வலைப்பதிவு- எட்டு ஆண்டுகள்

வலைப்பதிவு- எட்டு ஆண்டுகள் ரீடிப்பிலிருந்து பிளாகருக்கு மாறி இவ்வலைப்பதிவினை 2004ல் துவக்கினேன்.இந்த எட்டாண்டுகளில் சில ஆண்டுகளில் அதிகம் எழுதியுள்ளேன், கடந்த சில ஆண்டுகளாக அதற்கு வலைப்பதிவில் அதிகம் எழுதவில்லை.அது குறித்து வருத்தமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை.ஒரு மாறுதலாக வோர்ட்பிரசில் வலைப்பதிவு துவங்கலமா என்று யோசிக்கிறேன்.அதற்காக அதைத் துவக்கி தினசரி ஒரு இடுகையாவது இடுவேன் என்று அர்த்தமில்லை.அதை துவக்கி அதிகம் எழுதாமல், பெயரளவுக்கு ஒரு வலைப்பதிவு என்றும் ஆகலாம்.அப்படி ஒன்றை துவங்கினால் அறிவிப்பு இவ்வலைப்பதிவில் இடப்படும்,டிவிட்டரிலும் தகவல் தரப்படும்.இந்த வலைப்பதிவில் எழுதுவதை ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுவேன்.அதன் பின்னர் இடுகைகள் இங்கு இடப்பட மாட்டா.இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வராமலும் போகலாம். கடந்த எட்டு ஆண்டுகளாக இவ்வலைப்பதிவினை படித்தும்,பின்னூட்டங்கள் இட்டும் ஆதரவு தந்தோருக்கு என் நன்றிகள்.இனி படித்து,பின்னூட்டமிடமுள்ளோருக்கும் முன்கூட்டியே நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels: , , ,

சரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளும்

சரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளும்

அண்மையில் வெளியான, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நூலை முன்வைத்து ஒரு கட்டுரை தமிழ்ப்பேப்பரில் வெளியாகியுள்ளது.(1).சரஸ்வதி நதி நாகரிகம் குறித்து வரலாற்றாய்வார்கள்,தொல்லியல் ஆய்வாளர்களிடம் கருத்தொற்றுமை இல்லை.எனவே ஒரு தரப்பு வாதத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட அந்நூலை முழுமையான,உண்மையான சான்று என்றோ அல்லது அதில் கூறப்பட்டுவது மட்டுமே உண்மை என்றோ கொள்ள இயலாது.மேலும் வரலாற்று ஆய்வாளர்(கள்)/தொல்லியலாய்வாளர்(கள்) எழுதி, கறாரான,peer review செய்யப்பட்டு எழுதப்பட்ட நூல் என அதை கருத இயலாது.ஆகையால் என்னைப் பொறுத்தவரை அதை ஒரு தரப்பு வாதத்திற்கான சான்றாக எடுத்துக்கொள்வேன்.சரஸ்வதி நதி நாகரிகம் குறித்த ஆய்வுகள்,ஹிந்த்துவவாதிகள் முன்வைத்த கோட்பாடுகள் குறித்த சர்ச்சைகளையும்,விவாதங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்(2). ஆகவே இவ்விவகாரத்தில் இந்த நூல் மட்டுமே முழுமையான புரிதலை தரும் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

சரஸ்வதி நாகரிகம் குறித்த நேர்மறையான அனைத்து கருத்துகளையும் இந்த்துவ சதி/இந்த்துவ ஆதரவு கருத்துக்கள் என்று மட்டுமே கொள்ள வேண்டுமா.அப்படிக் கொள்ளத் தேவையில்லை என்று ஒரு கட்டுரையில் வாதிடப்படுகிறது(3).அதன் சுருக்கம்

The depiction of the river Saraswati as an empirical centre of the Harappan civilisation has been marked by intense debate in recent years. Taking the short-lived Saraswati Heritage Project (2002–04) initiated by the Archaeological Survey of India as a case study, this article examines the epistemological emergence of the river and interrogates its historical and ideological relationship to the Harappans and the Aryans. It argues that the epistemic trajectory of Saraswati from a literary entity to an empirical category followed four phases. First, it emerged as a mythical river of colonial Indology; then, as a civilisational river of colonial archaeology; subsequently, as a hydrological body of postcolonial geology and, finally, as an empirical fact of postcolonial archaeology and history. Contrary to historians who attribute the resurrection of the Saraswati solely to the growing influence of Hindutva ideologies, this article argues that the Saraswati is also an epistemic product of the disciplinarian discourse of colonial Indology and postcolonial science. It contends that its ideological and political valence has to be located in the larger discursive universe of colonial and postcolonial scientific practices and not solely attributed to Hindutva.

