ஐ.ஐ.டி கள் குறித்து வெங்கட்- எதிர்வினைக்கு ஒரு எதிர்வினை 


வெங்கட் தந்துள்ள எதிர்வினைக்கு என் பதிலினை கீழ்க்கண்ட இணைய முகவரியில் காண்க

http://ravisrinivasblog.rediffblogs.com/

ஐ.ஐ.டி கள் குறித்த விவாதம்
 
http://ravisrinivasblog.rediffblogs.com/
QWERTY QWERTZ

வழக்கமாக பயன்படுத்தும் விசைப்பலகையில் QWERTY என்று தான் இருக்கும். நான் இருப்பது ஜெனிவாவில். இங்கு அலுவலகத்திலும், வீட்டிலும் உள்ள கணினியில் விசைப்பலகை வேறு மாதிரி உள்ளது. இப்படி இருக்கும் என்று முன்பே தெரியும். ஒய் Y யும், Z இசட் டும் இடம் மாறியிருக்கும். அது தவிர வேறு பல மாற்றங்களும் உண்டு.ஆல்ட்ஜிர் (Alt Gr) என்று ஒரு கூடுதல் விசையும் உண்டு. கடந்த பத்து நாட்களாக இதனுடன் நான் புழ்ங்குவதால் ஒரளவிற்கு பரிச்சமாகி விட்டது.

ஜெனிவாவில் வந்து இறங்கிய உடன் விமான நிலையத்தில் ஒரு கணினியைப் பயன்படுத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்ப 15 நிமிடமாகிவிட்டது இந்த விசைப்பலகை எனக்கு புதிதென்பதால். @ என்பதை ஷிப்ட் கீயைப் பயன்படுத்தி இட முடியாது. ஆல்ட்ஜிர் என்ற கீயைப் பயன்படுத்தினால்தான் அதை இட முடியும்.இது தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அருகில் இன்னொரு கணினியைப் பயன்படுத்தி கொண்டிருப்பவருக்கும் தெரியவில்லை. பின் இன்னொருவர் அவர் வேறொரு கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் உதவிக்கு வந்து விளக்கினார். ஒரு வ்ழியாக ஒரு மின்ஞ்சலை தட்டுத்தடுமாறி அனுப்பினேன்.

சில நாட்களுக்கும் முன் சட்டப் புலத்தின் டீன் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் தான் ஒரு பிரெஞ்ச் விசைபலகையை பயன்படுத்தி அனுப்பியதால் ஏற்பட்ட பிரச்சினையை குறிப்பிட்டிருந்தார்.
நான் ஜெனிவாவில் இருப்பதையும், புதிய முகவரியையும் ஒரு அமெரிக்க பேரசாரியருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். அவர் ஸ்வீடனிலிருந்து பதில் அனுப்பினார். தான் மாக் கணினியை பயன்படுத்தி பழக்கமில்லாத விசைப்பலகை கொண்டு பதில் அனுப்புவதாகவும் எனவே பிழைகள் இருந்தால் பொருட்படுத்த வேண்டாம் என்றும் எழுதியிருந்தார். நான் வீட்டில் பயன்படுத்தும் விசைப்பலகையில் Yம் Zம் வழக்கமான இடங்களில் இருக்கும். ஆனால் வேறு மாற்றங்கள் உண்டு.

அலுவலக்த்தில் பயன்படுத்தும் விசைப்பலகையுடன் அது வேறு படுவதால் உள்ளீடு செய்யும் போது சிறிது சிரமம் ஏற்படுகிறது. விசைப்பலகையை வேறு விதமாக இயங்க வைக்கலாம். ஆனால் அப்போது விசைப்பலகையில் உள்ள எழுத்திற்கும், உள்ளீடு செய்யும் போது தோன்றும் எழுத்திற்கும் வேறுபாடு இருக்கும். அது இன்னும் குழப்பம்தரும் என்பதால் இருப்பதை வைத்து சமாளிக்கிறேன்.

