqualification" என்பதை நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ தெரிவித்துவிடுகின்றன.

சில சர்வதேச விருதுகளுக்கு பொருத்தமான நபர்களை / அமைப்புகளை பரிந்துரைக்க எனக்கு வாய்ப்புகள் கிட்டியுள்ளன.அதற்காக நான் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்க முடியாது, இப்படி பரிந்துரைக்கிறேன் என்பதையும் வெளியில் கூறக் கூடாது. மேலும் எந்த அடிப்படையில் பரிந்துரைக்க என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் தெரிவிக்கப்படுவதில்லை. முன்பின் அறிமுகமே இல்லாத ஒரு பேராசிரியர் ஒரு சர்வதேச கலைகளஞ்சியத்தில் இந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுகிறீர்களாரா எனக்கு எழுதினார். அவர் ஏன் எனக்கு எழுதினார் என்பதை நான் கேட்கவில்லை, ஏனெனில் யாரோ என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று ஊகிக்க முடிந்தது. நான் எழுதியதை யாரோ கவனித்து நான் இது குறித்து எழுதப் பொருத்தமானவர் என்று பரிந்துரைத்துள்ளார். அது யார் என்பதை நானறியேன். இது போல் சர்வதேச அமைப்புகள் வெள்¢யிடும் சில அறிக்கைகளை, அல்லது சில பகுதிகளை peer review செய்ய வாய்ப்புக் கிடைத்து. இது எப்படி என்பது எனக்குத் தெரியாது. யாரோ பரிந்துரைத்துள்ளார்கள் அல்லது யாரோ நான் பொருத்தமான நபர் என்பதை தெரிவித்திருக்கிறார்கள். என் நண்பர் ஒருவருக்கு அவர் விண்ணப்பம் அனுப்பாமாலே ஒரு வாய்ப்பு தேடி வந்தது.அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைகழகம் ஒன்றில் பாடம் கற்பிக்க விருப்பமா என்று அப்பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். என் நண்பருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது அங்கு காலியாக இருந்த ஒரு இடத்திற்கு இவர் பொருத்தமானவர் என்று சர்வதேச அளவில் அறியப்பட்ட இரண்டு புகழ்பெற்ற பேராசிரியர்கள் இவர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள். என் நண்பர் பல பேராசியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர் அல்ல.எப்போதாவது சந்திப்பது அல்லது கட்டுரைகள் குறித்து கடிதத் தொடர்பு இவைதான் உண்டு. எனவே தன்னை இரண்டு பேர் பரிந்துரைத்தார்கள் என்பது பின்னரே தெரிய வந்தது. அவராக யாருக்கும் என்னை பரிந்துரையுங்கள் என்று எழுதவில்லை, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவுமில்லை. காற்றினிலே வரும் கீதங்களை மட்டுமே கேட்பவர்களுக்கும், லாபி செய்வதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டவர்களுக்கும் இப்படியெல்லாம் நடக்கும் என்பது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஒருவர் சக ஆய்வாளர்களால், peer களால் எப்படி கருதப்படுகிறார் என்பது முக்கியம், தொடர்புகள், லாபி செய்வதல்ல. ஆனால் இங்கு பலருக்கு தனக்கு இணையாக யாரும் கிடையாது, அதாவது peer என்று யாரையும் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு உச்சத்தில் இருக்கிறோம் என்ற நினைப்புதான் இருக்கிறது. எனவே விருதுகளும், பரிசுகளும் ஆய்வாளர்கள் பலருக்கு இன்ப அதிர்ச்சிகளாக இருக்கின்றன, லாபி செய்வது என்பது இழி செயலாக கருதப்படுகிறது. இங்கோ இது தலை கீழ் என்பதை கண்னன் கூறியுள்ளது காட்டுகிறது.
வெ.சா கட்டுரையில் பாருங்கள் ஏகப்பட்ட புலம்பல்கள் நான் ஒரு விருது வாங்கியிருக்கிறேன் ஒரு பத்து பேர் கூட நேரில் வாழ்த்தவில்லை அது மட்டும்ல்ல எனக்கு பரிசு கொடுத்ததை விமர்சிக்கிறார்கள். ஒரிடத்திலாவது எனக்குப் பரிசுகள்,விருதுகள் ஒரு பொருட்டல்ல என்று குறிப்பிடவில்லை. தமிழக அரசு பரிசு தந்தால் கூட நிராகரித்திருப்§0பன் என்று எழுதவில்லை. மாறாக அது கிடைக்காமல் போன மர்மம் குறித்துத்தான் அவர் கவலை கொள்கிறார். நோபல் பரிசு கிடைத்தும் நிராகரித்த ஜீன் பால் சார்த் நம் நினைவிற்கு வருகிறார். லாபி செய்வதை ஒருவர் நியாயப்படுத்துகிறார்.அவரவர் தார்மீக நியாயங்கள் அப்படி.

கிருஷ்ண ராஜ் 1967 முதல் 2004 ல் மரணமடையும் வரை Economic & Political Weeklyன் ஆசிரியராக இருந்தவர். அவருக்கு பத்திரிகையாளர்களுக்கு தரப்படும் கோயாங்கா விருது கிடைத்தது.எனக்குத் தெரிந்து அது குறித்து EPWல் செய்தியோ, பாராட்டுக்கடிதமோ வரவில்லை.அதே சமயம் EPWல் பல விவாதங்கள் நடந்துள்ளன,EPW குறித்தும் கூட ஒரு கட்டத்தில் விவாதம் எழுந்தது, அதற்கும் இடம் அளித்து EPW ஒரு பொதுவான களம் என்பதை அவர் மீண்டும் நிருபீத்தார். (மறைந்த) தர்மா குமார் குறித்து அசோக் மித்ரா தர்மா குமார் நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் போது எழுதிய கட்டுரையை விமர்சித்து EPWல் கடிதங்கள் வெளியியாயின. மித்ரா EPWவுடன் நெருங்கிய தொடர்புயையவர்.EPW வை வெளியிடும் சமீக்ஷா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுவில் பல ஆண்டுகள் இருந்தவர் (இப்போதும் இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது). அதற்காக அவர் எழுதியதை விமர்சிக்கக் கூடாது என்று ராஜ் கருதவில்லை. மாறாக EPW வில் அறிவார்ந்த விவாதங்கள் நடைபெற வேண்டும், பல்வேறு கருத்துகளுக்கு இடம் தர வேண்டும் என விரும்பினார். அதை ஊக்குவித்தார். இதை என் அனுபவத்தின் அடிப்படையில் என்னால் உறுதியாகக் கூற முடியும். சர்வ தேச அளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு பேராசிரியர் எழுதியதை விமர்சித்து ஒரு சாதாரண வாசகர் அல்லது ஒரு மாணவர் எழுதினால் அதில் பொருள் இருக்குமானால் அதை ஒரு வார்த்தைக் கூட குறைக்காது வெளியிடும் EPW.அங்கு அறிவார்ந்த விவாதம்தான் முக்கியம், ஆளுமைகளின் ego அல்ல. எத்தனை தமிழ் சிறுபத்திரிகைகள் குறித்து நாம் அவ்வாறு கூற முடியும்.தன் புகைப்படம் கூட பத்திரிகைகளில்,நாளிதழ்களில் வெளியாவதை அவர் விரும்பவில்லை.அவர் மரணமுற்ற பின்தான் அவரது புகைப்படம் நாளிதழ்களில் வெளியானது. (தன் புகைப்படம் வெளியாவதை, தன்னைப் பற்றி எழுதுவதை விரும்பாத இன்னொருவர் குமுதத்தின் நிறுவனர்-ஆசிரியர். அவர் மரணமடைந்த பின் தான் அவர் புகைப்படம் குமுதத்தில் வெளியானது. அதே சமயம் குமுதத்தின் கெளரவ ஆசிரியராக இருந்த டாக்டர்.அழகப்ப செட்டியார் குறித்து ஆண்டுதோறும் ஒரு அஞ்சலிக் கட்டுரை வெளியாக வேண்டும் என்பதை அவர் கடைப்பிடித்தார்).