என்னைப் பொறுத்தவரை இந்தச் சர்ச்சையைப் புரிந்துகொள்ள இது போன்ற கட்டுரைகளும் முக்கியம் என்று கருதுவேன்.மகாதேவனுக்கும்,ஜெயமோகனுக்கும் அவை தேவையில்லை என்ற எண்னம் இருக்கலாம்.அந்த நூல் ஒன்றே போதும்,அது ஒன்றே நம்பத்தகுந்தது என்ற நிலைப்பாட்டினை அவர்கள் எடுக்கலாம்.ஆனால் அத்துடன் ஆர்யர் வருகை/படையெடுப்பு/இடபெயர்வு என்பதை தொடர்புபடுத்தும் போது அந்நூல் ஆர்யர் வருகை/படையெடுப்பு/இடப்பெயர்வு குறித்த வாதத்தில் ஒரு தரப்பு வாதத்திற்கு ஆதரவான ஒரு சான்றாக இருக்க முடியும், நிர்ணயிக்கும் சான்றாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.இன்று ஆர்யர் படையெடுப்பு என்ற கருத்து கிட்டதட்ட காலாவதியாகியாகிவிட்டது, மாறாக ஆர்யர் இடப்பெயர்வு என்பது அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டு,ரொமிலாத் தாப்பர் உட்பட பலரால் ஏற்கப்பட்டுள்ளது.அதே சமயம் ஆர்யர் படையெடுப்பு என்பதை நிராகரிப்பவர்கள் அனைவரும் சரஸ்வதி நதி நாகரிகம் குறித்த அந்த நூல் முன்வைக்கப்பட்டும் கருத்துக்களை/முடிபுகளை ஏற்கிறார்கள் என்று கொள்ள முடியாது.

எனவே ஆர்யர் இடப்பெயர்வு கருத்தை முன்வைக்கும் ஒருவர் சரஸ்வதி நாகரிகம் குறித்து அந்த நூல் முன்வைக்கும் கருத்துக்க்ளை ஏற்க மறுக்கலாம்/சர்சிக்கலாம். இந்த எளிய உண்மையை ஜெயமோகனால்,மகாதேவனால் ஏன் முன் வைக்க முடியவில்லை.

ஜெயமோகன்/மகாதேவன் இச்சர்ச்சை குறித்த பல்தரப்பு வாதங்களையும் படித்து,ஆய்ந்து தங்கள் வாதம் இது,கருத்து இது எழுதாமல் ஒரு நூலினை மட்டுமே ஆதாரமாக கொண்டு வாதிடுகிறார்கள், அதை பிறர் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மகாதேவனின் கட்டுரை ஆழம் என்ற மாத இதழில் வெளியாகியாகிறது.அப்படியானால் அந்த இதழின் ஆசிரியர் குழுவிற்கு ஆழம் குறித்து என்ன புரிதல் இருக்கிறது. அவர்களுக்கு சரஸ்வதி நதி நாகரிகம் குறித்த சர்ச்சைகள் பற்றி ஒன்றும் தெரியாதா. இல்லை தமிழ் வாசகர்களுக்கு இந்த ‘ஆழம்’ போதும் என்று முடிவு செய்துவிட்டார்களா.


(1)http://www.tamilpaper.net/?p=5717
(2) உ-ம் Negotiating Evidence: History, Archaeology and the Indus Civilisation-S U D E S H N A G U H A-Modern Asian Studies 39, 2 (2005) pp. 399–426
(3)Conjuring a river, imagining civilisation: Saraswati, archaeology and science in India-Ashish Chadha-Contributions to Indian Sociology 45, 1 (2011): 55–83

Labels: , , , , ,

மேய்ச்சல்-ஜனவரி 10 2012

மேய்ச்சல்-ஜனவரி 10 2012

1 )ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத செமினார் இதழில் படிக்க சுவாரசியமான/முக்கியமான கட்டுரைகள் கட்டாயம் இருக்கும்.ஜனவரி 2012 இதழில் யோகேந்திர யாதவ் எழுதியுள்ள கட்டுரை, தீபங்கர் குப்தாவின் கட்டுரை உட்பட பல கட்டுரைகள் உள்ளன.யாதவ் தன் கட்டுரையில் (AMBEDKAR AND LOHIA: A DIALOGUE ON CASTE) அம்பேக்தரும், லோகியாவும் சந்தித்து உரையாடவில்லையென்றாலும் அவர்கள் இருவரின் கருத்துக்களை ஒப்பிட்டு, வேறுபடுத்தி எழுதி, அம்பேத்கரை பின்பற்றுவோரும், லோகியாவை பின்பற்றுவோரும் வேறுபடும் புள்ளிகளை சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.இது குறித்த வெளியாகவுள்ள விரிவான கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்றே தோன்றுகிறது..யாதவ் லோகியா பற்றி விரிவாக எழுதியுள்ளார், இன்னும் எழுத உள்ளார்.லோகியாவை பற்றிய விவாதங்கள் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மீண்டும் துவங்கப்பட்டாலும்,லோகியாவை குறித்து விவாதம் தமிழிலும் தேவை.

2)ரேடிகல் பிலாசபி ஜனவரி-பிப்ரவரி 2012 இதழில் நிக் டையர்-விதர்போர்ட் எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடதகுந்தது. நிக்கின் பிற கட்டுரைகள்,cyber-marx நூலையும் பரிந்துரைக்கிறேன்.

3)அண்மையில் படித்தது பி.ஏ.கிருஷ்ணனின் The Muddy River.சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது, என்னைப் பார், என் எழுத்தைப் பார் என்ற ஆர்ப்பாட்ட தொனி இல்லை.எனக்கு போர்ஹே தெரியும்,ஆட்டோ பிக்‌ஷன் தெரியும் என்ற பிரகடனங்கள் இல்லை. கதைக்குள் கதை, கதைக்குள் விமர்சனம்,ஒரு பாத்திரம் ஒரு நிகழ்வை வேறுவிதமாக விவரிப்பது போன்றவை உறுத்தாத வகையில் பிரதியுடன் ஒத்திசைவாக உள்ளன.நகைச்சுவையும் பிரதிக்குள் பொருத்தமான இடங்களில், இசைவாக உள்ளது.படிக்க பரிந்துரைக்கிறேன்.தமிழிலும் காலச்சுவடு வெளியீடாக கிடைக்கிறது.தமிழில் வெளியாகியுள்ளதை ஆங்கிலப் பிரதியின் ‘வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை’ மொழிபெயர்ப்பு என்று கருத முடியாது.சொல்வனத்தில் வெளியான பி.ஏ.கிருஷ்ணனின் செவ்வியைப் படித்தால் ஏன் இப்படி என்பது புரியும்.