QWERTY விசைப்பலகைக்கு ஒரு வரலாறு உண்டு. இதை பாத் டிபென்டஸிக்கு (path dependency) உதாரணமாக குறிப்பிடுவார்கள்.
ஒன்றிற்கு பழக்கப்பட்டுவிட்டால் புதிதாக வேறொன்றை பயன்படுத்த கற்பது எளிதல்ல. இது போல் பழையது தொழில் நுட்ப ரீதியாக பின் தங்கி இருந்தாலும் உடனே வழக்கிலிருந்து போவதில்லை என்பதற்கு பாத் டிபென்டஸியும் ஒரு காரணம். விண்டோஸை விட லினக்ஸ் மேம்பட்டிருந்தாலும் அது பலரை ஈர்க்காததை இன்னொரு உதாரணமாகக் கொள்ளலாம்.
பூளுமிங்டன் - நினைத்தாலே இனிக்கும்

இந்தியானா மாநிலத்தில் உள்ள பூளுமிங்டன் என்ற சிற்றூரைப் பற்றிய ஒரு பதிவு இது. அமெரிக்காவில் வேறு மாநிலங்களிலும் இதே பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன.இந்தியானா பல்கலைகழகத்தின் பூளுமிங்டன் வளாகம் அமெரிக்காவில் உள்ள பல்கலைகழக வளாகங்களில் மிக அழகானவற்றில் ஒன்றாக போற்றப்படுகிறது. அழகு, அமைதி இரண்டும் சேர்ந்த ஊர் அது. பல்கலைகழக வளாகம் பெரியது - புல்வெளிகள், மரங்கள், சிறு காடுகள் இவை நடுவே கட்டிடங்கள் என்று அழகுற அமைந்துள்ள வளாகம் அது. காலாற நடக்கலாம், பெஞ்சுகளில் உட்கார்ந்து கொண்டு படிக்கலாம், இயற்கையை ரசிக்கலாம். உங்களுக்கு மரங்கள், புல் வெளிகள், சிறு நீரோடைகள் பிடிக்குமென்றால் இந்த வளாகமும் பிடிக்கும். ஒரு பெரிய நகரின் பரபரப்பும், நெரிசலும் இங்கு இல்லை, ஆனால் அங்குள்ள மிகப்பெரும்பான்மையான வசதிகள் இங்கே உள்ளன. பொதுப்போக்குவரத்து வசதிகளும் பரவாயில்லை.கார் இல்லாமல் சமாளிக்க முடியும்.

பல்கலைகழக வளாகத்தில் பழைய கட்டிடங்களும் புதிய கட்டிடங்களும் கண்னை உறுத்தாத வகையில் கட்டப்பட்டுள்ளன. நள்ளிரவிலும் தனியாக நடந்து செல்ல முடியும் - அந்த அளவிற்கு பாதுகாப்பான வளாகம். விரிந்து பரந்த வளாகம், கால்களுக்கு இதமான ஒன்று. நடைப்பிரியர்கள், ஒடுவதில் விருப்பமுள்ளவர்கள் இதை விரும்புவர். கல்வி வசதிகள் மிக அருமை. வளாகத்தின் பல இடங்களில் மாணவர் பயன்படுத்த கணினி வசதிகள், சில இடங்களில் 24 நேரமும் கணினி வசதி உண்டு, அது மட்டுமல்ல ஒரு தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் உதவியும் தொலைபேசி மூலம் கிடைக்கும். அப்படியும் தீர்க்க முடியவில்லை என்றால் நீங்கள் மேலகதிக உதவிக்கு ஒருவர் வர முன்பதிவு செய்யலாம். மாணவர் வசதிக்கு இது போல் பல உதவிகளை பல்கலைகழகம் இலவசமாகத் தருகிறது. மிக அற்புதமான நூலகங்கள் வளாகத்தில் உள்ளன. நூற்கள் தவிர இசைத்தட்டுகள், குறுந்தகடுகள், திரைப்படங்கள் , ஏன் டிஜிடல் காமிராக்களைக் கூட கடனாக பயன்படுத்த பெற முடியும். ஈதர் நெட் மூலம் இண்டர் நெட் வசதியும் உண்டு. உணவுப் பிரியர்களுக்கு பல நாட்டு/பிரதேச வகை உணவுகளை பரிமாறும் உணவகங்கள் வளாகத்திற்கு மிக அருகில் உள்ளன. இரண்டு இந்திய உணவகங்களும் உள்ளன. ஒரு சிறப்பான கலையரங்கம், இசை நிகழ்ச்சிகளுக்கென்று பிரத்தியேகமான அரங்கங்கள் என்று பல வசதிகள் உள்ளன. தங்களை விட உயரமான இசைக்கருவிகளை, அவற்றை வைக்க ஒரு முக்காலியையும் எடுத்துச் செல்லும் தென்கிழக்காசிய மாணவர்களை வளாகத்தில் காணலாம். சில நூற்றுக்கணக்கான பியானோக்கள் இருந்தாலும் சமயங்களில் ஒன்று கூட பயிற்சிக்காக கிடைக்காது என்றார் என் நண்பர் ஒருவர். இசைப்பள்ளி அருகே செல்லும் போது சமயங்களில் அற்புதமான இசையைக் கேட்க முடியும். இங்கிருக்கும் இசைப்பள்ளி அமெரிக்காவின் மிகச் சிறந்த இசைப்பள்ளி என்று மதிக்கப்படுகிறது.