பல ஜர்னல்களின் ஆசிரியர்கள் தத்தம் துறையில் விற்பன்னர்களாக இருப்பார்கள்.அவர்கள் பெறும் பரிசுகள், விருதுகள் குறித்த செய்திகள், ஜர்னல்களில் வெளியாவது அத்துறை தொடர்புடைய விருதுகள் குறித்து அறிவிப்புகளுடன் வெளியாகும், அவ்வளவுதான். பலரின் சாதனைகள்,பெற்ற விருதுகள் குறித்த முழுமையான தகவல்கள் அவர்கள் மரணமடைந்த பின், அல்லது பதவி விலகிய பின் வெளியாகும் குறிப்புகள் மூலம்தான் தெரிய வரும்.ஏனெனில் ஜர்னல்களின் நோக்கம் தனி நபரை முன்னிறுத்துவது அல்ல. மடங்கள் அமைப்பது அல்ல. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது கள் ஆண்டு தோறும் இளம் விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. விருது பெற்றோர் பற்றிய குறிப்பும், பின்னர் விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றிய குறிப்பையும் ஆங்கில நாளேடுகளில் பார்த்திருக்கிறேன். அதற்காக அவர்களை பாரட்டி யாரும் விளம்பரம் கொடுத்தோ அல்லது போஸ்டர் ஒட்டியோ பார்த்ததில்லை. இது போல் பலதுறைகளில் பல்வேறு பரிசுகள்,விருதுகள் உள்ளன. பல சமயங்களில் பரிசு பெற்றவர்கள் தங்கள் ஆய்வு நிலையங்களில் இதற்கென்று ஒரு சிறு விருந்து கொடுத்து கொண்டாடுவதுடன் முடித்துக் கொள்வார்கள்.அடுத்த வீட்டுக்கார்களிடமும், சொந்தக்கார்களிடமும் கூட தாங்கள் பெறும் பரிசு குறித்து குறிப்பிடத் தயங்கும் பலர் இருக்கிறார்கள். பல்கலைக்கழக செய்திக் குறிப்புகள் அல்லது இணையதளத்தில் பல்கலைகழகங்கள் அல்லது ஆய்வு மையங்கள் தரும் தகவல்கள் மூலம்தான் பல சமயங்களில் இன்னாருக்கு இந்தப் பரிசும் விருதும் கிடைத்திருக்கிறது என்பதே தெரியவரும். சம்பந்தப்பட்ட நபர் அது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செயதிருக்கமாட்டார் அல்லது ஊடகங்களுக்கு தகவல் தந்திருக்கமாட்டார். ஏனெனில் பலருக்கு பரிசுகளும்,விருதுகள் முக்கியமே அல்ல. தாங்கள் என்ன செய்கிறோம், செய்யப் போகிறோம் என்பதும், தங்கள் பங்களிப்பு அத்துறையில்லுள்ள பிறரால் எப்படி மதிப்பிடப்படுகிறது என்பவையே முக்கியம். ஆனால் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் பரிசுகள், விருதுகள் குறித்த சர்ச்சைகள், பரிசுகளுக்கும்,விருதுகளுக்கும் தரும் முக்கியத்துவம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.சகிக்க முடியாத ஆபாசம் இது.
சுஜாதாவிற்கு வாஸ்விக் விருது கிடைத்திருப்பதை அவர் விகடனில் எழுதிய பின்னரே பலருக்குத் தெரிந்திருக்கும்.இந்த விருது குறித்து எத்தனை தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் செய்திகள் வெளியிட்டன. ஹிந்துவில் செய்திவெளியாயிருக்கும் நான் கவனிக்கவில்லை என்று தேடினால் இணயதளம் ஹைதராபாத் பதிப்பில் ஒரு செய்தியைகாட்டுகிறது , அங்கு உள்ள ஒரு விஞ்ஞானி இப்பரிசு பெற்றதை. அதில் பரிசு பெற்ற பிறர் பற்றி தகவல் இல்லை.பரிசு தரும் அமைப்பின் இணையதளமும் முழுத்தகவல்களை தரவில்லை. இவ்வளவிற்கும் இப்பரிசு 1970 களிலிருந்துவழங்கப்படுகிறது. அமர்த்தியா சென் நோபல் பரிசு பெற்ற செய்தி வெளியான போது தமிழில் ஒரு வார இதழின் அட்டையை அலங்கரித்தது அப்போது டோக்கியோவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் (இரண்டாம்?) பரிசு பெற்றிருந்த ஸ்வேதா (ஜெய்சங்கர்). அமர்த்தியா சென் குறித்தும், அவரது பங்களிப்பு குறித்தும் தமிழில் எத்தனை பக்கங்கள் , சிறு பத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளன. தி.க.சிக்கு சாகித்ய அகாதமி பரிசு தரப்பட்ட போது அதற்கு காலச்சுவடு எத்தனைப் பக்கங்களை அதை விமர்சிக்க ஒதுக்கியது. இது தேவைதானா என்று வெ.சா கேட்டிருக்கிறாரா?. அல்லதுஜெயமோகன் கேட்டிருக்கிறாரா ? அன்று தி.க.சிக்கு விருது கொடுத்ததற்கு கூட்டாக ஒப்பாரிதானே வைத்தார்கள். தமிழில் ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி பரிசுகளை குறித்து சர்ச்சை எழாவிட்டால்தான் ஆச்சரியம் என்ற நிலை இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் பிற மொழிகளில் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்களை அறிமுகப்படுத்தி எழுதுவதை விட தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு விருது கிடைத்துவிட்டால் அதை விமர்சிக்கவே சிறு பத்திரிகைகள் அதிக பக்கங்களை ஒதுக்குகின்றன. அந்த விமர்சனங்கள் கூட பல சமயங்களில் சரியாக எழுதப்படுவதில்லை. வைரமுத்துவிற்கு விருது கிடைத்த போது அது குறித்து ஜெயமோகன் எழுதிய கட்டுரை ஒரு அறிவார்ந்த விமர்சனத்தைக் கூட அவரால் வைக்க முடியாது என்பதைக் காட்டியது.