4)தற்போது படித்துக் கொண்டிருப்பது Asian Biotech: Ethics of Communities and Fate A.Ong,N.C.Chen (Eds) Duke University Press
இவ்வாண்டு உயிரிய அறம், உயிரிய அரசியல் குறித்து கவனம் செலுத்தி படிக்கவுள்ளேன்.

Labels: , , , ,

டிசம்பரும் ஜனவரியும் 2012ம்

டிசம்பரும் ஜனவரியும் 2012ம்

டிசம்பர் மாதம் முடியப் போகிறது, அடுத்த வாரம் விடுமுறை, எனவே இன்னும் சில நாட்களில் செய்ய வேண்ண்ண்டியவை பலப்பல.ஜனவரி மாதத்தில் பயணங்கள் தற்போதைய நிலவரப்படி குறைந்தது இரண்டு; பிப்ரவரியில் ஒன்று, மார்ச்சில் ஒன்று - ஏற்கனவே முடிவானவை.இந்த ஆண்டு செய்து முடிக்க நினைத்தவற்றுள் சில அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைத்திருக்கிறேன். புதிய ஆண்டில் சில பழைய ‘கெட்ட’ பழக்கங்களை கைவிட்டு புதிய ’கெட்ட’ பழக்கங்களை பழக்கப்படுத்திக் கொள்ள நினைக்கிறேன்.அவை என்னென்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. சனி பெயர்ச்சி பல்ன்களை கேட்டு அதை முடிவு செய்ய திட்டம் :).ஒரு ஜோசியர் புனைவு உலகில் காலடி வைக்க இது சரியான தருணம் என்கிறார், அதற்காக பிரெஞ்சு கற்றுக்கொள்ளுங்கள், ஜாதகப்படி உங்களுக்கு தமிழும்,ஆங்கிலமும் கை கொடுக்காது, ப்ரெஞ்சு அல்லது ஸ்வாஹ்லிதான் புகழும்,பணமும் பெற்றுத் தரும் என்கிறார :).ஆனால் என் பெயரில் எங்குமே j அல்லது ழ இல்லையே என்றால் பெயரை மாற்றுவதா கடினம் என்கிறார்; ழ்னிவாஸ் என்று எழுதினால் எடுபடுமா என்று தெரியாது, உச்சரிக்கும் போது நாக்கு பிறண்டு நட்ட ஈடு கோராமல் இருந்தால் சரி :)
இப்படி பல முடிவுறா துவக்க நிலைக் கேள்விகள் இருப்பதால் கேள்விகளை அடையாளம் காண ஒரு குழு அமைத்துள்ளேன் :).

நானும் இன்னும் இருவரும் கூட்டாக செய்ய வேண்டிய ஒன்றை இந்த ஆண்டு துவங்கி, அடுத்த ஆகஸ்டிற்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளோம்.முதற்கட்ட வேலைகள் நடக்கின்றன.பலரின் பங்களிப்பினை கோரும் அதை ஒருங்கிணைக்கும் வேலை எனது.அதை வெற்றிகரமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன் அத்தகைய வேலை ஒன்றை செய்ததில்லை என்றாலும் அது போன்றவற்றை செய்த அனுபவம் இருக்கிறது.இது தமிழ் தொடர்பான பணி இல்லை என்பதால் தமிழர்கள் யாரும் பீதியடைய வேண்டாம்.

இந்த ஆண்டு பலாபலன்கள் மோசமில்லை, ஆண்டின் பிற்பகுதியில் ’மகசூல்’ நன்றாக இருந்தது, கூடுதலாக முயற்சித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.அடுத்த ஆண்டு ’மகசூல்’ நன்றாக இருக்கும் என நம்புகிறேன், அதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன.பயன்படுத்திக் கொள்வது என் கையில்தான் இருக்கிறது.வாழ்க்கையில் மூளை மகிழ்ச்சியாக இருந்தாலும் அப்போதெல்லாம் இதயமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதில்லை என்பதே என் அனுபவம்.வரும் ஆண்டில் இரண்டுமே மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் பல ஏற்படும் என நம்புகிறேன்.

Labels: , , ,

என்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்

என்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்

1) இந்த வார தெஹல்காவில் ஹிமன்சு தாக்கரின் சிறு பேட்டி முல்லைப் பெரியாறு சர்ச்சை குறித்து வெளியாகியுள்ளது.அடிப்படைகளைக் கூட புரிந்து கொள்ளாமல் கேரள தரப்பில்தான் எல்லா நியாயமும் இருப்பதாக கூறுகிறார்.ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது என்பதை அவர் அறியாரா இல்லை உச்சநீதி மன்றம் என்ன தீர்ப்புக் கொடுத்தது என்பதையும் அவர் அறியாரா.தெகால்விற்கு நம் கண்டனங்களை மின்னஞ்சல் மூல்ம் தெரிவிக்கலாம்.

