ஜுன் 25 1975

1975ம் ஆண்டு இந்த தினத்தில் அவசர நிலைப்பிரகடனம் செய்யப்பட்டது. இன்று அவ்வாறு செய்வது எளிதில்லை. பொடா போன்ற சட்டங்கள் அதிகாரத்தினை வரம்பு மீறிப் பயன்படுத்த உதவுகின்றன. இவற்றை நியாயப்படுத்துவது இன்னும் தொடர்கிறது.
http://www.tamiloviam.com/unicode/secondpage.asp?fname=06170404&week=jun1704
இந்த தினத்தில் அவசர நிலைப்பிரகடனத்தினை எதிர்த்துப் போராடியவர்களையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் நினைவு கூர்வோம். அதே போல் உலகஅளவில் உள்ள நிலைமைகளையும் கருத்தில் கொள்வோம். அல் கோர் ஆற்றிய உரையினையும் படிக்க வேண்டுகிறேன்.
http://www.drudgereport.com/gore.htm

புத்தகம்,வாசிப்பு

இப்போதெல்லாம் நூறு புத்தகங்களை குறிப்பிடுவது பாஷன். படிக்காத பிடித்த நூறு புத்தகங்களை குறிப்பிடலாம், படிக்காத பிடிக்காத நூறு புத்தகங்களைக் குறிப்பிடலாம் :). நீங்கள் சமீபத்தில் படித்த முக்கியமான புத்தகங்களைப் பற்றி எழுதலாமே என்று ஒரு சிறுபத்திரிகையாசிரியர் என்னிடம் குறிப்பிட்டுள்ளார். செய்யலாம் என்று எண்ணம்.உடனே அல்ல. இப்போது கையில் உள்ள ஒரு வேலையை முடித்துவிட்டு.

தமிழில் நூற்களை அறிமுகம் செய்வது போல் முக்கியமான கட்டுரைகளை, ஜர்னல்களை அறிமுகம் செய்ய வேண்டும். பல பிரமாதமான அறிக்கைகள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றையும் அறிமுகம் செய்ய வேண்டும். இப்படி நான் படித்த, படித்துக்கொண்டிருக்கும் நூற்கள், கட்டுரைகள் குறித்து எழுத ஒரு தனி வலைப்பதிவினை துவங்கி உள்ளேன். இன்னும் அதில் எழுதவில்லை. கையில் கிடைப்பதையெல்லாம் படிக்காமல் தேர்ந்தெடுத்து படிப்பதால் குறிப்பிடதக்க நூல்கள் பற்றி மட்டுமே எழுத எண்ணம்.இந்தியாவில் சமூக அறிவியல் துறைகளில் வெளியாகும் முக்கியமான நூல்கள் குறித்து தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.

தினமலர்

பத்ரி தினமலர் குறித்து கவிதாசரணனில் வெளிவந்த கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறிப்பு எழுதியுள்ளார்.
http://thoughtsintamil.blogspot.com/

இதே விஷயத்தை சென்னையில் ஞாநி என்னிடம் தெரிவித்தார். காலைக்கதிர்,தினமலர் இரண்டும் ஒரே குடும்பத்திற்கு சொந்தமானவை என்று அறிகிறேன். தினமலர் தினத்தந்தியை விட பல வகைகளில் மோசமானது.தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த்துவ பிரச்சாரத்தை செய்துவருகிறது. பா.ம.க-ரஜனி ரசிகர்கள் பிரச்சினையை ஊதிப் பெருக்கியதில் தினமலருக்கும் பங்குண்டு என்று நண்பரகள் தெரிவித்தனர். நடிகர்கள், நடிகைகள் பற்றி மோசமான கிசுகிசுக்கள்,தி.மு.க, பா.ம.க குறித்து வெறுப்பினையூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுவது, கீழ்மட்ட ஊழல்களை பெரிதுபடுத்தி அரசு ஊழியர் குறித்து விஷமப் பிரச்சாரம், ஆசிரியர்,அரசு ஊழியர் தொழிற்சங்கங்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை முன்வைப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்துவரும் தினமலர் விற்பனையில் சாதனைகள் படைத்திருக்கலாம்.

அந்த 'சாதனை' கீழ்த்தரமான தந்திரங்களின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது. தினத்தந்தி சிறப்பான நாளிதழ் அல்ல. ஆனால் தினமலருடன் ஒப்பிடுகையில் அது நல்ல நாளிதழ் என்று சொல்லவைத்திருப்பது தினமலரின் 'சாதனை'.துரதிருஷ்டவசமாக பலர் தினமலரை தொடர்ந்து படிக்கிறார்கள் அது உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறது. படிக்க 'சுவாரசியமாக' உள்ளது என்கிறார்கள்.