பூளுமிங்டனைச் சுற்றி சில ஏரிகள் உள்ளன. ஊருக்குள் ஒரு பெரிய பூங்கா உள்ளது. பல நாட்டிலிருந்தும் மாணவர்கள், ஆய்வாளர்கள்,ஆசிரியர்கள்/பேராசிரியர்களைக் கொண்டதால் இங்கு பன்னாட்டு கலாச்சார வெளிப்பாடுகளான கலை நிகழ்ச்சிகள்,உரைகள் ஆண்டுதோறும் இருக்கும். இங்கு நடக்கும் தாமரைத் திருவிழா பற்றி திண்ணையில் எழுதியுள்ளேன். இந்தியர்கள் பெரும்பாலும் கணினி, நிர்வாகம் மற்றும் அறிவியல் துறைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்தியா குறித்த ஆய்வுகள், பாடத்திட்டங்களும் பல்கலையில் உண்டு. சட்டப் புலத்தில் வருகை நிலை அறிஞராக ஆய்வு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகச் சிறப்பான நூலகம், பயன்படுத்துவோர் தேவையை புன்முறுவலுடன் நிறைவேற்றும் நூலகர், அவர் உதவியாளர்கள், ஆய்வுக்கான வசதிகள் - வேறென்ன வேண்டும் ஒரு ஆய்வாளனுக்கு. நூலகத்தில் இல்லாத, நான் கேட்ட அனைத்து நூல்களையும், கட்டுரைகளையும் பெற்றுத் தந்தனர். சில நூல்கள், கட்டுரைகள் கிடைத்தற்கரியவை. இது போல் பல்கலைகழக பொது நூலகமும் சிறப்பான ஒன்று. கேட்டு எந்த நூலும், கட்டுரையும் கிடக்காமல் போனதில்லை. மான்ரோ கவுண்டி நூலகமும் எனக்கு பிடித்த நூலகம். இங்கு உலகின் முக்கியமான பல திரைப்படங்களை குறுந்தட்டு வடிவில் பெறமுடியும். இதில் உள்ள குழந்தைகள் பிரிவு குழந்தைகளுக்கான நூலகப் பிரிவு இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று சொல்ல வைக்கும். நூலகத்தில் கட்டணமின்றி நூல்கள், ஒலி நாடாக்கள், குறுந்தட்டுகளை பயன்படுத்த பெற முடியும். அமெரிக்காவில் வெளியாகும் முக்கியமான சஞ்சிகைகளையும், நாளிதழ்களையும் படிக்க முடியும். இப்படி நூலக வசதிகள் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைய படிக்க முடிந்தது. எனக்கு அமெரிக்காவில் பிடித்த அம்சங்களில் ஒன்று இத்தகைய நூலக வசதி.