அதை விட முக்கியம் இவர், இவர் சார்ந்திருக்கும் அமைப்பு(கள்) சார்பாக தமிழகத்தில் ஆதரவு திரட்ட முனைந்தால் அதற்கு உதவும் முன் எந்த அடிப்படையில் இப்படி பேசினார், இவர்களை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு கண்டிக்க வேண்டும். உலகின் பிறர் முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவை என கருதினால் தமிழர் ஆதரவு தருவது சரிதான்.அதற்காக நம் நலனுக்கு குந்தகம் விளைவிக்க முயல்வோருக்கு துணை போகும்
நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் நாம் ஏன் எப்போதும்,எல்லாவற்றிலும் ஆதரவு தர வேண்டும்.இன்னும் தெளிவாகவே குறிப்பிடுகிறேன் - ஹிமன்சு சார்ந்திருக்கும் அமைப்பு/இயக்கம் இனி மேதா பட்கரை முன்னிறுத்தியோ அல்லது வேறு யாரை முன்னிறுத்தியோ நர்மதை நதி திட்ட எதிர்ப்பு அல்லது பிற திட்டங்களுக்கு எதிர்ப்பு என்று ஆதரவு திரட்டும் போது தமிழகத்திலிருந்து ஆதரவு தரக்கூடாது, ஹிமன்சு தன் கருத்தை மாற்றிக் கொண்டு தமிழகத்தின் நிலைப்பாட்டில் நியாயம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலோழிய. நர்மதை நதித்திட்டத்திற்கு தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நிறைவேறினாலும் நிறைவேட்டாவிலும் தமிழகத்திற்கு நன்மையும் இல்லை தீமையும் இல்லை எனவே அதை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று நிலை எடுக்காமால் தமிழகத்தில் தனி நபர்கள், அமைப்புகள் நர்மதை பாதுகாப்பு இயக்கத்தை ஆதரித்தனர். இதில் நானும் உண்டு.
இனி அத்தகைய ஆதரவை தரக்கூடாது. மேதா பட்கரும் ஹிமன்சுவின் நிலைப்பாட்டையே முன்வைத்தால் அவருடைய அமைப்பினையும் ஆதரிக்கக் கூடாது, அல்லது குறைந்தபட்சம் தமிழகத்தில் இவர்களுக்கு உதவுவதை தவிர்க்க வேண்டும், ஆதரவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்று விலகி விட வேண்டும்.

2) வி.ஆர்.கிருஷ்ண அய்யர் precautionary principle என்பதை முன் வைத்து கேரளதரப்பு செய்வதற்கு நியாயம் கூறுகிறார், உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி குருப்பும் இதை முன் வைத்து, சர்வதேச சட்டம் என்றெல்லாம் பேசுகிறார். இதெல்லாம் குட்டையை குழப்புகிற வேலை. இவர்கள் உச்சநீதி மன்ற தீர்ப்பு என்ன சொல்கிறது என்பதை சொல்வதில்லை, அணையின் வலு பற்றி ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அத்தீர்ப்பு தரப்பட்டது என்பதையும் சொல்வதில்லை.

மேலும் அய்யர் குறிப்பிடும் Rio Principles என்பது கட்டுப்படுத்தக்கூடிய சர்வதேச சட்டமோ உடன்படிக்கையோ அல்ல.அது மட்டுமல்ல precautionary principle என்பதை எப்படி
பொருள் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உலகில் கருத்தொற்றுமை இல்லை. அதை ஆதரிப்பவர்கள் கூட அதை ஒரே மாதிரியாக பொருள் கொள்வதில்லை. அப்படியே precautionary principleஐ இங்கு கையாள வேண்டும் என்றாலும் கூட அதற்காக அணையை இடித்து புதிது கட்ட வேண்டும் என்று வாதிட முடியாது. ஏனெனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அணையை பலப்படுத்துவது உட்பட வேறுபலவாக இருக்கலாம். இல்லை precautionary principleஐ கையாள வேண்டும், என்றால் அதை எங்கிருந்து துவங்குவது- கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆராய்ந்து அவை வலுவானவையா என்று கண்டறிய வேண்டும்.

அவற்றை வலுப்படுத்த வேண்டும் அல்லது வலுவற்றவை என்றால் புதிய அணைகள் கட்டுவது உட்பட மாற்றுகளை ஆராய வேண்டும். அதை இவர்கள் ஏன் பேசுவதில்லை. ஏன் முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டும் இந்த precautionary principle கையாளப்பட வேண்டும். உச்சநீதி மன்றத்தில் இவ்வாதம் எழுப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. Precautionary Principle அணைகளுக்கும்,நீர்த்திட்டங்களுக்கு கையாள்வது சரிதான் என்ற நிலைப்பாட்டினை
எடுத்தாலும் கூட அதற்காக சிறு கீறல்கள் விழுந்த அனைத்து அணைகளையும் இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று வாதிட முடியாது. ஏனெனில் Precautionary Principle ஐ கையாளும் போது நாம் அறிய வேண்டியதை அறிந்து, ஆய்வு செய்து தெளிவின்மை, நிச்சயமின்மை குறித்து புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், ஆதாரமற்ற பீதிகளை அடிப்படையாக கொண்டு செயல்பட முயல்வது Precautionary Principle ஐ தவறாக கையாள்வதாகும்.

பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகள் இத்தகைய வாதங்களை கண்டித்து இதிலுள்ள அரசியல் சார்பை வெளிப்படுத்த வேண்டும். செய்கிறார்களா என்று பார்ப்போம்.