அதே சமயம் வெ.சா விற்கு இன்னொன்று புரியவில்லை என்று தோன்றுகிறது. பரிசு தரும் அமைப்புகள் பரிசு குறித்த விபரம்,பரிசு பெற்றோர் குறித்த தகவல்கள், பரிசு வழங்கப்படும் நிகழ்ச்சி குறித்த தகவல்களை பரவலாக தெரியப்படுத்த முயற்சி எடுக்கும். புகைப்படத்துடன் பத்திரிகைகளுக்கு செய்தி அறிக்கை அனுப்பும், மேல் விபரங்களுக்கு யாரை அணுக வேண்டும் என்பதையும் தெரியபடுத்தும். இந்த விருதினை வழங்கியவர்கள் அவ்வாறு செய்தார்களா என்பது எனக்குத் தெரியாது. பொதுவாக பிரபலமாகாத ஒரு அமைப்பின் பெயரில் வெளியாகும் பரிசு அறிக்கையை விட ஒரு பல்கலைகழகத்தின் பெயரில் ஒரு பரிசு அறிக்கை வெளியானால் அது அதிக கவனம் பெறும். இங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.எத்தனயோ விருதுகளும், பரிசுகளும் தரப்படும் உலகில் ஒரு சிலவே கவனம் பெறுவதில் வியப்பில்லை. எனவே வெ.சா வின் புலம்பல்கள் ஐயோ பாவம் அவர் என்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன. சர்ச்சைக்குள்ளாகியுள்ள முழுக்கடிதத்தை நான் படிக்கவில்லை.இணையத்தில் வெளியான ஒரு பகுதியைப் படித்தேன். வெ.சா அந்தப் பரிசுக்குத் தகுதியவற்றவர் என்ற அளவில் அவர் தன் கருத்தினை எழுதியிருக்கலாம். அதற்கு அப்பால் பரிசின் புனிதம் குறித்தெல்லாம் எழுதியிருக்கத் தேவையில்லை. பரிசுகளுக்கென்று புனிதத்தைத் கற்பித்து, சிலரை புனிதர்களாகவும், சிலரை பாவிகளாக்கவும் சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.இந்தப் பரிசு விவகாரம் இவ்வளவு பெரிதுபடுத்தப்பட வேண்டிய ஒன்றே அல்ல. இது ஒரு விருது அல்லது பரிசு அவ்வளவுதான். வெ.சா வைப் பற்றி எழுதும் போது ஒரு வரி அல்லது இரண்டு வரி எழுத இது பயன்படலாம். இதை வைத்துத்தான் வெ.சாவை மதிப்பிடுவார்கள் என்று கருதத்தேவையில்லை. எனவே கோழி பிடிப்பது ஆனை பிடிப்பது என்று எழுதிக்கொள்வது அவரவர் மன நிலையையும், பரிசுகளுக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. இதைப் பெற்றதால் அவர் சிறந்த விமர்சகர் அல்லது பரிசு எதையும் பெறாததால் அவர் விமர்சகரே அல்ல என்றா கருதமுடியும்.வெ.சா எழுதியுள்ளதை வைத்துத்தான் அவரை மதிப்பிட முடியும், விருதுகளை வைத்து அல்ல. இந்தப் புரிதல் இருந்தால் வெ.சா இதை இவ்வளவு பெரிதுபடுத்தி இருக்கமாட்டார். இங்கு வெளிப்படுவது தார்மீக கோபமல்ல, காயமடைந்த ஒரு ego வின் ஆத்திரம். இது இணையத்தில் மூன்று வெளியீடுகளில் வருவது தமிழ்ச் சூழல் எப்படி உள்ளது என்பதைக் காட்டுகிறது. வெ.சா இப்படி ஒரு நீண்ட கட்டுரை எழுதியதற்கு பதிலாக கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்"எனக்கு பரிசு கொடுத்தது குறித்து சிலர் கண்டனம்,விமர்சனம் தெரிவித்துள்ளனர்.நான் இந்தப் பரிசினைப் பெற முயல்வில்லை, அவர்களாக தெரிவு செய்து கொடுத்தது. இப்பரிசிற்கு நான் தகுதியுடயவனா இல்லையா என்பதை நான் இத்தனை ஆண்டுகளாக எழுதியுள்ளதை காய்தல் உவர்த்தலின்றி படிக்கும் எவரும் முடிவு செய்து கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை பரிசுகள்,விருதுகள் முக்கியமானவை அல்ல.நான் என்ன எழுதுகிறேன் என்பதே முக்கியம். அதன் அடிப்படையில்தான் காலம் என்னை மதிப்பிடும், பரிசுகளின் அடிப்படையில் அல்ல என்று நான் உறுதியாக கருதுகிறேன்".நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிஸ் ஒரு கட்டுரையை சயன்சில் எழுதினால், அதற்கு பதிலாக அதை விமர்சித்து ஒருவர் கட்டுரை எழுதினால் அதில் பொருள் இருப்பின் சயன்ஸ் வெளியிடும், வெளியிட்டுள்ளது. நோபல் பரிசு பெற்றவர்கள்களை விமர்சிக்கக் கூடாது என்று எனக்குத் தெரிந்து ஒரு ஜர்னலும் விதிகளை வகுக்கவில்லை. சில வாரங்கள் முன்பு நோபல் பரிசு பெற்ற ஒரு அறிவியலாளர் பங்கேற்ற ஒரு பயிலரங்கில் பங்கேற்றேன்.அமர்வு முடிந்ததும் அவரும் பிறர் போல் வரிசையில் நின்று காபி பெற்றுக்கொண்டார். பிறருடன் எந்த பந்தாவும் இல்லாமல் உரையாடினார். கூட பாதுகாப்புப் படையில்லை, அமர்வில் அவருக்கென்று தரப்பட்டிருந்த இருக்கை பிறருக்கு தரப்பட்டிருந்த இருக்கைக்கு சமமானதே.அவர் சர் பட்டம் பெற்றவர்.ஆனால் பலர் அவரை பெயர் சொல்லியே விளித்தார்கள், கேள்விகள் கேட்டார்கள்.அவர் கருத்தும் விமர்சிக்கப்பட்டது. இதற்காக நான் நோபல் பரிசு பெற்றவன், நான் சொல்வதை எப்படி விமர்சிக்கலாம் என்றெல்லாம் அவர் பேசவில்லை. இதெல்லாம் வெ.சா, ஜெயமோகன் போன்றவர்களுக்கு புரியாது.


நீதாம், பாரம்பரிய அறிவு - ஒரு குறிப்பு

புதுவை ஞானம் கட்டுரையில் ஜோசப் நீதாம் குறித்து தமிழில் யாரும் குறிப்பிட்டதில்லை என்று எழுதியுள்ளார். அது சரியல்ல என்றே தோன்றுகிறது. ஏனெனில் நீதாம் குறித்து கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என்.நாகராஜன் ஆகியோரிடம் நான் விவாதித்திருக்கிறேன். அவரது அனைத்து நூல்களும் படிக்க கிடைக்காத நிலையில் ஒரு சில படிக்க கிடைத்தன. ஒரு சில கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். பிலாசபி அண்ட் சோசியல் ஆக்ஷன் என்ற பத்திரிகையில் அறிவியலும், விழுமியங்களும் குறித்து அவர் எழுதிய கட்டுரையை நானே பல நண்பர்களுக்கு பரிந்துரைத்து, பிரதி எடுத்தும் கொடுத்திருக்கிறேன். சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் அவர் எழுதிய ஒரு சில நூல்கள் உள்ளன என நினைக்கிறேன். ஒரு நூலை அங்கு எடுத்து படித்திருக்கிறேன். கார்ல் மார்க்ஸ் நூலக கண்ணனிடம் சில இருக்க வாய்ப்புள்ளது. பிரக்ஞை, பரிமாணம், படிகள், மார்க்சியம் இன்று போன்றவற்றில் ஒரிரு கட்டுரைகளும் வெளியாகியிருக்ககூடும். உறுதியாக கூறவியலாது. மற்றபடி நீதாம் பரவலாக அறியப்பட்டவர்தான். இடதுசாரி அறிஞர்கள் பலர் அவரை மேற்கோள் காட்டியுள்ளனர்.அறிவியலின் தத்துவம், வரலாறு போன்றவற்றில் இடதுசாரிகள் ஆரம்ப முதலே அக்கறைக் காட்டி வந்துள்ளனர். அறிவியலாளர்களாகவும் விளங்கி இவற்றிலும் குறிப்பிட்ட பங்களிப்புச் செய்தவர்களை பட்டியலிட முடியும், அதில் நீதாமிற்கு முக்கியமான இடமுண்டு.

பாரம்பரிய அறிவியல், தொழில்நுட்பம் குறித்து பல நூல்கள், ஆய்வுகள் உள்ளன. PPST குழு 80களில் இது குறித்து தீவிரமாக இயங்கிய குழுக்களில் ஒன்று.இன்று இவர்களுடன் எனக்கு தொடர்பில்லை, எனவே இன்று என்ன செய்கிறார்கள் என்பது தெரியாது. Centre For Indigenous Knowledge Systems என்ற அமைப்பு சென்னையை தலைமையகமாகக் கொண்டு பாரம்பரிய விவசாயம் உட்பட பலவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளது. இது போல் வேறு பல அமைப்புகள் உள்ளன. பல முக்கியமான நூல்கள், கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன.துரதிருஷ்டவசமாக இவற்றில் பெரும்பான்மையானவை சாதாரண வாசகர்களுக்காக எழுதப்படுவதில்லை. அல்லது ஜர்னல்களில் வெளியாகும் கட்டுரைகளாக இருக்கின்றன. இவை எளிதில் கிடைப்பதில்லை. உதாரணமாக ஆயுர்வேதம் ஒரு அறிவியல்பூர்வமான மருத்துவமுறையா என்ற பொருளில் ஒரு கட்டுரையை ஒரு ஜர்னலில் படித்தேன்#. இது போன்ற ஜர்னல்கள் ஒரு சில பல்கலைகழக நூலகங்கள் அல்லது National Institute For Science, Technology and Development Studies NISTADS போன்ற ஆய்வு நூலகங்களில்தான் கிடைக்கும். இன்னொரு பிரச்சினை பல ஆய்வுகள் பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளில் உள்ளன.
ethnosciences என்ற பெயரில் மேற்கத்திய அறிவியல் தவிர பிறவற்றைக் குறிப்பிடும் பழக்கம் இருக்கிறது. ethnoecology, ethnopharmacology,ethnovetneiry medicine, ethnoagriculture என்று பலவற்றில் ஆய்வுகள் ஏராளமாக உள்ளன. எனவே தமிழர்களின் பாரம்பரிய அறிவியல்,தொழில்நுட்பம் குறித்து ஒரு தகவல்தொகுப்பு ஒன்று இருந்தால்தான் என்னனென்ன ஆய்வுகள் வெளியாகியுள்ளன என்பதினை ஒரளவு அறிந்து கொள்ள முடியும். அத்தகைய ஒரு தொகுப்பு இருக்கிறதா, நானறிந்த வரையில் இல்லை. எங்காவது இருக்கலாம்.