நான் சந்தித்த பலர் இந்த ஊரைப் போல் வேறு ஒரு ஊர் இல்லை என்று அதைப் பற்றி அன்புடன் கு|றிப்பிடுகிறார்கள். சிலர் தாங்கள் இங்கு வாழ்ந்த காலத்தை நினைத்து எனக்கு எழுதியிருக்கிறார்கள். வேறு சிலர் ஒய்வு பெற்ற பின் இங்கு குடியேற விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இலையுதிர்,வெயில்,வசந்த காலங்களில் வளாகம் இருப்பதற்கும், பனிக்காலத்திற்கும் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. மரங்கள் இலையற்று, பனியால் மூடப்பட்டது போலிருக்கும் போது எழும் உணர்வு வேறு. அதுவும் பெரிய மரங்கள் இலைகளின்றி வெறுமையாகவும், சமயங்களில் பனியால் போர்த்தப்பட்டும் இருக்கும் போது காண்போர் மனதில் எத்தனையோ உணர்வுகளை அவை எழுப்பும். பச்சைப்சேல் என்று உள்ள வளாகத்தைக் காணும் போது எழும் உணர்வு வேறு. தினமும் காலையில் எழுந்தயுடன் திரைச்சீலையை விலக்கி இரண்டு மரங்களைக் காணும் போது சந்தோஷம் பிறக்கும். அதே மரங்கள் பனிக்காலத்தில் ஏதோ மெளனச் சாட்சிகளாய் நின்று கொண்டிருப்பது போன்ற உணர்வை எழுப்பும். பனி படர்ந்து வெள்ளை வேளர் என்று இருப்பது ஒரு அழகுதான். சமயங்களில் அந்தப் பனியில் சூரிய ஒளிபட்டு புல் வெளிகள் தகதகவென மின்னும் போது ஒளிப்பட்டு போர்த்தியிருப்பது போன்று தோன்றும். இதையெல்லாம் ரசிக்க கூட ஒரு ஆள் இருந்தால் இன்னும் அழகாகத் தோன்றாதா என்ன.

அது எப்படித்தான் நிகழுமோ தெரியாது, பனிக்காலம் முடியும் போது மீண்டும் மரங்களெல்லாம் நிறம் மாறி பச்சை பசேலென மாறிவிடும். புல்தரைகளும் பசுமைக்கு மாறிவிடும். அப்போது வளாகத்தினுள் நடந்து சென்றால் சில வாரங்கள் முன்பு இலைகளற்றிருந்த மரங்களா இவை என்று வியக்கத் தோன்றும். வளாகத்தில் பல இடங்களில் பூஞ்செடிகள் நடுவார்கள்.இவைப் பூத்து சில நாட்களில் பூக்கள் உதிர்ந்துவிடும். மீண்டும் நடுவார்கள். இதை ஒரு ஒழுங்குடன் செய்வார்கள். அவைப் பூத்துக் குலுங்குவது தனி அழகு. இப்படி இயற்கையை ரசிக்க ஒரு உவப்பான இடம் இந்த வளாகம். அணில்கள், பறவைகள் என்று அழகு சேர்க்கும் உயிரினங்களும் உண்டு.

இப்படி இந்த ஊரைப் பற்றி சிறப்பாகச் சொல்ல பல உள்ளன. எனக்கு பூளுமிங்டன் மிகவும் பிடிக்க ஒரு காரணம் போதும் - என் ஜீவன் வாழும் ஊர் இது. இங்கு நான் கழிக்கும் காலம் என் வாழ்க்கையின் வசந்த காலம் என்பேன். அவளுடன் ரசிக்கும் போது இயற்கை இன்னும் அழகாக இருக்கிறது. அவளுடன் நடக்கும் போது புல் வெளிகள் இன்னும் பசுமையாய் தோன்றுகின்றன. அவளுக்கும் இதையெல்லாம் ரசிக்க பிடிக்கும். நீண்ட நடை பிடிக்கும். சேர்ந்து நடப்பது இருவருக்கும் பிடிக்கும். இது போல் பலவற்றால் எங்கள் வாழ்க்கையில் அமைதிக்கும். மகிழ்ச்சிக்கும் குறைவில்லை. என் ஜீவன் வாழும் ஊர்தானே எனக்கு சொர்க்கமாக இருக்க முடியும்.காதல் மனைவி வாழும் ஊரை நினைத்தாலே இனிக்கும் என்றுதானே சொல்ல முடியும்.
some photos are in
http://www.geocities.com/ravisrinivasin/bloom