3) அ.மார்க்ஸும் இச்சர்ச்சையைப் பற்றி எழுதி ‘வெறுப்புப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது கவலை அளிக்கிறது’ என்று எழுதியிருக்கிறார். வேடிக்கைதான், அ.மார்க்ஸ் செய்யாத வெறுப்பு பிரச்ச்சாரமா.அண்மையில் கூட அப்துல் கலாமைப் பற்றி வெறுப்பு பிரச்சாரம் செய்தவர்தானே இவர். அதை விட வேடிக்கை அமர்த்தியா சென்னின் கருத்துக்களையும், அப்துல் கலாமின் கருத்துகளையும் முன் வைத்து செய்த ‘ஒப்பிடல்’தான்.அ.மார்க்ஸ் தன் இணையதளத்தில் அவர் எதிலெதில்லாம் வெறுப்பு பிரச்சாரத்தை ஆதரிக்கிறார், எவற்றில் எதிர்க்கிறார் என்று பட்டியல் தரலாம்.

Labels: , , ,

படிக்க வேண்டும்

படிக்க வேண்டும்

1) 7 பில்லியனைத் தாண்டிவிட்டது உலக மக்கள் தொகை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் Science இதழில் மக்கள்தொகை பற்றிய சிறப்பு பகுதியில் கட்டுரைகள் வெளியாகியிருந்தன.அதை இன்னும் முழுதாக படிக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் Science, Nature, Economist, EPW இந்த நான்கில் என்னதான் வந்திருக்கிறது,அதில் எதைப் படிக்க வேண்டும் என்று எடுத்து வைப்பதற்குள் அடுத்த வாரம் வந்துவிடுகிறது.அதற்குள் வேறு பல படிக்க சேர்ந்து விடுகின்றன, பழைய பாக்கிகள் கூடிக்கொண்டே போகின்றன.அதற்காக முக்கியமானவை என்று நினைப்பவற்றை படிக்காமல் விடமுடிவதில்லை.

2)ஆண்டுதோறும் ஐநாவின் அமைப்புகள் உட்பட பல அமைப்புகள் விரிவான அறிக்கைகளை வெளியிடுகின்றன.இதில் UNDP வெளியிடும் மானுட வளர்ச்சி அறிக்கை,உலக வங்கி வெளியிடும் உலக வளர்ச்சி அறிக்கை பெறும் கவனத்தை ஊடகங்களில் பிற அறிக்கைகள் பெறுவதில்லை.இப்படி பல அறிக்கைகள் வெளியானாலும் தெரிவு செய்தே படிக்க வேண்டியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக Innovation&Development பற்றிய ஆண்டறிக்கை ஒன்றும் வெளியாகிறது.இந்த அறிக்கைகளுக்காக எழுதப்படும் background papers ஐயும் சேர்த்தே படிப்பது நலம்.இந்த முழு அறிக்கைகளையும் படிக்க முடியாவிட்டாலும் பல அறிக்கைகளை தெரிவு செய்து அவற்றின் சுருக்கத்தையாவது executive summary படித்து விடுகிறேன்.ஆனால் என்னதான் தெரிவு செய்தாலும் படிக்க வேண்டிய அறிக்கைகளின் எண்ணிகையும் கூடிக் கொண்டே போகிறதே :(.

3)காண்டி ரைஸ் தன் அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள No Higher Honorன் சில பகுதிகளை வாசித்தேன், பின்னுரையும்.பின்னுரையை வாசித்த பின் நூலை முழுதாக பின்னர் வாசித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.காண்டி ரைஸ் போன்றவர்களுக்கு உலகில் பல நாடுகளில் அமெரிக்கா ஏன் வெறுக்கப்படுகிறது என்பது இன்னுமா புரியவில்லை. இல்லை புரிந்தாலும் தாங்கள் செய்வது எல்லாம் சில லட்சியங்களுக்காக என்று தொடர்ந்து
சொன்னால் சிலராவது நம்பமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பா.

4)புலி நகக்கொன்றை புதினத்தை எழுதிய பி.ஏ.கிருஷ்ணன் எழுதியThe Muddy River பிரதி கையில்.படிக்க துவங்கியிருக்கிறேன், போக வர ஒரு விமானப் பயணத்தில் முழுதாக படித்து விடமுடியும் என்று நினைக்கிறேன். தமிழிலும் வெளியாகிறது, காலச்சுவடு வெளியிடுகிறது என்று அறிகிறேன்.

5)ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு உட்பட பல படிக்க வேண்டிய வரிசையில் உள்ளன. ஸ்டீவ் ஜாப் வாழ்க்கை வரலாற்றினை இப்போது படிக்க எடுக்கப்ப் போவதில்லை.2012ல் படிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.இப்படி பல நூற்களை அடுத்த ஆண்டு படிக்கலாம் முடிவு செய்துவிட்டேன்.ஏனெனில் இந்த ஆண்டு இறுதிக்குள் படிக்க வேண்டிய,மதிப்புரை எழுத வேண்டிய நூல்கள் வரிசையில் உள்ளன.அவற்றை கவனிக்க வேண்டும்.

6)இப்போது படித்துக் கொண்டிருக்கும் நூல் எழுதிக்குவிப்பது என்பதை பற்றியது. அதைப் படித்து நான் ஜெமோ,எஸ்ரா,சாருவிற்கு போட்டியாக எழுதிக்குவிக்கப் போகிறேன் என்று எண்ண வேண்டும். இந்த ‘எழுதிக்குவிப்பு’ academic writing பற்றியது.அதை நான் படித்து பயன் பெற்று ‘எழுதி குவித்தாலும்’ அது தமிழில் இராது என்பதால் தமிழுக்கும்,தமிழருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடாது என்பதை உறுதியாக கூறுகிறேன்.