மேலும் மேற்கில் அறிவியலின் வரலாறு, அறிவியலின் தத்துவம் குறித்து கவனம் செலுத்துகிறார்கள். நாம் அந்த அளவு கவனம் செலுத்துவதில்லை. பல பல்கலைகழகங்களில் இவைகளுக்காக துறைகளும்,ஆய்வு மையங்களும் உள்ளன.தமிழ் நாட்டில் எத்தனை பல்கலைகழகங்களில் இவை குறித்து ஆய்வுகள்மேற்கொள்ளப்படுகின்றன அல்லது தனித்துறைகள் உள்ளன. கருத்துகளின் வரலாறு குறித்தும் மேற்கில் தனிக்கவனம் செலுத்துகிறார்கள்.
அது மட்டுமல்ல history of recent science என்பதும் கவனம் பெறுகிறது.எனவே கடந்த 50 ஆண்டுகளில் தோன்றியுள்ள புதிய அறிவியல் துறைகள், கோட்பாடுகள் குறித்து பல ஆய்வு நூல்கள், கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகின்றன. இணையத்தின் வரலாறு குறித்த நூல்களையும்,கணினித் துறையின் வரலாறு குறித்த நூல்கள் வெறும் வரலாற்று நூல்களாக பல சமயங்களில் இருப்பதல்லை.உ-ம் The Closed World நாம் மேற்கிடமிருந்து இதிலெல்லாம் கற்க ஏராளாமாக உள்ளன. இந்த நூலினைப் படித்தால் நான் சொல்வது விளங்கும்.
ஒரு புறம் ராமாயணக் காலத்தில் ஆகாயவிமானம், ராக்கெட் இருந்தது, தமிழர்களுக்கு விமானம் பற்றித் தெரியும், இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன என்பது போன்ற வாதங்கள்.இன்னொரு புறம் இங்கு இருந்ததெல்லாம் ஒன்றும் உதவாத குப்பை என்ற கண்னோட்டம். அக்கறையின்மைக்கு ஒரு காரணம் மேற்கத்திய அறிவியல் ஒன்றே அறிவியல், வேறு அறிவியல் அல்லது அறிவு அமைப்பே இல்லை என்ற கண்ணோட்டம், இன்னொன்று நவீன அறிவியல், தொழில் நுட்பமே தீர்வுகளைத் தரும் என்ற கருத்து.
1980 களில் பல்வேறு காரணங்களால் பாரம்பரிய அல்லது மேற்கத்திய அல்லாத அறிவியல்,தொழில்நுட்பங்கள் குறித்த கண்ணோட்டங்களில் மாறுதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவினை இன்றுICSU போன்ற அமைப்புகளின் வெளியீடுகளில் காணலாம். இந்த மாறுதல்கள், அதற்கான காரணங்கள் குறித்து விளக்க ஒரு நீண்ட கட்டுரை தேவைப்படும்.
ஆனால் நம் சூழலில் இவை குறித்து ஒரு புரிதலோ விவாதமோ இல்லை. உதாரணமாக அருண் அக்ராவல் எழுதியது குறித்தோ அல்லது டேவிட் டர்ன்புல் எழுதியது குறித்தோ குறிப்பிட்டால் அவற்றைப் படித்து விவாதிக்கக் கூட இங்கு கிட்டத்ட்ட யாரும் தயாரில்லை என்பதுதான் உண்மை.இவ்வளவிற்கும் டர்ன்புல் கட்டுரையும், நூலும். அக்ராவல் கட்டுரையும்,பிறவும் பல மேல்நாட்டுப் பல்கலைகழக நூலகங்களில் எளிதில் கிடைப்பவை. இந்தியாவிலும் கிடைக்கக்கூடும், முயற்சி எடுத்துத் தேடினால்.ராயர் காப்பி கிளப்பில் இது குறித்து எழுதியிருக்கிறேன். ஒரு விவாதம் நடைபெறவில்லை, நடைபெறும் சூழலும் இல்லை. அதற்கு ஒரு முக்கிய காரணம் விவாதம் எதைப் பற்றி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல் இல்லை. முன்னர் குறிப்பிட்ட இரண்டு நிலைப்பாடுகளிலிருந்தே விவாதிக்க விரும்புவதால் எழும் பிரச்சினை இது. இந்த நிலை மாறாத வரை நம்மால் பாரம்பரிய அறிவு குறித்த ஒரு அறிவார்ந்த கண்ணோட்டத்தினைப் பெறமுடியாது.
தமிழில் பழைய ஒலைச்சுவடிகளைப் பதிப்பித்தால் மட்டும் போதாது. தமிழரின் கணிதம் குறித்த கோட்பாடுகள் குறித்து ஒப்பீட்டு ஆய்வுகள் தேவை. மேலும் தமிழில் இது குறித்து உள்ள வேறு நூல்கள் , அந்த நூலுக்கு முற்பட்டவை, பின்னர் எழதப்பட்டவை என்ன கூறுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒரு அறிமுகமாக இந்நூல் எழுதப்பட்டது என்று ஊகிக்கப்படும் அல்லது கருதப்படும் காலத்தில் கணித துறை எப்படி இருந்தது, குறிப்பாக இந்தியாவில் என்பதுடன் ஒரு ஒப்பீட்டு ரீதியானஅலசலையும் , உதாரணமாக அப்போது ஐரோப்பாவில் கணிதம் இருந்த நிலை, இந் நூலின் சிறப்பு என்னஎன்பதையும் தர வேண்டும்.இதற்கு தமிழ்ப் புலமை மட்டும் போதாது. அப்படிப்பட்ட ஒரு பார்வை இல்லையெனில் ஏதோ ஒரு பழைய ஒலைச்சுவடியை படிக்கிறோம். அந்தக்காலத்திலும் இங்கு இதையெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணமே ஏற்படும். குறைந்தபட்சம் The Crest of thePeacock The Non-European Roots of Mathematics by George Gheverghese Joseph போன்ற நூல்களாவது தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நம்மால் நம் பாரம்பரியத்தினைப் புரிந்துகொள்ள முடியும்.
ஞானம் அவர் குறிப்பிடும் நூல்களை அறிமுகம் செய்து விரிவாக எழுத வேண்டும். எழுதுவார் என்று நம்புகிறேன்.

வீரப்பன் கொலை, அது குறித்த எதிர்வினைகள் - ஒரு கண்ணோட்டம்

இவை முதற்கட்ட கருத்துக்களே. இறுதிவடிவம் பெற்றவை அல்ல. ஒரு வேளை பின்னர் விரிவாக எழுதக்கூடும், எழுதாமலும் இருக்க வாய்ப்புள்ளது. நான் சன் டி.வி உட்பட இந்திய தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வாய்ப்பில்லை, அது போல் இதை எழுதும் போது இது குறித்து வந்திருந்த எல்லாச் செய்திகளையும் படிக்கவில்லை.எனவே தகவல் பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

வீரப்பன் ஒரு குற்றவாளி. அவன் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவன்.தூக்குதண்டனை கொடுக்கப்பட்டால் கூட அதை சட்டபூர்வமாக செய்யவேண்டும்.மரண தண்டனை சரியா,தவறா என்பது குறித்து இப்போது பேச வேண்டாம். உயிருடன் பிடித்திருக்க முடியாதா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது.பி.பி.சி பேட்டியில் ஹென்றி டிபைன் சில கேள்விகளை எழுப்பினார். அவை நியாயமானவை என்றே கருதுகிறேன். இத்தனை ஆண்டுகளாக தலைவலியாக இருந்த வீரப்பன் ஒழிந்தான் என்று சிலர் சந்தோஷப்படலாம், அதை எப்படிச் செய்திருந்தாலும் நியாயமானது என்று சிலர் வாதிடலாம். வீரப்பன் சரணடைந்து சட்டத்தை எதிர் கொண்டிருந்தால் தண்டிக்கப்பட்டிருப்பான். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை சரணடைய வைத்தார் ஜெயப்பிரகாஷ் நாராயண். பூலன் தேவி ஒரு முன்னாள் கொள்ளைக்காரி. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு மக்களவை உறுப்பினாராகவும் மாறினார். வால்மீகி ஒரு கொள்ளைக்காரார். அவர் எழுதிய நூலை அதற்காக நிராகரிக்கிறோமா. அருணகிரி நாதர், புனித ஜெனெ இவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் பின் எப்படி ஆனார்கள். எனவே எவ்வளவு குற்றங்கள் இழைத்திருந்தாலும் ஒருவர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும், மனம் திருந்தி வாழ இடமிருக்க வேண்டும். இப்படி இல்லாத ஒரு சமூகத்தினை நாகரிகமான சமூகமாக ஏற்பது கடினம். கொலை யார் செய்தாலும் நல்ல தீர்வாகாது.