மதுரையில் உள்ள என் நீண்டகால நண்பர் என்னிடம் கூறிய செய்தி இது.கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் முன்பே மதுரை மத்திய பஸ் நிலையம் பெரியார் பஸ் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டது.பஸ்களிலும் அதே பெயர்தான் உள்ளது. அது போல் வேறொரு பஸ் நிலையம் அண்ணா பஸ் நிலையம் என்று அதிகார பூர்வமாகவே மாற்றப்பட்டு, நடைமுறையிலும் அவ்வாறே உள்ளது. ஆனால் தினமலர் மட்டும் இவற்றை முறையே சென்ட்ரல் பஸ் நிலையம், கலெக்டர் ஆபிஸ் பஸ் நிலையம் என்று குறிப்பிட்டு வருகிறது. மதுரை பைபாஸ் ரோட்டை தினமலர் நிறுவனர் பெயரை
அடிப்படையாக கொண்டு மாற்ற வேண்டும் என்று தினமலர் கோருகிறது.அதே போல் தினமலர் திறந்துள்ள அலுவலகம் உள்ள பகுதியை டி,வி.ஆர் அவென்யூ என்று அவர்களாகவே கூறிக்கொள்கிறார்கள், அதன் அதிகார பூர்வப் பெயர் வேறு. இவற்றைச் சுட்டிக்காட்டி என் நண்பர எழுதிய கடித்ததை அது பிரசுரிக்க வில்லை.

நிராகரிக்கப்பட வேண்டிய நாளிதழ் அது. இதைவிட மாலை முரசு போன்றவை பரவாயில்லை. ஆனால் தினமலர் குறித்து கவிதாசரணிலும், இடதுசாரி சிற்றிதழ்களும்தான் விமர்சிக்கும்.
நல்ல செய்தி ஒன்று

ஐரோப்பிய உரிம அமைப்பு மைரியாட் ஜனடிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியிருந்த பிஆர்சிஏ1 என்ற ஜீன் மீதான உரிமத்தை ரத்து செய்துள்ளது. கண்டுபிடுப்புத்தன்மை இல்லை என்ற காரணத்தினால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது. மைரியாட் நிச்சயம் மேல்முறையீடு செய்யும், 2001 இந்த உரிமத்தை ரத்து செய்யக் கோரி முறையீட்டு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த உரிமம் மார்பக்,கருப்பைப் புற்றுநோய் ஏற்படுமா என்பதற்கான சாத்தியகூறுகளை அறிவதற்கான சோதனை குறித்தது. இந்த உரிமம் இச்சோதனை குறித்த ஏகபோக உரிமைகளை
தருகிறது.பிரான்சினைச் சேர்ந்த கியூரி இன்ஸ்டியூட் உட்பட பல அமைப்புகள் இதை எதிர்த்து விண்ணப்பித்தன.

விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
தாய் மொழி, கல்வி, பயிற்று மொழி

தாய் மொழி, கல்வி குறித்து பத்ரி விரிவாக எழுதியுள்ளார்.அவர் அன்பாதவன் கட்டுரையை மேற்கோளிட்டு எழுதியுள்ளார்.மேலும் சமீபத்திய உச்ச நீதி மன்ற தீர்ப்பு குறித்து இந்துவில் நேற்று செய்தி வெளியாகியுள்ளது, முழுத் தீர்ப்பையும் படித்த பின் எழுத நினைக்கிறேன்.

தமிழில் நடக்கும் பல விவாதங்கள், இது உட்பட, அலுப்பை ஏற்படுத்துகின்றன. சில முக்கியமான அடிப்படை கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. மொழி குறித்த விவாதம் தமிழில் உணர்ச்சி பூர்வமான நிலையில் நின்று விடக் கூடாது.தாய் மொழி/பிராந்திய மொழி/விரும்பிய மொழி, மற்றும் ஆங்கிலம் போதும். மூன்றாவது, நான்காவது மொழிகள் பள்ளி அளவில் தேவையில்லை என்பது என் கருத்து.

தமிழக அரசு தாய் மொழி குறித்து ஒர் ஆணை பிறப்பித்தது, மாறாக அதையே சட்டமாகக் செய்திருந்தால் அது வலுவாகக் இருந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.
NY Review of Books
http://www.nybooks.com/articles/17217
Volume 51, Number 11 · June 24, 2004 .
Minding the Brain -By Ian Hacking
Looking for Spinoza: Joy, Sorrow, and the Feeling Brain
by Antonio Damasio
இந்த புத்தக மதிப்புரை சுவாரஸ்யமாக இருக்கிறது.புத்தகத்தை படிக்க வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.