Labels: , , ,

ராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்டும்,https://plus.google.com/115511813610845200164/posts/3LhxPuHLLR3
ராஜன்குறை
மீண்டும் அருந்ததி ராய் மீது அவதூறுகளை வாரியிறைத்துள்ளார் ஜெயமோகன்.

http://www.jeyamohan.in/?p=19963. அன்னா ஹஸாரேவை அருந்ததி விமர்சனம் செய்துள்ளதுதான் பிரச்சினை. அன்னாவையும், அருந்ததியையும் எப்படி வேறுபடுத்திப்பார்க்கலாம் என்பதை சுருக்கமாக பதிவு செய்ய விரும்புகிறேன். இணைய தளத்திலும், முகப்புத்தகத்திலும் பல நண்பர்களும், இடது சாரிகளும் அன்னா ஹசாரேயை விமர்சித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. ஆனால் ஜெயமோகனுக்கு இது ஒரு சீரழிவு மனப்பான்மையாகப் படுகிறது. எனவே இந்தப்பதிவு முக்கியமாக அவரையும், அவரது வாசகர்களையும் விளித்து எழுதப் படுகிறது.சமகாலத்தில் ஏராளமான பிரச்சினைகள் உலகமுழுவதும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் அணுகுவதற்கு ஒரு விமர்சன சட்டகம் (critical framework), சிந்தனைச் சட்டகம் (intellectual grid) தேவைப்படுகிறது. அதை உருவாக்குவதற்கு அடிப்படையாக இன்று உலகில் அதிகார வலைப்பின்னல் எப்படி இயங்குகிறது என்பதை முதலில் அறியவேண்டும். அப்படிப் பார்க்கும்போது கார்ப்பரேட் நிறுவனங்களும், தேசிய அரசுகளும் சேர்ந்து இந்த உலகை ஆள்வது எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவர்களது கூட்டணி முதலீட்டியம் என்று நான் அழைக்கும் உலகப் பொருளாதார அமைப்பை நிர்வகிப்பதாக இருக்கிறது. இந்த அமைப்பு இயற்கை வளங்களைச் சுரண்டியும், அவற்றை வாழ்வாதரமாகக் கொண்ட எளிய மனிதர்களைச் சுரண்டியும் எல்லையற்ற பொருளாதார வளர்ச்சியை சாதிப்பதாகக் கூறி மானுட அழிவை துரிதப்படுத்தி வருகிறது. பொருளாதார வளர்ச்சி என்பது உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றின் எல்லையற்ற வளர்ச்சிதான் என்பதும் கண்கூடு.உலக வரலாற்றில் இத்தகைய நுகர்வுக்கலாசாரத்தை, அதை அடிப்படையாகக் கொண்ட தொழிற்புரட்சியை, மக்களின் எளிய வாழ்க்கைக்கு அன்னியமான நவீன அரசின் செயல்பாடுகளை விமர்சித்த தலைவர்களில் முக்கியமானவர் காந்தி. ஜெயமோகனின் “இன்றைய காந்தியில்” காந்தியின் சிவில் சமூக எதிர்ப்பு, தொழிற்புரட்சி எதிர்ப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள இடம் என்ன?அருந்ததி ராய் இந்த விமர்சன சட்டகத்திற்கு அருகில் இருக்கிறார். அதனால்தான் அவர் நர்மதா நதி பள்ளத்தாக்கு, ஆப்பரேஷன் கிரீன் ஹண்ட் நடக்கும் காடுகள் ஆகியவற்றைக் குறித்தும், அமெரிக்கா மேற்கொள்ளும் போர்கள் போன்ற சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் உலகெங்கும் பேசும் ஒரு பொதுமன்ற நடிவடிக்கையாளராக இருக்கிறார்.