கர்நாடகத்தில் சுமார் 130 தமிழர்கள் தடாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடியதையும், சிறப்புப்படையினரின் மனித உரிமை மீறல்களை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட சதாசிவம் கமிஷன் குறித்தும்பேசாமல் வீரப்பன் விவகாரத்தை பேச முடியாது. இவர்கள் பிரச்சினையை வெளி உலகிற்கு கொண்டு வந்தது யார் - மனித உரிமை அமைப்புகள், தமிழின நலம் விரும்பிகள், ஆர்வலர்கள் சிலர். அவர்கள் யாராக இருந்தாலும் இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களது அரசியல், கொள்கைகள் - இவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. மனித உரிமை மீறல்களை எதிர்த்து குரல் கொடுப்பதை யார் செய்தாலும் வரவேற்க வேண்டும். வீரப்பன் ஒரு subaltern என்று நான் வாதிட விரும்பவில்லை. அதே சமயம் அவர் ஒருவர்தான் குற்றவாளி என்றும் நான் கருதவில்லை. குற்றத்திற்கும், சமூகத்திற்கும், அரசிற்கும் உள்ள உறவு விசித்திரமானது. இனப்படுகொலையை முன்னின்று நடத்தியவருக்கு பாதுகாப்பிருக்கும், பதவியிருக்கும், மக்கள் ஆதரவுமிற்கும் என்பதற்காக அவர் புனிதராகிவிட மாட்டார்.

வீரப்பன் குறித்து பல்வேறு கருத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை அரசின் கோணத்தில், அல்லது ஊடகங்களின் கோணத்தில் பார்ப்பார்கள் என்று சொல்ல முடியாது.பி.பி.சி தமிழோசை நிகழ்ச்சியில் கூறப்பட்ட கருத்துகள் பலவகையாக இருந்தன.அப்படித்தான் இருக்கும்.யாருக்குத் தெரியும் காலப்போக்கில் வீரப்பனும் ஜம்புலிங்கம், சீவலப்பேரி பாண்டி போல் மக்களால் வீரனாகக் கொண்டாடப்படலாம் . பேராசிரியர் முத்தையா பி.பி.சி பேட்டியில் சில கருத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தீர்வு சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இது ஒன்றேதான் தீர்வு என்று வாதிடுபவர்களிடம் எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. மற்றப்படி பெரும்பாலான வலைப்பதிவுகளில் இது கருணாநிதி, ராமதாசை திட்ட ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லது கொல்லப்பட்டது நியாயப்படுத்தப்படுள்ளது. மனித உரிமை மீறல்கள்,சதாசிவம் கமிஷன்,கர்நாடகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஒருவர் ஏன் வீரப்பன் மகள் புகைப்படத்தை வெளியிட்டு அவர் வாழ்க்கையை பாதிக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார், வேறு சிலர் இத்துடன் சந்தன மரக்கடத்தல், யானைகள் கொல்லப்படுவது குறைந்துவிடுமா அல்லது நின்றுவிடுமா என்று கேட்டிருந்தார்கள் நியாயமான கேள்விகள். மற்றப்படி தமிழ் வலைப்பதிவாளர்கள் பலர் எத்தகைய பிற்போக்குக் கண்ணோட்டம் உள்ளவர்கள் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகி உள்ளது. வலைப்பதிவாளர்கள் பலருக்கு சிலரைத் திட்டுவதில் இருக்கும் ஆர்வம் தகவல்களை அறிந்து கொள்வதில் அல்லது உண்மைகளை தெரிந்து கொள்வதில் இல்லை என்பது என் கருத்து. பா.ராகவன், காசி போன்றவர்களால் கூட இதை வேறுவிதமாக அணுக முடியவில்லை என்றால் வேறு என்ன சொல்ல. நக்கீரன் கோபாலின் இதழியல் விழுமியங்கள் எனக்கு உடன்பாடில்லாதவை. ஆனால் அவர் வீரப்பன், ஆட்டோ சங்கர் குறித்து எழுதியதில் எத்தனையோ குறைபாடுகள் இருப்பினும் நமக்கு பல தகவல்கள் தெரியவந்தன. ஆட்டோ சங்கர் எழுதிய குறிப்புகளை நூலாக கொண்டுவர உச்ச நீதி மன்றம் அனுமதி கொடுத்தது. அந்தத் தீர்ப்பில் கூறப்பட்ட கருத்துக்கள் முக்கியமானவை. பா.ராவால் மிக மேம்போக்காக, ஒரு flippant attitude கொண்டுதான் வீரப்பன் குறித்து எழுத முடிகிறது. புஷ¤ம், பிளேயரும் ஈராக்கில் சாதாம் பேரழிவினை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருப்பதாக்க் கூறினார்கள்,அது பொய் என்பது இப்போது தெளிவாகிவிட்டதே. மனித உரிமை ஆர்வலர்கள் முன் வைக்கும் கேள்விகளை புரிந்து கொள்ளக் கூட அவர் முயலவில்லை. உடல் நிலை சரியில்லாத நிலையில் வீரப்பன் இருக்கும் போது சுட்டது யார்,காயமடைந்த போலீஸ்கார்கள் யார், எத்தகைய காயம் ஏற்பட்டது. வீரப்பனுடன் இருந்தது நான்கு பேர். போலீஸ்காரர்கள்எத்தனை பேர். வாகன ஒட்டியும் ஒரு போலிஸ்காரர். இந்நிலையில் வீரப்பனைப் பிடித்திருக்க முடியும், வேண்டுமென்றேசுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று ஒரு வாதம் எழுமானால் அதை பரீசிலிக்காமால் போலிஸ் உயர் அதிகாரி கூறுகிறார்என்பதற்காக அதை ஏன் அப்படியே ஏற்க வேண்டும். தினமலர் பாதிக்கப்பட்ட கர்நாடகத் தமிழர்கள், சதாசிவம் கமிஷன் முன் சாட்சியமளித்தவர்கள் பட்டியலையும் வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை. வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலை மட்டும் ஏன் வெளியிடுகிறீர்கள் என்றெல்லாம் கேட்பது பலருக்கு உவப்பாக இருக்காது. 1996 தேர்தலில் வீரப்பன் பேட்டியை சன் டி.வி பயன்படுத்தியதைப் பற்றி பேசுபவர்கள் 1984 தேர்தலில்ன் போதுகொலைச் செய்யப்பட்ட இந்திராவின் படம், 1991 தேர்தலில் ராஜிவின் கொலை அனுதாப அலையாக யாருக்குசாதகமாக அமைந்தது என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். சன் டி.வி அந்தப் பேட்டியை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பியது பிரச்சாரம்தான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் கல்கியில் இன்னும் ஏன் கல்கி ஏதோ காலத்தில் எழுதியவற்றைஅவை புத்தகமாக வந்து பல பதிப்புகள் வந்தபின்னும் ஏன் போடுகிறீர்கள்.எத்தனை முறைதான் ஒரே நாவலை தொடர்கதையாகப் போடுவீர்கள் என்று பா.ரா வோ அல்லது பிற வலைப்பதிவாளர்களோ கேட்டதுண்டா. சன் டி.வி செய்வதுபிரச்சாரம், கல்கி செய்வது என்ன என்று யோசித்தாவது பார்த்திருக்கிறீர்களா.

ராஜிவுடன் ஆப்பிள் சாப்பிட்டேன், அப்தூல் கலாமுடன் அடை சாப்பிட்டேன், வாஜ்பாயுடன் வடை சாப்பிட்டேன் என்று வரி பணத்தில் பிரபலங்களுடன் செல்லும் பத்திரிகையாளர்கள் எழுதலாம், அது இதழியல் நாகரிகம். ஆனால் வீரப்பனுடன் தங்கியிருந்த அனுபவத்தை நெடுமாறனோ அல்லது சுகுமாரானோ அல்லது கல்யாணியோ எழுதினால் அது அநாகரிகம்.அதே போல் வீரப்பன் குறித்து சுப்பனோ அல்லது ராக்கயியோ சொன்னால் அது கேலி செய்யப்பட் வேண்டிய ஒன்று.பிரபல நடிகர்களை பேட்டிக் கண்டது குறித்து மகிழ்ச்சியுடன் அருண் வைத்தியநாதன் எழுதினால் அது பாராட்டப்படவேண்டிய ஒன்று. மீண்டும் மீண்டும் நீங்கள் யார், உங்கள் விழுமியங்கள் என்ன என்பதை நீங்கள் நீருபிக்கிறீர்கள். உங்களுக்கு மனித உரிமை குறித்து அக்கறை இல்லை, சாதாரண குடிமக்கள் பொருட்டில்லை, உங்களைப் பொறுத்தவரை தமிழ்ப் பற்றாளர்கள் கேலிக்குரியவர்கள் என்பதை இந்தப் பதிவுகள் மூலம் காட்டியுள்ளீர்கள்.அதற்காக என் நன்றிகள்.

