சுஜாதாவும் வலைப்பூக்களும்

சுஜாதா வலைப்பூக்கள் குறித்து ஆனந்தவிகடனில் எழுதியுள்ளதை http://www.vikatan.com/av/2004/aug/29082004/av0903.htm விமர்சித்து சில வலைப்பதிவாளர்கள் எழுதியுள்ளனர். சுஜாதா ஏதாவது உருப்படியாகச் சொல்லியிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். இப்படி மேம்போக்காக, எதையாவது அவர் சொல்வது புதிதல்ல, இது கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை. சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் எழுதுவதை விட உருப்படியான விஷயங்கள் வலைப்பதிவுகளில் பதிவாகின்றன. அவர் சிபாரிசு செய்யும் பல கவிதைகளை விட நல்ல கவிதைகளை வலைப்பூக்களில் காணமுடியும். எனவே அவர் சொல்வதை அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லை. என்னைப் பொருத்தவரை நான் வலைபதிவதை விட அதிகம் வலைப்பூக்களை படிப்பதில் நேரம் செலவிடுகிறேன். சில பேராசிரியர்களின் வலைப்பதிவுகளை படிக்கிறேன்.அவற்றிலிருந்து பல புதிய கருத்துக்களை தெரிந்துகொள்ள முடிகிறது.சில பதிவுகளிலிருந்து சமீபத்திய வெளியீடுகள், வெளிவரவிருக்கும் கட்டுரைகள், மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவவை குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமின்றி வலைப்பூக்களில் நடைபெறும் விவாதங்களையும் படித்தால் வலைப்பதிவு என்பது வெறும் பதிவு மட்டுமல்ல என்பது எளிதில் புலனாகும். நான் படிக்கும் பதிவுகளில் அறிவார்ந்த விமர்சனங்கள், விவாதங்களை காண முடிகிறது.
எனவே வலைப்பூக்களைப் பொறுத்தவரை சுஜாதா - கற்காததும்,பெறாததும் என்று வேண்டுமானால் யாராவது எழுதலாம். வலைப்பூக்கள் வளரும் சுஜாதாவால் அல்ல, அவரது இந்த சிறுபிள்ளைத்தனமான கருத்தையும் மீறி. லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் ஒரு வார இதழில் அவர் எழுதியுள்ளது வலைப்பூக்கள் குறித்த ஒரு மோசமான அறிமுகத்தைத் தருகிறது. இதற்கு வலைப்பதிவாளர்கள் சேர்ந்து ஆனந்த விகடனுக்கு ஒரு பதிலை அனுப்பலாம்.தமிழ் வலைப்பூக்கள் பட்டியலையும் சேர்த்து அனுப்பலாம். ஒருவிதத்தில் சுஜாதா இவ்வாறு கூறியிருப்பதும், வலைபதியாமல் இருப்பதும் நல்லதுதான். இல்லையெனில் ஒரு ஜால்ரா எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தின் தாக்கத்தை தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவரிடமும் காண முடிகிறது என்று கூறியிருப்பார். இப்போது அவ்வாறு கூற வாய்ப்புகள் குறைவு.

3 மறுமொழிகள்:

Blogger இராதாகிருஷ்ணன் மொழிந்தது...

//இதற்கு வலைப்பதிவாளர்கள் சேர்ந்து ஆனந்த விகடனுக்கு ஒரு பதிலை அனுப்பலாம்.//
இதற்கு ஒரு பலனும் இருக்காது என்றே நினைக்கிறேன். சிலமுறை நான் பத்திரிக்கைகளுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன், அவற்றிற்கு பதிலேதும் வந்ததாக நினைவில்லை.

5:39 PM  
Blogger Thangamani மொழிந்தது...

//ஒரு ஜால்ரா எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தின் தாக்கத்தை தமிழ் வலைப்பதிவாளர்கள் அனைவரிடமும் காண முடிகிறது என்று கூறியிருப்பார்//

இதனோடு நான் கொஞ்சம் முரண்படுகிறேன். சிலர் (வலைப்பதிவர்கள்) தமிழ் இலக்கியப்பழக்கம் ஆரம்பமாவதற்கு அவர் காரணம் என்று நம்புகிறவர்கள். அவர்கள் அவரைக் கடந்தும் போயிருக்கலாம். தமிழ் இலக்கியம் (அல்லது தமிழே) தொழில் கல்வி குறிப்பாக பொறியியற் கல்வி பயின்றவர்க்கு தொடர்பில்லாதது என்ற நினைப்பை உடைப்பதற்கு அவரது பங்களிப்பு உதவியாய் இருந்தது என்று நானும் எண்ணுகிறேன். ஆனால் அவரது இலக்கிய முயற்சிகள் என்ன்னைப் பெரிதாக கவரவில்லை. அதுவும் புறநானுறு புத்தகம் வாங்கிவிட்டு இப்படி மோசமான முயற்சியாக இருக்கிறதே என்று வருந்துவதா, இல்லை இதாவது நடக்கிறதே என்று அமைதியடைவதா என்று குழம்பிப்போயிருக்கிறேன்.

மற்றபடி அவர் மேம்போக்காக சொல்லும் (செய்யும்) எத்தனையோ விசயங்களில் இதுவும் ஒன்று.

3:19 PM  
Blogger சிக்கிமுக்கி மொழிந்தது...

////***நான் வலைபதிவதை விட அதிகம் வலைப்பூக்களை படிப்பதில் நேரம் செலவிடுகிறேன். ***////

வலைப்பதிவு, வலைப்பூ இரண்டும் "blog"ஐக் குறிப்பதாக்வே எண்ணுகிறேன்

இரண்டும் வெவ்வேறாயின், எதெதைக் குறிக்கின்றன எனபதை அறிய விரும்புகிறேன்.


அன்புடன்,
சிக்கிமுக்கி.

sikmukkok@gmail.com

11:42 PM  

Post a Comment

<< முகப்பு