சேது சமுத்திர திட்டமும், சுற்றுச்சூழலும்

இந்த திட்டம் பல பத்தாண்டுகளாகப் பேசப்பட்டு வந்த ஒன்று.இப்போதுள்ள அரசு இதை நிறைவேற்ற நிதி ஒதுக்கும் என்று தோன்றுகிறது. இரண்டு கழகங்களும் இதில் காட்டும் அக்கறை இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இதனால் விளையவிருக்கும் நன்மைகள் குறித்து விலாவரியாகப் பேசப்பட்டுள்ளது.

ஆனால் இது அப்பகுதியிலுள்ள சுற்றுச்சூழலை பாதிக்குமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது,மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகள், அபூர்வ கடல் உயிரினங்கள் இதனால் பாதிக்கப்படலாம். மேலும் அதிகப்படியான கடல் போக்குவரத்து சூழலை இன்னும் மாசுபடுத்தக்கூடும்.இது குறித்து மேல் விபரங்கள் தேவை. ஆனால் இந்த அம்சம் குறித்து அக்கறைக்காட்டப்படுவதாகத் தெரியவில்லை.

இது போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் முன் திட்ட வரைவின் போதே ஒரு முதல்கட்ட சூழல் தாக்கம் குறித்த ஆய்வு செய்யப்பட வேண்டும்.அவ்வாறு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பாதகமான அம்சங்களை விட நன்மைகள்தான் அதிகம் என்பதால் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று திட்டங்களை நிறைவேற்றுவது இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஒன்று. இது
இதிலும் தொடராது என்று எதிர்பார்க்கலாமா?

http://www.sanctuaryasia.com/takeaction/writeltr_mannar.php
புத்தக மதிப்புரை

அண்மையில் நான் எழுதிய புத்தக மதிப்புரை ஒன்று வெளியாகியுள்ளது.அது குறித்த விபரம்
review published in Science and Public Policy Vol.31 No 1 February 2004
Review of
Information Feudalism : Who Owns The Knowledge Economy ?
Peter Drahos with John Braithwaite Pp 253+xviii London: Earthscan,
2002, paperback Pound Sterling 12 ISBN 1 85383 917 5

இதன் முதல் வரை நகல் வேண்டுவோர் மின்ன்ஞ்சல் அனுப்பினால் அனுப்ப முடியும்.(ravisrinivas@rediffmail.com)

அல்லது கீழ்க்கண்ட இணைய முகவரியிலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.
http://in.geocities.com/ravisrinivasin/inffeud.doc
இது ஒரு முக்கியமான நூல்.முடிந்தால் பின் தமிழில் இதைப் பற்றி எழுதுகிறேன். உயிர்மையில் எழுதிய கட்டுரையில் இந்நூலை ஒரு சான்றாகக் குறிப்பிட்டிருந்தேன். மதிப்புரையைப் படிப்பதன் மூலம் இந்த நூல் விடுக்கும் செய்திகள் எவை என்பதை அறிய முடியும். இதை எழுதியுள்ள பீட்டர் டிரகோஸ் அறிவு சார் சொத்துரிமைகள் குறித்து முக்கியமான கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார்.அறிவு சார் சொத்துரிமைகளின் தத்துவப்பிண்ணனி, மனித உரிமைகளும் அறிவு சார் சொத்துரிமைகளும் குறித்து இவர் எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கவை.
மாநில/பிராந்திய மொழியை கட்டாயமாக்கலாமா?

http://in.rediff.com/news/2004/may/31sc.htm

ஒரு மாநில அரசுக்கு அந்த மாநிலத்தில் உள்ள தாய் மொழியை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக படிக்க வேண்டும் என்று கூற உரிமையுள்ளது என்று கூறும் இத்தீர்ப்பு சரியல்ல.

சிறுபான்மையோர், மொழி ரீதியாக சிறுபான்மையோர் உரிமை இதனால் பாதிக்கப்படுகிறது.
சமீபத்தில் அரசு உதவி பெற்றாலும் ஆசிரியர் நியமனத்தில் தலையிட உரிமை இல்லை என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்ச நீதி மன்றம் சிறுபான்மையோர் கல்வி நிலையங்கள் குறித்த தீர்ப்புகளுக்கு இது முரணாக உள்ளது என்று கருத இடமுள்ளது. மாநில அர்சு வேலை தரும் போது அப்பிராந்திய மொழி அறிவு அவசியம் என்று கூறலாம். ஆனால் அனைவரும் மாநில/பிராந்திய மொழியை கட்டாயமாகப் பயில வேண்டும் என்பது சரியல்ல.

நடைமுறையில் வேலை,வணிகம் நிமித்தம் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வோர் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவர். இதை விளக்க வேண்டியதில்லை. அவர்கள் தத்தம் தாய் மொழியை தெரிவு செய்து அம்மாநில/பிராந்திய மொழிக்கு பதிலாகப் படிக்கும் உரிமை வேண்டும்.

இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.