எனக்கு இதில் அதாவது வீரப்பன் இப்படி மரணமடைந்ததில் மகிழ்ச்சியுமில்லை, வருத்தமுமில்லை. ஏனெனில் பல உண்மைகள் வெளிவர வாய்ப்பில்லாதபடி ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது. எங்கே வீரப்பன் ஒரு நாள் உண்மைகளைக் கூறி நம்மைக் காட்டிக் கொடுத்துவிடுவான் என்று அஞ்சியவர்கள் நிம்மதியாக இருக்கலாம்.
நோபல் பரிசு - யாருக்கு - ஊகிக்க, வாங்க, விற்க ஒரு பங்குச் சந்தை

நோபல் பரிசு எங்கே தலால் தெருவை அல்லது வால் ஸ்டிரீடில் உள்ள பங்கு வர்த்தகத்தை பாதித்தது என்று யோசிக்கிறீர்களா. இது வேறுவிதமான பங்குச் சந்தை - நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என்ற ஊகத்தின்அடிப்படையில் செயல்படும் சந்தை. இப்படி ஒரு சந்தை இருந்தாலும் இதை பிற முக்கிய பரிசுகளுக்கும் விரிவுபடுத்துவார்களா என்று தெரியவில்லை. ஒரு வகையில் ஜெயிக்கிற குதிரை எது என்ற அனுமானத்தின் பேரில் மீது பந்தயம் நடத்துவதைப் போல்தான் இதுவும். ஆனால் எதெது பந்தயத்தில் உள்ள குதிரை என்பதை அனுமானிப்பதே கடினமே. எனவே நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என்பதை ஊகிப்பது எவ்வளவு கடினம் என்பதால், யார் அல்லது எந்தக் குழு எல்லாத் துறைகளிலும் யாருக்கு கிடைக்கும் என்பதை ஊகித்து கூறுகிறதோ அவர்களுக்கு சிறப்பு நோபல் பரிசு கொடுக்கலாம். தமிழில் இது மாதிரி ஒரு பங்குச் சந்தை அமைக்கலாம் - எந்தெந்த விருதுகள் யாருக்குக் கிடைக்காது என்று ஊகித்து "பங்கு வர்த்தகம்" செய்ய

கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் - ஒரு குறிப்பு


1
பகவத்கீதையைப் பற்றிய சர்ச்சை எழுந்தாலும் எழுந்தது, ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் இது இன்னொரு வாய்ப்பு என்று புதிதாக விஷமப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.இவர்கள் இருவரும் கீதையின் அந்த சர்ச்சைக்குரிய பகுதிக்கு இவர்கள் கூறும், மேற்கோள் காட்டும் ஒரே விளக்கம்தான் உள்ளது போல் எழுதுகின்றனர். கீதையை விமர்சிப்போர் தங்கள் மனம் போன போக்கில் அதை விளக்குகிறார்களா அல்லது எந்த உரையின் அல்லது உரைகளின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்களா என்பதைப் பற்றி ஏன் எழுதவில்லை. ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் அந்தப்பகுதிக்கு பல விளக்கங்கள் உள்ளன, அவற்றில் உள்ள கருத்து வேறுபாடுகள் எவை, ஏன் இத்தகைய முரண்படும் விளக்கங்கள் தரப்படுகின்றன என்பதினை விளக்கி எழுதியிருந்தால் உண்மை வெளியாகியிருக்கும். அதைச் செய்துவிட்டால் அப்புறம் திண்ணையில் "கீதை மகா ஞான யாகம்" நடத்தி, விற்பனர்களாக காட்டிக்கொள்ள முடியாதே. பெரியாரைத் திட்ட முடியாதே, இதுதான் இவர்களின் அறிவார்ந்த நேர்மையின் தரம். கீதையை விமர்சிப்பவர்கள் மேற்கோள் காட்டும் உரை அல்லது உரைகள் என்ன, அவை யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது என்பதை எழுதியிருக்கலாமே. இல்லை கீதையை விமர்சிப்பவர்கள் எந்த உரையையும் படிக்காமல் தாங்களாக பொருள் கூறுகிறார்கள் என்றாவது எழுதியிருக்கலாமே.

ஜெயமோகன் சில உரைகளை நிராகரிப்பார். அது அவர் கருத்து. ஆனால் பல விளக்கங்கள் உள்ள நிலையில் ஒருவர் கீதை வருணாசிர தர்மத்தை, பிறப்பின் அடிப்பினடையினாலான பாகுபாட்டை நியாயப்படுத்தும் விளக்கம் உள்ளது என்று அந்த விளக்கத்தின் அடிப்படையில் கீதையை நிராகரித்தால்
அவருடைய புரிதலை முற்றிலும் தவறு என்று கொள்ள முடியாது. கீதை குறித்து காஞ்சிப் பெரியவர் என்ற காஞ்சி சங்கராச்சாரியார் மிக நீண்ட விளக்கம் தந்துள்ளார். அதில் அவர் பிறப்பின் அடிப்படையில் என்றே பொருள் கொள்கிறார். மேலும் இதனையும் ஜாதி அமைப்பினையும் தொடர்புபடுத்திப் பேசுகிறார். நவீன விமர்சகர்களின் கருத்தினை தான் ஏற்க முடியாது என்பதை விளக்குகிறார். இதன் அடிப்படையில் கீதை வருணாசிரமத்தை, பிறப்பின் அடிப்படையிலான ஜாதிப்பிரிவினை நியாயப்படுத்தும் நூல். அப்படியானால் பிரச்சினை கீதையை விமர்சிப்போர் கூறுவதில் இல்லை, ஏனெனில் அவர்கள் கீதைக்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில் அதைக் கூறலாம்.
அவர்களாக கீதையை உரை எழுதி இதைக் கூற வேண்டிய
தேவையில்லை. எனவே ª?யமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் விமர்சிக்க வேண்டியது காஞ்சி சங்காரச்சாரியார் கருத்தினை. அது போன்ற விளக்கங்களை. எந்தக் காலத்திலோ சொல்லப்பட்டவை இவை
என்று பதில் சொல்லி நழுவ முடியாது. ஏனெனில் இதற்கான ஆதாரம் இன்று காஞ்சி மடத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளது. www.kamakoti.org
இந்த உண்மையை ஏற்றால் கீதையை குறுக்கியது, குறுக்குவது திராவிட இயக்கம் என்று கூற முடியாது. ஏனெனில் கீதையின் அப்பகுதிக்கு முரண்படும் விளக்கங்கள் உள்ளன.சில ஜாதிய அமைப்பினையும், வருணாசிரம தர்மத்தினையும் நியாயப்படுத்துகின்றன. அதன் அடிப்படையில் கீதையின் விமர்சகர்கள் விமர்சித்தால் அவர்களை குற்றம் சொல்ல முடியுமா. ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் எப்படி எழுதியிருக்க வேண்டும் - இத்தகைய விளக்கங்கள் தவறு, இவை கீதைக்கும், இந்து மதத்திற்கும், இந்து மத சிந்தனைக்கும் அவப்பெயரினை ஏற்படுத்துகின்றன. இதன் அடிப்படையில் கீதையை கடுமையாக விமர்சிக்கவும், நிராகரிக்கவும் உதவுகின்றன. எனவே கீதையை விமர்சிப்பவர்களை விட இவர்கள் கருத்தே
கடும் கண்டனத்திற்குரியது. இப்படிப்பட்ட கருத்தினை வெளியிட்டிருந்தால் நான் அவர்களின் அறிவார்ந்த நேர்மையை பாராட்டியிருப்பேன். அவர்கள் நோக்கம் இவ்விவாதத்தில் பல தரப்புக் கருத்துக்களை, அதாவது கீதையின் அப்பகுதிக்கு தரப்பட்டுள்ள பல வியாக்கியானங்களை முன்வைப்பதல்லவே. திராவிட இயக்கம் மீது வசைபாடுவதே அவர்கள் நோக்கம். கீதைக்கு இப்படி விளக்கமளித்த சங்காராச்சாரியார் மீது இது குறித்து ஆர்.எஸ்.எஸ். எப்போதாவது விமர்சனம் முன்வைத்ததுண்டா இல்லை இந்த விளக்கம் கண்டனத்துக்குரியது என்றாவாது சொன்னதுண்டா, அரவிந்தன் நீலகண்டன் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாமா.
சங்கராச்சாரியார் விளக்கம் கொடுத்தது யார் என்ற பெயர் குறிப்பிடாமல் கீதையின் இப்பகுதிக்கான "நவீன" விளக்கங்களை காரணங்கள் குறிபிட்டே நிராகரிக்கிறார். மிக நீண்ட விளக்கத்தினை முன் வைக்கிறார். எனவே ஜெயமோகனோ, அரவிந்தன் நீலகண்டனோ அதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.முடிந்தால் ஆதி சங்கரர் தந்த விளக்கத்திலிருந்து இவர் முரண்படுகிறார் என்று நிரூபிக்கட்டுமே.
கீதாப் பிரஸ் , கோரக்பூர் வெளியிட்டுள்ள உரை மிக பிரபலமானது, பல மொழிகளில் கிடைப்பது. பல ஆண்டுகளாக அது அச்சில் உள்ளது. அதன் கருத்துடன் ஒருவர் முரண்படலாம். அதே சமயம் கீதை வருணாசிரம தர்மத்தினை நியாயப்படுத்தும் நூல் என்ற கண்ணோட்டம் ஒரே ஒரு உரையின் அடிப்படையில் உருவானது என்று கருத முடியாது. மேலும் அந்நூலில் இத்தகைய கண்ணோட்டம்த்தினை முன்னிறுத்த வேறு சான்றுகள் உண்டா என்று பார்க்க வேண்டும்.