அன்னா ஹஸாரேவிற்கு இந்த விமர்சனப் பார்வை இல்லை. அவர் ஊழல் என்பது நமது தேசத்தைப் பற்றியுள்ள நோய் என்கிறார். அவர் நோய் முதல் நாடுவதில்லை. நோயின் மூலம் பன்னாட்டு மூலதனத்துடன் தேசிய அரசு அமைக்கும் கூட்டணி. ஹஸாரே நோய்க்கு என்ன மருந்து என்று யோசிக்கவில்லை. நோயின் வெளிப்பாடுகளில் ஒன்றுக்கு வைத்தியம் பார்க்கிறார். எதோ ஊழலை தடுத்து நிறுத்திவிட்டால் நாடு செல்வச் செழிப்பில் மிதக்கும் என்ற பிழையான மனோபாவத்தை மக்களிடம் ஏற்படுத்துகிறார். அரசியல் வாதிகள் மக்களை நிர்வாகம் செய்வதற்காக கார்பரேட் நிறுவனங்கள் அவர்களுடன் அதிகாரத்தை பணம் என்னும் குறியீட்டினைக் கொண்டு பகிர்ந்துகொள்வதுதான் ஊழலின் ஆதார அமைப்பு (பணம் என்னும் குறியீடு ஓரெல்லையில் அதிகாரம் என்பதாகத்தான் இயங்குகிறது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்). இதை தடுத்து நிறுத்திவிட்டால் அந்தப் பணமெல்லாம் முதலீடாக மாறி என்னத்தை சாதிக்கும் என்று ஹஸாரேயின் விடலைப் பட்டாளம் யோசிக்க வேண்டும்.இப்போது ஜெயமோகனுக்கு வருவோம். ஏன் அவருடைய எழுத்துக்களில் இன்றைய உலகின் முதன்மைச் சிக்கலான பன்னாட்டு நிறுவனங்களும், தேசிய அரசுகளும் சேர்ந்து நிகழ்த்தும் சுற்றுச்சூழல் வாழ்வாதாரச் சீரழிவு, எளிய மக்களை சுரண்டுதல் ஆகியவை முக்கிய இடம் பெறுவதில்லை? ஏன் உலகம் வெப்பமடைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மட்டும் வல்லுனர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒதுக்குகிறார்? மற்ற விஷயங்களைப் பற்றி மட்டும் வல்லுனர் அல்லாவிட்டாலும் அவரால் எழுத முடிவது ஏன்? காரணம் ஹசாரே ஆதரவாளர்களைப்போன்றே சிறுபிள்ளைத்தனமான ஒரு தேசிய மனோபாவத்தையே அவர் மாபெரும் தத்துவம் போன்று பிதற்றி வருவதும், அதற்குமேல் தத்துவத் தளத்தில் சிந்திக்க மறுப்பதும்தான். கோவை ஞானியை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தன் குருவாக அழைத்து மகிழ்பவர், இந்திய சிந்தனை வேர்களில் நின்று உலகின் பிரச்சினைகளை சிந்திக்க விரும்புபவர் ஞானி, எஸ்.என்.நாகராஜன் ஆகியோர் நவீன அறிவியல், தொழில்நுட்பம் குறித்து வைத்த விமர்சனங்களை இன்றைய சுற்றுச் சூழல் சீர்கேட்டினை முன்வைத்து மறுசிந்தனை செய்ய முன்வருவாரா, அல்லது ஞானியின் தமிழ்த் தேசிய உணர்விற்கு அவ்வப்போது வணக்கம் வைப்பதுடன் நிறுத்திக்கொள்வாரா என்பதே முக்கியமான கேள்வி.ஜெயமோகன் வாசகர்கள் வெறும் வழிபாட்டு மனோபாவத்தில் தேங்காமல் அவரை இந்தத்தளங்களில் சிந்திக்க வைக்க வேண்டும். இருபது மாதங்களுக்கு முன்னால் “முதலீட்டியமும் மானுட அழிவும்: சமகால தத்துவம் சார்ந்த குறிப்புகள்” என்ற சிறுநூலை பிரசுரித்திருந்தேன். என்னுடைய முதலீட்டிய விமர்சனம் கம்யூனிஸம் என்று அறியப்பட்டதிலிருந்து வேறுபட்டது என்பதை அதைப் படித்தவர்கள் புரிந்துகொண்டிருக்க முடியும். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் முதலீட்டிய எதிர்ப்பு என்பதே சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு பொருளற்றுப் போனதாக பாமர மனப்பான்மை புரிந்துகொண்டிருக்கிறது என்பதால்தான்.அருந்ததி ராயும் எந்த இஸமும் சார்ந்தவரல்ல. ஆனால் அவர் உலகில் அதிகாரச் சமன்பாடுகள் எப்படிச்செயல்படுகின்றன என்பதை விமர்சனபூர்வமாக அறிதலுக்குட்படுத்துகிறார் பேசுகிறார். அத்தகைய எந்த முதிர்ந்த சிந்தனையும் ஹஸாரேவிற்கும், அவர் ஆதரளவார்களாகச் சுற்றும் “ஜெய் ஹிந்த்” விடலைகளுக்கும் இல்லை. எனவே அருந்ததி ராயே இந்த தேசத்தின் ஆன்மாவாகவும், காந்தியின் வாரிசாகவும் இருக்கும் தகுதி படைத்தவர். அன்னா ஹஸாரே ஒரு தரிசனமற்ற போலி காந்தி.

என் கருத்து:
1) அருந்ததிராயின் சிந்தனை சட்டகம் என்ன என்பதை ராஜன் விளக்கவேண்டும்.அருந்ததியிடம் விமர்சனம் இருக்கிறது,அதையே சிந்தனை சட்டகம் என்று எதற்காக எடுத்துக்கொள்ளவேண்டும்.முதலீட்டியத்ற்கு மாற்று இது அதன் அடிப்படைகள்
இவை என்று ராய் எங்காவது விரிவாக எழுதி ஒரு சிந்தனை சட்டகத்தை முன் வைத்துள்ளாரா.
2)அண்ண ஹசாரே தன் கிராம அளவில் மாற்றம் கொண்டுவர முயன்று அதில் வெற்றிக் கண்டு பின் பல பொதுப்பிரச்சினைகளுக்காக போராடியுள்ளார்.தீடிரென்று இன்று முளைத்தவர் அல்ல.அவர் அருந்ததி போல் ஆங்கிலத்தில் எழுதியதில்லை, நான் அறிந்தவரையில்.அதற்காக அவருக்கு விமர்சனப்பார்வை இல்லை என்று முடிவு செய்ய முடியுமா.அன்னாவும் காந்தியை முன்மாதிரியாகக் கொண்டவர்.அவர் எங்காவது முதலீட்டியத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளாரா.ராஜனின் அடிப்படை தர்க்கமே குதர்க்கமாக இருக்கிறது.அன்னா இதற்கு முன் ஊழலுக்கு எதிராகப் போராடியுள்ளார், உண்ணாவிரதம் பல முறை மேற்கொண்டுள்ளார்.மகாராஷ்டிராவில் அவர் ஊழல் செய்த அமைச்சர்களை எதிர்த்து போராடியுள்ளார்.அவை மக்கள் நலப்போராட்டங்கள் இல்லை என்று யாராவது சொல்லமுடியுமா.ராஜன் குறை கூகுளில் lentin commission அறிக்கை என்ன சொல்கிறது என்பதை தேடிப்படிக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அது ஏன் அமைக்கப்பட்டது என்பதையாவது அறிய வேண்டும்.முதலீட்டியம் பிரச்சினை என்பதால் அதைத் தீர்த்துவிட்டு பிறவற்றை எதிர்க்கலாம் என்று வாதிடமுடியுமா.ஊழலும் பிரச்சினை,முதலீட்டியமும் பிரச்சினை இரண்டையும் எதிர்க்க வேண்டும். அதில் அருந்ததியும்,அன்னாவும்
கைகோர்க்க வேண்டும் என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ள முடியும்.ஊழலை எதிர்ப்பவர்களுக்கு மக்க்ள் ஆதரவு கிடைக்க காரணம் மக்கள் அன்றாட வாழ்வில் ஊழலின் கோர முகத்தினைக் காண்கிறார்கள்.அவர்களிடம் போய் பிரச்சினையின் ஊற்றுக்கண் முதலீட்டியம்,ஏகாதிப்பத்தியம் என்று சொன்னால் ஒபாமாவா இங்கே லஞ்சம் வாங்குகிறார் அல்லது பில் கேட்ஸா என்னிடம் லஞ்சம் கேட்கிறார் என்று பதில் சொன்னால் ராஜன் என்ன பதில் சொல்வார்.
3)கோவை ஞானியும்,நாகராஜனும் எழுதியதை ஜெயமோகன் மறுத்து எழுதியதாகத் தெரியவில்லை.ஜெமோ நானறிந்தவரையில் இவான் இலிச்சின் கருத்துக்கள், இயற்கை வேளாண்மைக்கு ஆதரவு தெரிவித்தே எழுதியுள்ளார்.பிடி கத்தரிக்காய்க்கு எதிராகவும் பேசியுள்ளார்.கோவை ஞானி,நாகராஜன் எழுதியுள்ளவைகளின் அடிப்படையில் அவர்கள் கருத்துக்களை வளர்த்தெடுத்து யாரேனும் எழுதியுள்ளார்களா என்பது எனக்குத் தெரியாது.
4)’அத்தகைய எந்த முதிர்ந்த சிந்தனையும் ஹஸாரேவிற்கும், அவர் ஆதரளவார்களாகச் சுற்றும் “ஜெய் ஹிந்த்” விடலைகளுக்கும் இல்லை. எனவே அருந்ததி ராயே இந்த தேசத்தின் ஆன்மாவாகவும், காந்தியின் வாரிசாகவும் இருக்கும் தகுதி படைத்தவர். அன்னா ஹஸாரே ஒரு தரிசனமற்ற போலி காந்தி.’
அன்னாவுடன் இன்று கைகோர்த்து நிற்பவர்கள் யார்- கொத்தடிமைகள் மீட்பிற்காகவும்,பொது நன்மைக்காகவும் போராடும் சுவாமி அக்னிவேஷ்,லோக் அக்யுதாவாக இருந்து ஊழல்களை வெளிகொணர்ந்து யெட்டியுராப்பா பதவி விலக காரணமாக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே,பொது நல வழக்குகள் பலவற்றை முன்னெடுத்து நடத்தும் பிரசாந்த பூஷன்,இந்திய அரசுப்பணியைத் துறந்து தகவலறியும் உரிமைக்காக போராடி, அதை நடைமுறைப்படுத்துவதற்காக முயலும் அரவிந்த் கெஜ்ரிவால்.இவர்கள் விடலைகள், அருந்ததி அறிஞர் என்று ராஜன் சொல்கிறாரா. பிரசாந்த் நர்மதை அணைத்திட்டதிற்கு எதிராக தொடுக்கப்பட்ட வ்ழக்கில் வாதாடியவர்,சுற்றுச்சூழல் குறித்த பல பொது நலவழக்குகளில் வாதாடியவர்,வாதாடுபவர், இன்றும் பல சமூக இயக்கங்களுக்கு ஆதரவாக வாதாடுபவர்,2ஜி அலைக்கற்றை வழக்கில் மனுதாரார், ஊழல் செய்த நீதிபதிகளுக்கு எதிராக இயங்கும் அமைப்பின் சார்பாக தொடர்ந்து இயங்குபவர்.சாந்தி பூஷண் இந்திரா காந்திக்கு எதிரான வழக்கில் ராஜ் நாராயணுக்காக வாதிட்ட்வர்.பிரசாந்த் பூஷண் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் ஆற்றிய உரையில் முதலீட்டியத்திற்கு எதிராக பேசியுள்ளார், அத்துடம் உச்சநீதிமன்றம் குறித்த தன் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளர். இதெல்லாம் ராஜன் குறைக்கு தெரியாவிட்டால் அது அவரது தவறு.

ராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்டும்,அதற்காக காந்தியை சிறுமைப்படுத்த வேண்டாம்.

Labels: , , , ,