கீதை ஒரு உரையாடல் என்று சொல்வதை விட ஒரு உபதேச நூல் என்று சொல்வதே பொருந்தும். கிருஷ்ணர் நான் சொல்கிறேன், நீ கேள் என்ற தொனியில்தான் பல இடங்களில் கூறுகிறார். மேலும் இங்கு
அர்ஜுனன் ஒரு நண்பனாக, ஒரு தோழனாகப் பேசுவதைவிட பல தருணங்களில் குழப்பதில்லுள்ள, தௌ¤வைத் தேடும் அல்லது வேண்டும் ஒரு சீட மனோபாவத்தில் பேசுவதை நாம் அவதானிக்க முடியும். அவர்
வெளிப்படுத்தும் அச்சங்கள், சந்தேகங்கள் பல. கிரு?ணருக்கு கீதாச்சார்யன் என்ற பெயருமுண்டு. வைணவர்கள் இதை அடிக்கடிப் பயன்படுத்துவர். எனவே கீதையில் கண்னன் உரையாடவில்லை, உபதேசிக்கிறான் என்று சொல்வதே சரி. உரையாடல்கள் கூட உபதேசத்தினை நோக்கியே நகர்கின்றன. கீதையில்
வாதம் உள்ளது, அது சம நிலையில் இருவருக்குமிடையே உள்ள வாதமல்ல.

கவியோகி வேதம் எழுதியுள்ள கடிதம் இன்னும் வேடிக்கை. அவருக்கு கீதையின் இப்பகுதிக்கு பல விளக்கங்கள் உள்ளன, அதுதான் இந்த சர்ச்சைக்கு மூலம் என்பது கூட தெரியாதா. தெய்வத்தின் குரலை "புரிந்து கொள்ளாமல்" தெய்வத்தினை வணங்கினால், தெய்வத்தினைப் பற்றி நூல் எழுதினால் இப்படித்தானாகும். நான் சொல்வது அவருக்குப் புரிகிறதோ இல்லையோ பலருக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.
2
மூல நூல்களின் தேவை குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளதற்கும், மத அடிப்படைவாதிகள் கூறுவதற்கும் வேறுபாடு அதிகமில்லை. Truth is a pathless land என்று கூறி அமைப்பினை கலைத்தவர் அவர் பார்வையில் முட்டாளாக இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் அவருடைய கண்ணோட்டத்தில் பெரும்பான்மையோரால் செயல்கள் குறித்து சிந்தித்து தாங்களாக அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவோ இயலாது. அதற்காக மூலநூல்கள் வேண்டும். சரி அந்த மூல நூல்களுக்கு முரண்படும் வியாக்கியானங்கள், விளக்கங்கள் உள்ளனவே. அப்போது என்ன செய்வது. யோசிக்காமல் நீ சார்ந்துள்ள அமைப்பு என்ன சொல்கிறதோ அதைச் செய் என்பாரா. திருச்சபை கருக்கலைப்பு கூடாது, விவிலியத்தின் படி அது பாவம். இதை ஏற்கிறாரா ஜெயமோகன், இல்லை அது பாபமில்லை என்று இன்னொரு விளக்கம் இருக்கிறது என்று சிலர் சொன்னால், இரண்டில் எதை ஏற்பார். இன்றும் ஹோமோசெக்சுவல்கள் மீதான வெறுப்பினை நியாயப்படுத்த
மூல நூல்களின் வாசகங்கள்தான் பெருமளவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அப்படியானால் இது சரி என்கிறாரா. அவருடைய பார்வையில் மேட்டிமைத்தனமும், மக்களில் பெரும்பான்மையோரால் சிந்திக்க முடியாது என்ற கருத்தும் தௌ¤வாக உள்ளது. இப்படி எழுதுபவர் நாளை இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்தது தவறு என்றும் எழுதக்கூடும். அவர் முன்வைத்துள்ள தர்க்கத்திற்கு அது ஒத்து வரும். இதை நான் ட்டிக்காட்டினால் சிலருக்கு கோபம் வரலாம். வெப் உலகம்
தளத்தில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் குறித்து ஒரு விமர்சனம் உள்ளது.#1 அது குறித்து ஜெயமோகன் ஏதாவது எழுதியுள்ளாரா.
என்னைக் கேட்டால் ஜெயமோகன் இப்படி தத்துவம், மெய்ஞானம் என்றெல்லாம் எழுதாமல் "மூல நூல்களை" "மூடர்களுக்கு" விளக்க "பாபிகளுக்கு கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகள், புண்ணியாத்மாக்களுக்கு தேவலோக சுந்தரிகளின்" நடனங்கள் திரைப்படங்கள் எடுத்து எது நல்லது, எது கெட்டது என்று விளக்கலாம்.

மற்றப்படி இந்த இரு கட்டுரைகள் மீது எனக்கு இன்னும் விமர்சனங்கள் உண்டு. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
Published in Thinnai 14th Oct 2004 http://www.thinnai.com/ar1014042.html
கிஷன் பட்நாயக் - 1930 - 2004


கிஷன் பட்நாயக் சுதந்திர இந்தியாவில் சோசலிஸ்ட் இயக்கத்தின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும், மக்கள் இயக்கங்கள் பலவற்றின் மதிப்பினைப் பெற்றவராகவும் இருந்தார். இவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவர் எழுதியதில் எனக்குப் படிக்கக்கிடைத்தவை சிலவே. இவரது முக்கியமான எழுத்துக்கள் இந்தியிலும், ஒரிய மொழியிலும் இருப்பதாக அறிகிறேன். சில மாதங்கள் முன்பு இவர் எழுதிய கட்டுரை# ஒன்றை இங்கே காணலாம்.

காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்ப்பு சக்தியாய், அகில இந்திய அரசியலில் ஒரு முக்கியமான கட்சியாக உருவாகியிருந்த சோசலிஸ்ட் கட்சி ராம் மனோகர் லோகியாவின் மறைவுக்குப் பின் பிளவு பட்டு சிதறியது..பெரும்பாலோர் 1977 ல் ஜனதா கட்சி உருவான போது அதில் சேர்ந்தனர்.ஆனால் ஜனதாக் கட்சி பின் பிளவுபட்ட போது , மீண்டும் ஒரு வலுவான சோசலிஸ்ட் கட்சி உருவாகவில்லை. ஆனால் எல்லோரும் லோகியாவின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டனர். கட்சி அரசியலில் வெறுப்புற்ற சில சோசலிஸ்ட்கள் மக்கள் இயக்கங்கள், மாற்று அரசியல் முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களில் முக்கியமானவர் கிஷன். சிலர் லோகாயன் என்ற அமைப்புடன் சேர்ந்து மக்கள் இயக்கங்கள், போராட்டங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வேறொரு அரசியலை உருவாக்குவதில் அக்கறைக் காட்டினர்.ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு முன்னாள் சோசலிஸ்ட். வட இந்தியாவில் ஒரு பெரிய அரசியல் எழுச்சிக்கு வித்திட்டவர் லோகியா. 1967 ல் பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது, சோசலிஸ்ட் கட்சி பெரும் பலம் பெற்றிருந்தது. ஆனால் 1970 களில் பின் பகுதியில் நிலைமை மாறிவிட்டது. 1980களில் சோசலிஸ்ட் கட்சி இல்லை என்ற நிலை உருவானது. மது லிமயி, சுரேந்திர மோகன், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் - 1960 களிலும், 1970 களிலும் செல்வாக்குடன் விளங்கிய சோசலிஸ்ட் தலைவர்களில் சிலர். 70 களில் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு எழுச்சியை உருவாக்கினார். அதில் சோசலிஸ்ட்கள் பெரும்பங்காற்றினர். அன்று குஜராத், பீகாரில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியில் பங்கெடுத்த பலர் பின்னர் பிரபல அரசியல்வாதிகளானார்கள். லாலுவையும், பஸ்வானையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஆனால் இவர்கள் பிற அரசியல்வாதிகள் போல் மாறிவிட்டனர். சில வாரங்கள் முன்பு ராமச்சந்திர குஹா நேருவின் அழைப்பினை ஏற்று ஜெயப்பிரகாஷ் நாராயண் அரசில் சேர்ந்திருந்தால் சில நல்ல விளைவுகள் ஏற்பட்டிருக்குமென்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மை என்றே தோன்றுகிறது. இன்று பல அரசியல்வாதிகள் தாங்கள் சோசலிஸ்ட்கள், லோகியாவின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டாலும், கட்சி அரசியலிலும், அதற்கு அப்பாலும் ஒரு சிலரையே சோசலிஸ்ட்கள் என்று கருத இயலும்.அப்படிப்பட்ட உண்மையான சோசலிஸ்டகளில் ஒருவர் கிஷன்.

# Visions of development: the inevitable need for alternatives August-September 2004, Pages 671-678 இந்த இதழ் குறித்து சிந்தனையில் உள்ள குறிப்பினையும் காண்க.
ரைகா - கால்நடைகளும், ஒரு சமூகமும்

ராஜஸ்தானிலுள்ள ரைகா என்ற ஒரு சமூகத்தினைப் பற்றிய கட்டுரையை சமீபத்தில் படித்தேன்.கால்நடை மேய்ப்பதை பிரதான் தொழிலாகக் கொண்ட இவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இக்கட்டுரை பேசுகிறது. கால்நடை மேய்ப்பிற்காக இடம் பெயரும் சமூகங்களைப் பற்றி பல ஆய்வுகள் உள்ளன.இச் சமூகங்கள் இந்தியாவில் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. சில சமூகங்கள் சிதறிவிட்டதாகவும் அறிகிறேன். ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமயமலைப் பகுதிகளில் உள்ள இச்சமூகங்களைப் பற்றி ஆய்ந்த ஆய்வாளர் முனைவர் மினோ சக்ரவர்த்தி கெளல் நவீனமயமான வேளாண்மையில் இவர்களுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. மேய்ச்சல் நிலங்களின் பரப்பும் குறைந்துவிட்டது. பெரிய அணைக்கட்டுகள் போன்ற திட்டங்களால் இவர்கள் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும், இவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இருந்த உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று பல விவசாயிகள் கால்நடை மேய்ப்பர்கள் தேவையில்லை என்று கருகின்றனர்.மேலும் அனைவருக்கும் பொதுவானது எனக் கருததப்பட்டு வந்த மேய்ச்சல் காடுகள்,மேய்ச்சல் நிலங்கள், காடுகள் அரசின் கட்டுப்பாடு, மற்றும் தனியார் கட்டுப்பாட்டின் வசம் வந்த பின் கால்நடை மேய்க்கும் சமூகங்கள் அவற்றை பயன்படுத்துவது எளிதாக இல்லை என்பதை விரிவாக விளக்கி எழுதியுள்ளார். இக்கட்டுரையை நான் திண்ணையில் முன்பு குறிப்பிட்டிருக்கிறேன்.
ரைக்காக்களைப் பற்றிய இக்கட்டுரை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இன்றைய உற்பத்தி முறைக்கு "தேவை"ப்படாத சமூகங்கள் அழிந்துதான் போக வேண்டுமா? அவற்றால் எத்தனைக் காலம் தாக்குப்பிடிக்க முடியும். அந்த அறிவும்,திறனும் அவர்களுடன் அழிந்து போவதால் இழப்பு யாருக்கு? எதையெல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது கூட நமக்கு தெரிவதில்லை.

இக்கட்டுரை வெளியாகியுள்ள Seedling மிக முக்கியமான பணிகளை செய்து வருகிறது. பல ஆண்டுகளாக இதை தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் இதன் முக்கியத்துவத்தை நானறிவேன்.இந்த இதழில் வெளியாகியுள்ள பிற கட்டுரைகளும் முக்கியமானவைதான்.

ஊடகங்களும், உண்மைகளும் - சில (கேட்கக்கூடாத) கேள்விகள்


டிசம்பர் 13, 2001-அந்தத் தேதியில் இந்திய பாராளுமன்றத்தினை தாக்க முயற்சி செய்யப்பட்டதும், அது தொடர்பாக டெல்லிப் பல்கலைக்கழக ஆசிரியர் கிலானி கைது செய்து குற்றம் சாட்டப்பட்டதும், பின்னர் அவர் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம். இந்தக் கட்டுரையில் நிர்மலன்ஷ¤ முகர்ஜி சில கேள்விகளை எழுப்பி, இந்த வழக்கினை ஊடகங்கள் எப்படி சித்தரித்தன, கீலானி குறித்து எத்தகைய பொய்களை பரப்பின என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். "தேசபக்தி" என்பது கண்னை , சிந்தனையை மறைக்கிறதா இல்லை ஊடகங்களுக்கு உண்மையை கண்டறிவதை விட பரபரப்பூட்டும் "செய்தி"களையும், திகில் தரும் தகவல்களையும் தருவதுதான் முக்கியமான "பணி"யாக உள்ளதா என்பதை இதைப் படித்து நீங்கள் முடிவு செய்யலாம்.

இதைப் படித்துவிட்டு இன்றைய தினமலரையும் படியுங்கள். முதல் பக்கத்தில் இரண்டு செய்திகள். போடா போனதால் தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாம். மேலும் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் தமிழ்நாட்டில் கைது என்று இன்னொரு செய்தி. அதிலும் தினமலரின் சேட்டை தெரிகிறது.பீதியை ஊட்ட வேண்டும் என்பதற்காக தினமலர் கையாளும் தந்திரங்கள் அதில் வெளிப்படுகின்றன. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்- ஒரு வீச்சரிவாள், மற்றும் செல்போன்கள். இப்படி செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு இப்போதுள்ளமத்திய அரசின் மீது வெறுப்பு ஏற்படுத்த வேண்டும், போடாவை நீக்கியது தவறு என்று வாசகர்கள் நினைக்க வேண்டும்.இதுதான் தினமலரின் நோக்கம்.

போடா போனாலும் அரசு ஒரு அவசரச் சட்டம் மூலம் சில நடவடிக்கைகளை எடுப்பதை சாத்தியமாக்கியுள்ளதே. அது குறித்தோ அல்லது வடகிழக்கு இந்தியாவில் உள்ள பிரச்சினைகள் குறித்தோ தினமலருக்கு என்ன அக்கறை. இந்த நாளிதழ் தமிழ் நாட்டில் மிக அதிகமாக விற்கும் நாளிதழ்களில் இரண்டாம் இடத்தில் உள்ளதாம். இப்படிப்பட்ட தினமலர் அரசியல்வாதிகளை குறிப்பாக பா.ம.கநிறுவனர் ராமதாசை விமர்சிக்கிறது. பத்திரிகை என்ற பெயரில் பொய்களையும்,கட்டுக்கதைகளையும்விநியோகம் செய்யும் தினமலர்தான் உண்மையின் முதல் எதிரி.தமிழர்களின் எதிரியும் கூட- ஏனெனில் தமிழைசெம்மொழியாக அறிவித்ததை கிண்டலும், கேலியும் செய்து எழுதுகிறது தினமலர்.